செத்து போனவர்களுக்கு கொல்லி வைக்க யாராவது ஒருவர் வேண்டும்.
ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள் தங்களுக்கான கொல்லியை தாங்களே வைத்து கொள்வார்கள். அனுமன் வாலில் வைத்த தீ இராவணனின்
இலங்கையை அழித்தது போல சிகரெட்டின் முனையில் தீக்குச்சியால்
பற்ற வைக்கப்பட்ட தீ அவனுடைய சிதையில் எரிந்து சாம்பலாகி
அணைகிறது.
உயிரை குடிக்கும் இந்த புகைப் பழக்கத்தை ஒருவர் ஓரே நாளில் விட்டு விட முடியுமா? என் வாழ்வில் நான் பார்த்த ஒரு நிகழ்வை சொல்லுகிறேன்.
எனது நண்பர் ஒருவர் டீ கடை வைத்துள்ளார். காலை 5 மணிக்கு
கடை திறக்க காலை 4 மணிக்கே எழுந்து பாத்ரூம் செல்கிறார்.
பாத்ரூம் விட்டு வெளிவந்த அவருக்கு உடல் முழுவதும் வியர்வை.
நாக்கில் எச்சில் ஊறிகொண்டே இருக்கிறது. பேச்சு குழறுகிறது.
ஏதோ விபரீதம் நடக்க போவதை உணருகிறார்.
அறையில் அவரது மனைவியும் சிறுவர்களான இரண்டு பிள்ளைகளும் உறங்குகிறார்கள். தட்டு தடுமாறி செல்லை
எடுத்து அவருக்கு நெருக்கமான ஒரு ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து உடனே வரும்படி அழைக்கிறார்.
சத்தம் கேட்டு எழுந்த மனைவி கணவரது பதட்டமான முகத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நண்பர் தனக்கு நெஞ்சு வலிப்பதை சைகையால் சொல்கிறார். அதற்குள் ஆட்டோ டிரைவர் வந்து விடுகிறார்.
நிலைமையை புரிந்து கொண்டு அவரை மெடிக்கல் சென்டருக்கு அழைத்து செல்கிறார். அடிப்படை சோதனைகளை மேற்கொண்ட போது அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் என்பதை அறிகிறார்கள்.
கொஞ்சம் காஸ்ட்லியான இரண்டு இஞ்செக்ஷனை போட்டவுடன் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.
"நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா" என்று டாக்டர் கேட்க,
"தினமும் பத்து சிகரெட் பிடிப்பார்" என மனைவி முந்திகொண்டு சொல்கிறார்.
"சிகரெட்டில் உள்ள நச்சுக்கிருமிகள் இரத்த நாளங்களை சுருக்கி விட்டது. இப்போதைக்கு காப்பாற்றி விட்டோம்.
இனி இப்படி நடந்தால் எங்களால் எதுவும் செய்ய முடியாது" என்றார் டாக்டர். மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருகிறார்கள்.
"இனிமேலாவது இந்த பாழாய் போன சிகரெட்டை நிறுத்துங்க!நேற்று நடக்கக்கூடாத வேறு ஏதாவது நடந்திருந்தா என்னுடைய நிலை என்ன ஆகியிருக்கும். எனக்கு என்ன தெரியும்?
நான் என்றாவது வீட்டை விட்டு வெளியே போயிருப்பேனா?
இந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வேன்" என்று அழுதாள்.
தான் இல்லாத தனது குடும்பத்தின் நிலையை நினைத்து பார்த்த நண்பர் அந்த விநாடியே சிகரெட் குடிக்கும் பழக்கத்தை கைவிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. பின்னர் அவர் அதை தொடவேயில்லை.
இது எப்படி நடந்தது?
எல்லாம் மனக்கட்டுப்பாடுதான்.
வருடம் முழுவதும் குடிக்கும் ஒரு குடிகாரன்,
கார்த்திகை மாதம் சபரிமலைக்கு மாலை போடும்போது மட்டும்
48 நாள் குடிக்காமல் இருக்கிறான். இது எப்படி?
வருடம் முழுவதும் அசைவம் சாப்பிடுபவன் புரட்டாசி 30 நாளும் சாப்பிடாமல் இருக்கிறானே! அது எப்படி?
எல்லாம் மனக்கட்டுப்பாடுதான். குரங்கு போல அலையும் மனத்தை ஒரு கயிறு போட்டு கட்டிவிடலாம்.
சிகரெட் பிடிக்கும் வழக்கம் உள்ள யாரும் பிறர் அந்த பழக்கத்துக்கு
அடிமையாக, ஒரு காரணமாக இருக்கக்கூடாது.
நடிகர் ரஜினிகாந்த் சிறந்த மனிதர். தம்மால் பிறருக்கு எந்த
வகையிலும் துன்பம் நேரக்கூடாது என்று நினைப்பவர்.
ஆனால் அவரது ஆரம்ப கால படங்களில் விதவிதமான ஸ்டைலான சிகரெட் குடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.
முற்றிலும் ரசிகர்களின் ரசனைக்காகவே இப்படிப்பட்ட காட்சிகளை வைத்திருப்பார்.
ஆனால் ரசிகர்கள் தாங்களும் இந்த பழக்கத்தை பின்பற்றி சமுதாயம் கெடுவதற்கு காரணமாக, ரஜினி இருக்கக்கூடாது என கருதிய
அன்புமணி இனி ரஜினி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். பெரியவர் சொன்னாலும்,சிறியவர் சொன்னாலும் நல்லதை சொன்னால் ஏற்றுகொள்ளும் ரஜினி சந்திரமுகி படத்திலிருந்து சிகரெட்
பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை.
சில தகப்பனார்கள் தனது பிள்ளைகளை விட்டு
சிகரெட் வாங்க அனுப்புவார்கள்.
அந்த சிகரெட்டில் என்னதான் இருக்கிறது என்று ஆசைப்படும்
சிறுவர்கள் திருட்டுத்தனமாக நண்பர்களை சேர்த்து கொண்டு சிகரெட் அடிப்பார்கள். அதை வீட்டில் மறைக்க
தங்களுக்கு தெரிந்த வித்தையெல்லாம் காட்டுவார்கள்.
சரக்கடித்து விட்டு அதை மறைக்க கொய்யா மிட்டாய் சாப்பிட்டு விட்டு வருவார்கள். கொய்யா வாடையை பார்த்தவுடனேயே இவன் சரக்கடித்து இருக்கிறான் என்பதை மனைவி கண்டுபிடித்து விடுவாள்.
அது போலத்தான் இந்த சிகரெட்டும்.
வாழைப்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை இப்போது பயன்
படுத்துகிறார்கள். முன்பு புகை மூட்டம் போடுவார்கள்.
குழியை வெட்டி வைக்கோலை பரப்பி
வாழைக்காயை போட்டு மூடி சேறு பூசி மூடி விடுவார்கள்.
ஒரேநாளில் அந்த புகை கல்லை போன்ற காயை பழுக்க வைத்துவிடும்.
அது போலத்தான் சிகரெட் புகை நுரையீரல் இருதயம் கல்லீரல் சிறுநீரகம் அனைத்தையும் பாழ்படுத்திவிடும்.
புகையிலை பொருட்களில் நிக்கோடின் என்ற நச்சுபொருள் இருப்பதுதான் எல்லோருக்கும் தெரியும்.
கார்பன் மோனாக்சைடு ஆர்சனிக்நைட்ரஜன் சயனைடு நாப்தலின் கந்தகம் போன்ற 400 இரசாயனங்கள் அதில் உள்ளன.
அதில் 69 இரசாயணங்கள் நேரடியாக புற்றுநோயை உண்டாக்குபவை.
புற்றுநோய் மூலம் ஏற்படும் மொத்த மரணங்களில் 87%
புகையிலை சார்ந்த பொருட்களால் ஏற்படுபவை.
சிகரெட் பிடித்து வெளியிடும் புகையில் நிக்கோடின் அல்லாமல்
காட்டினின் தியோசயனைடு போன்ற நச்சுக்கள் உள்ளன. இது சிகரெட் குடிப்பவரை விட சுற்றி உள்ளவர்கள் மனைவி மற்றும்
குடும்ப உறுப்பினர்களாக உள்ள அப்பாவிகளையும் பாதிக்கிறது.
ஒரு சிகரெட்டில் 12 மிகி நிக்கோடின் உள்ளது.
நிக்கோடின் அதிகம் உள்ள உடலில் மற்ற நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் வேலை செய்யாது.
புகை பிடிப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் அடிக்கிறது.
உடல் துர்நாற்றம் வீசுகிறது. உதடு வெடிக்கிறது.
விரல் நகங்கள் மஞ்சள் ஆகிறது. பல் காரை படிகிறது.
ஒரு சிகரெட் ஒருவனின் 10 நிமிட ஆயுளை குறைக்கிறது.
ஆயுள் 10 ஆண்டு குறைகிறது.
சிகரெட் புகையிலை ஹான்ஸ் கூல்லிப் பான்பராக் போன்றவை
வாய் மூலம் உட்கொள்ளப்படுவதால் வாய் புற்று நோய் அதிகமாக உருவாகிறது. வாய் அல்லாமல் தொன்டை கணையம் கழுத்து சிறுநீரகம் சிறுநீர்பை போன்ற உறுப்புகளிலும் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகையிலை தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில் பத்தில் ஏழு பேருக்கு காசநோய் உண்டாகிறது.
புகையிலை பொருட்களால் இந்தியா முழுவதும் 9 லட்சம் பேர் உயிரை
இழக்கிறார்கள்.
சளி இருமல் ஆஸ்த்மா பக்கவாதம் எலும்புருக்கி நோய் இவை எல்லாவற்றுக்கும் புகையிலையே காரணம்.
மேனேஜர் திட்டினார் முதலாளி திட்டினார் வேலை அதிகமாகி
டென்ஷன் ஆகிவிட்டது அதனால் பத்த வைத்தேன் என்றெல்லாம் கூறுவார்கள். அதெல்லாம் பொய் காரணங்கள்தான்.
டென்ஷன் ஆவதால் அவர்கள் புகைபிடிப்பதில்லை.
புகை பிடிப்பதால் தான் டென்ஷன் ஆகிறார்கள். சிலர் டீ குடித்தால் மட்டும் பத்த வைப்பேன் என்பார்கள்.
சிலர் பாத்ரூம் போவதற்காக பத்த வைக்கிறேன் என்பார்கள்.
இதெல்லாம் போலி காரணங்கள்.
இந்தியாவில் ஒரு லட்சம் பெட்டி கடைகள் உள்ளன.
பெட்டி கடைகளில் என்ன இருக்கும்?
பீடி சிகரெட் வெற்றிலை பாக்கு கூல்டிரிங்ஸ் ஷாம்பு லேஸ் குர்குரே ஹான்ஸ் போன்றவைதான். இதில் 90% மனிதனுக்கு
கேடு செய்பவைதான். இது கலிகாலம் அல்லவா?
20 சிகரெட் விற்றால் பெட்டி கடைகாரனுக்கு 200 ரூபாய் கிடைக்கும்.
இப்படிதான் பல குடும்பங்களுக்கு பிழைப்பு ஒடுகிறது.
அதனால் அவர்கள் விற்பனையை நிறுத்த மாட்டார்கள்.
200% புகையிலைக்கு வரி போடும் அரசும் நிறுத்தாது.
அதனால் இந்த பழக்கத்தில் உள்ளவர்கள்தான் திருந்த வேண்டும்.
10 சிகரெட்டை நிறுத்தினால் 100 ரூபாய் மிச்சமாகும். அதை வீட்டுக்கு செலவழிக்கலாம்.
திருந்துவதற்கு சில யோசனைகளை சொல்கிறேன்...
உயிரை கொல்லும் சிகரெட்டை தொட மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும்.
சிகரெட் பயன்படுத்தும் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.
சிகரெட் விற்கும் கடை பக்கம் போகவே கூடாது.
அந்த நினைவு வந்தால் சாக்லெட் அல்லது பபுல்கத்தை வாயில் போட்டு கொள்ளலாம்.
புகைக்கும் நினைவு வந்தால்
நடைபயிற்சி மேற்கொள்ளலாம். யோகா செய்யலாம்.
தியானத்தில் ஈடுபடலாம். மனக்கட்டுப்பாட்டுடன் நிறுத்தி விட்டால்..
20 நிமிடத்தில் BP அளவு குறையும். 8 மணி நேரத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு சரியாகும். 3 மாதத்தில் ரத்த ஒட்டம் சீராகும்.
10 ஆண்டுகள் ஆயுள் அதிகமாகும். எஞ்சிய வாழ்க்கையில மாரடைப்பு வாய்ப்பு 50% குறையும்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
தீயவை விடுத்து நல்வழி வாழ்வீர்.
ஜெ மாரிமுத்து
கடைசிபத்தியை எல்லா கடைவாசலிலும்..
பதிலளிநீக்குமருத்துவ கிளினிக்கிலும்..
பேருந்து நிறுத்தங்களிலும் எழுதி ஒட்டி வைக்கனும்..
தினம் பார்க்க பார்க்க மாற்றம் மலரும்..!
அதிகம் சிகரெட் பிடிப்பவர்கள் கூட இக்கட்டுரையை படித்தால் திருந்த வாய்ப்புகள் உள்ளது. ஆனால் என்ன செய்வது நம் சமுதாயத்தின் சூழ்நிலை அப்படி இருக்கிறது. பெட்டிக்கடையில் சிகரெட் விற்றால் பரவாயில்லை. ஆனால் லாபத்திற்காக மளிகை கடையில் கூட விற்கிறது. மளிகை கடையில் சாப்பாட்டிற்காக பொருள் வாங்க வருபவர்கள் கூட இதை வாங்கி செல்பவர்களைப் பார்த்து கெட்டுப்போக வழி வகுக்கிறது.
பதிலளிநீக்கு