அண்மை

ஞானரதம் | அத்தியாயம் 2



மனம் ஆரம்பத்திலேயே கவலையற்ற பூமி என்ற பெயரைக் கேட்டவுடன் நடுங்கத் தொடங்கியதற்கும், அது என்னை அங்கு போகவேண்டாமென்று பிரார்த்தனைகள் செய்ததற்கும், கோட்டையருகே வந்தவுடன் தர்ம தேவதையின் முன் வந்து நிற்கும் கொடுங்கோல் அரசரைப்போல நிலைமயங்கி அதற்கு அளவுகடந்த திகில் உண்டானதற்கும் காரணம் இன்னது என்பதை இப்போதுதான் அறிந்தேன். அப்பால் அந்த உலகத்தினுள் நுழைய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு நீங்கிப் போய்விட்டது. மனத்தினிடம் வைத்திருந்த மோகத்தால், அதைக் கொன்றுவிட்டு நான் இன்பமடைவதில் விருப்பங் கொள்ளவில்லை.


"என்னை இப்போது என்ன செய்யச் சொல்லுகிறீர்?" என்று வாயில்காப்பானிடம் கேட்டேன். அதற்கு அவன்


"மானுடா, மனம் இறந்த பிறகுதான் அமைதியுண்டு; அது இருக்கும் வரையில், கவலைகள் நீங்கி இருக்கலாம் என்ற எண்ணம் வீண். கவலைகளாகிய அசுரர்களை இடைவிடாது பெற்றுத் தள்ளிக்கொண்டே இருக்கும் தாய் மனமேயாகும். உனக்கு அந்தப் பொய்யரக்கியிடம் இன்னும் பிரேமை தீரவில்லை. பக்குவம் வந்த பிறகு, நீ தானே இங்கு வந்து சேரலாம். இப்போது போய் வா" என்று சொன்னான். திடீரென்று அந்தக் கோட்டை, வாயில்காப்பான் எல்லாம் மறைந்து போய்விட்டது. அக்கணம் கண் இருட்சி உண்டாயிற்று. பிறகு கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி, வீரராகவ முதலித் தெருவில், முன்னே கூறப்பட்ட வீட்டு மாடியில், தனியே கட்டிலில் நான் படுத்துக் கொண்டிருப்பதையும், கடல் திசையிலிருந்து இனிய காற்று வீசிக்கொண்டிருப்பதையும் கண்டேன்.


"சரி, போனது போகட்டும். இந்த அமைதி பேறு நமக்கு இப்போது கிடைக்கவில்லை. ஆயினும் பாதகமில்லை. ஏழை மனத்தைக் கொன்றுவிட்டு நாம் மட்டும் தனியே இன்பமுற விரும்புவதும் நான்றி கெட்ட செய்கை யாகுமல்லவா? அதன் கவலைகளையும், உளைச்சல்களையும் பற்றி யோசித்தேனே யொழிய அதன் மூலமாக எனக்குக் கிடைத்திருக்கும் பெரிய பெரிய நன்மைகளைச் சிந்தித்தேனில்லை. எனக்கு உலக வாழ்க்கையே இந்த மனத்தினால்தானே எய்திற்று. இதை ஈசனென்றே சொல்லத்தகும். மேலும், எனக்கு அதையும், அதற்கு என்னையும் காட்டிலும் உயிர்த்துணைவர் யார் இருக்கிறார்கள்? அதற்குத் துரோகம் செய்யலாமா? எத்தனை கோடி கவலைகள் இருப்பினும் பெரிதில்லை. மனம் செத்து நான் தனியே வாழ்வதாகிய கவலையற்ற பூமி எத்தனை அரிதாயிருப்பினும், அது எனக்கு வேண்டாம்" என்று தீர்மானம் செய்து கொண்டேன், "நிம்மதி நிம்மதி என்று கத்தும் மனிதர்களை உலகத்தார் பிரமஞானிகளென்றும், மகரிஷிகளென்றும் புகழ்கிறார்களே!


அந்த மனிதர்களெல்லாம் மூடர்களும், துரோகிகளுமாவார்களென்று எனக்குத் தோன்றுகிறது" என்று சொல்லிக்கொண்டேன்.


நான் இவ்வாறு ஆலோசிப்பதை அறிந்துகொண்ட மனம், "அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டு, தன் நடுக்கமெல்லாம் தீர்ந்து ஆறுதலுடனிருந்தது. எனக்கும் சந்தோஷம் உண்டாயிற்று. எனது மனமோகினிக்கு ஓர் முத்தங் கொடுத்தேன்.


மறுநாள் மனத்திடம், "இப்போது, எங்கே போகலாம்?" என்று கேட்டேன்.


"துன்பக் கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய் வருவோமே" என்றது.


"நன்று கூறினை" என நான் மகிழ்ச்சி பாராட்டி, அப்பால் முன்போலவே எனது ஞானத்தேரில் ஏறிக் கந்தர்வ உலகத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே கண்ட காட்சிகளையும், அனுபவித்த போகங்களையும் என்னால் கூடியவரையும் உள்ளது உள்ளவாறு கீழே எழுதுகிறேன். அந்தப் போகங்களிற் சில, தற்காலத்தில் நமது தேசத்து மக்களால் மதிக்கப்பெறும் ஒழுக்க தர்மங்களுக்கு விரோதம் என்று நம்மவர் கருதுவார்களாயின், அதன் பொருட்டு, என் மீது பழி கூறலாகாது. இந்த பாரததேசத்தில் தற்காலத்திலே வாழும் அடிமை மக்கள் "இந்த இன்பம் அதர்மமானது. அந்தச் செய்கை அகாரியமானது" என்று தர்மப் உரைகள் செய்யும்போது, உண்மையாகவே எனக்கு நகைப்புண்டாகிறது. மகரிஷிகளுக்கும் தேவதைகளுக்கும் சந்ததியாராக தோன்றியவர்களாயினும், தற்காலத்தில் இந்நாட்டு மக்கள் உலகத்திலுள்ள எல்லா அநாகரிக மக்களைக் காட்டிலும் கடைப்பட்டவர்களாய் இருக்கிறார்ள். மிருகம் போன்றே காடுகளிலும் தீவுகளிலும் ஆடையில்லாமல், காதுகளிலும் உதட்டிலும் மூக்கிலும் துவாரங்கள் செய்து, சங்குகளையும் வளையங்களையும் தொங்கவிட்டுக் கொண்டு, மேலெல்லாம் பச்சை குத்தியவர்களாகத் திரியும் மக்களுக்குக் கூட சுதந்திரம் உண்டு. இந்தத் தேசத்தார் அப்பெரும் பேற்றை இழந்து விட்டார்கள். இந்நாட்டில் கல்வி மங்கிப் போய்விட்டது. நூற்றிலே தொண்ணூறு மக்கள் "அ" (ஆநா) எழுதச் சொன்னால் தும்பிக்கையொன்று வரைந்து ஆனை எழுதக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள். நமது சாஸ்திரங்களெல்லாம் செல்லரித்துப் போய்விட்டன. தேசத்து ஞானக்களஞ்சியத்திற்குக் காப்பாளிகளாக இருந்த பிராமணர் மடைத் தவளைகளைப் போலச் சிற்சில மந்திரங்களைச் சம்பந்தமில்லாமல் யாதொரு பொருளும் அறியாமற் கத்துகிறார்களே யல்லாது, உண்மையான ஞானப் பெருமை இவர்களுக்கு கொஞ்சமும் இல்லாமல் போய்விட்டது. மகரிஷிகளின் வழியில் தோன்றிய பிராமணர் மடைத் தொழில் செய்வதும், நீசர்களிடம் போய்த் தொண்டு புரிந்து பணம் வாங்கிப் பிழைப்பதும், இதைக் காட்டிலும் இழியனவாகிய எண்ணற்ற காரியங்களில் காலங்கழிப்பதும் உலக மக்களும் அறிந்த விஷயங்களேயாம். இந்நாட்டின் கலைகள் அனைத்தும் மறைந்து போய்விட்டன. வீரியம் போய்விட்டது. பலம், சுகம், செல்வம் முதலிய நற்பொருள்களெல்லாம் அகன்று விட்டன. மனங்குன்றி உடல் சோர்ந்து உண்ண உணவின்றிக் கண் குழிந்து போயிருக்கும் அடிமை சாதியார் இந்நாட்டில் மகா பரிதாபகரமான வாழ்க்கை நிகழ்த்துகின்றார்கள்.


இன்ப நாடாகிய கந்தர்வ லோகத்தைப் பற்றிப் பேசி வருமிடத்தே, இத் துன்ப நாடாகிய பாரத தேசத்தைப் பற்றிச் சில வசனங்கள் எழுதிய பிழையை படிக்கும் நண்பர்கள் பொறுத்தருள் செய்யுமாறு வேண்டுகிறேன். தர்மமே சூனியமாகப் போயிருக்கும் இத் தேசத்தில் சிலர் கந்தர்வலோகச் செய்திகளைப் பற்றி நான் எழுதப்போகும் விஷயங்கள் எழுதத்தகாதவை என்று கருதக்கூடும் என்ற சந்தேகம் எனக்குண்டாயிற்று. தர்மத்தை நிச்சயம் புரியும் அதிகாரமே இந்த அடிமை மக்களுக்குக் கிடையாது என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டாகவே மேலே கண்ட வசனங்கள் எழுதப்பட்டவை யாகும். இது நிற்க.


கந்தர்வ உலகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி சுகமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று; அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. "இது என்ன ஒலி! எங்கிருந்து வருகிறது?" என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை. கண்களோ பரவசமடைந்து போயின. அங்குள்ள மாடங்களும், மாளிகைகளும், கோயில்களும், கோபுரங்களும், நாடக சாலைகளும் - எல்லா வீடுகளும் சந்திர கிரணங்களைப் போன்ற, குளிர்ந்த, இனிய பொன்னொளி வீசிக் கொண்டிருந்தன. இவற்றிலும், மற்ற மண், கல், கரை முதலிய எல்லாப் பொருள்களிலுமே அவ்வொளி அநேகவிதமான வண்ண வேறுபாடுகளுடன் கலந்திருக்கக் கண்டேன்.


இதை வாசிப்பவர்களே, நீங்கள் எப்போதாயினும் மாரிக்காலத்தில் மழையில்லாத மாலைப்பொழுதிலே கடற்கரை மணல் மீது இருந்துகொண்டு, வானத்தின் மேற்புறத்தில் சூரியன் மறையும்போது, ரவி கிரணங்கள் கீழ்த்திசையிலுள்ள மெல்லிய மேகங்களின் மீதும் இடையிடையே தெரியும் வான வெளிகளின் மீதும் வீச, அதனின்றும் ஆயிரவிதமான மெல்லிய அற்புதகரமான வர்ண வேறுபாடுகள் தோன்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த அடிமை நாட்டிலே உங்களுக்குப் எழில் தேவியின் வனப்புகளை பார்த்துப் பரவசமடைய சாவகாசம் அடிக்கடி ஏற்பட்டிராது. ஆனால், மேற்கூறப்பட்ட வர்ணக் காட்சியை ஒரு முறையேனும் கண்டிருக்க மாட்டீர்களா? அவ்வாறு கண்டிருப்பீர்களானால், நான் பார்த்த கந்தர்வ லோகத்தின் இயற்கை ஒரு சிறிது உங்களுக்குத் தெரியும்படி சொல்லக்கூடும். அங்கும் அநெக விதமான மேன்மை பொருந்திய திரவத்தன்மை கொண்ட வர்ண பேதங்களே காணப்பட்டன. ஆனால் அவற்றுடன் சந்திர கிரணங்களிள் மோகினித்தன்மை கலப்புற்றிருந்தது.


இந்த ஒளியிலும், இன்னிசையிலும் களிப்புற்று நான் ஒரு கணம் இருக்கும் முன்னாகவே, ஒரு கந்தர்வ யுவதி என் முன் வந்து, "வாராய், மானுட வாலிப, உனக்கு எங்கள் உலகத்தின் புதுமைகளையெல்லாம் காட்டுகின்றேன்" என்று கைகோத்து அழைத்துச் சென்றாள். 


நான் அந்த யுவதியின் வடிவைக் கண்டு மயங்கி மூர்ச்சித்து விடுவேன் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆயினும், அறிவைச் சிறிது திடப்படுத்திக் கொண்டு, அவளை நோக்கி, "இங்கிருந்து நகர்வதற்கு முன்பு முதலாவது ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு விடை கூறவேண்டும்" என்றேன்.


"கேள்" என்று அவள், பொன் வீணை யொன்று மனிதர் மொழியிலே பேசுவது போலச் சொல்லினாள்.


"இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே! அது எங்கிருந்து வருகிறது?" என்றேன்.


"மேலே பார்" என்றாள். நீல வானத்தில் சந்திரன் தாரைகளினிடையே, கொலுவீற்றிருக்கக் கண்டேன்.


"அவருடைய கிரணங்கள்" என்றாள்.


"சந்திர கிரணங்களா! சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.


"சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நான்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே மக்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கேகூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும்" என்றாள். இதைக் கேட்டு வியப்படைந்து, பிறகு அந்த யுவதியுடனே நடந்து சென்றேன்.


"பற" என்றாள்.


நான் கலீரென்று நகைத்துப் "பறக்கவா சொல்லுகிறாய்!" என்று வியப்புற்றேன்.


பால் போல வெண்மை கொண்ட வானத்தாற் செய்த இரண்டு சிறகுகள் அவளுக்கிருப்பதை நான் கண்டேன். முன்பு நோக்கிய போதே எனக்கு மூர்ச்சையுண்டாகத் தக்கதாகவிருந்த அந்த யுவதியைச் சிறிது வருணித்துப் பார்க்கலாமா? ஏதோ முயற்சி செய்கின்றேன்.


சந்திரகலை வீசும் முகம். அதன்மீது சிறியதும் மூன்று விரல் உயரமுடையதுமாய், மலர்களாற் செய்யப்பட்ட ஓர் கிரீடம். உயிரென்ற வண்டு வீழ்ந்து, சிறகிழந்து தள்ளாடும் கள்ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள். தின்பதற்கல்லாது, தின்னப்படுவதற்கமைந்தன போன்ற பற்கள்.


தனது பாலிறகுகளால் விகாரம் செய்யப்படாத திவ்விய உருவம். தீண்டுவோன் உடற்குள்ளே இன்ப மயமான மின்சாரம் ஏற்றுகின்ற கைகள். மண்ணுலகத்துப் பெண்களைப் பேசுமிடத்து கந்தர்வச் சாயல் என்கிறார்கள். இவளது இயலையும், சாயலையும் என்னென்பேன்? தெய்வ இயல், தெய்வச் சாயல்.


"மண்ணுலகத்தவனாக இருந்தபோதிலும் நல்ல பார்வைகள் பார்க்கிறாய்" என்று நாணம் உணர்த்தி, "யோசித்துக் கொண்டு நில்லாதே, பற" என்றாள்.


"உன் பெயரென்ன?" என்று கேட்டேன்.


"வெகு நேர்த்தி! நானொன்று சொன்னால் நீ யொன்று பேசுகிறாய், என் பெயர் எதற்கு?"


"சொல்லு, பார்ப்போம்."


"என் பெயர் - பர்வதகுமாரி. என்னை, சாதாரணமாக, குமாரி என்று அழைப்பார்கள்."


"நல்லது, நான் உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா?"


"ஓ"


"சரி, பர்வதகுமாரி, நான் பறப்பதெப்படி? உன்னைப் போல எனக்கு இறகுகள் இருக்கின்றனவா?" என்று கேட்டேன்.


"நான் வந்தபொழுது என்மீது இறகுகள் இருக்கக்கண்டாயா?" என்றாள்.


"உன் முகத்தைக் கண்டு பரவசமடைந்ததில் இறகுகளைக் குறிப்பிட முடியவில்லை. நீ பறக்க சொன்ன போதுதான் பார்த்தேன்."


"துதி பிறகு பேசலாம். ஆரம்பத்திலே இறகுகள் கண்ணுக்குத் தெரிந்ததா? சொல்."


"தெரியவில்லை."


"இந்த உலகத்தில், பறக்கவேண்டுமென்ற நினைவு உண்டானவுடனே, இந்த வெண்மை நிறங்கொண்ட வானிறகுகள் தோன்றுகின்றன. நீ பறக்க வேண்டுமென்று உள்ளத்திலே திடமாக நினைவு செய்துகொள்."


"சரி"


"இப்போது என் கண்ணுக்குள்ளே உன் வடிவத்தைப் பார்."


பட்டப் பகற்போல் வீசிய நிலா வொளியிலே, அவளுடைய அழகிய கண்களுக்குள் உற்றுப் பார்த்தேன். அங்கே, எனது வடிவம் கந்தர்வ வடிவமாகத் தோன்றியது கண்டு வியப்படைந்தேன். ஆகா! நான் கனவுகளிலே என்னைக் கண்ட போது தோன்றிய வடிவம்! நோயற்றது; சுருங்கலற்றது; மண் தன்மையில்லாதது; சௌந்தரியமானது. எனக்கும் இரண்டு வான இறகுகள் திடீரென்று முளைத்திருக்கக் கண்டேன். எனது உருவம் இத்தனை மாறுபாடு அடைந்திருப்பதைக் கண்டு களிப்புற்று உடனே அவள் முகத்தையும் பார்த்தேன். எனது கண்குறிப்பை நோக்கி என் மனதிடையே அப்போது நிகழ்ந்த எண்ணத்தை அவள் அறிந்துகொண்டு விட்டாள்.


"அடா! உன்னைக் கண்ணுக்குள் பார்க்கச் சொல்லிய தன்றோ பிழையாய்விட்டது" என்றாள்.


"ஏன்?" என்று கூறிச் சிரித்தேன்.


"இதுவரை நீ உன்னை மனித சரீர முடையவனாகவும், என்னைக் கந்தர்வ சரீர முடையவளாகவும் எண்ணி நடத்தி வந்தாய். இனி என்னை 'இணை' யென்று கருதி விடுவாய்."


"பிரியமானவளே! நான் ஈசனாய் விட்டபோதிலும் உன்னைக் கண்டு வியப்படைவதை நீக்கமாட்டேன். எனினும், நான் உன்னை இணையாகக் கருதுவதில் உனக்கு சந்தோஷந்தானே?"


"ஓ"


பிறகு கண்களைக் கலந்தோம். 


'கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில.' (தொடரும்)


பாரதியார்

தென்றல் இதழ் 27

1 கருத்துகள்

  1. பிராமணர் குலத்தவரான
    பாரதியார், பொருளறியா
    மந்திரத்தை ஓதி பிழைப்பதையும்,
    மடைத்தொழில் புரிவதையும்,
    பிராமணர் நீசருக்கு துணை
    நிற்பதையும் வெறுக்கிறார்.

    தம்குலம் என்றும் பாராது
    உண்மைக்கு துணை
    நிற்கும் பாங்கு அவரது
    அச்சமின்மையை
    காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை