தெரிந்தோ தெரியாமலோ மதுவுக்கு அடிமையான என் குடிகார சகோதரா! குடியே குடி என குடிக்கிறாயே
அது உன் உயிரை குடிப்பது உனக்கு தெரியாதா?
உனக்கு கல்லீரல் வேண்டாமா?
உனக்கு சிறுநீரகம் வேண்டாமா?
நூறு ஆண்டு வாழ தானே
உன்னை கடவுள் இந்த பூலோகத்துக்கு அனுப்பினார்.
நீ குடித்து குடித்து குடலை அழுகவைத்து பாதி வயதில் பரலோகம் போகிறாயே.
நீ குடித்த பிறகு உனக்கு நடப்பதெல்லாம் தெரியுமா?
மனைவிக்கும் மகளுக்கும் உனக்கு மாறுபாடு தெரியுமா?
வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடப்பதை போதை தெளிந்ததும் எடுத்து போர்த்திக் கொண்டு வருகிறாய்.
சாக்கடையில் வீழ்ந்து கிடக்கும் நீ தாகம் எடுத்தால் அதைத்தானே குடிக்கிறாய்.
செல்போனை அடகுவைத்து குடிக்கிறாய்.
அதை யாரிடம் அடகு வைத்தாய் என அடுத்த நாள் கேட்டால் முழிக்கிறாய்!
குடிக்கும் நேரம் வந்துவிட்டால் வீட்டுக் குடத்தை கூட பாதி விலைக்கு விற்கிறாய்.
போதையில் வண்டியை ஓட்டி காலை உடைத்துக் கொண்டு வருவாய்.
பழியை நாயின் மீது போட்டு விடுவாய். சுடுகாடு போகும் வழி கேட்டதற்கு மதுக்கடையை காட்டினான் ஒரு கவிஞன்.
சுடுகாட்டுக்கு செல்லும் வழி மதுக்கடை தான்.
ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு போவாய்,
200 ரூபாய்க்கு குடித்து இருப்பாய் காலையில் பார்த்தால் பாக்கெட்டில் மீதி பணம் இருக்காது.
எப்படி போனது?
உனக்கே தெரியாது.
மதுக் கடைக்கு போனால்
பணம் தானே போகிறது
என்று நீ நினைக்கிறாய்!
மானம் வெட்கம் போவது உனக்கு தெரியவில்லை.
ஏனென்றால்
உனக்கு அப்போது சூடு சொரணை இருப்பதில்லை.
பணம் செல்வாக்கில் ஒருவன் பெரிய ஆளாக இருக்கலாம்!
குடி என்று வந்துவிட்டால் அவன் 'கிடக்கிறான் குடிகாரன்' என்றே ஊர் சொல்லும்.
அழகான பிள்ளைகள் உனக்கு இருக்கும்.
இரவில் நீ வரும் நேரம் வராவிட்டால் அப்பாவை பார்த்து அழைத்துவா என உன் மகனை உன் மனைவி அனுப்பி வைப்பாள்.
நீ வீதியோரம் வீழ்ந்து கிடப்பாய்.
அழைக்க வந்த மகனுக்கு அவமானம் பிடுங்கித் தின்னும்.
கல்லீரலை கல்லு ஈரல் ஆக்கிவிட்டாய் கணையத்தை மது கலயமாக்கி விட்டாய்.
செத்து விடுவாய் என்று உன்னை எச்சரித்தால்,
செத்தால் செத்து விட்டு போகிறேன் என்று இளமை திமிரில் பேசுகிறாய்.
பிள்ளைகள் வளர்ந்து பெருமை தேடி தரும்போது வாழ ஆசைப்படுகிறாய். கண்கள் இரண்டும் கெட்ட பிறகு
சூரியனை வணங்க
கிழக்கு என்று நினைத்து வடக்குப் பக்கம் செல்கிறாய்.
கடலை மிட்டாய் கூட ஒருவனுக்கு வாங்கி கொடுக்காத நீ
கப் மட்டும் வாங்கி வா கட்டிங் தருகிறேன் என திடீரென வள்ளலாகிறாய்.
ஊரெங்கும் தீபாவளி,
புத்தாடைகள் புது பலகாரங்கள் மத்தாப்புகள் வான வேடிக்கைகள் திரைப்படங்கள் என எல்லோரும் கொண்டாடும் போது
நீ 'முழு பாட்டில்' ஒன்றை அடித்து முழு நாளும் மட்டையாகிறாய்.
பூமி சுழலும் போது நீ ஸ்டெடியாக இருந்தால்தான் பகலிரவு உண்டாகும்.
நீ சரக்கடித்துவிட்டு சுழன்று கொண்டு இருந்தால்
இரவு எது பகல் எது உனக்கு எப்படி தெரியும்?
ஆண்டுக்கு 10 ஆயிரம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதற்கு நீ குடித்து விட்டு கொடுக்கும் டார்ச்சர் தான் காரணம்.
தினமும் 450 பேர் விபத்தில் சாகிறார்கள் அதில் 30% குடித்துவிட்டு ஓட்டும் ஓட்டுனர்கள் தான் காரணம்.
சமூகக் குற்றம் அனைத்துக்கும் குடி தான் காரணம்.
குடித்த பிறகுதான் உனக்கு பிறந்த குழந்தையை கருப்பாக எப்படி பிறந்தது? சிவப்பாக எப்படி பிறந்தது? என ஆராய்ச்சி செய்வாய்.
கொரோனா காலத்தில்
குடிக்க கடை இல்லை.
குடும்பஸ்தனாக இருந்தாய்.
48 நாள் குடிக்காத நீ 49வது நாளும் குடிக்க மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் ஐயப்பனுக்கு மாலை போட சொல்கிறோம்.
கார்த்திகை வருகிறது….
ஐயப்பனை சாட்சியாக வைத்து இல்லை ஐயப்பனை சாக்காக வைத்து குடிப்பதை நிறுத்து.
மது விற்பதை அரசு நிறுத்தாது
குடித்து நீ செத்தால் கூட
உன்னை வைத்து ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி சம்பாதிக்கும் அரசு
ஒரு பைசா கூட உன் இறப்புக்கு கொடுக்காது.
பணம் காய்க்கும் மரத்தின் வேரை வெட்ட அரசுக்கு என்ன பைத்தியமா?
குடிக்கின்ற பணத்தில் வீட்டுக்கு சோப்பு ஷாம்பு ஹார்லிக்ஸ் பூஸ்ட் என எதையாவது வாங்கி செல்.
அரசுக்கு ஜிஎஸ்டி கிடைத்துவிடும்
நீயாகத்தான் ஆரம்பித்தாய்
நீயே நிறுத்திவிடு.
டாஸ்மாக் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி விட்டால்!!!
சம்பளம் கொடுக்க வழி இல்லாமல் அரசு தானாகவே பூட்டி விடும்.
அடுத்த தலைமுறையாவது குடி இல்லாமல் வாழட்டும்.
ஜெ மாரிமுத்து
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநீண்ட காலமாக கூறப்படுகிற அக்கறை மிகு அறிவுரை...
தங்களின் சற்றே வித்யாசமான அணுகுமுறையால்.. நெஞ்சில் முள்போல தைத்து, படித்த குடிமகன்களை ஐயமின்றி திருத்தும்..
கட்டிட கட்டுமான பணிகளில் ஈடுபடும் பலதரப்பட்ட பணியாளர்கள் பலரும் பெறுகிற தினசரி கூலி யை மாதாந்திர அளவில் கணக்கிட்டால், வருகிற தொகையானது.... இன்றைக்கு மாநகரத்தில் ஒரு சராசரி நிறுவனத்தில் பணியாற்றும் படித்த பட்டதாரி இளைஞன் ஒருவன் பெறுகிற மாத சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம்..!! இருந்தும் அவன் வைத்திருக்கிற வசதிவாய்ப்புகளை இவர்கள் பெறமுடியாததற்கு முதன்மை யான காரணம் கூலியின் கணிசமான பகுதி மதுவில் கரைவது தான்..!
தீபாவளி முதலான பண்டிகை சிறக்க அவர்களுக்கு வழங்கப்படுகிற கூடுதல் சிறப்பு ஊதியம் கூட நேராக டாஸ்மாக் கணக்குபுத்தகத்தின் வரவில்தான் வந்து சேருகிறது.!
சந்தேகமின்றி இது ஒரு குணப்படுத்தப்பட வேண்டிய சமூகநோய்..!
குடிகாரன் மற்றும் அவனின் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை சுழற்சியை தண்ணி கலக்காத பால் போல கூறியுள்ளீர்கள். உங்கள் கையெழுத்துக்கு நான் ரசிகன். கட்டுரையை படிக்க ஆரம்பிக்கும் போதே தெரிந்து விட்டது இது தங்கள் கட்டுரை என்று 😍
பதிலளிநீக்குநன்றி தம்பி.
நீக்கு