அண்மை

அரசு அலுவலர்களும் லஞ்ச பணமும்

 


பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்குபவன் பத்து இட்லி சாப்பிடுகிறான்

என்றால், ஒரு லட்சம் மாத சம்பளம் வாங்குபவன் எத்தனை இட்லி சாப்பிடுவான்?


இப்படி ஒரு கேள்வி தேர்வாணையத்தில் கேட்டால் என்ன பதில் எழுதுவீர்கள்?


நேர்விகிதம், எதிர்விகிதம் பார்முலா படி பார்த்தால் நூறு இட்லி சாப்பிட வேண்டும்.

இந்த பதில் சரியா? உண்மையில் ஒரு லட்சம் சம்பாதிப்பவனால் ஐந்து இட்லி கூட சாப்பிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் சாப்பிடக் கூடாது.


ஏனென்றால் அவனுக்கு சுகர்(நீரிழிவு) இருக்கும். சுகர் இருக்கிறதோ இல்லையோ

சுகர் டெஸ்ட் எடுத்திருப்பார். டாக்டர் சுகர் உள்ளது என்று மருந்து மாத்திரை கொடுத்து இருப்பார். ஆயுள் முழுவதும் டாக்டருக்கு பிழைப்பு ஓடும்.

அன்றாடம் கூலி வேலை செய்பவன் கூட சம்பாதித்ததை செலவு செய்து நிம்மதியாக தூங்கிவிடுவான். பணம் உள்ளவனால் அப்படி தூங்க முடியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முத்து படத்தில் சாமியாரான ரஜினியிடம் ஒரு தொழில் அதிபர் கேட்பார்

"சாமி! என்னிடம் வேண்டிய பணம் இருக்கு. நிம்மதி இல்லை. நிம்மதி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்பார்.


சாமியார் சிரித்துக் கொண்டே "பணமும் வேணுங்கிறே. நிம்மதியும் வேணுங்கிறே. இரண்டும் எப்படிப்பா ஒரே இடத்தில் கிடைக்கும்?" என்பார். பணம் சேர்ந்து விட்டால் நிம்மதி இருக்காது.


ஒரு கதை சொல்வார்கள். ஒரு ராஜா மந்திரியை கூப்பிட்டு நாட்டு மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்களா என பார்த்து வர சொன்னார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளை சொல்லி தாங்கள் நிம்மதியாக இல்லை என்று கூறினார்கள்.

ஆனால் ஒருவன் மட்டும் தான் நிம்மதியாக இருப்பதாக கூறினான். அவன் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்கிறான் என்று ராஜா கேட்டார். அதற்கு அமைச்சர் அவனிடம் எதுவும் இல்லை அதனால் அவன் நிம்மதியாக இருக்கிறான் என்றார்.

"அதை எப்படி நான் நம்புவது" என்றார் ராஜா. நிம்மதியாக இருக்கும் அவனை பாராட்டி இருபது பொற்காசுகள் கொடுங்கள் என்றார் மந்திரி. அப்படியே செய்தார் ராஜா. பொற்காசுகளை வாங்கி சென்றவன், அதை பானையில் போட்டு பத்திரமாக பாதுகாத்தான். வெளியே சென்று எட்டி எட்டி பார்ப்பான், யாராவது திருடர்கள் வந்து விடுவார்களோ என்று பயம். அடிக்கடி இருபது காசுகளும் இருக்கிறதா என எண்ணி எண்ணி பார்ப்பான். தூக்கமும் போய்விட்டது.

அமைச்சர் ஒரு ஒற்றனை அனுப்பி அவன் உறங்கும் நேரத்தில் இருபது காசில் இரண்டை எடுத்து வரச் சொல்லி விட்டார்.


அடுத்த நாள் எண்ணி பார்த்தவன், இரண்டு பொற்காசு குறைந்தவுடன் அரண்மனைக்கு ஓடி வந்தான்."அரசே! நாடு முழுவதும் திருடர்கள் கொட்டம் அதிகமாகிவிட்டது. நாடே நிம்மதி இழந்து தவிக்கிறது நானும் நிம்மதி இழந்து தவிக்கிறேன்" என்றான். பணம் படுத்தும் பாட்டை என்னி சிரித்தார் ராஜா.


பணத்தை சேர்த்து விட்டால் அந்த பணத்தை பாதுகாப்பதிலேயே பாதி நேரம் போய்விடும். நேர் வழியில் சேர்த்தவனுக்கே இந்த நிலை என்றால், குறுக்கு வழியில் சேர்த்தவனுக்கு...?


அரசு வேலை பார்க்கும் அரசு அலுவர்களுக்கு இருபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை அரசு ஊதியமாக கொடுக்கிறது. ஆனால் பத்திரப்பதிவு துறையிலோ, வட்டார போக்கு வரத்து துறையிலோ, வட்ட வழங்கல் துறையிலோ, வருவாய் துறையிலோ, பொதுப்பணித் துறையிலோ, நகராட்சியிலோ, மின்சார வாரியத்திலோ, எங்கு போனாலும் ஐநூறு ஆயிரம் இல்லாமல் ஒரு ஏழை ஒரு காரியத்தை கூட சாதிக்க முடியாது.


தேர்வாணையம் தேர்வு நடத்தித்தான் இவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் 70% பேர் ஊழலில் ஊறி திளைக்கிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளம் வருவது கூட தெரியாத அளவுக்கு தினசரி வருமானம் கொட்டுகிறது.

முதியோர் உதவி கோரும் முதியோர் கூட பத்து முறை அலைந்து இரண்டாயிரம் செலவழித்தால்தான் நினைத்தது நடக்கும்.


திருமண உதவித் தொகை, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், பசுமை வீடுகள் திட்டம், கழிப்பறை திட்டம், கலப்பு மண உதவித்திட்டம், விதவை மறுமண திட்டம் அனைத்துக்கும் காசு இல்லை என்றால் கதை நடக்காது.

இப்படி பணத்தை குவித்து என்ன செய்ய போகிறார்கள்?

இந்த வருடம் நடந்த இரண்டு மூன்று சம்பவங்களை சொல்கிறேன்.


முன்னால் மாசுகட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடாசலம் இந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் வனத்துறை அதிகாரியாக பணிசெய்து ஓய்வு பெற்று தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும் பணிக்கு வந்தவர்.


அவர் மீது குற்றச்சாட்டுகள் வரவே லஞ்ச ஒழிப்பு பிரிவு சோதனை நடத்தியது. இரண்டு ஆண்டில் அவர் கொள்ளையடித்த 11 கிலோ தங்கம், 4 கோடிக்கு சொத்து பத்திரம், வைர நகைகள், சந்தனக் கட்டைகள் என 7 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன.


ஒரு IFS அதிகாரி இப்படி ஈனத்தனமாக நடந்து கொண்டதால் உறவினர்கள் மத்தியில் தலைகாட்ட முடியவில்லை. பணத்தை பணத்தால் அடித்து தப்பிக்க பார்த்தார். முடியவில்லை. விசாரனை இறுகி உள்ளே தள்ளும் நிலை வந்ததும் தூக்கில் தொடங்கினார். 7 கோடி சேர்த்து என்ன பயன் அதை அனுபவிக்க முடிந்ததா? அவமானம் தான் மிச்சம்.


இதுபோல வேலூர் கோட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்பக்கல்லூரி கோட்ட செயற்பொறியாளர் ஷோபனா, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கி அவர் வீட்டை சோதனையிட்ட போது அவரது படுக்கையறையில் மட்டுமே இரண்டு கோடிக்கு ஐநூறு ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சென்ற வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் ஒரு கோடியே என்பது லட்சம்  கொடுக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது. அந்தக்கிளையின்

செயலாளர், மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அரசு நகைக்கடன் தள்ளுபடி செய்யும்போது, அப்படியே எல்லா தொகையையும் போட்டுத்தள்ளலாம் என இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இரண்டு நாள் முன்பு கூட, ஐம்பது சதவிகித மானிய விலையில் விற்க வேண்டிய விதை உளுந்தை வியாபாரிகளிடம் விற்று ஒரே நாளில் 23 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளார்கள் அரசுத்துறை அலுவர்கள்.


உழுதுண்டு வாழும் உழவரை தொழுதுண்டு

வாழ வேண்டும் என்றார் வள்ளுவர்.


நேரம் காலம் பார்க்காமல், வெயில் மழை பார்க்காமல் பூச்சி விலங்குகளிடம் இருந்து நெல்லை விளைய வைத்து விற்பதற்கு சென்டருக்கே போனால் மூட்டைக்கு நாற்பது ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது. இது சம்பந்தப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வந்த போது இதற்கு அந்த அரசு அலுவலர்கள் பிச்சை எடுத்தே சாப்பிடலாம் என கருத்து தெரிவித்தார்கள் நீதிபதிகள், கிருபாகரனும் புகழேந்தியும்.


ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்களே எப்படி?

ஒரு சாலை போடுவதாக இருநூறு முன்னூறு கோடி ஓதுக்குவார்கள். டென்டர் விட்டது போலவும் டென்டர் எடுத்தது போலவும் சாலை போட்டது போலவும் கணக்கு எழுதுவார்கள். அப்படியே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பர்சன்டேஜ் போட்டு சுருட்டிக் கொள்வார்கள். இது போல் எல்லா துறையிலும் நடக்கும்.


பத்து அறை கொண்ட பத்துமாடி கட்டினாலும் படுக்கப்போவது ஒரு அறையில்தான். நூறு கோடிக்கு சொத்து வாங்கி போட்டாலும் உன் உயிர் இருக்கும் வரைதான் அது உனக்கு சொந்தம்.


ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி ஒரு லட்சம் கோடி சேர்த்தாலும் உயிர் போன பிறகு

பாவிகள் ஆகிவிட்டதே அந்த பணம்.


அதனால் தான் பகவத்கீதை சொல்லுகிறது.

உணக்கென்று எதுவும் இல்லை. இன்று உன்னுடையது. நாளை வேறு ஒருவரை அடைகிறது. கோடானு கோடி வருடங்கள் கொண்ட பூமியில் நீ இருபதாயிரம் நாட்கள் தங்கி செல்லும் ஒரு பயணிதான்.


சதுர அடி 100 ரூபாயிலும் இந்தியாவில் நிலம் இருக்கிறது. சதுர அடி ஒரு லட்ச ரூபாயிலும் நிலம் இருக்கிறது.


ஐம்பது லட்சம் செலவு செய்து வீட்டை கட்டியவனுக்கு கிடைக்காத வாழ்க்கை அந்த வீட்டுக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வந்தவனுக்கு கிடைத்துவிடுகிறது.

மதுரை ஒத்தககடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் சரவணன்

"நான் கையூட்டு வாங்க மாட்டேன்" என அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.


லஞ்சம் வாங்காதது அவருக்கு பெருமைதான். ஆயிரக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே ஒரு குருக்கள் வரார் என்பது போல ஓரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்பது நமக்கு பெருமையா?


அப்துல் கலாம் அவர்கள் 2014ஆம் ஆண்டு தாம்பரம் காஞ்சி மகாஸ்வாமிகள் வித்யா மந்திரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒரு சிறுவன் ஊழலை ஒழிக்க முடியாதா? என்று கேட்டான். 


அதற்கு அப்துல் கலாம்,

"இப்போது ஊழல் செய்பவர்கள் அதில் மூழ்கி திளைத்து விட்டார்கள். அவர்களை திருத்த முடியாது. ஆனால் உங்களை போன்ற கேள்வி கேட்கும் குழந்தைகள் நினைத்தால் அதை  இருபது ஆண்டுகளில் ஒழிக்கலாம். நான் இது வரை 15 மில்லியன் குழந்தைகளிடம் இந்த கருத்தை விதைத்து இருக்கிறேன். ஊழல் பணத்தில் ஒரு பொருள் வாங்கி கொடுத்தால் அது அப்பா ஆனாலும் அம்மா ஆனாலும் வாங்ககூடாது" என்றார்.


நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது சாதி சான்றிதழ் என்பது ஒவ்வொரு முறையும் வாங்க வேண்டும். கிராம பட்டா மணியாரிடம் ஒரு சான்று வாங்க வேண்டும். அதற்கு அவர்கள் காசு கேட்க மாட்டார்கள். அதன் பிறகு கீழ்வேளூர் வருவாய் அதிகாரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும். பின்பு தாசில்தாரிடம் அதை கொடுக்க வேண்டும். இரண்டு இடத்திலும் காசு உண்டு. கீழ்வேளூர் ஆர்.ஐ கேட்ட காசு கொடுக்க முடியாமல் 13 கி.மீ சைக்கிளில் வந்து வீட்டில் பணம் வாங்கிகொண்டு திரும்ப 13 கி.மீ சென்று கையெழுத்து வாங்கிய அனுபவம் எல்லாம் எனக்கு உண்டு. தாசில்தார் ஆபிஸில் ஒரு நாள் காத்துகிடந்து அந்த சான்றை வாங்க வேண்டும்.

ஒரு சாதாரண மனிதன் தன் வீட்டையோ, நிலத்தையோ வைத்து ஒரு வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தால்,

அவர்கள் விஏஓ-விடம் ரென்டல் வேல்யூ சர்டிபிகேட் வாங்க சொல்வார்கள். அவர் எழுதி கொடுப்பது என்னவோ நாலு வரிதான். சிவாஜி படத்தில் பிராஜக்ட் வேல்யூ என்ன என்று கேட்பார்களே அது போல 20000 லோன் என்றால் கட்டணம் 200 ரூபாய். இரண்டு லட்சம்  லோன் என்றால் 2000 ருபாய்.

சொத்துக்கு வில்லங்க சர்டிபிகேட் என வாங்க சொல்வார்கள் அதுவும் காசு இல்லாமல் வாங்க முடியாது. பிறப்பு சான்றிதழுக்கு கொடுக்க தொடங்கும் லஞ்சம் இறப்பு சான்றிதழுக்கு கொடுப்பதொடு முடிவடைகிறது.

ஒருவர் திருமண உதவி கோரி விண்ணப்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இரண்டாயிரம் வாங்கி கொண்டு அந்த செக்கை கொடுத்தால் அதோடு அந்த பிரச்சனை முடிந்துவிடுகிறது. அதே வேளை அந்த செக்கை எந்த லஞ்ச பணமும் வாங்காமல் அந்த அதிகாரி கொடுத்தால் அவள் அவரை எந்தக் காலமும் மறக்கமாட்டாள்.


அரசின் உதவியை பெற்று கொடுத்த புண்ணியமும் அவரை சேரும். ஏழை மக்களுக்கு உதவிகள் கிடைக்க உதவுவதால் இறைவனின் அன்பை பெற முடியும். தலைக்கு வரும் துன்பம் தலை பாகையோடு போய்விடும்.

தலைவிரித்தாடும் லஞ்சம் ஒழிய....

சாதி சான்றிதழ் வருமானசான்றிதழ்,

இருப்பிட சான்றிதழ் போன்று எல்லா சான்றிதழையும் ஆன்லைனில் கொண்டு வர வேண்டும். இதனால் ஊழல் குறைகிறது. வாகன பதிவு பத்திர பதிவு அனைத்தும் ஆன்லைனுக்கு மாற வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி புகார் செய்ய தனி வெப்சைட் மற்றும் பெரிய அளவில் செல் எண் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இரண்டு மூன்று முறை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.


ஓவ்வொரு வருடமும் ஜனவரி 1 ஆம் தேதி அரசு அலுவலர்களின் சொத்துக்கணக்கை கேட்டு வாங்க வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக இருந்தால்

உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ளவர்களை பற்றி புகார் செய்ய தனி துறையும் தனி அலுவலகமும் திறக்க வேண்டும். டென்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டும். அரசியல்வாதிகள் கைக்கு செல்லாமல் தடுக்க வேண்டும்.காண்ட்ராக்ட் விபரங்களை வேலை நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும். பத்து இளைஞர்களை ஒவ்வொரு பணியையும்

கண்கானிக்க நியமிக்க வேண்டும். முதலமைச்சரும் அவரை சுற்றி உள்ள நூறு அதிகாரிகளும் நேர்மையானவர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதால் பொது மக்கள் தைரியமாக தவறு நடந்தால் புகார் செய்ய வேண்டும். 


ரஜினி சொன்னது போல மீன்குழம்பு வைத்த சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்க முடியாது. தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்துக்கு வரவேண்டுமானால் அடிப்படையிலையே மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 29

2 கருத்துகள்

  1. மாநில தன்னாட்சி அறிவித்துவிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடிமக்களாட்சிமுறை நடத்தப்படவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சரியில்லை என்றால் மக்களே அவர்களை பதவிநீக்கம் செய்யும் முறையும் நடைமுறைபடுத்தவேண்டும்.

    எந்த அரசு அலுவலகத்துக்குள்ளும் பணம்/ATM card /செல்போன் முதலியன கொண்டு போகவே தடை என சட்டம் போடவேண்டும்.

    சாதரணமாக குடிமகனுக்கு தேவைப்படும் அத்தனைவிதமான அடையாள அட்டைகளையும் முடிந்தவரை பள்ளி/கல்லூரிகளிலேயே அவர்கள் பெற்றுவிடுகிறதுபோல செய்ய வேண்டும். அந்த அட்டைகள் இணையத்தில் எப்போதுவேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும்.


    எதற்கெடுத்தாலும் பத்து பதினைந்து அடையாள அட்டை கேட்பதைவிடுத்து ஓரிரு ஆவணங்களிலேயே தேவையான விண்ணப்பம் ஏற்கப்படவேண்டும்.

    எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் தனக்கான உரியவேலை நடக்காமல் காலதாமதமானால் உடனடியாக புகாரளிக்க (ரயிலில் இருப்பதுபோல )அபாயசங்கிலி முறை இருக்கவேண்டும். சம்மந்தபட்ட துறை உயரதிகாரி நேரில் வந்து அலுவலக ரெய்டு நடத்தியாக வேண்டும்.

    நிறைய மக்களுக்கு தான் கொடுக்க வரும் விண்ணப்பம்/மனு மற்றும் அதற்கான உரிய நடைமுறைகுறித்து கூட போதிய தெளிவு இல்லை. நியாயமாக முதலில் எல்லா அலுவலகத்திலும் உள்நுழையும் ஒவ்வொரு மக்களையும் விசாரித்து விவரம்அளித்து வழிகாட்டுவதற்கென்றே ஒரு தனி அலுவலரை நியமிக்கனும்.


    இன்னும் எத்தனை செய்தாலுமே... ஒன்றை நினைவில் கொள்ளனும்

    எள்ளை விதைத்து விட்டு நெல்லை எதிர்பார்க்க முடியாது.. என்பதாக,,

    அதிகரிகள் யாரும் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகவில்லை..
    நம்மிலிருந்து வருவோர் தான்.

    அவ்வகையில் பார்த்தால் அப்துல்கலாம் சொன்னதுபோல இளைஞர்கள் இதயத்திலேயே நல்லதை விதைத்தால்தான் அது நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்தையும் கட்டுரையோடு இணைத்து விடலாம் என தோன்றுகிறது.

      நீக்கு
புதியது பழையவை