அண்மை

கம்பர் என்றொரு மானுடன் | உடன்பிறப்புகள்

 


1881 ஆம் ஆண்டில் ரிப்பன் பிரபு வைசிராயாக இருந்த சமயத்தில் அதீத சிரத்தை எடுத்து பரதகண்டம் தழுவிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பினை (census) நடத்தினார்.. அதற்கு முன்பே மேயோபிரபு காலத்தில் இந்த கணக்கெடுப்பு நடந்திருந்தாலும்... அது நாடுதழுவிய அளவில் நடத்தப்படவில்லை..!


இது எதற்கு தேவையில்லாத ஆணி? தண்ட செலவு என்று வசைபாடியவர்கள் வாயடைத்து போகும்வண்ணம்..,

உலகின் மிகஅதிகமான மக்கள் வாழ்கிற பகுதியாக இந்திய துணைக்கண்டம் திகழ்கிறது என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.


இன்றும்கூட பாரதம்-தான் மக்கள் தொகையில் முன்னணியில் திமி(ண)றிக்கொண்டு இருக்கிறது..!


எனினும் அரசியல் ரீதியாக அன்றைக்கு நம்முடன் இருந்த பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் முதலான நாடுகளை,, இன்று நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத காரணத்தால் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்..! இல்லாவிடில் அன்றும் இன்றும் என்றும் முதலிடம் தான்.


அள்ளக்குறையாத வளமிருந்தும்கூட அதை தின்று செரிக்கிற கரையான்களாக மக்கள் தொகை பெருக தொடங்கியதே நாட்டில் வறுமை தாண்டவமாட காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தனர்.


குறிப்பாக 1970 களின் சமயத்தில் எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் கொண்டுவந்தும் அது கடலில் கரைத்த பெருங்காயமாய் பலனற்று போனதுகண்டு நாடே திக்குமுக்காடியது.


இந்திராகாந்தி பிரதமரான காலத்தில் குபு குபு வென பெருகிய ஜனத்தொகை வெடிப்பை அடக்கிட குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முனைந்தார். அவருக்குபிறகு ராஜீவ்காந்தி காலத்திலும் அந்த முன்னெடுப்பு வேகம்பெற்றது.


அதே காலகட்டத்தில் சீனாவும் தன் ஜனத்தொகையை குறைக்கும் விஷயத்தில் இறங்கியது.

"நாம் இருவர் நமக்கு இருவர்.."

என்று சுவர்விளம்பரம் செய்து கெஞ்சும் இந்தியாவை போல் அல்ல.. சீனாவை போல...தடாலடியாக.. 


 ஒரே ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள அனுமதி.! மீறி பிறந்தால் அதை அரசுக்கு ஒப்படைத்து விட வேண்டும்.


இரண்டாவது குழந்தை பெற்றுகொள்வோருக்கு அரசின் ஏராளமான சலுகை அடியோடு மறுக்கப்பட்டதோடு அபராதம் கூட விதிக்கப்பட்டிருந்தது. பழமையில் ஊறிய சீனமக்கள்கூட வேறு வழியே இன்றி கட்டளைக்கு பணிந்தனர். 


45 ஆண்டுகள் ஓடி மறைந்த பிறகு,, ஏறத்தாழ இருதலைமுறை இடைவெளிக்குபிறகு தன் தவறை சீன அரசு உணர்ந்தது.


ஒரு குழந்தை திட்டம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது மட்டுமல்ல அது குடும்ப கட்டமைப்பையே கூண்டோடு மாற்றிவிட்டது.


ஆணோ பெண்ணோ ஒரு வீட்டில் ஒரு குழந்தை தான். 

அவனுக்கு அண்ணணோ தம்பியோ அக்காளோ தங்கையோ இல்லை.


பிற்காலத்தில்,

அவனுக்கு பிறந்த குழந்தைக்கு....,,

சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, மாமா ,மாமி மற்றும் அவர்கள் மூலம் பிறக்கிற மைத்துனன், அத்தாச்சி, ஒன்றுவிட்ட அண்ணன், தங்கை, அக்காள், தம்பி.. என எந்த குடும்ப உறவுகளும் இல்லை. இருக்க வாய்ப்பே இல்லை!! 

எல்லாம் சாவி குடுத்த தனிக்காட்டு பொம்மைகளாக சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.!


தற்போது தன் முடிவை சீன அரசு மெல்ல தளர்த்தி வருகிறது.. உறவுகளின் முக்கியத்துவம் குறிப்பாக உடன்பிறப்புகளின் முக்கியத்துவம் அங்கு உணரப்பட்டுவருகிறது..!


மகாபாரத காலமான துவாபர யுகத்தோடு ஒப்பிடுகையில் ராமாயணகாலமான திரேதாயுக காலத்தில் குடும்ப கட்டுப்பாடு பின்பற்றியிருப்பதை காணமுடிகிறது.. 


தசரத மகாசக்கரவர்த்தியே கூட அதற்கு உடன்பட்டிருக்கிறார். கோசலைக்கு ஒரு பிள்ளை, கைகேயிக்கு ஒரு பிள்ளை,

சுமித்திரைக்கு மட்டும் இரு பிள்ளைகள் என  ராமன் & பிரதர்ஸ் மொத்தம் நான்கு பேர் தான். 


ஆனால் ராமாயணம் முழுவதிலும் ராமன் சந்திக்கிற நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களில் வெறும் மூன்றே மூன்று பேருக்கு மட்டுமே ராமன் வாயாலேயே தனது கூடுதல் சகோதரர் எனும் அந்தஸ்து அடுத்தடுத்து வெவ்வேறு சமயங்களில் கிடைக்கப்பெறுகிறது.


அந்த மூவரை மட்டும் மூன்றே பாடலில் காண்போம்.


முதலாவது ஆளை காண,,


அயோத்தியா காண்டம்..


குகப்படலம் - புகுவோம்....!


ஆமாம் யார் இந்த குகன்??


கம்பனிடமே கேளுங்கள்..


"ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு


நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,


தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,


காயும் வில்லினன், கல் திரள் தோளினான்..!


"துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர்-


அடியன், அல் செறிந்தன்ன நிறத்தினான் 


நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்


இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான்"


(விளக்கம்..)


அந்த காலத்தில கங்கை கரைதனில் இருந்த ஆயிரக்கணக்கான தோணிகளின் தலைவனும், நெடுங்காலமாக கங்கை ஆற்றுத்துறையில் கலம்செலுத்துபவனும், தொடர்ந்து சரமழை தொடுத்ததால் உராய்ந்து தீய்ந்து காய்கிற வில்லை உடையவனும்.. கல்திரண்டது போன்ற தோள்களை உடடையவனும் போர்க்குணமிக்கவனுமான அவன்  "குகன்" எனும் நாமம் உடையவன்.


பார்ப்பதற்கு என்னவோ 'துடி' பறையும்

தோல்செருப்பும் வேட்டைநாய்களையும் வைத்துக்கொண்டு திரியும் கறுத்த காட்டுவாசி போல தோன்றினாலும்..

உண்மையில் பகைவரது நீண்ட நெடிய  படைதன்னை நெருங்குங்கால்,, நீர் கொண்ட மேகங்கள்.. இடியோடு மின்னி, அதிர மோதி, திரண்டு எழுந்தால் அன்ன ஆற்றல் உடையவன்...!


இன்னொரு 'பஞ்ச்' -டயலாக் கூட இருக்கு...


"சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,


கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். "


(கோபம் இல்லாத போதே அவன் முகத்தில் அனல் தெறிக்குமாம்!

இவன் கொஞ்சம் கர்ஜித்தானே யானால் அந்த எமனே சற்று நடுங்கி எச்சில் விழுங்குவானாம்!)


இத்தனை 'பில்டப்' புகளோடு ராமன் குடில் புகும் குகன்,, 

ராமனை கண்டதும் பேரன்பு கொண்டவனாய் ஆரத்தழுவி அடிபணிந்து தான் ஆசையாய் கொணர்ந்த கொம்புத்தேன், மீன், புலால், மாமிச படையலை  சைவத்திருக்குமரன் ஸ்ரீ ராமபிரானுக்கு சமர்ப்பிக்கிறான்.

சுற்றிநின்றிருந்த தவமுனி துறவிகளுக்கு சங்கடமாய் போய்விட்டது. முகம் அஷ்டகோணலானது.


ஏற்கனவே ஒருதடவை கண்ணப்ப நாயனார் இப்படித்தான் சிவபெருமானுக்கு ஊன்படையல் செய்து அபசாரம் செய்தார். ஆனால் அவரது அன்பை மட்டுமே கண்ட சிவன் அவரை ஏற்றுக்கொண்டார்.


தெய்வங்கள் என்றுமே தெய்வத்தன்மையோடு நடந்துகொள்கின்றன. ராமனும் அப்படித்தான் நடந்துகொண்டான்.!


"அரிய தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்


தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?


பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்


உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான்."


(பொருளுணர..)


எதை நாம் அரியதாக கருதுகிறோமோ அதை உள்ளத்து அன்போடு ஆசையாய் இன்னொருவருக்கு தருகிற போது 

அந்த பொருள் அமிழ்தை விட சிறந்ததாகிறது.


பரிவோடு ஆரத்தழுவி கைப்பட செய்து தருகிற எதுவும் எனக்கு பவித்திரமானதே!!

எனக்கு மட்டுமல்ல என்னை சேர்ந்த எல்லோருக்கும்..(எம்மனோர்)


இதை நான் முழுமனதோடு நெஞ்சாற ஏற்றுக்கொண்டேன்.. இனி இதை உண்டால் என்ன..? உண்ணாவிடின் என்ன?? இதுவே சாப்பிட்டது போலத்தானே.


(ராமன் அதை சாப்பிட்டானா இல்லையா என தெளிவாக தெரியவில்லை.. Director கம்பர் அதை 'சென்சார் கட்' செய்து விட்டார்.)


பிறகு இரவெல்லாம் விடிய விடிய துணையாய் இருந்து மறுநாள் கங்கையை கடக்க ஓடம் கொண்டுவந்து ராமன், சீதை, இலக்குவன் மூவரையும் குகன் அழைத்து செல்கிறான். மேலும் அவர்களை வனவாசம் போக வேணாம் என்றும் எஞ்சிய ஆண்டுகள் பூராவும் எந்தன் வீட்டிலேயே இருங்கள் என்றும் கெஞ்சினான்..! ராமன் உடன்படவில்லை. ஆதலால், "நானும் உம்முடன் வனவாசம் வருவேன்..." என்கிறான். குகனின் பைத்தியகாரத்தனமான தூய அன்பில் நெகிழ்ந்த ராமன்..., "நீயும் வந்துவிட்டால் உன்மக்களை யார் காப்பது?? எங்கே போய்விட போகிறேன். மறுபடி கட்டாயம் உன் இருப்பிடம் வந்து சேர்வேன்..!" என வாக்களிக்கிறான்..


எனினும் குகன் மேலும் துன்பமடைகிறான். 'ஐயோ! நீ திரும்பிவர இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ? அதுவரை பார்க்காமல் பேசாமல்

பிரிந்திருக்க என்னால் இயலாதே.. இடைப்பட்ட நீண்ட பிரிவுகாலத்தில் நீர் எம்மை மறந்து போனால்,,, துன்ப தீயில் வெந்து மடிவேனே! " என்று புலம்ப..


அதற்கு ராமன் சொன்ன பதில்தான் நாம் காணவிருக்கும் முதல் பாடல்..


பாடல்-1


"அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;


'என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்


நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்


உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்."


அதாவது....,


அன்னவன் ( அந்த ஆள் = குகன்) புலம்பல் உரையை கேட்கமுடியாமல் அமலன் (குற்றமற்றவன் = ராமன்) பதில் உரைத்தான்..,


"என்னுயிர் போன்றவன் நீ! இதோ என் இளவல்(தம்பி) இனி உன் இளவல்! நன் நுதல் உடையவளான சீதை உன் குடும்பத்தில் ஒருத்தி!(கொழுந்தியாள்). இந்த நளிர்கடல் நிலம் எல்லாம் உனக்கே.. இவ்வளவு ஏன்? நானே உன் கட்டளைக்கு கட்டுப்பட்டவன். நான் ஆற்றும் தொழில் மீது பூரண உரிமை உனக்குண்டு."


மேலும்.... உரைத்தான்,,


"துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்


பின்பு உளது "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்;


முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா


அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்..!"


(பொருளுணர...)


முடிவிலா அன்புள்ள குகா..! துன்பம்னு ஒன்னு இருந்தால் அல்லவா சுகம்னு ஒன்ன உணரமுடியும்! ஆதலால் நீ.. பின்பு நாம் சேரப்போவதை பற்றியே நினை. அதைவிடுத்து , இடையில் வரப்போகிற பிரிவை எண்ணி வருந்தாதே..  அதுமட்டுமன்றி, முன்பு சகோதரர் நாங்கள் ஒரு நால்வராக இருந்தோம். இனி உன்னையும் சேர்த்து நாம் ஐவர்களாகிவிட்டோம்! இதை எண்ணி மகிழ்ந்திரு..!


என்று ஆறுதல் கூறி தேற்றுகிறான் ராமன்.


"முடிவு உளது என உன்னா அன்புள.." என்ற சொற்றொடர் சந்தேகமின்றி கம்ப சித்திரத்தை எடுத்துக்காட்டுகிறது.


மேலும் இப்பாடலின் முதல் வரியில் கூறப்படும் வேதாந்த கூற்று...


நம் மகாகவி பாரதி எழுதிய 'ஞானரதம்' நூலில் வருகிற கவலையே இல்லாத உலகினை நினைவூட்டுகிறது.

கவலையே இல்லாத உலகில் மயான அமைதி கிட்டுமே ஒழிய மகிழ்ச்சி கிட்டாது. இதுவே நாம் அடிக்கடி மறந்துவிடுகிற யதார்த்தம்.


கவிமுனி கம்பன் இதை என்றோ போகிறபோக்கில் சொருகிவிட்டு போய்விட்டான்.


இங்கிருந்து நேரடியாக கிஷ்கிந்தா காண்டம் தாவி அங்கு எரிகதிர் பரிதி செல்வன் - சுக்ரீவனை அலசுவோம்.


நட்புக்கோட் படலம்


வாலியால் வஞ்சிக்கப்பட்டு கடுந்துயர் உண்டாகி அதிலிருந்து மீள அடைக்கலம் தேடிய வானர வேந்தன் சுக்ரீவன், அனுமன் மூலமாக ராம இலஷ்மணர் வரவை கேள்வியுற்று அவர்களிடம் உதவிகேட்டு வந்தான்.


"கை அறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்..

...........................

...............................

'சரண் உனைப் புகுந்தேன்-என்னைத் தாங்குதல் தருமம்' என்றான். "


இதோ பாருப்பா ராமா..! உன்னை நம்பி வந்துட்டேன்... என்னைய எப்படியாவது காப்பாத்திடு! அதான் தருமம்..  


என்று அன்பு கட்டளையிட்ட சுக்ரீவனை எத்தனை உரிமையோடு ராமன் அரவணைத்தான் தெரியுமா..?


"சரிப்பா சுக்ரீவா! அஞ்சாதே.. போனது போகட்டும். இதுநாள் வரை நேர்ந்ததை விடு. இனி உனக்கு நடப்பது எதுனாலும் (நல்லது கெட்டது) அதில் எனக்கும் சமபங்கு உண்டு.


இதுக்கு மேல என்னத்த சொல்ல..


அந்த விண்ணிலோ.., இந்தமண்ணிலோ.., உன்னை பகைத்தவன் எவனாயினும் சரி அவன் இனி என்னை பகைத்தவன் ஆவான்..!


உன்னோடு உறவில் உள்ளவன் எத்தனை தீயவனாயினும் பரவாயில்லை. அவனும் எனக்கும் உறவினனே ஆவான்!! 


உன் குடும்பம் இனி என் குடும்பம். என் பாசமிகு சொந்தங்கள் இனி உனக்கும் சொந்தமாவர்..! நீயே என் இன்னுயிர் துணைவன் ஆவாய்..!!"


என மொழிந்தான்.


அந்த அருமையான வசனகவி பாடலை பருகுங்கள்..


பாடல் - 2


"மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச்


செற்றவர் என்னைச் செற்றார்! தீயரே எனினும், உன்னோடு


உற்றவர் எனக்கும் உற்றார்! - உன் கிளை எனது; என் காதல்


சுற்றம், உன் சுற்றம்! நீ என் இன் உயிர்த் துணைவன்!!' என்றான்"


அடுத்து முடிவாக யுத்த காண்டம் பிரவேசித்து விபீஷணரை பார்க்கிறோம்...


எங்கோ கானகத்தில் சுற்றித்திரியும் கங்கைகரை வேடனையும்..


மனித இனமே இல்லாத வானர தலைவனையும்தான் உடன் பிறப்பென ராமன் ஏற்றான் என்றால்.., 


அடுத்ததாக தன் பகைநாட்டு வேந்தன்  கூடாரத்திலிருந்து ஒருவனை அதிலும் ஜென்ம பகைவனான இராவணனது உடன்பிறப்பையே தன்னுடைய 

தம்பியாக நம்பி ஏற்கிறான்,, அவனன்றி வேறு யாருக்கு வரும் அந்த பக்குவம்??


வீடணன் அடைக்கலப் படலம்


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் அல்ல இராவணன்...!

வீடணன் என்ற ஒரு தேர்ந்த தருமவான் அவனது அரசியல் கூடாரத்தில் வீற்றிருந்தான். 


சீதையை கடத்திவந்து இலங்கையில் சிறைவைத்திருந்த ராவணனை நோக்கி,, 


"சுடுகிற தீயை துணிகளிடையே மறைத்துவைப்பது போலிருக்கிறது உன் செயல். மதிகெட்ட இச்செயலை விடுத்து சீதையை சிறையிலிருந்து விடுவித்தால் உய்வுண்டு. இல்லையேல் முழு இலங்கையும் வீழும்! " என பலவாறு  எச்சரித்தான்.


"சுடு தியைத் துகிலிடைப் பொதிந்து, துன்மதி!

இடுதியே, சிறையிடை இறைவன் தேவியை;

விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்,

படுதி - என்று உறுதிகள் பலவும் பன்னினான்"


இருந்தென்ன?  உலக தேசங்களை எல்லாம் வென்றிருந்த இறுமாப்பால் தன் இளவலின் உபதேசங்களை முற்றாக அலட்சியம் செய்து வந்தான் ராவணன்.


தன் சொல்லுக்கு இங்கு மரியாதை இல்லை. இலங்கை இனி தப்பவும் வாய்ப்பில்லை என்றுணர்ந்தவனாய் வீடணன் தன் சகாக்கள் அனலன், அனிலன், அரன் மற்றும் சம்பாதியுடன்  வெளியேறுகிறான்.


வீடணன் & கோ நேராக ராமன் இருக்கிற வானரசேனை அருகே போயினர்.


எதிரியின் படையிலிருந்து எதிர்வரும் நபர்களை இடையில்

எதிர்மறைத்து வானர தளபதிகள் வினவ,,


"நாங்கள் பிரபு ஸ்ரீ ராமரிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்திருக்கிறோம்.." என்றதோடு


வீடணன் பற்றி அவனுடன் வந்தவன் கூறினான்.,


"தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,

மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்."


(நான்முகன்= பிரம்மன்

மகன் மகன் மைந்தன்= பேரனின் மகன்)


விஷயம் ராமனின் செவிகளை எட்டியது.


கூட்டணி குறித்து நேரடியாக வீடுதேடிவந்து கேட்ட வீடணனை.. 

சேர்ப்பதா வேணாவா என ராமன்

தன்னிச்சையாக முடிவெடுக்க வில்லை. ஜனநாயக முறைப்படி தன் கட்சிகாரர்களோடு கலந்தாலோசித்தான்.


சுக்ரீவன், சாம்பவான், நீலன், அங்கதன் முதலான எல்லோருமே

'வந்திருப்பவன் நல்லவனாயினும் அரக்கர் குலத்தவன். அவனை நம்ப வேணாம்' என்றனர்.


ஆனால் அனுமன் மட்டும் வீடணன் அரக்கனாயினும் அந்தண ஒழுக்கம் உடையவன் என்றும், இலங்கையில் தான் கண்ட ஒரே உத்தமன் என்றும், தூது சென்ற தன்னை ராவணன் கொல்ல முனைந்தபோது அதை தடுத்தவன் என்றும் கூறி.., மேலும்...


ஆபத்தில் வந்து அபயம் என்றவனை நீ ஐயமுற்று விரட்டுவது..

 கிணற்றின் சிறிதளவு நீரை, பரந்த கடல்நீரானது சந்தேகப்படுவதை போல் ஆகிவிடாதா? கொற்ற வேந்தே!"

என்று ஒரு போடு போட்டான்.


"ஆவத்தின் வந்து, "அபயம்!" என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்,

கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? - கொற்ற வேந்தே! "


பலரது அபிப்ராயங்களை ஆழ்ந்து கேட்ட ராமன் அநுமன் கூற்றையே ஆமோதித்து செவிமடுத்தான். வீடணனை முழுமனதோடு வரவேற்று ஏற்றுக்கொண்டான். 


 ராமன் தன்னை ஏற்பானோ மாட்டானோ என கவலைகொண்டிருந்த விபீஷணருக்கு இன்ப அதிர்ச்சி தருவது போலிருந்தது ரகுகுல திலகத்தின் ரத்தின சொற்கள் ஒவ்வொன்றும்....


( குகனோடு ஐவர் ஆனோம்!

குன்று சூழ்வான்(சூரியன்) மகனோடு (சுக்ரீவன்) அறுவர் ஆனோம்..!

இப்போ,  உள்ளன்போடு என் இல்லம்நாடி வந்த பிரியமிகு ஐயா விபீஷணரே! உம்மோடு சேர்த்து சகோதரர்கள் நாம் எழுவர் ஆனோம்..! )


பாடல் - 3


"குகனொடும் ஐவர் ஆனேம்..! - முன்பு, பின், குன்று சூழ்வான்


மகனொடும், அறுவர் ஆனேம்..! எம்முழை அன்பின் வந்த


அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்..!


புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை...!"


ஒரு காலத்தில் புத்திர பேற்றுக்காக வாடிக்கொண்டிருந்த தந்தை தசரதன்,,  எவரும் புகுதலுக்கு அரிய வனவாசத்தை எனக்கு தந்ததன் வாயிலாக,, இப்போது அடுத்தடுத்து எத்தனை புதல்வர்களை பெற்று பொலிகிறான்.. அடேயப்பா!


இங்கு,

கடைசி சொல்லில் 'எந்தை' (என் தந்தை) என்று சொல்லியிருக்கலாம்... ஆனால் கம்பன் எத்தனை நுட்பமாக 'நுந்தை'

(உன் தந்தை) என போட்டிருக்கிறான் பாருங்கள்...! 

"நீ என் தம்பி ஆகிவிட்ட படியால், இனி என் தந்தை உனக்கும் தந்தை தானே..??!!" என்று அதற்கு அர்த்தம்.


அன்பை பெறுவது எப்படி முக்கியமோ அதைக்காட்டிலும் அன்பை வெளிக்காட்டுவதும் முக்கியமாகிறது. அது மனிதருக்கும் சகல ஜீவிதங்களுக்கும் இயல்பிலேயே இருக்கத்தான் செய்கிறது. எப்படி

இயற்கை உபாதையை அடக்க முடியாதோ அப்படித்தான் இயற்கையின் கொடையான அன்பையும் அடக்க முடியாது!


அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்? என்றாரே தெய்வப்புலவர்!


முன்பு அயல்நாடுகளில் வேலைச்சுமையால்.. வீட்டில் குழந்தைகளிடம் அன்புகாட்ட ஆள் இல்லாததினால் பொங்கிவந்த அவர்களின் அன்பு அப்படியே செல்லப்பிராணிகளின் பக்கம் திரும்பி வழிந்தோடியது..!! தான் வளர்க்கும் நாய், பூனைகளுக்கு தருகிற மரியாதையை கூட சக மனிதர்களுக்கு அவர்கள் தருவதில்லை.


நம்நாட்டிலும் இவ்வழக்கு தொடங்கிவிட்டது. சக மனிதனிடம் போய்சேரவேண்டிய பாசம் மிதமிஞ்சி பிராணிகளிடம் போய் சேருகிறது. இதனால் அந்த பிராணிகளின் இயல்பான இறப்பு கூட தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துகிறது.


குடும்பங்களிடையே அன்பு தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.


வீடு என்பதற்கு அகம் என்றும் பெயருண்டு. அகத்தின் அன்பில் பற்றாகுறை தோன்றும் போதுதான்

புறத்திலிருந்து வரும் சின்ன உதவி/ சிரிப்பு கூட உயிரினும் மேலான உறவாக தோற்றமளித்து விடுகிறது. இன்றைய சினிமாக்களில் நட்பும் காதலும் இப்படித்தான் ஊதி ஊதி வளர்த்து பூதக்கண்ணாடி யால் பெரிதாக்கி காட்டப்படுகிறது! இது ஒருவித பாரபட்சமான போக்கு.


சரிவிகித உணவு, சமச்சீர் கல்வி..

என்பது போல அன்பும் கூட  சரியான விகிதத்தில் பரவலாக பகிரப்படவும் நுகரப்படவும் வேண்டும். 


உலகம் ஒரு குடும்பம்..

நாம் எல்லோரும் உடன்பிறப்புகள்..!


சூரியராஜ்

தென்றல் இதழ் 28

3 கருத்துகள்

  1. இறுதி வரி

    இதை வள்ளல் பெருமானும் அடிக்கடி உணர்த்தி இருப்பார்

    உலக உயிர்கள் அனைத்தையும் நாம் உறவாகவும் உடன் பிறப்பாகவும் காணுதல் வேண்டும்

    அதுவே சமத்துவத்தையும் அன்பையும் வளர்க்கும்

    பதிலளிநீக்கு
  2. ஒரு பிள்ளை போதும் என நினைக்கிறார்கள்.ஆணோ பெண்ணோ ஒற்றையாக பிறக்கும் பிள்ளை கண்டிப்பாக மன அழுத்தத்துக்கு ஆளாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இந்த வழக்கம் மாநகரங்களில் சகஜமாகிவிட்டது. அதைவிட அவர்கள் இதேபாணியில் மூன்றாவது தலைமுறையும் கடந்துவிட்டார்கள்.. அந்த மூன்றாவது தலைமுறைக்கு தாத்தா பாட்டி யே தூரத்து உறவுதான்.

      பெருந்தொற்று காலத்தில்..., மேலைநாடுகளில் சில நீண்ட பாரம்பரியம் கொண்ட வம்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவு துயரமும் நிகழ்ந்தது.

      நீக்கு
புதியது பழையவை