அண்மை

பொய் சொல்லாத திருடன் - சிறுகதை

 

கங்காதரன் என்ற திருடன் தன் வேலையை முடித்துக் கொண்டு அநாயசமாக சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான்.


அப்போது அவ்வழியே நடந்து வந்த சாது ஒருவர் எல்லோருக்கும் கேட்கும் படியாகவும் அதே சமயத்தில் மென்மையாகவும், 'ஆசை வேண்டாம்…. கோபம் வேண்டாம்…. திருட்டு வேண்டாம்…. பொய் வேண்டாம்…' என்று குரல் எழுப்பிக் கொண்டே வந்து கொண்டிருந்தார்.


அந்த சாதுவின் கண்கள் கங்காதரனை நோக்கலாயின. அவர் அந்த திருடனின் முன்பு வந்து, 'தம்பி…. ஆசை வேண்டாம்… கோபம் வேண்டாம்…. திருட்டு வேண்டாம்…. பொய் வேண்டாம்….' என்று அழுத்தி கூறினார்.


'சுவாமி நானோ ஏழை என்னிடம் ஆசை வேண்டாம் என்கிறீர்களே. நான் ஆசை படாது போனால் என்ன குடி முழுகிப்போக போகிறது. என் ஆசையெல்லாம் மறுவேளை உணவு மட்டும் தானே. என்னை போன்றோர் எல்லாம் இந்த ஆசை கூட இல்லாது போனால் வயிற்றுக்கு என்ன செய்வோம்?'


சாமியார் கொஞ்சம் சிந்தித்தார், 'சரியப்பா பிறவற்றையாவது நிறுத்திவிடேன்'


'சுவாமி கோபத்தை விடுமளவிற்கு நானொன்றும் புத்தர் இல்லை. என் போன்றோர்களின் தன்மான காப்பே கோபம் தான் அதையும் விடுத்து மானங்கெட்டு வாழ வேண்டுமா.?'


'இதுவும் முடியாதென்றால் திருட்டையாவது விட்டுவிடேன்'


'சுவாமிகளே! என் தொழிலே அது தான். அதையும் நிறுத்திவிட்டு என்னை நடுத்தெருவிற்கு வரசொல்கிறீர்களா?'


'அட என்னப்பா நீ… இந்த பாழும் பொய்யையாவது விடு. அது ஒரு கேடு'


கங்காதரன் ஒரு கணம் யோசித்தான்.


'இந்த ரோட்டு சாமி சொன்ன எதையுமே நம்மால் கடைப்பிடிக்க முடியலையே, பொய்யும் அதிகம் நாம் பிரயோகம் செய்வதில்லை… இந்த கேட்டையாவது விட்டால் என்ன….'


கங்காதரன் ஒரு முடிவுக்கு வந்தான். 


'சரி சுவாமி நான் இந்த நொடியிலிருந்து பொய் பேசுவதில்லை. இது பழனி ஆண்டவர் மீது சத்தியம்'


திருடனின் இந்த தீர்க்கமான சொல்லை கேட்டு சாது நகர்ந்தார். கங்காதரனும் தன் வேலையை பார்க்க புறப்பட்டான்.


அன்றைய யாமப்பொழுது.


அவ்வூரின் அரசர் பெரிய நியாயத்தான். வீரமானவர், நல்ல புத்திமான். இருந்தாலும் அவருக்கு பல வருட ஆட்சிக்கு பிறகு இப்போது தான் ராஜ பதவியின் சுமை தெரிந்திருந்தது. தன் மகனுக்கு பட்டத்தை கொடுத்துவிட்டு அரசு துறக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக மக்களும் புறம் பேசிக் கொண்டிருந்தார்கள்.


இந்த வேளையில் கங்காதரன் தன் கைவரிசையை காட்ட அரண்மனை கஜானா தான் சரியான இடம் என திட்டம் போட்டிருந்தான்.


போட்ட திட்டத்தின் படியே அன்று அரண்மனைக்குள்ளும் குதித்து கஜானாவை நெருங்கிவிட்டான்.


கஜானாவின் வாயிலில் ஒரு பாரா காவலன் தன் உடலையே ஈட்டியால் முட்டு கொடுத்து உறங்கிக் கொண்டிருந்தான். பூனைப்போல் நடக்க பழகிய கங்காதரனும் மெல்ல அவனை கடந்து கஜானாவிற்குள் நுழைந்தான். 


அங்கே மலை போல குவிந்து கிடந்தது தங்க பிஸ்கட்டு, வயலில் விளைந்து பயிர் போல மண்டி கிடந்தது வெள்ளி பொருட்கள், கரும்பு தோகை போல் கொத்து கொத்தாக அணிமணி ஆபரணங்கள், விலைமதிக்கவே முடியாத தங்க சிலைகள் என எல்லாமே இருந்தது.


அந்த தங்க குவியல்களுக்கு மத்தியில் முகத்தில் கருப்பு துணி கட்டி இருந்த ஒரு புது மனிதனும் அங்கே நின்று கொண்டிருந்தான்.


கங்காதரனுக்கு முன்பே வந்த அந்த புதிய மனிதனும் ஓரு திருடன். 


அந்த புதிய திருடன் தன்னை கங்காதரனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கு இதுபோன்ற ராஜ திருட்டில் நிறைய அனுபவம் இருப்பதாகவும் கூறினான்.


கங்காதரன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் கொண்டுவந்திருந்த ஒரு பெரிய பையின் முடியை அவிழ்க்க தொடங்கினான்.


'இரு… இரு… கொஞ்சம் பொறு… இது போன்ற பெரிய இடங்களில் அதிகமாக அள்ள அள்ள நாம் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது' புதிய திருடன் மெல்லமாக சொன்னான்.


கங்காதரனுக்கும் அவன் சொல்வது சரியாகவே பட்டது. 'அதற்கு என்ன செய்யலாம்?' 


'நான் சொல்வதை கேள். எடுக்கும் பொருள் சிறிதாக இருக்க வேண்டும். ஆனால் விலை பெரிதாக இருக்க வேண்டும்'


'அப்படி ஏதும் பொருள் உனக்கு தெரியுமா?' கங்காதரனின் விழிகள் வியப்பில் இருந்தது.


'தெரியும்…. மன்னர் தன் மகனுக்கு முடி சூட்ட சிங்களத்திலிருந்து ஒரு மகுடம் கொண்டு வந்து இருக்கிறார். அதில் ஐந்து வைரம் சேர்க்க போகிறார்களாம். ஒரு வைரம் ஒரு கோடி பெறும். நாம் அதை திருடுவோம்'


கங்காதரனும் இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தான். நீண்ட நேர தேடலுக்கு பின் இருவரும் அந்த தங்க குவியல்களின் ஆழத்தில் ஓரு பெட்டியை கண்டெடுத்தனர். அந்த பெட்டியில் ஐந்து உள்ளங்கை அளவு வைரம் இருந்தது.


கங்காதரன் அந்த பெட்டியில் உள்ள மூன்று வைரங்களை எடுக்க போனான்.


'இரு… இரு….' புதிய திருடன் அவனை தடுத்தான்


'இப்போது என்ன?' 


'என்னதான் இருந்தாலும் அரசர் ரொம்ப நல்லவர். தன் கொள்ளு தாத்தா விதித்த வரியையே தான் இப்போதும் வாங்குகிறார். புதிய வரி ஏதும் விதிக்க வில்லை. போட்ட வரி ஏற்றாதவர், புதிய வரி போடாதவர். அதோடு மட்டுமல்லாமல் நம்மை போன்ற திருடர்களுக்குமே கூட வசதியுறும் வகையில் தான் நாட்டையே நிர்மாணம் செய்கிறார். அதனால் இந்த ஐந்தில் மூன்றை அரசருக்கு கொடுத்து விடுவோம். மீதி இரண்டை ஆளுக்கொன்றாய் எடுத்து கொள்வோம்…. என்ன சம்மதமா?'


புதிய திருடனின் இந்த கருத்தை கேட்ட கங்காதரனுக்கும் அரசர் பாவமாகவே பட்டார். அதனால் அவனும் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.


இருவரும் ஆளுக்கொரு வைரத்தை எடுத்து கொண்டு மீதி மூன்று வைரத்தை அதே பெட்டியில் வைத்து அவ்விடத்தை விட்டு அகன்றனர்.


புதிய திருடன் பேசலானான், 'இனி நீ யாரோ… நான் யாரோ… ஒரு வேளை நான் மாட்டிக் கொண்டால் உன்னை நான் காட்டி கொடுக்க மாட்டேன், நீ மாட்டிக் கொண்டால் என்னை நீ காட்டி கொடுக்க கூடாது' 


'சத்தியமாக நான் உன்னை காட்டி கொடுக்க மாட்டேன், நீ என்னை நம்பலாம்' கங்காதரனும் வாக்கு கொடுத்தான்.


மறுநாள் காலை அரசவை மந்திரிகளாலும் மக்களாலும் கூடி இருந்தது. அரசர் ராஜ நெறிக்கே உரித்தான வெண் கொற்றக்குடையின் கீழ் அமர்ந்திருந்தார்.


அப்போது ஒரு காவலன் கையில் பெட்டியுடன் அரசவைக்குள் புகுந்தான். முக்கிய மந்திரியின் காதருகே வந்து, 'மந்திரிக்கு வணக்கம். காலையில் கஜானா சரிபார்ப்பு நிகழ்ந்தது. அதில் இந்த பெட்டியில் இருந்த 5 வைரங்களில் 2 குறைகிறது… கஜானா முழுவதிலும் தேடி விட்டோம்… திருட்டு போனதாக சந்தேகிக்கிறோம்' என்றான்.


'நம் நாட்டில் திருட்டா?' அவையின் முக்கிய மந்திரி சினங்கொண்டு எழுந்தார். 


'ராஜ கேசரி, ராஜ சிம்மன், உலக ராஜனுக்கெல்லாம் திருஷ்டாந்தம் என பெயர் பெற்ற என் மன்னன் ஆளும் நாட்டிலே திருட்டா..? என்ன புடுங்கி கொண்டடா இருந்தீர்கள்? மகுடத்தில் ஏற்றப்பட போகும் வைரத்தை காணும் என்கிறாயே..? இது நாட்டுக்கே கேடு தருமேடா மூடா….. உன்னை எல்லாம்…' என கூறிக்கொண்டே மந்திரி தன் இடை வாளில் கை வைத்தார்.


அரியணையில் இருந்த மன்னர், 'என்ன… என்ன ஆயிற்று... ஏன் சத்தம்?' எனப் பதறிக் கேட்டார்.


மந்திரி மெல்ல காவலன் அருகே வந்து அவனது கைகளில் இருந்த பெட்டியை 'படக்' என பிடுங்கி அதை திறந்து பார்த்தார். அதில் மூன்று வைரம் இருந்தது. 


அதை அப்படியே தன் மேல் சட்டையினுள் போட்டுக்கொண்டு, வெறும் பெட்டியை விரித்த படியே திரும்பி, 'மன்னா... நம் விலைமதிப்பில்லா வைரமெல்லாம் திருட்டு போய் விட்டது மன்னா… இங்கே பாருங்கள் ஒன்றை கூட விட்டு வைக்க வில்லையே...ஐயோ' என்று கதறி அழுதார்.


மன்னர் அரியணையிலிருந்து எழுந்தார். சிறுது நேரம் தலையை மேல் நோக்கி சிந்தனையில் ஆழ்ந்தார். 


'மேல கரை விநாயகர் கோவில் அருகே ஒரு குடிசை வீடு இருக்கும். அந்த வீட்டினுள் இருப்பவனை இங்கே அழைத்து வாருங்கள்' என்று காவலர்களுக்கு உத்தரவிட்டார்.


காவலர்களும் அவனை அழைத்து வந்தார்கள். மன்னர் அவனை விசாரிக்க தொடங்கினார்,


'உன் பெயர் என்ன?'


'கங்காதரன்'


'நேற்று இரவு கஜானாகுள் புகுந்து நீ தானே வைரத்தை திருடினாய்?'


'ஆம்'


'ஏன் திருடினாய்?'


'நீங்கள் தான் அதற்கு காரணம்'


'என்ன சொல்கிறாய்?'


'எனக்கு ஏதும் வேலை கிடைத்திருந்தால் நான் திருடி இருக்க மாட்டேன்'


'உனக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு நான் எப்படி காரணமாவேன்'


'நீங்கள் நல்ல கல்வி சாலைகளை அமைத்திருந்தால் நான் நன்றாக படித்திருப்பேன். நன்றாக படித்திருந்தால் இன்று நான் திருடனாகி இருக்க மாட்டேன்'


'உன் மண்டையில் சரியாக படிப்பு ஏறாததற்கு என்னை காரணம் சொல்கிறாய். சரி விடு. எங்கே வைரம்?'


கங்காதரன் தன் இடை முடிப்பிலிருந்து அந்த ஒரே ஒரு வைரத்தை எடுத்து மன்னர் முன் நீட்டினான்.


'என்ன ஒன்றை மட்டும் காட்டுகிறாய்? மீதி?'


'நான் ஒன்றை மட்டும் தான் எடுத்தேன்'


'உன்னோடு வேறு சிலரும் வந்தார்கள் போல?'


'ஆமாம்'


'எத்தனை பேர்?'


'ஒருவர் தான்'


'யார் அவன்?'


'என்னால் சொல்ல முடியாது… அவரை காட்டி கொடுக்க மாட்டேன் என சத்தியம் செய்து இருக்கிறேன்'


'மன்னா… இந்த திமிர் பிடித்தவனிடம் என்ன விசாரணை, இவன் கூட்டாளிக்கு தரப்போகும் தண்டனையையும் இவனுக்கே சேர்த்து கொடுங்கள்' மந்திரி ஆவேசமாக முழங்கினார்.


மன்னர் மந்திரியை பார்த்தார். தன் இடை முடிக்குள் கையை விட்டார்.


'மந்திரியாரே… நேற்று கஜானாவுக்குள் புகுந்து கங்காதரன் எடுத்த ஒரு வைரம் இதோ இருக்கிறது. அவனோடு சேர்ந்து நான் எடுத்த வைரமும் இதோ என் இடை முடியில் இருக்கிறது. மீதி மூன்று எங்கே?'


மந்திரி அதிர்ந்து போனார். 


மன்னர் தன் இடை முடிப்பில் இருந்த வைரத்தை எடுத்து அவை முன் நீட்டினார். நேரே மந்திரியை நோக்கினார்.


'சொல் மந்திரி… எங்கே மீதி வைரம்?'


மந்திரி செய்வதறியாது திகைத்தார். தன் தலை மகுடம் தரையில் விழ மன்னர் காலில் விழுந்து அழத் தொடங்கினார்.


மன்னர் மென்மையாக தொடங்கினார் 'மந்திரி உனக்கு இனி இங்கு வேலை இல்லை… உன் வேலை இனி கங்காதரனுக்கு'


'ஐயோ.. மன்னா இந்த ஒருமுறை மன்னியுங்கள்'


'நீ சட்டையுள் போட்ட வைரத்தை கொடுத்துவிட்டு சந்தோஷமாக இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்'


மன்னரின் காலை பிடித்து கொண்டிருந்த மந்திரியை காவலர்கள் இழுத்து சென்றார்கள்.


அங்கே மௌனமாக நின்று கொண்டிருந்த கங்காதரனை மன்னர் நோக்கினார்.


'கங்காதரா.. உன்னோடு திருடன் வேடத்தில் வந்து களவாடியவன் நான் தான். நீ கோட்டையுள் புகுந்ததிலிருந்து திருப்பி உன் வீட்டுக்கு போகும் வரை நான் உன்னை கவனித்து கொண்டே தான் இருந்தேன். நீ திருடனாக இருந்தாலும் எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு நடந்தவை நடந்தபடியே உண்மை சொன்னதோடு மட்டுமல்லாமல்… உன் கூட்டாளியான எனக்கு நீ தந்த சத்தியத்தை மீறாமல் நடந்து கொண்டாய் பார் அந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கிறதப்பா…. நாளை மறுநாளிலிருந்து இந்த நாட்டுக்கு என் மகன் தான் மன்னன். அன்றிலிருந்து நீயும் மந்திரியாய் பதவி ஏற்றுக் கொள். இப்போது நம் ராஜ உபசரிப்புகளை ஏற்றுக்கொள்'


அங்கிருந்த சில காவலர்கள் கங்காதரனை ஒரு ராஜ விருந்திற்காக அருகே இருக்கும் அரண்மனை உபசரிப்பு மாளிகைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்கள்.


போகும் வழியில் ஒரு சிறிய புங்கை மர நிழலில் தொன்னையில் புளிசாதம் தலைமாட்டில் இருக்க ஒளி தவழும் முகத்தோடு படுத்து கொண்டிருந்தார், அந்த வழிப்போக்க சாது.


தீசன்


(வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு கதையிலிருந்து பிறந்த கதை)

தென்றல் இதழ் 24

3 கருத்துகள்

  1. ஏற்கனவே எங்கோ படித்தது போல் இருந்ததாலும் சொல்லி இருக்கும் முறை நடை கதைக்கு அழகை தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை..

    "பொய்.." மிக எளிமையான ஜனரஞ்சக பாவம்.
    அதே நேரம் பிற அத்தனை பாவங்களுக்குமான அரிச்சுவடியும் அதுதான்..!

    ஒன்றாக நல்லது கொல்லாமை..
    மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று..!

    என்றும்,

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று!

    என்றும் வள்ளுவன் சொன்னது இதன் பின்னணியில்தான் போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! எல்லா புகழும் வாரியார் சுவாமிகளுக்கே

      கொல்லாமை பற்றி வள்ளுவமும் இன்ன பிற நூலும் தான் பேசுகிறது என்றே நான் நினைத்தேன்

      பதினெண்கீழ் கணக்கு எல்லாமே கொல்லாமையை பற்றி பேசுகிறது.

      அன்றைய தமிழன் இரக்கமுள்ளவன்.

      பாரதியார் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது

      எந்த அறத்தையும் கடைப்பிடிக்காத இந்த கூட்டம்

      "நாமமது தமிழரென கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?"

      நீக்கு
புதியது பழையவை