அண்மை

திருக்குறளை விடவும் எளிய அற நூல்

 


திருக்குறளுக்கு அடுத்தபடியாக ஒரு எளிய நூல் நமக்கு கட்டாயம் வேண்டும்.


கடலை தாண்டிய பிறகு சாத்திரமெல்லாம் பலிக்காது என்று சொல்லும் நம் நாட்டிலே தான் 'ஆர்கலி சூழ்ந்த மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என அறங்கூறும் நல் நூலும் உள்ளது.


நமது அற பார்வை பரந்த இந்த பாரத கண்டத்தையும் தாண்டி பார் முழுதையும் பார்ப்பது ஒருபுறமே இருந்தாலும் கூட நல்வழி புகட்டும் நாலுவரி எழுதிய கணமே புத்தெழுத்தாளர்கள் அப்பத்திக்கு ஆதாரத்திற்கென புரட்டுவது என்னவோ திருக்குறளை மட்டுந்தான். 


பேச்சு போட்டிக்கும் கட்டுரை போட்டிக்கும் செல்லும் மாணவர்கள் கூட மேற்கோளுக்கென திருக்குறளை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள்.


ஏனைய பிற அறநூல்களின் பெயர்களை தவிர வேறொன்றும் பலருக்கு தெரிவதே இல்லை.


உண்மையில் திருக்குறளை விட எளிதான முறையில் அற பொருள் இன்பத்தை கூறும் தமிழ் நூல் எத்தனையோ உள்ளது. 


திருக்குறளை மறக்க சொல்லவில்லை. இன்றைக்கு திருக்குறள் எப்படி எல்லார் வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் நமக்கு உதவும் படி இருக்கிறதோ அதே போன்று வேறு சில தமிழ் நூலும் நம்மிடையே உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.


இல்லையெனில் மனிதனின் பரிணாமத்தில் எப்படி வால் போனதோ அதே போல பல தமிழ் அற நூல்களை பயன்படுத்தாமலே நாம் இழக்க நேரிடும்.


தாத்தா வைத்த புதையலுக்கு தந்தை வரைபடம் எழுதி வைத்திருக்க பிள்ளை அதை செல்லரிக்க விட்ட கதை தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோம்.


திருக்குறளை மட்டுமே பயன்படுத்தி பயன்படுத்தி இன்ன பிற அற நூல்களை நாம் இருந்தும் இல்லாமல் செய்து கொண்டுள்ளோம்.


இப்போது நான் சொல்ல போகும் நூலும் தமிழ் மக்களால் அதிகம் பயன்படுத்தாமல் விடப்பட்ட திருக்குறளுக்கு நிகரானதொரு பதினெண்கீழ் கணக்கு நூல்.


அதன் பெயர் 'இனியவை நாற்பது'


திருப்பாவை போல் சின்ன குழந்தைகள் கூட எளிதில் மனனம் செய்யும் அளவிற்கு மிக எளிதானதொரு நூல்.


மதுரை தமிழாசான் மகன் பூதஞ்சேந்தனார் இயற்றிய இந்நூல் கி.பி 750 களில் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.


இந்நூலின் சில பாடல் வரிகளிலிருந்து திருக்குறளுக்கு அடுத்தபடியாக இதை வைக்க என் காரணத்தை சொல்கிறேன்


பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே


ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிது


ஏருடையான் வேளாண்மை தான் இனிது


ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே


கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே


நிறை மாண்பு இல் பெண்டீரை நீக்கல் இனிது


குழவி பிணி இன்றி வாழ்தல் இனிது


மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே


தானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிதே


பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது


கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிது


வலவைகள் அல்லோரை காப்பு அடைய கோடல் இனிது


முதுமக்கள் வாழும் பதி இனிது


எள்துணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது


புலவர் தம் வாய்மொழி போற்றல் இனிதே


அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிதே


வருவாய் அறிந்து வழங்கல் இனிதே


செல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே


இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது


ஐ வாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே


தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே


ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியில் தேர்வு இனியது இல்


இளமையை மூப்பு என்று உணர்தல் இனிது


வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர் தானை தடுத்தல் இனிது


கொல்லாமை முன் இனிது


கோல் கோடி மாராயன் செய்யாமை முன் இனிது


ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிது


ஆர்வம் உடையவர் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது


நான் மேலே கொடுத்த இனியவை நாற்பதின் வரிகளை நன்றாக கவனித்தீர்களேயானால் அதில் கல்வி, இளமை, வாழ்க்கை துணைநலம், அறம், ஈகை, தொழில், மறம், செங்கோல், பொருள், துறவு, கொல்லாமை, நிலையாமை, புலால் மறுத்தல், அவா அறுத்தல், இன்பம் என வள்ளுவம் சொல்லிய பெரும்பாலான கருத்துகள் இருக்கும். அதோடுமட்டுமல்லாமல் உங்களுக்கு உரை இல்லாமலே புரிந்தும் இருக்கும்.


திருக்குறளில் பத்துக்கு ரெண்டு குறள் உரை இல்லாதே புரியுமானால் இனியவை நாற்பதில் நாற்பதுக்கு முப்பத்தெட்டு பாட்டு புரிந்துவிடும். 


இதுபோல இந்நூலில் 124 இனிய கருத்துகள் இடம்பெறுகிறது.


'என் தந்தையே ஆனாலும் திருக்குறளை படிக்காதவரெனில் அவரை நான் தந்தையென ஏற்க மாட்டேன்' என்றார் வ.உ.சிதம்பரனார். 


தமிழ் நமக்கு அளவு கடந்த அற செல்வங்களை தந்துள்ளது. அதை சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப என்றவாறு பெருமை பேசி பேசி நம்மையே சிறுமை படுத்திகொள்ளலாகாது.


மார்கழி மாத திவ்ய போட்டியில் திருப்பாவையை மனனம் செய்து என் பையன் முதல் பரிசை வாங்கினான் என்பதில் ஒரு பெருமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவும். 


அறமே லோகப்பரிசை வெல்லும் சுரம்.


சின்னஞ்சிறுவர் மனத்தினிலே இந்த அற பாங்கு ஏறிவிட்டால் நாட்டில் நடக்கும் பெரும்பான்மை குற்றங்கள் ஒழிந்து போகும்.


அதற்கு எளியதொரு அறநூலான இனியவை நாற்பது, ஒரு நல்ல வழி.


திருக்குறள், திருப்பாவை போன்றே நம் இன்ன பிற கீழ் கணக்கு நூல்களும் மாணவர்கள் மத்தியில் போட்டிகளின் வாயிலே சேருமாயின் அதன்மூலமும் கூட அறவழி கூட்டத்தின் எண்ணிக்கை கூடும்.


சிலரது வீட்டில் திருப்பாவை இருக்கும். உங்கள் வீட்டில் நிச்சயம் திருக்குறள் புத்தகம் இருக்கும். முடிந்தால் பதினெண்கீழ் கணக்கு முழுதும் வாங்கி வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் இனியவை நாற்பது மட்டுமாவது…..


தீசன்

தென்றல் இதழ் 25

1 கருத்துகள்

  1. இன்று இரவுக்குள் நாற்பது இனிப்புகளையும் விழுங்கிட விழைகிறேன்...

    செல்லரிக்கும் முன்பே ஸ்கேன் செய்தல் இனிது.. அல்லவா..?



    பதிலளிநீக்கு
புதியது பழையவை