அண்மை

மக்கட் பேறு | கவியுரை

 


குறள் 61


பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.


கவியுரை


பெறுவதிலும்

பெரும் பேறு

பிள்ளை;

யாமறிந்து

வேறு

இல்லை


உரை


பெறுகின்ற செல்வங்களாகிய அறிவறிந்த மக்களை பெறுவதை காட்டிலும் சிறந்ததாக எனக்கு வேறேதும் தெரியவில்லை


குறள் 62


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.


கவியுரை


பண்புடை

பிள்ளை

பெற்றோருக்கு

பெறப்போகும்

பிறப்பும்

சிறக்கும்


உரை


பெற்றோருக்கு எழுகின்ற பிறப்பெல்லாம் நற்பிறப்பாகும் பெறுகின்ற பிள்ளை நற்குணவானாக அமைந்தால்


குறள் 63


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 

தம்தம் வினையான் வரும்.


கவியுரை


செய்த செல்வமே

பிள்ளை வரம்

அது

செய்த வினைக்கேற்றே

கையில் வரும்


உரை


தமது உயர்ந்த செல்வம் என்பதே பிள்ளை செல்வமே. அச்செல்வம் கூட நம் வினைக்கேற்பவாறே அமையும். அதுவே இறைவன் ஆணை.


குறள் 64


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 

சிறுகை அளாவிய கூழ்.


கவியுரை


அமிழ்தினும்

இனிது தாம்

குழந்தை கை

குழைத்த

கூழ்


உரை


அமிழ்தினும் இனிது. தம் குழந்தையின் பிஞ்சு கைகளால் பிணைந்து எடுத்து வந்த கூழ்


குறள் 65


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


கவியுரை


பிள்ளை

உடல் தீண்டல்

உடற்கின்பம்

சொற் கேட்டல்

செவிக்கின்பம்


உரை


தம் பிள்ளையின் உடல் தீண்டல் உடற்கின்பம் அளிக்கும் எனில் அவர்களின் சொற்கேட்டலே செவிக்கு இன்பம் தரும்


குறள் 66


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.


கவியுரை


குழலும் யாழும்
இனிதென்பர்
தன் குழவி
குளறல்
கேளாதவர்


உரை


குழலையும் யாழையும் அதனிலிருந்து புறப்படும் இசையையும் இனிதென்பர் தன் குழந்தையின் மழலை மொழி கேளாதவர்


குறள் 67


தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.


கவியுரை


அவையிடத்து

முந்தி நிலை

அப்பன்

மகற்களிக்கும்

நன்றி நிலை


உரை


தந்தை மகனுக்கு அறிவென்ற செல்வத்தை அளித்து அறிவுடையோர் கூடும் அவையின் முன் இடத்தை அளிப்பதே தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி ஆகும்


குறள் 68


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


கவியுரை


தம்மினும்

அறிவுள்ள

தனயன்

மண்ணுயிர்

கெல்லாம்

இனியன்


உரை


பெற்றோரை காட்டிலும் பிள்ளையின் அறிவு அதிகமிருக்க அதன் பயன் பெற்றோரை காட்டிலும் இம்மண்ணுயிர்கே அதிகம் ஆகும்


குறள் 69


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய்.


கவியுரை


பெற்றதிலும்

பெருங்களிப்பு

பெற்றவன்

நற்றவன்

என கேட்ட

தாய்க்கு!


உரை


தாய்க்கு பிள்ளையை பிரசவித்த அந்த கணத்தை விட அதிக மகிழ்வை அளிக்கும் செய்தி ஒன்று உண்டு, அது தன் மகனை நற்குணம் கொண்ட குணவான் என்று பிறர் புகழ கேட்பதே.


குறள் 70


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்.


கவியுரை


'இவன் தந்தை

இவனை பெற

என் செய்தான்'

எனும் சொல்,

மகன் தந்தைக்கு

ஆற்றும் கடனாய்

கொள்


உரை


ஊரார் தந்தையை கண்டு, 'இவன் தந்தை இவனை பெற என்ன தவம் செய்தானோ' என்று ஏங்கும் அளவிற்கு மகன் நடப்பதே, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ஆகும். உதவிகள் கடமையாக கொள்ளப்படுவதே உசிதமாகும்.


தீசன்

தென்றல் இதழ் 30

3 கருத்துகள்

  1. வள்ளுவர் ஏழு வார்த்தைகளில் கூறிய கருத்தை அதைவிட குறைவான வார்த்தைகளில்
    சிறப்பாக பொருள் கூறும் பாங்கு பாராட்டத்தக்கது.நல் ஒழுக்கம் உள்ள பிள்ளைகளுக்கு எதுவும் சேர்த்து வைக்க தேவையில்லை.நல்ல பிள்ளைகள் பெற பெற்றோர் நல்வினை புரிந்து இருக்க வேண்டும் என்ற வள்ளுவரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. 63 குறளில் மிக அருமை. மிக சிறப்பு தங்களின் இந்த கவியுரை 133 அதிகாரங்கள் வரை தொடர என்‌ மனமார்ந்த வாழ்த்துக்கள். அதுமட்டும் அல்ல அனைத்தையும் படிக்க நான் ஆர்வமாக உள்ளேன் ❤️

    பதிலளிநீக்கு
புதியது பழையவை