அண்மை

கடைசி ஆசை | சிறுகதை

 


விடியற்காலை ஆறு மணி 


மார்கழி மாத குளிர்காற்று, ரவியின் உடலை லேசாக வருடியது. கண் விழித்த ரவி கம்பளிசால்வையை போர்த்தியபடி ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தான். 


வழக்கத்தைவிட பனி மூட்டம் இன்று அதிகமாக இருப்பது போல தோன்றியது அவனுக்கு கொட்டும் பணியில் பெண்கள் அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கோலத்தை மிதித்தபடி நடந்து செல்லும் வாக்கிங் மனிதர்கள். திடீரென்று வீசிய குளிர்காற்று அவன் உடலை நடுங்கச் செய்தது . பார்வையை ஜன்னலிலிருந்து விலக்கியவன் பல் துலக்க கிளம்பினான்.


சமையலறையிலிருந்து வெளியே வந்த மரகதம். மகள் கவிதாவை எழுப்பிவிட்டு மறுபடியும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். 


ரவி ஆசிரியராக வேலை பார்க்கும் பள்ளியில், கவிதா ஐந்தாம் வகுப்பு படிக்கின்றாள். குழந்தையை பள்ளிக்கு தனியாக அனுப்பிவிட்டு தவிக்கும் நிலை மரகதத்திற்கு இல்லை. 


பரபரப்பாக தயார் செய்த டிபனை, டைனிங் டேபிளில் வைத்தாள் மரகதம். கவிதாவும், ராகவனும் குளித்துவிட்டு தயாராக இருந்தார்கள். 


சாப்பிட்டவாறே பேச்சை ஆரம்பித்தாள் கவிதா. 


"அம்மா, நான் ஒன்னு கேட்டா தருவியாம்மா?" 


"என்ன விஷயம் சொல்லு?" 


"எங்க ஸ்கூல் ஆயாம்மா. ரொம்ப பாவம்மா, கட்டிக்ககூட புடவை இல்லாம்ம கஷ்டப்படறாங்க, அவங்களுக்கு ஏதாவது பழைய புடவை இருந்தா குடும்மா", கவிதாவின் குரலில் இரக்கம் தென்பட்டது. 


"புடவை எல்லாம் தர முடியாது. சாப்பிட்டு ஒழுங்கா ஸ்கூலுக்கு போற வழியப்பாரு" என்று கோபமாகச் சொன்னாள் மரகதம். 


கவிதாவின் குணத்திற்கு நேர்மாறாய் இருப்பவள் மரகதம். அம்மாவை பற்றி புரிந்தும் கவிதா பேசுவதை நிறுத்தவில்லை. 


"எத்தனை புடவை வச்சிருக்க. ஒண்ணே ஒன்னு குடும்மா?" பரிதாபத்துடன் கேட்டாள் கவிதா. 


"கவிதா சொல்றத கேளு ..." மரகதம் சொல்லி முடிப்பதற்குள் ரவி இடைமறித்தான். 


"மரகதம், குழந்தைகிட்ட ஏன் கோபப்படற, அவ என்ன தப்பா கேட்டுட்டா? அவ ஆசைப்பட்டு இதுவரைக்கும் எதுவும் கேட்டதில்லை. நாமதான் ஒரே பொண்ணுன்னு பாத்து பாத்து அவளுக்கு செஞ்சுகிட்டு இருக்கோம். பிறருக்கு உதவி செய்ற குணம் அவ இரத்தத்துல ஊறின விஷயம் இது உனக்கு தெரியாதா? இப்படி ஒரு உயர்ந்த குணமுடைய மகள பெத்ததுக்கு நாம பெருமைபடனும் கோபபடாம அவகிட்ட ஒரு புடவையை கொடுத்தனுப்பு", கண்டித்துச் சொன்னான் ரவி. 


கணவனின் வார்த்தைக்கு கட்டுபட்ட மரகதம் புடவையை எடுக்க உள்ளே போனாள். 


புடவை கிடைத்த மகிழ்ச்சியில் அப்பாவின் வண்டியில் ஏறி அமர்ந்தாள் கவிதா. இருவரும் செல்லும் பள்ளிக்கூடம் அரைமணி தொலைவில் உள்ளது. ரவியின் கடிகாரம் ஒன்பது மணி என்று அச்சுறுத்தியது. ரவி வண்டியின் வேகத்தை விரைவுபடுத்தினான். 


நடுவழியில் ரவியின் முதுகை கவிதா லேசாக தட்டினாள். 


"என்னம்மா விஷயம்?" தலையை மட்டும் லேசாக திருப்பினான். 


"மெதுவா போங்கப்பா லேசா நெஞ்சு வலிக்குது". 


"என்னம்மா சொல்ற?" அதிர்ச்சியில் வண்டியை ஓரமாக நிறுத்தினான். 


"ஒண்ணும் இல்லப்பா இது அடிக்கடி வர்ற வலி தான் சரியா போயிடும்." 


இவ்வளவு நாளா ஏன் இந்த விஷயத்த எங்ககிட்ட சொல்லல லேசான வலின்னு அசால்டா இருக்க கூடாது. வா உடனே ஆஸ்பத்திரிக்கு போகலாம்." மகளை கடிந்து கொண்டான் ரவி. 


வண்டியை திலக் நர்ஷிங் ஹோமில் நிறுத்தினான். டாக்டர் ஆஞ்சியோகிராம், ஸ்கேன், எக்ஸ்ரே உள்பட அனைத்து டெஸ்டும் எடுத்தார். ரிசல்டை பார்த்தவர், ரவியை தனியாக அழைத்துப் பேசினார். 


"ஐம் வெரிசாரி, உங்க பொண்னோட இதயத்துல பெரிய ஓட்டை எங்களால எதுவும் செய்ய முடியாது" கை விரித்தவாறே சொன்னார். 


"என்ன டாக்டர் சொல்றீங்க இந்த வியாதியை குணபடுத்தமுடியாதா?" அதிர்ந்துபோனான் ரவி." 


ரொம்ப முத்திபோன ஸ்டேஜில வந்திருக்கீங்க ஆபரேஷன் பண்ணினாலும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை", டாக்டர் குரலில் உறுதி இருந்தது. 


ரவிக்கு துக்கம் நெஞ்சை அழுத்தியது , எதுவும் பேச முடியாமல் எழுந்தவன் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த கவிதாவை அழைத்தான். 


அவள் அருகே வந்தபோது "ஓ" என்று அழத்தோன்றியது மகளுக்காக அழுகையை அடக்கிகொண்டான். 


கவிதா வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாள். முன்பிருந்த வேகம் ரவியின் வண்டியிலும் இல்லை. மனதிலும் இல்லை. சிறிது தூரம் சென்றபின் கவிதாவை திரும்பி பார்த்தான் ரவி. அவள் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் படும் அவஸ்தை அவன் மனதை மேலும் ரணப்படுத்தியது. 


வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அருகே உள்ள ஒரு வீட்டு திண்ணையில் மெதுவாக அவளை அமர வைத்தான் உள்ளே இருவர்பேசும் சத்தம் கேட்டது. 


"அம்மா, எல்லாபிள்ளைகள் மாதிரி நானும் ஓடியாடி விளையாடனும் பெரிய படிப்பு படிக்கணும். இந்த உலகத்த கண்ணால பார்க்கனும். இதெல்லாம் எப்பம்மா நடக்கும்?” பத்து வயது மதிப்புடைய சிறுமியின் பரிதாபக் குரல் ஒலித்தது." 


உனக்கு யாராவது கண்தானம் பண்ண முன் வரணும், அப்பதாம்மா நீ நினைக்கிறது நடக்கும்”. தாய் விசும்புற சத்தம் கேட்டது. 


வாசலில் அமர்ந்திருந்த கவிதா, அப்பாவிடம், "அப்பா என்னோட கடைசி ஆசைய நிறைவேத்துவிங்களா?" 


"ஏம்மா இப்படி பேசற, உனக்கு ஒண்ணுமில்லம்மா நீ ஆரோக்கியமா நூறு வயசு வரை வாழனும்மா". என்ற ராகவனின் குரல் கம்மியது. 


கண்களில் தழும்பிய நீரை கர்ச்சீப்பால் ஒத்தினான். 


"ஏம்பா பொய் சொல்றீங்க? டாக்டர் சொன்னத நான் கேட்டுகிட்டுதான் இருந்தேன். நான் இறந்த பிறகு என்னோட கண்கள் இந்த வீட்டு பெண்ணுக்கு தானமா கொடுங்கப்பா என் கடைசி ஆசையை நிறைவேத்துவிங்களாப்பா?" 


"கண்டிப்பா செய்றேம்மா", என்று சொன்ன ராகவன் தன் மகள் கவிதாவை கட்டிதழுவிக் கொண்டான்.


முனைவர் ஜெ. ரஞ்சனி

தென்றல் இதழ் 28

2 கருத்துகள்

புதியது பழையவை