மல்லன் என்ற ஆண் தெய்வமும் மல்லி என்ற பெண் தெய்வமும் உலகை சுற்றி பார்ப்பதற்கு புறப்படுகிறார்கள். நீண்ட பயணத்திற்கு பிறகு 'கிழவி மலை' எனும் மலைப்பகுதியை நெருங்குகிறார்கள்
அம்மலை பகுதியின் மூலையில் ஒரு குகை உள்ளது. அந்த குகை வழியே சென்று கொண்டிருந்த மல்லனும் மல்லியும் குகையிலிருந்து ஓர் இனம்புரியாத குரல் ஒன்று வெளிப்படுவதை உணர்கிறார்கள்.
ஆர்வம் தாளாமல் குகையிடம் சென்று பார்த்த மல்லனுக்கும் மல்லிக்கும் ஆச்சரியம்.
கொடுவன் என்ற ஆணும் சம்பி என்ற பெண்ணும் ஆங்கே நிர்வாணமாய் நின்று கொண்டிருந்தார்கள்.
விசித்திரமான ஒலியினை எழுப்பி தங்களை அழைத்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டி மல்லனும் மல்லியும் கொடுவன் சம்பி இணைகள் முன்னே வந்தனர்.
ஆடையில்லாது நின்ற கொடுவனும் சம்பியும் உலகை சுற்றி பார்க்க புறப்பட்ட மல்லனையும் மல்லியையும் நோக்கி,
"இனி நீங்கள் கணவனும் மனைவியும்" எனக் கூறி மறைந்தனர்.
அதன் மூலம் மல்லன் மற்றும் மல்லி இணைகளின் புணர்ச்சி காரணமாக, 'கரட்டி குலம், ஊஞ்ச குலம், வெள்ளக்குலம், குறுநகர் குலம், தேவனெ குலம், கொடுவே குலம், சம்ப குலம், குப்பிலிகா, ஆறுமூப்பு, செமக் காரர்கள் என பன்னிரெண்டு குலம் தோன்றியது.
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை (தொல்)
இக்குலங்களில் பெருக்கத்தின் வாயிலாக குறிஞ்சி கலாச்சார மிகுதி கொண்ட ஓர் இனம் தோன்றியது. அதன் பெயரே இருளர் ஆகும்.
இருளர் இன மக்கள் மதிக்கும் மிக தொன்ம கதைகளில் இதுவும் ஒன்று.
தொழில்
இருளர் சமூதாயத்தினர் முல்லை என்ற காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்களே அன்றி முல்லை வாழ் மக்கள் அல்ல.
சாமை வரகு தரமுடன் வித்தல்
அவைகளை கட்டல் அரிதல் கடாவிடல்
செவிகவர் கொன்றை தீங்குழல் ஊதல்
மூவினம் மேய்த்தல் சேவினம் தழுவல்
என்றில்லாமல், இருளர்களின் முக்கிய தொழிலாக 'வேட்டை' இருந்துள்ளது. அந்த வகையில் முல்லை இன மக்களோடு இவர்கள் வேறுபட்டு இருப்பதை காண்கிறோம்.
தங்களது தொழில் முறையை பற்றி இருளர் இனத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண்மணி அவர்கள் சிறகு தளத்திற்கு அளித்த பேட்டியில், 'போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தினால் நாங்கள் தொன்று தொட்டே பாம்பு பிடித்தல், எலி, முயல், ஆமை, உடும்பு போன்ற விலங்கினங்களை பிடித்து வாழ்கிறோம். இதில் பாம்பு பிடித்து பண்ணையில் கொடுத்தால் ஓரளவிற்கு பணம் கிடைக்கும் என்கிறார்.
ஆனால் இன்று இருளர் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் அன்றாட வயிற்றுக்கு வேண்டி கூலி தொழிலுக்கும் 100 நாள் வேலைக்கும் செல்கிறார்கள். அதிலும் சிலர் தங்களுக்கு பழக்கமில்லாத மீன் பிடி தொழிலையும் செய்கின்றனர். இல்லையானால் பட்டினி என்ற நிலையில் தான் இருளர் இனம் இன்று உள்ளது.
கலாச்சாரம்
இருளர்களது திருமண முறை இவர்களது கலாச்சார நடைமுறையில் கவனிக்கபட வேண்டிய ஒன்று.
அதாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சியமான பிறகு 1 வருடம் திருமணமே ஆகாமல் அவர்கள் குடும்பமாக சேர்ந்து வாழ்வார்கள்.
ஒரு வருடத்திற்கு பிறகு மனம் ஒத்து போயிருந்தால் மட்டுமே அவர்களுக்கு திருமணமானது நடைபெறும்.
இதை அக இலக்கணம், பாங்கனின் பாங்கியின் தெருளுற்று வரைதலும் என்கிறது. மனம் ஒத்து வரும் மனை வாழ்க்கை பற்றி, உடையான் வழக்கு இனிது, ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிது என்கிறது இனியவை கூறல்.
இருளர்கள் தாங்கள் தங்களது குடும்பத்திற்குள் ஆண்-பெண் பார்த்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
வரதட்சணை கட்டாயமில்லை. பெண் வீட்டில் விருப்பம் இருந்தால் இவ்வழக்கிற்கும் விதிவிலக்கு ஏதும் இல்லை.
கலை மொழி
இவர்களின் தோல் நிறத்தை வைத்தே இவர்களின் இனப்பெயரும் தோன்றியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள மூலங்களிலிருந்து நோக்கும் போது இருண்ட மக்கள் என்பதையே 'இருளர்' என அழைத்துள்ளதாக தெரிகிறது.
இனத்துக்காரன் பேசும் மொழி இனத்துமொழி என்பதாவது போல இருளர்கள் பேசும் மொழி இருளர் மொழி ஆகும். இது தமிழ்-கன்னட கலவை. இம்மொழி ஆரம்பத்தில் பேச்சு வழக்கில் இருந்தாலுங்கூட பின் நம் தமிழ் எழுத்துகளை பயன்படுத்தலாயின.
இருளர்களின் கலையில் கவனிக்கப்படவேண்டியது இசை.
ஆண் : நலந்தானம்மா தேவி சுகந்தானம்மா
பெண் : நான் நலந்தானைய்யா மாமா சுகந்தானைய்யா
ஆண் : நீ மல்லி பூவாட்டம் தேவி பூத்து குலுங்குறியே ஒன்ன தொட்டு பரிச்சாலும் தேவி எட்டிப் போகுறியே
பெரும்பாலும் காதல் பாடல்கள் இருளர்களின் கலைதனில் மிளிர்கிறது.
அவலம்
காஞ்சிபுரத்தில் 'இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு' உள்ளது. ஆங்கே சென்ற சிறகு தள 'ஆச்சாரி' தந்த குறிப்பு படி, இருளர் இனத்தை சேர்ந்த புஷ்பா அவர்கள் கூறியது யாதெனில்:
'பஞ்சாயத்து தலைவர் வாழும் மேற்குடி பகுதிக்கு பாம்பு வந்தால் பிடிக்க எங்களைத் தான் அழைத்து செல்வார்கள். எவரேனுக்கும் இங்கு தற்கொலையோ சாவோ வந்தால் தூக்கி போட எங்களை தான் பயன்படுத்துவார்கள். இருந்தாலுமே கூட நியாயவிலை கடைக்கு பொருட்களை வாங்க போகும் போது பொருளை அளந்து போடுபவர் எங்களை பார்த்து காட்டுவாசி என்றும் பாம்பு பிடிப்பவர்கள் என்றும் இழிவு படுத்துகிறார். எங்களால் அவரை மறுத்து பேச முடியவில்லை'
மேலும் ஆச்சாரி அவர்களது குறிப்பில், அங்கே உள்ள 25 வீட்டில் 3 வீட்டில் மட்டுமே மின்சார வசதி இருப்பதாகவும், மழை பெய்தால் அங்குள்ள வீடுகள் பயங்கரமாக ஒழுகுவதால் இருளர்கள் பலரும் அருகே உள்ள கோவில் திண்ணையில் வந்து படுத்து உறங்குவதாகவும் கூறுகிறார்.
இத்தகைய அவலத்தையும் ஏழ்மையையும் அனுபவிக்கும் இருளர் இனத்து மக்களை இத்தனை ஆண்டு காலமாய் எந்த அரசும் கண்டு கொள்ளாத நிலையில் ஜெய் பீம் எனும் திரைப்படமானது மெய்பட காட்டிருப்பது பாராட்டுதற்குரியது.
இருளர் இனத்து மக்களின் வளர்ச்சிக்காக நடிகர் சூர்யா அவர்கள் 1 கோடி ரூபாய் கொடுத்திருப்பதை எண்ணி சந்தோஷிக்கிறோம்.
ஆனால், இருளர் இனத்து மக்களை போலவே அடியர், அரணாடர், ஆளார், எரவள்ளார், சாடர், காலாடி, குறுமர், செறவர், மலைசர், மலைவேடர், நாயாடி, பதியர், உரிடவர், விழவர் என பல இனத்து மக்கள் தாங்கள் தங்களது ஒருவேளை உணவிற்கே இன்னும் கஷ்டப்பட்டு கொண்டு தான் உள்ளார்கள் என்பதை அரசிற்கு வருத்தமுடன் நினைவு கூர்கிறோம்.
இருட்டில் வாழும் இருளருக்கு கொஞ்ச நாளாக வெளிச்சம் கிடைக்கிறது.இனியாவது அவர்கள் வாழ்வில் ஒளி கிடைக்கட்டும்.அதற்கு இப்படிப்பட்ட கட்டுரைகள் தூண்டும் கோலாக அமையட்டும்.
பதிலளிநீக்கு