அண்மை

கம்பர் என்றொரு மானுடன் | ஒரு நதி நீராடுகிறது...!

 ஒரு நதி நீராடுகிறது...!




பத்தாயிர கணக்கான பாடல்களை கொண்ட கம்ப காவியந்தனில் இருந்து.. அறிஞர்கள் போற்றுகிற புகழ்மிக்க பத்து பாடல்களை மட்டும் பொறுக்கி எடுக்க சொன்னால் அதில் பின்வரும் இப்பாடல் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்....! 


பாடல் காட்டும் சூழல் மிக இயல்பானது.. 


மூவர் நடந்து போகின்றனர்.. அவ்வளவுதான்.!


இதை கவிச்சக்கரவர்த்தி கையாண்டு வரைந்து வைத்த விதம்தான் வெகுரசனையாக்கி இருக்கிறது..!


சரி முதலில் யார் அந்த மூவர்?

மறுநாள் மணிமுடி சூடி நாடாள வேண்டியவன்,, தன் சிற்றன்னை பெற்ற ஒற்றை வரத்தால் மரவுரி தரித்து காடுஉலா வந்திருந்தான்...

ரகு குல திலகம் திரு ராமன்.

கணவன் நாடாண்டால் என்ன? காடாண்டால் என்ன? அவன் புகும் இடம் யாவும் அவனியில் அயோத்தி என திருமதி ராமனும் உடன் வருகிறாள்..!


"உன் நிழல் உன்னைவிட்டு பிரிந்தாலும் பிரியலாம் நானுன்னை பிரிவதில்லை" என சபதம் செய்திருந்த ஆருயிர் இளவல் இலக்குவனும் உடன் வருகிறான்!


மதவாதிகள் தங்கள் புனித தலத்தில் புகுமுன்பு நீரினால் தம்மை சுத்தம் செய்துகொள்வார்கள் இல்லையா..?

அவ்வாறே

நயவஞ்சக நகர்பகுதியிலிருந்து கள்ளங்கபடமற்ற கானகபகுதிக்குள் பிரவேசிக்க இருப்பதால் முன்னதாக அம்மூவரும் தங்களை புறந்தூய்மை செய்துகொள்ள முனைகின்றனர்..

புனித நதிகளுள் புகழ்மிக்கவளான கங்கை நதியை அடைந்து அவர்கள் நீராடுகிற படலம் அது..!


கங்கை படலம்..!


"வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்


பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-


மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,


ஐயோ, இவன் வடிவு! என்பதோர் அழியா அழகு உடையான்..."


(பொருளுணர..)


இரவில் மின்னிய நட்சத்திரங்கள் எல்லாம் பகலில் அதைவிட பொலிவான ஆதவன் உதித்தவுடன் மங்கி மறைந்துவிடுகின்றன அல்லவா..?


அதுபோல ராமன் உலாவரும் இடங்களில் எல்லாம் அவன் உடம்பிலிருந்து விரிந்து எழுகிற தேஜஸ் (ஒளி) காரணமாக சூரிய ஒளியே மங்கிபோய் மறைகிறதாம்...


இங்கு விசித்திரமான முரண் ஏதென்றால், ராமன் கரிய நிறத்தவன்.. கருநிற ஜோதியே கண்ணை கூசுகிற சூரியஜோதியை விஞ்சி மறைக்கிறதாயின்.. அவன் வெண்ணிறத்தில் பிறந்து தொலைந்திருந்தால் என்ன ஆவது??


சரி ராமன் மட்டுமா வருகிறான்??

இல்லை.. 


இருக்குதா இல்லையானு தெரியாத இடை உடையவளான இஞ்சி இடுப்பழகி சீதையும் உடன் வருகிறாள்..


இவர்களோடு இளையதிலகம் இளவல் இலட்சுமணனும் வருகிறான்..


வருபவனின் (இராமன்) வடிவழகை  என்னவென்று உவமிப்பது?


"மை" நிறமோ..?


"மரகத" பசுமையோ?


"மறி கடலோ..?"


"மழை முகிலோ..?"


"ஐயோ...!" 


'ஐயோ தெரியலையே...!' என கவியுலக சக்கரவர்த்தி கம்பனே திணறுகிற இடம் இது..! என்றால்,, பாடலின் அருமையை உணர்ந்து கொள்ளுங்கள். 


இதே நடையழகை இன்னொரு கோணத்தில் இருந்து நோக்கி அடுத்து ஒரு பாடல் வருகிறது..


"மா கந்தமும், மகரந்தமும், அளகம்தரும் மதியின்


பாகம் தரும் நுதலாளடு, பவளந்தரும் இதழான்,


மேகந்தனி வருகின்றது மின்னோடு என - மிளிர்பூண்,


நாகம் நனி வருகின்றது பிடியோடு என, நடவா,..."


(பொருளுணர...)


கந்தம் என்றால் வாசம்.. மணம்..


கந்தன் = மணமிக்க முருகன்

(சந்தனம் மணக்குது.... )


கந்தகம்= வாடை வீசும் வேதி தனிமம்/சல்பர்


மாகந்தம்= அதி நறுமணம்


அளகம் = கூந்தல்


பூ சூடியதாலோ என்னவோ...  அதிக வாசமும் மகரந்த பொடி சிந்திய கூந்தலையும் உடைவளான  பிறைநிலவு போல நெற்றி கொண்ட சீதையுடன்,, பவளம் போன்ற இதழ்(உதடு) கொண்ட இராமன் நடந்து போகிறான்.. 

அது பார்க்க எப்படி இருக்கிறது தெரியுமா..?


 கார்மேகம் தனியாக திரண்டு வரும்போது வெட்டி மின்னும் மின்னலை போலவும்..


தந்தம் உடைய ஆண்யானை(நாகம்) ஒன்று பெண்யானை (பிடி)யோடு , நடைபோடுவது போன்றும் இருந்ததாம்..


வில் ஏந்தி ராமன் நடப்பது தந்தம்உடைய ஆண் யானைக்கு உவமை. பெண்யானைக்கு தந்தமில்லை.


நா என்று தமிழில் வருகிற பெயர் சொற்கள் கூரிய நீண்ட மூக்குடைய பிராணிகளை குறிக்கிறது..


நாய்

நாரை

நாகணவாய்


(நாக்கு 

நாசி

நாவாய்... முதலியனவும் அப்படி நீட்சி கருதி வந்தவையே..)


நாகம் = பாம்பு (நீண்ட சரீரம்) / யானை (நீண்ட தும்பிக்கை)


பாவேந்தர் பாரதிதாசனாரின் "கொலைவாளினை எடடா! மிகு கொடியோர் செயல் அறவே..!" 

பாடலை மிடுக்கான சந்தமோடு மேடைகளில் பாடி முழங்கி கேட்டிருக்கிறீர்களா..?

ஏறத்தாழ அதே மிடுக்கான சந்தநயத்தில் பின்வரு அழகிய பாடலை பாடலாம்.


அருப்பேந்திய கலசத்துணை, அமுதேந்திய மதமா


மருப்பேந்திய' எனலாம் முலை, மழையேந்திய குழலாள்,


கருப்(பு) ஏந்திரம் முதலாயின கண்டாள், இடர் காணாள்..!


பொருப்பேந்திய தோளானொடு விளையாடினள், போனாள்...!


(பொருளுணர...)


மனதுக்கு பிடிக்காத ஒருவரோடு சந்திரமண்டலம் போனாலும் நமக்கு பிடிக்காது.. அதுவே நமக்கு விருப்பமான நபரோடு கொரனா வார்டில் அடைத்து வைத்தாலும்கூட அது அச்சம் தராமல் இனிக்கத்தானே செய்யும்?


பதிவிரதை சீதைக்கு அப்படித்தான் இருந்தது..


காடுமேடு கல் முள் என ஏதோ சபரிமலைக்கு இருமுடி கட்டிஎடுத்து போவதுபோல பயணம் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் அதில் சிறிதுகூட களைப்போ அலுப்போ இன்றி...  சின்னக்குழந்தைகள் வண்டலூர் Zoo க்கு உலா போவது 

போல சீதை சிரித்து விளையாடி வேடிக்கை பார்த்து மகிழ்ந்து வந்துகொண்டிருந்தாளாம்!! (இராமன் உடன் வருவதால்...)


பாடலின் முதலிரு வரிகளில்.. அரும்புமலரை சூடிய இரு அமுதகலசங்களையும்,

மதயானையின் மத்தக புடைப்பையும் சீதையின் மாரழகு க்கு உவமைபடுத்தியிருக்கிறார்.


மேலும்...

கரும்பு பிழிகிற எந்திரங்களை கண்டாளாம்! இடர் காணவில்லையாம்.

(இங்கு கரும்பு பிழிகிற எந்திரம் என்று கம்பன் குசும்பாக கூறுவது காட்டு யானைகளைதான்.. என நான் நினைக்கிறேன்..)


இடையில் ஒரு வரி வருகிறது பாருங்கள்..

மழை ஏந்திய குழலாள்...!


அட அட அட


கம்பனை தாண்டிச்செல்ல எவன் இருக்கிறான்?


இப்படியாக நீண்ட நேரம் நடந்து களைத்து கங்கைகரையில் சில தவமுனிவர்களின் குடிலை அடைந்தார்கள் மூவரும்.. அங்கிருந்த பேரன்புகொண்ட துறவிகள் அவர்களை இன்சொல்கூறி வரவேற்று உபசரித்து ஆனந்த கண்ணீரால் குளிப்பாட்டி பயணகளைப்பினை நீக்கியதை கம்பன் வாயாலேயே கேளுங்கள்...


"பொழியும் கண்ணீர் புதுப்புனல் ஆட்டினர்;


மொழியும் இன்சொலின், மொய்ம்மலர் சூட்டினர்;


அழிவில் அன்பெனும் ஆரமிழ்து ஊட்டினர்;


வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர். "


இப்படியாக ஒருவழியாய் கங்கை நதியை அடைந்து சீதையும் ராமனும் நீராட புகுந்தனர்..


முதலில்

சீதை நீராடினாள்...


அதில் கம்பன் கற்பனையை புரிந்துகொள்ள சற்றே புராணத்தில் புகுந்துவரவேண்டும்.


கங்கை என்பவள் முதலில் ஆகாய கங்கையாக விண்ணில் இருந்தவள். பகீரதன் தவ பலனாய் பூமியில் ஆவேசமாய் இறங்கி ஓடினாள்.. அவளது வேகபாரத்தை தணிக்க வேண்டி ஈசன் இமயமாய் எழுந்து அந்த கங்காதேவியை தன் சடைமுடியில்

தாங்கி ஏந்தினான்! 

ஆதலால் கங்கையின் இருப்பிடம்

ஈசன் சிரசு! என்பது ஐதீகம்... ஈசன் சிரத்தில் ஏற்கனவே பல்லாண்டுகளாக கொன்றை & எருக்கம்பூ மலர்மாலை அணிந்திருப்பதால்

கங்கை எப்போதும் காய்ந்த மலரின் சருகுவாடை வீசுபவளாய் இருப்பாளாம்..!


இப்படி இருக்க.. புத்தம்புது நாள்மலர் சூடிய பூங்குழலி சீதை

கங்கையில் நீராட புகுந்ததும் அவளது வாசம் கங்கையில் கரைந்து  முழு கங்கையுமே மணக்க தொடங்கியதாம்...!! 


(நாற்றம் என்றால் வாசனை.

துர்நாற்றம் என்றால்தான் கெட்ட வாசனை.. நாம்தான் நாற்றம் என்றாலே துர்வாடை என தவறாக பயன்படுத்தி வருகிறோம். திருத்திக்கனும்..)


சரி கங்கை நாறிய கதையை கம்பர் கவிதையில் கேளுங்கள் ...


"தேவ தேவன் செறிசடைக் கற்றையுள்


கோவை மாலை எருக்கொடு கொன்றையின்


பூவு நாறலள்; பூங்குழல் கூந்தலின்


நாவி நாள்மலர் கங்கையும் நாறினாள்...!"


அடுத்த பாடலை காணுங்கள்...


"மங்கை வார்குழல் கற்றை மழைக்குலம்,


தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன,


கங்கை யாற்றுடன் ஓடும் கரியவள்


பொங்கு நீர்ச்சுழி போவன போன்றதே."


(பொருளுணர...)


கரியவள் என்பது கருப்பானவள் என பொருள்படும் யமுனை நதியை குறிக்கும். கங்கை சற்றே கலங்கிய நிறமுடையவள்..

கங்கையும் யமுனையும் கலக்குமிடத்தில் ஒருவித நீர்சுழல் தோன்றுமாம்.. அது விசித்திரமான தோற்றம் தரும்.. அத்தகையதொரு தோற்றம்.. 

மங்கை சீதை தன் வார்குழல் கற்றையை அவிழ்த்துவிட்டு ஆற்றில் மூழ்கி நீந்தியபோதில் உண்டானதாம்..!


அட இது என்ன பிரமாதம்...? அடுத்து ராமன் வந்தான். கங்கையில் இறங்கினான்.


கங்கையில் அவன் குளித்தானோ இல்லையோ.. எதிர்பார்த்து காத்திருந்த பல நாள் கனவு நிஜமானதென அந்த ஆற்றுதேவதை நதிதெய்வம் கங்கையே அவன்மீது தாவி அலைந்து நீராடி மகிழ்ந்ததாம்.... 


"செய்ய தாமரைத் தாள்பண்டு தீண்டலால்,


வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்


ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி,


வையம் மா நரகத்திடை வைகுமோ? "


(பொருளுணர...)


 தன் மீது இதுநாள் வரை கரைக்கப்பட்ட பூலோக மாந்தர் அனைவரது பாவங்களையும் ஏந்தி ஓடிக்கொண்டிருந்த கங்கையானவள்...,, தற்போது ராமபிரானது தாமரை பாதங்கள் தழுவி தீண்ட பட்டதால்.. வெய்ய பாவங்கள் எல்லாம் நீங்கி மீண்டும் பொலிவுடன் புனிதம் பெற்றவள் ஆயினாள்..!!


ஐயனின் மேனியெலாம் அளைந்து பாவ அழுக்கை போக்கிவிட்டாள். இனி இந்த பூமியின் ஜீவராசிகள்  நரகத்திடை போக அவசியம் ஏது..??


மனிதர்கள் தாம் நதியில் நீராடுவர்.

கம்பன் கற்பனை வெள்ளத்தில் ஒரு நதியே நீராடியதை காண்கிறோம். இது வெறுமனே கற்பனை அல்ல..


அகத்தூய்மை உள்ளவனுக்கு புறத்தூய்மை தானாகவே வாய்ப்பதோடு சுற்றத்தையும் தூய்மையாக்க உதவுகிறது..


அன்று புண்ணிய நதியென தேசம்தாண்டி ஓடி எல்லா நோயையும் போக்கிய கங்கை இன்று அதுவா இது..? என காட்சிதருகிறது.


அன்று

எந்த நோயும் கங்கையில் குளித்தால்  நீங்கும்.. என்றது வேதம்.


இன்று 

கங்கையில் குளித்தால் எந்த நோயும் வரலாம் என்கிறது சுகாதார வாரியம்.


மறுபடி கங்கையை புறந்தூய்மை செய்ய.. முதலில் மாந்தர் குலத்திடை அகத்தூய்மை எழவேண்டும்..


ஔவை சொன்னதுபோல


எவ்வழி நல்லவர் ஆடர்..?

அவ்வழி நல்லை! வாழிய நிலனே..!


(எங்கே நல்லவர் உள்ளனரோ அங்கே நிலமும் நன்றாகவே இருக்கும்.. நதியும் கூட..!)


சூரியராஜ்

தென்றல் இதழ் 26

5 கருத்துகள்

  1. காணாமல் போன வைரத்தை
    ஐந்து வாரமாய் தேடி வந்தேன்.
    இப்போது கிடைத்து விட்டது.

    இனி அதை கம்பனுக்கு
    சூட்டவதா?
    சீதைக்கு சூட்டுவதா?

    இல்லை ராமனே அதை
    எடுத்து தனக்கே
    சூட்டிக்கொள்வானா?

    கம்பன் வீடடு முகவரி
    மறந்து போனவர்களுக்கு
    வழி காட்டும் நல்விளக்கு
    இது.

    பதிலளிநீக்கு
  2. தெய்யோ! தேனினி தமிழ்பா நிதம் நிறைய

    மெய்யோ! மேதினி கரைந்தே நிகழ் மறைய

    நெய்யோ! இன்மொழி பெய்யோ சூரியா

    ஐயோ! என்னே உன் நடை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமுதகோப்பையில் தவறி விழுந்த ஈ போல உணருகிறேன்.. அமுதத்தை உண்டதால் அதற்கு மரணம் சம்பவிக்கபோவதில்லை..
      சிறகு நனைந்ததால் அந்த கலசத்தைவிட்டு அகலவும் முடியவில்லை..

      நீ அதிலே பாகும் தெளிதேனும் வேறு ஊற்றுகிறாய்.. பயமாய்இருக்கிறது.

      நீக்கு
    2. இதுவரை எவரையேனும் தமிழ் அமுக்கியதாய் நான் செவியுற்றதில்லை

      தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

      இங்கமரர் பதவி கண்டார்..

      நீக்கு
புதியது பழையவை