அண்மை

ஞானரதம் | அத்தியாயம் 3

 


"பற" என்றாள்.


புதிதாக உள்ளத்திலே எழுந்த காதற் கிளர்ச்சி கொண்டோ, அல்லது இறகுகளின் உதவி கொண்டோ அல்லது காந்தத்தின் பின்னே செல்லும் ஊசியென அவள் பறந்து செல்வதை இயற்கை முறையாற் பின்பற்றியோ, அவளோடு நானும் பறந்து செல்வேனாயினேன். இறகுகளின் உதவிகொண்டு பறந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில், பறத்தல் அத்தனை சுலபமாகவும், பழகியதாகவும் தோன்றிற்று.


"எங்கே போகிறாய்? உனது மாளிகைக்கா?" என்று கேட்டேன்.


"என் வீடு, உன் வீடு என்ற வேற்றுமை கதையெல்லாம் இங்கே கிடையாது. இது சுதந்திர உலகம்; முற்றிய ஞானத்திலே எவ்வாறு வேற்றுமை அல்லாத நிலை ஏற்படுகிறதோ, அது போல பரிபூர்ணமான போகத்திலேயும் வேற்றுமை அல்லாத நிலை தோன்றுகிறது. இங்கே எல்லோருக்கும் எல்லா மாளிகைகளும் உரிமைதான். யார் எங்கு வேண்டுமென்றாலும் தடையின்றி வாழலாம். நான் உன்னைக் கடலோரத்தில் சுகந்த மாளிகைக்கு அழைத்துப் போகிறேன்."


"வேற்றுமை நிலை, வேற்றுமை அல்லாத நிலை என்ற மிகப் பெரிய பேச்சுகள் பேசுகிறாயே? வேதாந்தம் எங்கே படித்தாய்?"


"போக நிலை நன்றாக உணர்ந்தவர்களுக்கு அத்வைத (இரண்டல்ல ஒன்று) ஞானம் இயற்கையிலேயே உண்டாகும். போகமறியாதவர்கள் பேசும் அத்வைதம் பொய். உங்கள் மண்ணுலகத்திலே அந்த ஞான நடிப்பு மிகுதியாக உண்டு. எங்களுக்கு அனுபவ ஞானம் சுலபம். மறை ஞானமும் எளிதுதான். இங்கிருந்து கவலையற்ற உலகம் வெகு சமீபம். போக மூர்த்தியாகிய விஷ்ணுவும், யோக நாதனாகிய சிவனும் ஒன்றே யென்பதை அறியாயா? இதெல்லாம் போகட்டும். இப்போது ஞானம் பேசத் தருணமன்று. கீழெல்லாம் பார்" என்றாள்.


நகரத்திலே இரண்டு பனை உயரத்தில் பறந்து போய்க்கொண்டு கந்தர்வநாட்டு மாளிகைகள், சங்கீத சாலைகள், லீலா மண்டபங்கள் - என்பவற்றின் அற்புதங்களை யெல்லாம் நோக்கிச் சென்றேன்.


பறப்பதிலே உண்டான இன்பம் கொஞ்சமன்று. மண்ணுலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களிலும்  பறவைகளே அதிக சுகம் அனுபவிப்பதாகக் கருதவேண்டும். ஓடும் தண்ணீரிலே நீந்துவது சிறிது நேரம் இன்பமாயிருக்கும். ஆனால், வானத்தில் நீந்திச் செல்வது தொடர் இன்பம். அதிலும் பர்வதகுமாரியைப் போல் ஓர் வழித்துணை கிடைக்குமாயின், வாழ்நாள் முழுவதும் பறந்து கொண்டே யிருக்கலாம். ஐரோப்பியர்கள் கந்தர்வ போகங்களையே வழக்கமாக கொண்ட சாதியார். வான ரதங்கள் செய்து நடத்துகிறார்கள். ஆனால், அவர்களிடம் தமோகுணம் அதிகமாதலால், அந்தப் புதுமையை இன்ப வழிகளிலேயே விருத்தி செய்துகொண்டு போகத் தெரியவில்லை. வான ரதங்கள் ஏற்பட்டு இன்னும் சரியாக நடத்தத் தெரிவதற்கு முன்னாகவே, 'எதிர்காலத்துப் போர்கள் வானத்திலேயே நடக்கக் கூடுமல்லவா?' என்ற விஷயத்தைப் பற்றிப் பலவாறு ஆலோசனைகள் செய்யத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு ஞாபகமெல்லாம் யுத்தத்திலேயும், கொலையிலேயும் இருக்கிறபடியால், அவற்றை அனுசரிக்கத் தகுதியில்லாதவர்களாகிறார்கள். இது நிற்க.


குபேர நாடான இந்த நாட்டிற்கு வந்த ஆரம்பத்திலே எனக்குப் பொறுக்க முடியாத மயக்கமும் திகைப்பும் விளைந்திருந்தன என்று மேலே கூறியிருக்கிறேன். அவை சிறிது சிறிதாக நீங்கி இன்பவுணர்ச்சி மட்டும் மிஞ்சி நின்றது. அறிவிலே தெளிவுண்டாயிற்று. காலையில் விழித்தெழுந்து, முகந்துடைத்துக் கடலருகே சென்று பார்ப்பவனது கண்ணுக்குப் புலப்படுவது போல, வானத்திலே பறந்து செல்லும் எனக்குக் கீழே யிருந்த விஷயங்களெல்லாம் மிகத் தெளிவோடு விளங்கலாயின. அப்பொழுது நான் கண்டுசென்ற செய்திகளையெல்லாம் விவரிக்க வேண்டுமானால் ஆயிரம் அத்தியாயங்கள் போதா. ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.


ஓர் மேடையின் மீது கந்தர்வக் குழந்தைகள் பூப்பந்தாடிக் கொண்டிருந்தன. ரோஜாப் பூப் பந்துகள்.


ஒரு சிறுவன் "அடீ ரசிகே! நீ பந்தை எறியும் போதெல்லாம் என் கைக்கோலுக்கு அகப்படாமல், வேண்டுமென்று, கோணலாக, என் முகத்தைப் பார்த்து எறிகிறாய். இனி நான் உன்னோடு விளையாட மாட்டேன்" என்றான். இது கேட்டு மற்றக் குழந்தைகளெல்லாம் கலீரென்று நகைத்தார்கள். எல்லாக் குழந்தைகளும் இவ்வாறு ஒன்று சேர்ந்து பல வார்த்தைகள் பேசியும், ஒருவர் மேல் ஒருவர் மோதியும், ஆடியும், பாடியும், சிரித்தும் விளையாடிக்கொண்டிருக்க, அவன் மட்டும் ஓர் ரோஜா நிறங்கொண்ட பளிங்காசனத்தின் மீது தனியே சாய்ந்திருந்து கொண்டு, பாதி குவிந்த விழிகளோடு ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


நான் பர்வதகுமாரியை நோக்கி, "அதோ, விலகி உட்கார்ந்திருக்கிறானே, அந்தப் பையன் யார்?" என்று கேட்டேன்.


"அவன் எனது தம்பி. அவன் பெயர் சித்தரஞ்ஜனன். அவன் குழந்தைப் பருவமாயிருந்த போதிலும், எங்கள் குல தெய்வமாகிய காமதேவனுடைய அருள் பெற்றவனாதலால், குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதிலே விருப்பமில்லாமல் கவிதைகள் புனைவதிலேயும், மோகனமாகிய பகற்கனவுகள் காண்பதிலேயும் பொழுது கழிக்கின்றான். ரோஜாப் பந்தை இந்தக் கிரீடராமன் மீது எறிந்த ரசிகா என்ற அந்தக் கன்னிகையின் மீது சித்தரஞ்ஜனன் தெய்வீகமான காதல் செலுத்துகின்றான். இப்பொழுது அவன் ஏதோ கவிதை புனைகிறான் என்று தெரிகிறது. அவனை இங்கே அழைக்கிறேன். அவன் கவிதை கேட்பதில் உனக்குப் பிரியந்தானா?" என்றாள்.


நான் வியப்படைந்து, "எனக்கு அளவில்லாத பிரியம்" என்று சொன்னேன்.


பர்வதகுமாரி அவனிருக்குந் திசையை நோக்கிக் கையால் சைகை காட்டினாள். அவன் உடனே வான இறகுகள் விரித்துக் கண்ணிமைக்குமுன் நாங்களிருந்த உயர் வெளிக்கு வந்து விட்டான்.


பர்வதகுமாரி அவனைத் தழுவி முத்தமிட்டு, "இவர் நம் நாட்டினை பார்க்கும் பொருட்டு வந்திருக்கிறார். நமது விருந்தாளி" என்று என்னைக் காட்டினாள். பாலகன் என்னை நோக்கி "வந்தே" என்று வணங்கினான். நானும் அவனைத் தழுவி உச்சி மோந்து வாழ்த்துக் கூறினேன். பிறகு பர்வதகுமாரியைக் கடைக்கண்ணால் நோக்கிக் கவிதை விஷயத்தை நினைப்புறுத்தினேன்.


அவள் தம்பியைப் பார்த்து "ரஞ்சனா, இப்போது உன் மனதிற்குள்ளே ஒரு பாடல் புனைந்து கொண்டிருந்தாயே, அதைச் சொல். இவர் கேட்கவேண்டுமென்கிறார்" என்றாள்.


சிறுவன் சிறிது நாணமடைந்தான்.


நான் "குழந்தாய், வெட்கப்படாதே! சும்மா சொல்" என்றேன்.


அவன், மண்ணுலகத்துப் பிராகிருத மொழியைப் போல் இருக்கும் இன்சொல் நிரம்பிய காந்தர்வ மொழியிலே, ரசிகா பந்தெறிந்ததன் பொருட்டுக் கிரீடராமன் சினமுற்றதைக் குறித்து ஓர் பாட்டுப் பாடினான். பர்வதகுமாரியின் தம்பியின் குரல் இன்பமாயிருந்ததென்று நான் எழுதவா வேண்டும்?


அவன் சொல்லிய பாடலை, எனது திறனற்ற தமிழ்ச் சொற்களிலே, சூரியனைச் சித்தரித்துக் காட்டுவதுபோல், ஒருவாறு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.


இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்றுரையா திருப்ப ஆலி முடியேறி மோதியதென் றருள் முகிலைக் கடுஞ்சொற்கள் மொழிவான் போலக் கடியேறு மலர்ப்பந்து மோதியதென் றினியாளைக் காய்கின்றானால் வடியேறு வேலெனவெவ் விழியேறி யென்னாவி வருந்தல் காணான்.


[இதன் பொருள்: - மேகத்திலிருந்து வெய்ய இடி தன் பக்கத்திலே விழ உடல் வெந்துபோனவன் ஒன்றும் சொல்லாது சும்மா இருக்க, ஆலங்கட்டி தலையிலே விழப்பெற்ற மற்றொருவன் மேகத்தின்மீது சினங்கொண்டு நிந்தை வார்த்தைகள் பேசுவது போல, வாசனை பொருந்திய ரோஜாப் பந்தைக் கொண்டு தன் மேலெறிந்துவிட்டாளென்று இன்ப வடிவத்தாளாகிய ரசிகையைக் கோபிக்கின்ற இந்தக் கிரீடராமன் அவள் வடிவுற்ற வேல்களை எறிவதுபோல, விழிகளை என்மீது மோதிக்கொண்டே யிருப்பதால், என்னுயிர் வருந்துவதைக் காண்கிறானில்லை.]


சிறிது நேரத்திற்குப் பிறகு சித்தரஞ்ஜனன் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான். நாங்கள் அப்பால் பறந்து செல்லலாயினோம். போகும் வழியெல்லாம் நிலவுக்கதிர் செய்யும் மெல்லிய இசையும், மாடங்கள்தோறும் கந்தர்வ யுவதிகளும், வாலிபர்களும், குழந்தைகளும், பெரியோரும் ஆயிரவிதமான போகங்களிலே பொழுது கழிக்கும் காட்சியும் அற்புதமாயிருந்தன. பூலோகத்திலிருக்கும்போது நான் போகங்களில் இத்தனைவித முண்டென்பதைப் பிரதிபா சக்தியினால் கூடக் கண்டிருந்ததில்லை. கொஞ்சதூரம் போனவுடனே. பர்வதகுமாரி "அதோ, பார்!" என்று காட்டினாள்.


"அஹஹா! அஹஹா! அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.


அதிவிசாலமான மாடம் காணப்பட்டது. அதில் ஐம்பதினாயிரம் பேருக்குமேல் இருப்பார்கள் என்று தோன்றிற்று, பெரிய கூட்டம். ஆனால், பூலோகத்திலுள்ள கூட்டங்களைப் போல், ஒருவருக்கொருவர் நெருக்கி மேலே விழுந்து தள்ளி, கையால் ஒதுக்கி காலால் மிதித்து முகங்களைச் சுழித்துக் கொண்டு வெயர்த்து வெந்து போயிருக்கவில்லை. அந்த கந்தர்வக் கூட்டத்தார் வளைய வளைய அங்குமிங்கும் சலித்துக் கொண்டிருந்த போதிலும் ஒருவருக்கொருவர் சிறிதேனும் தொந்தரை செய்யாமல் விரிவான இடம் விட்டு முக மலர்ச்சியுடன் நுழைந்து கொண்டிருந்தனர். எதிரே பெண்கள் வந்து விலக இடமில்லாமற் போனால் உடனே இறகு விரித்து மேலே எழும்பி அந்த பெண்கள் போனபிறகு இறங்கிக் கொள்வார்கள். இத்தனை பெரிய கூட்டம் இத்தனை அழகாய் இருந்ததைப் பார்த்து எனக்குண்டான வியப்பு கொஞ்சமில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் தழுவிக்கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதும், சில சமயங்கள் மிக வணக்கத்துடன் தலை சாய்த்து செல்வதும், சிரித்துப் பேசுவதும் - என்ன அன்பு! என்ன மரியாதை! என்னால் வருணிக்குந்தரமன்று.


"பர்வதகுமாரி, அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.


"மாட நிலத்தினிடையே ஒரு மண்டபந் தெரிகிறது பார்."


"ஆம்."


"அங்கே கிளி வாகனத்தின்மீது என்ன வைத்திருக்கிறது?"


"மன்மத விக்கிரகம்."


"அவருடைய திருவிழா" என்றாள்.


அந்த மன்மத விக்கிரகத்தைக் கண்டவுடனே நான் சிலையாகி விட்டேன். "குமாரி, இது யாரால் செய்யப்பட்ட சிலை?" என்றேன்.


"எங்கள் நாட்டுச் சிற்பிகளால்" என்றனள். எனக்குத் திடீரென்று பாரத நாட்டிலே சிலைத்தொழில் இப்போது சீர்குன்றி நாசமடைந்து போயிருக்கும் விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.


"அடடா! கந்தர்வ நாட்டிற்கு வந்தும் அந்தக் கஷ்ட தேசத்தினுடைய ஞாபகம் மறக்கவில்லை" என்று வாய்விட்டுக் கூறினேன்.


"உனது ரூபம் சிறிது காலத்திற்கு கந்தர்வ ரூபமாக மாறியிருந்த போதிலும், ஜன்மம் மாறவில்லை என்பதை அறி" என்றாள் குமாரி.


"அது போகட்டும், இப்படிப் சிலைகள் உங்கள் நாட்டிலே அதிகமாக உண்டோ?" என்றேன்.


"நாளைக்கு உன்னை அமிர்த அருவிக்கு அருகேயுள்ள சித்திரசாலைக்கு அழைத்துச் செல்லுகிறேன். அப்போது எல்லாம் பார்க்கலாம்" என்றனள்.


இப்படிக் குமாரியுடன் பேசிக்கொண்டிருந்த நேரமெல்லாம் எனது விழிகள் கீழே தோன்றிய மன்மத விக்கிரகத்தினின்றும் அகலவில்லை.


"உங்கள் நாட்டுச் சிற்பிகளுக்கு இத்தனை சிற்பத் திறமை இருந்தபோதிலும் உடம்பு அற்று போன மன்மதனுக்கு உருவம் ஏற்படுத்தலாகாது என்பது தெரியவில்லை. இஃதோர் விந்தையே" என்றேன்.


"சபாஷ்! மனித நாட்டிலிருந்து வந்து, கந்தர்வத் தொழிலுக்குப் பிழை கூறத் தொடங்கிவிட்டாய்! எங்கள் நாட்டுக்குள்ளே இதைப்போன்ற பெருமைகொண்ட சிலை வேறே கிடையாது. கொஞ்சம் உற்றுப் பார். எவ்வளவு உற்றுப் பார்த்தபோதிலும் உனக்கு இந்த சிலை பற்றிய உண்மை சொன்னாலொழியத் தெரியாது."


அந்தப் சிலை மண்ணாலேனும் பளிங்காலேனும் செய்யப்பட்டதன்று. மனோமய மாகிய நுண்வான் (ஸூக்ஷ்ம ஆகாசம்) கொண்டு செய்யப்பட்டது. மனதிலே பிறந்த காமதேவனுடைய உண்மை உருவம் இதுவே. இதைச் செய்த மயனை நாங்கள் த்விதீயப் பிரம்மா (இரண்டாம் பிரம்மா) என்று சொல்வதுண்டு. பிரம்மாவால் செய்யப்பட்ட காமதேவன் உயிர்களுக்குள் கலந்து இருக்கிறான். இப் பதுமைக்கு உண்மையுயிர் இல்லாவிடினும் கலையுயிர் (சைத்திரிக ஜீவன்) கொடுக்கப்பட்டிருக்கின்றது" என்றாள்.


ஒவ்வொரு காட்சியைப் பற்றி எழுதும்பொழுதும், 'வியப்புற்றேன்', 'வியப்புற்றேன்' என்று ஒரே வண்ணமாக மீண்டும் மீண்டும் சொல்லி எனக்கு அலுத்துப் போய்விட்டது. கந்தர்வ நாடே வியப்பு நாடு. (தொடரும்)


பாரதியார்

தென்றல் இதழ் 28

1 கருத்துகள்

  1. படிக்க படிக்க இந்த ஞானரதம் மீது வியப்பும் ஆர்வமும் தோன்றுகிறது. இஃது ஒரு வியப்பான நூல்...

    பதிலளிநீக்கு
புதியது பழையவை