அண்மை

வள்ளலார் கண்ட தெய்வக் கொள்கை

 தனிப்பெருங் கருணை



சமீபத்தில் வள்ளலாரின் பிறந்தநாள் அக்டோபர் 5 அன்று அனுசரிக்கப்பட்டது. அதற்கு நம் தமிழக முதல்வர் இனி அக்டோபர் 5 'தனிப்பெருங் கருணை' நாள் என்று கடைப்பிடிக்கப்படுமென அறிவித்திருந்தார். மிக்க மகிழ்ச்சி

அந்த பதிவிற்கு கீழே ஒருவர் 'வள்ளலாருக்கு எங்க விபூதியக் காணோம்? தி.மு.க உங்க வேலைய காண்பிச்சிட்டீங்களா?' என்று தன் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.


நெற்றி விபூதியின் மேல் மக்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லையானாலும் 'வள்ளலார் கண்ட தெய்வம்' என்னவென்பதை நம்மவர்கள் புரிந்து கொள்வதில் சிரமப்படுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.


ஆத்திகன் ஏற்பதை நாத்திகன் ஏற்பதில்லை. நாத்திகன் ஏற்பதை ஆத்திகன் மறுப்பதற்கு எவ்வித முன்யோசனையும் செய்வதில்லை.


இந்த இருதரப்பு மக்களும் வள்ளலாரை ஏற்கும் போது இடைப்பட்ட மனம் கொண்ட சிலருக்கு வள்ளலார் குழப்பப் பொருளாகத் தான் தெரிகிறார். அல்லது இந்து மதத்தின் ஓர் ஆன்மீகப் பெரியவர் என்ற வகையில் உணரப்படுகிறார்.


வள்ளலார் கண்ட தெய்வத்தை நாம் புரிந்து கொள்வதற்கு இந்து மதத்தின் இரண்டு பூர்வீகக் கொள்கைகளை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். இவைகளை தெரிந்து கொள்ளாமலும் அறியமுடியுமானாலும் 'தேர்ந்ததொரு புத்தி'க்கு இவை தேவை. அவை, அத்வைதம், துவைதம்.


இவை இரண்டுமே 'சமஸ்' சொற்கள். இவற்றை எளிமையாக புரிய வைக்க வேண்டுமானால் ஒரு கதை,


பரமஹம்ச யோகானந்தர் ஒருமுறை ஞான அனுபூதி கொண்ட குரு ஒருவரை காண தாரகேஷ்வர் செல்கிறார்.


தாரகேஷ்வர், ஈசனின் புண்ணிய பூமி. அங்கே சிறியதொரு லிங்கத் திருக்கோவில். பரமஹம்சர் அந்த கோவிலை கவனித்தார். கையளவு கூட இல்லாத அந்த லிங்கச் சிலையின் முன்னே ஊர் விட்டு மாநிலம் விட்டு வந்த பக்தர்கள் தன் தலையை தரையில் பொருத்தி நமஸ்கரித்து கொண்டிருந்தார்கள். பரமஹம்சருக்கு அது வேடிக்கையாய் இருந்தது.


தனக்குள்ளே ஆத்மார்த்தமாய் அடங்கியிருக்கும் அழியாத இறைவனை தேடாமல் ஏதோ கல் உருளை முன்னே கால் நீட்டி விழுகிறார்களே என நினைத்து சிரித்துக் கொண்டார். பின் அந்த கோயிலை விட்டு அகன்றார்.


பல மணி நேர நடைக்கு பின் முதுமையை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதர் பரமஹம்சருக்கு எதிரே வந்தார். பரமஹம்சர் அவருக்கு வணக்கம் செலுத்துவதற்கு முன்பே அவர் பரமஹம்சரிடம் பேசத் தொடங்கினார்.


'ஏன் தாரகேஷ்வர் லிங்கத்தை நீ வணங்கவில்லை?'


பரமஹம்சருக்கு இந்த திடீர் கேள்வி ஆச்சரியத்தை தந்தாலும் அதை பற்றி சிரத்தை செய்யாமல் பதில் தந்தார்.


'இறைவனை ஒரு கல்லில் காண்பதா? வேடிக்கை'


'அதாவது இறைவன் கல்லில் இல்லை என்கிறாய், அப்படித்தானே'


'ஆமாம்'


'சரி, இறைவன் வேறு எங்கு இருக்கிறார்?'


'இறைவன் எங்கும் இருக்கிறார். உம்முள் இருக்கிறார். எம்முள் இருக்கிறார். ஏன், அண்டத்தை வியாபித்து நீக்கமற நிறைந்திருப்பதே இறைவன் தானே'


'ம்ம்…. எங்கும் நிறைந்து இருக்கும் உன் இறைவன் தாரகேஷ்வரில் ஒரு சிறிய சந்நிதியில் கையடக்க லிங்கமொன்றில் இருக்கமாட்டார் என்று நினைக்கிறாயா?'


பரமஹம்சருக்கு அந்த கேள்வி பல கோடி அர்த்தங்களை தந்தது.


எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஏன் கல்லிலும் இருக்கமாட்டார்? நிச்சயம் இருப்பார். அது தான் துவைதம்.


எங்கும் வியாபித்து இருக்கும் இறைவனையும் அதன் ஞானத்தையும் உருவமாய் அல்லாமல் தத்துவார்த்தமாய் வழிபடுவது அத்வைதம்.


ஒவ்வொரு நாத்திகவாதியும் அவனையறியாமலே ஓர் அத்துவைதவாதியாகிறான்.


துவைதத்திலிருந்தே அத்துவைதம் பிறக்கும். அத்துவைதத்திலே துவைதம் இருக்கும். பெயரில் மட்டுமல்ல நோக்கத்திலுமே அத்துவைதத்தில் துவைதம் இருக்கிறது.


துவைதம் - இரண்டு உணர்த்தும் ஒன்று. 

அத்துவைதம் - இரண்டல்ல ஒன்று.


ஆக, இரண்டுமே ஒன்று. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், துவைதம் என்பது கண்ணனின் உருவத்தை வணங்குவது. அத்துவைதம் என்பது கீதையின் கருத்தை வணங்குவது.


சரி, இனி வள்ளலாரை காண்போம்.


"தியானஞ் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு உருவத்தை தியானிக்க வேண்டும், நிஷ்களமாயிருக்கப் படாது, அருவமாகக் தியானிக்கப்படாது. பின் உருவம் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம், பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம் சத்தியம்"


இதை கூறியவர் அத்துவைத புருஷர் மகா ஞானி வள்ளலார் ஆவார். 'பரம் பொருள் ஒன்றே' என்று கூறிய ஒருவர் ஏன் ஏதும் ஓர் உருவத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார் தெரியுமா? நாம் அந்த பரம்பொருளோடு ஒன்றுவதை அவர் விரும்பினார்.


பல்வேறு ஒளி கற்றைகள் எப்படி ஒற்றை புள்ளியில் செயல்படும் போது வீரியத்தை அதிகமாக்குகிறதோ! பரந்துபட்டு இருக்கும் தத்துவார்த்த மனம் துவைதமாக ஒற்றை மூலத்தை பற்றும் போது அந்த பக்தி கரைந்து அத்துவைதம் தானே பிறக்கும், இதை தான் வள்ளலார் முன்மொழிகிறார்.


கிபி.600 களில் வாழ்ந்த நபிகள் நாயகம் பல்வேறு உருவ வழிபாட்டை ஏற்றிருந்த தன் மக்களை 'அல்லா' எனும் ஒற்றை நோக்கத்திற்கு செல்லும்படி அழைத்தார். உண்மையில் நபிகளின் வாக்கு சத்தியமாகவும் 'அல்லா' என்ற ஒவ்வோர் அணுக்குள்ளும் நிறைந்துள்ள தன்மை பெற்ற விசாலமான கடவுள் கொள்கையை விளக்கியதாலும் அது மக்களிடையே நாடு,இன,மொழி வரம்புமீறி பரவ காரணமாயிருந்தது.


இன்றளவும் இஸ்லாமியர்களின் பக்திநெறி வெறும் மசூதிக்கு போவுங்கால் மட்டுமல்லாமல் விழித்ததிலிருந்து படுக்கும் வரை இருப்பதற்கு காரணம், 'எங்கும் நிறைந்தவன் அல்லா' என்ற அத்துவைத கருத்து தான்.


இதே கருத்தை துவைதத்தை பின்பற்றும் இந்துக்களும், காலையில் துவைதம் மாலையில் அத்துவைதம் என மயக்கம் அடைவோரும் புரிந்து கொண்டீர்களேயானால், சமூகம் சிறக்கும்.


அது தான் வள்ளலார் கண்ட மதம். சமரச சன்மார்க்கம்.


தத்துவ நியாயத்தை அநுசரித்துச் சமயங்களேற் படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலியன. ஆதலால், இவைகளை விட்டொழித்து பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளை பெற்று அனத்தசித்தி வல்லபங்களை பெற முடியாது.


இது வள்ளலார் வாக்கு. இறைவனை தேடுகிறோமோ, இல்லையோ. மனிதர்களாகிய நமக்கு ஆன்ம மற்றும் காய ஒழுக்கம் தேவை.


சன்மாரக்கத்தை பற்றி சன்மார்க்கிகள் சொல்லுவது, 'இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தை கவனிக்கில் விளங்கும்'


மகாகவி பாரதியும் தன் உரையில், 'பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாக தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடம் கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கும் இதுவே சுலபமான வழி' என்கிறார்.


ஔவை தன் மூதுரையில்,


தேவர் குறளும் திருநான் மறைமுடியும்

மூவர் தமிழும் முனிமொழியும் கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகம் என்றுணர்.


நாம் ரேகைகளால் வேறுபடுத்தப்பட்டாலும் விரல்களால் ஒன்றாகிறோம். வதனத்தால் வேறுபடுத்தப்பட்டாலும் மனிதரென்ற வகையில் ஒன்றாகிறோம். அதுபோல மதங்களினால் பிரிவுக்கு உள்ளான மக்களை கண்டு வருந்திய வள்ளல் பெருமான் அவர்களை ஒன்றுப்படுத்த ஜோதி வழிப்பாட்டை முன்னெடுத்தார்.


அத்துவைதம் படி எதில் தான் கடவுள் இல்லை, கூளத்தை மலத்தை கண்டு சங்கர சங்கரவென வணங்குதல் வேண்டும் என்றார் பாரதி.


வேதம் கடவுளென உணர்த்துவது ஜோதியைத் தான். ஜோதி இல்லையானால் நாமில்லை என்று கூறியதும் மகாகவி பாரதியே.


அப்படிபட்ட ஜோதியை கடவுளென பெருமான் கொள்வதற்கு காரணம், 'ஒருமுகப்படுத்தபட்ட ஆன்ம நேய' ஒழுக்கத்திற்காக வேண்டியே அன்றி உருவ வழிபாட்டை எதிர்க்க அல்ல.


வள்ளலார் கருத்தை உருவ வழிபாட்டை எதிர்க்கும் சிலர் தவறான முறையில் பயன்படுத்துதல் ஆகாது. 'துவைதம் இருந்தால் அத்துவைதம் தானே வரும்' என்றவர் வள்ளலார் என்பதை நீங்கள் கவனங்கொள்ள வேண்டும்.


அதுபோல உருவ வழிபாட்டை மேற்கொள்ளும் மக்கள் உங்களது வேடிக்கை வாடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுங்கள். 'யாவர்க்குமாம் இறைவர்கொரு பச்சிலை' அதுவே போதுமானது. அதுவும் தளிர் கிள்ளாமலிருப்பின் நல்லது.


வள்ளலார் சொல்கிறார்,


தேங்காய் உடைக்க உங்களுக்கு விருப்ப மிருந்தால், அதனை முன்னதாகவே உடைத்துத் திருகி, அத்துடன் சர்க்கரை, கற்கண்டு முதலியன கலந்து ஆண்டவருக்கு இனிப்பாக நைவேத்தியம் வைப்பது நலம். ஆண்டவரை வாயார வாழ்த்துவது தவிர அபிஷேகம், புட்ப அலங்காரம், வாகனங்களில் ஏற்றி வீதி உலா வருதல் இன்னும் இதுபோன்ற மற்ற ஆடம்பரங்கள் கூடாது. கடவுளுக்கு செலவு செய்ய வேண்டுமமென்ற எண்ணமிருந்தால் அப்பணத்தை ஏழைகளின் வயிற்று பெட்டியில் நிரப்புங்கள்


நானும் இஃதை காண்கிறேன். தேன் ஒரு பாட்டில், இளநீர் நாலு, பஞ்சாமிருதம் ஒரு கிண்ணம், பால் ஒரு லிட்டர், பன்னீர் ஒரு பாட்டில், நெய் ஒரு டப்பி இது போக மஞ்சள் அபிஷேகம், சந்தன அபிஷேகம், திரவிய அபிஷேகம், வஸ்திரம் சாத்தல், மாலை சாத்தல் என இந்துக்களை தவிர வேறு எவரும் இத்தனை வீண் பண விரயம் செய்யமாட்டார்கள்.


புஷ்பமணிவித்தலையும், ஆடை அலங்காரம் செய்வதிலும் கூட எனக்கதிக மறுப்பு இல்லையானாலும் உணவுப் பொருளை வீணடிப்பதை ஒருகாலும் ஏற்கமுடியாது.


இதெல்லாம் வழிபாடே அல்ல! பலகோடி ஏழைகளின் வலி மற்றும் வயிற்றுப்பாடு.


ஏழைகளிடம் போய் வேதாந்தம் பேசுவது அவர்கள் மனதை புண்படுத்துவதாகும். பேசினால் என்னையும் உங்களையும் கொடிய அரக்கர்களாக பாவிப்பார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் கருணையற்ற கொடுங்கோல் தெய்வம் அல்லவா? கோபமும் பயங்கரமும் நிறைந்த தெய்வத்தை தான் அவர்கள் கண்டது. அவர்களிடம் நான் ஆண்டவனைப் பற்றி என்ன பேச முடியும்? எனக்கு துணிவு இல்லை. காலை பலகாரம் நன்றாக முடித்து, மத்தியான சாப்பாடு என்னவாக இருக்கலாம் என்று யோசனை செய்யும் நிலையில் இருக்கும் நாம் தெய்வத்தை பற்றி ஆராய்ச்சி செய்யலாம். ஒருவேளை சோற்றுக்கே திண்டாடும் நிலையில் வாழும் மக்களிடையே நானென்ன தெய்வ ஆராய்ச்சி செய்ய முடியும்? அவர்களுக்கு ஈசனுடைய அவதாரம் சோறும் சாறுமே.


இதைக் கூறியவர் மகாத்மா காந்தியாவார். மகாத்மா எனும் தகுதிக்கு உகந்தவர்.


நமது தேசம் எத்தனையோ உன்னதர்களை பெற்றிருந்தாலும், சமூக முன்னேற்றத்தில் வாளியில் விழுந்த நண்டுகளை போல காலைப்பிடித்து இழுத்துக் கொண்டே தான் உள்ளதே தவிர. மூட வழக்கத்தை விட்டொழித்தப்பாடில்லை.


தெய்வக் கொள்கை பல்வேறு மனிதர்களின் பசியை தீர்க்கும்படி அமைந்திருந்தால் தெய்வ நிந்தனை (நாத்திகம்) இன்று இருந்திருக்காது. 


வாழ்வின் கடைநிலை கஷ்டத்தை அனுபவிக்கும் ஒருவன் கூட மூன்று வேளையும் பசியாற உண்பதற்கு சத்திய தரும சாலையை மார்க்கத்தின் பேரிலே தோற்றுவித்தார் பெருமான், இன்று கடவுளே இல்லை என்று வாதிடும் நாத்திகர்கள் கூட வள்ளல் பெருமானை புகழ்கிறார்கள் அல்லவா.


சுயலாபம் கருதி தெய்வத்திற்கு செய்யப்படும் பூஜைகள் கூட ஒருபோதும் உதவாது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.


செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பர்

பித்தமனிதர் அவர்சொலும் சாத்திரம்

பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்


'ஒருவன் பிராத்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிராத்தனை செய்தல் வேண்டும்' என்கிறார் வள்ளல் பெருமான்


பாதி இரவில் எழுந்தருளிப்

பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் னுள்ளகத்தே

சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப

நிதிநான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியாது என்போல்இவ்

வுலகம் பெறுதல் வேண்டுவனே


மனிதன் ஒருவனுடன் ஆண்டவன் பேசுவதாவது அது ஒரு நாளும் இல்லை, என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி சொன்னதாக நான் இதுவரையில் அறியவில்லை. இந்த உலகத்தில் யாரேனும் ஒருவராவது ஈசன் எனக்கு நேரில் ஆணையிட்டான் என்று சொல்லி மெய்ப்பித்து விட்டால் மக்களுக்கு பெரும் நன்மையாகும். இப்படி சொல்லி கொள்பவர்கள் அநேகர். ஆனால், நிரூபிக்க முடியாது. பலர் பொய் சொல்லி மோசம் செய்கிறார்களே என்பதற்காக, உண்மையில் ஒருவன் ஆண்டவன் குரலை கேட்பவன் தன் அனுபவத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. வேஷதாரிகள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நாம் என்ன செய்ய முடியும், போலிகள் பலர் இருக்கிறார்களேயென்று உண்மை சீலத்தை நாம் விட்டுவிட முடியுமா?


காந்தி கேட்பது நியாயமாகும். ஆனால் காலம் காந்திக்கு முன்னரே அப்படிபட்ட மனிதரொருவரை படைத்துவிட்டதை காந்தி அறிந்திருக்கவில்லை.


நான் ஒன்றை மட்டும் உறுதிபட கூறுவேன். இந்த உலகம் சிறக்க எல்லா மதங்களை காட்டிலும் சமரச சுத்த சன்மார்க்க சங்கமானது அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும்.


வள்ளலார் காலத்து தமிழகத்துக்கு வள்ளலாரே தெரியவில்லை. இன்று வள்ளலார் நெற்றியில் விபூதி எங்கே என்கிறார்கள்.


கண்ணதாசன் ஆழ்ந்த அர்த்தங்கொண்டு பாட்டெழுதிருப்பார்,

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி 

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் 

தெய்வத்தின் காட்சியம்மா 

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா 

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

வள்ளலார் கண்ட தெய்வக் கொள்கையை சுருங்க சொல்ல வேண்டுமானால், 'சன்மார்க்கிகளுக்கு திருநீறு தெரியவில்லை, தனிப்பெருங் கருணை மட்டும் தான் தெரிகிறது'.


தீசன் 


4 கருத்துகள்

  1. வள்ளலார் கருத்தை கண்ணதாசனோடு இணைத்து கூறுவது பாராட்டுக்குரியது.இருபதில் இந்த சிந்தனை என்றால் அறுபதில் எப்படி இருக்கும்?என்னால் கற்பனை செய்ய இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  2. ஆரம்ப கேள்விக்கு இறுதியில் தந்த பதில் இருக்கிறதே.. அது பல பைத்தியங்களுக்கு சரியான வைத்தியமாக இருக்கும்.

    ஏழை எளிய மக்களுக்காகதான் பிள்ளையார் வழிபாடு சந்திக்குசந்தி உருவானது. ஆனால் நாளடைவில் அவரும் செல்வசீமான்களின் கடவுளாகிவிட்டார். பிறகு எளிமையின் சிகரமாக சாயிபாபா தெருவுக்கு தெரு வந்தார்.. அவரையும் பணக்காரர்கள் பளிங்குமாளிகையிலும் பங்களா வீடுகளிலும் அடைத்துவிட்டார்கள்..

    இப்போது நம் வள்ளலார் புத்துயிர் பெற்று எழுந்து வருகிறார்.. அவரையாவது ஆடம்பரகோமாளிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்...!

    அதற்கு உமது இந்த கட்டுரை இன்னும் எளிய முறையில் சாமான்யர் பலரை சென்றடைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளலார் செல்வந்தர்களுக்கான ஒருவராகவும் இன்று வீற்றிருக்கிறார் தான்

      ஆனால் அது எப்படியாயின்

      பல்வேறு செல்வந்தர்கள் தருமசாலையில் அன்றைய அன்னதான உபயத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்

      சமீபத்தில் கூட அச்செய்தியை பார்த்தேன்

      இலையினை எடுக்கக்கூட ஒரு செல்வந்தர் தான் அதை செய்தாய் முன்வந்தாராம்

      வள்ளலார் அனைவருக்குமானவர்

      பல மாதங்களுக்கு முன்னொரு ஹைக்கூ எழுதினேன்


      அடுத்தவரின்
      துன்பம்
      உன் பாவத்தை
      நீக்குவதற்கான
      சந்தர்ப்பம்

      வள்ளலாரை புரிந்த செல்வந்தர்களுக்கு இந்த கவிதையின் பொருளும் நாம் சொல்லாமலே தெரிந்திருக்கிறது.

      நீக்கு
  3. அனைவரையும் தெளிய செய்யும் அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை