நாளைய இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்றார் ஐயா அப்துல் கலாம், நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவையே மாற்றுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு இளைஞனாக என்பார்வையிலிருந்து சொல்கிறேன், ஐயா அப்துல் கலாம் சொன்னதையும் சுவாமி விவேகானந்தர் சொன்னதையும் நாசம் செய்வதற்கென்றே இன்றைய இளைஞன் அதிக சிரத்தை எடுத்து வருகிறான் அல்லது பிறந்திருக்கிறான்.
அஸ்தினாபுர அவைதனில் பிதாமகராக இருந்த பீஷ்மர் திருதராஷ்டிரனின் நல்லொழுக்கமில்லா நூறு புதல்வர்களை கண்டு, 'இந்த தேசத்தின் வருங்காலம் என்ன ஆகப்போகிறதோ…' என வருந்தியது போலவே தான் நானும் வருந்துகிறேன்.
நாட்டில் ஒழுக்கமே உருவான இளைஞர்கள் இருப்பார்களேயானால், புகை பிடிக்கும் காட்சிக்கு விசில் அடித்து கூச்சல் போடுவார்களா? மது அருந்தும் நடிகனை குருவாக ஏற்பார்களா? இல்லையெனில், ஒருவேளை சோற்றுக்கே அல்லல் படுவோர் இருக்கும் இம்மாதேசத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு கேக் வாங்கி அதை முகத்தில் அடித்து கொண்டு விளையாடத்தான் செய்வார்களா?
ச்சீ… இதெல்லாம் ஒரு கலாச்சாரமா? இதெல்லாம் ஒரு பழக்கமா?
இப்படிபட்ட பழக்கமுள்ளோர் குறைவு தான் என கூறுவோர் சிலர் உண்டு.
மறைக்கப்பட வேண்டிய பொருட்களை மறைத்தே பயன்படுத்தும் குணவான் தன் குணத்தை மறைத்தே வாழ்கிறான்.
உண்மையில் நல் ஒழுக்கம் உள்ள மாணவனுக்கு இது ஒரு சவால்.
சுற்றிலும் அஒழுக்கம் சூழ்ந்திருக்க மத்தியில் ஒரு ஜீவன் தன்னை வெளிகாட்டி கொள்ளாது வாழ்க்கையை கடந்து போகிறது.
அந்த குழுவிடம் இத்தனி ஆள் வாங்கும் பெயர், 'நல்லவன்'
இன்று 'நல்லவன்' என்ற சொல்லுக்கு தமிழகராதி தந்த பொருள் 'ஏமாளி'
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்று ஒரு குறள் உண்டு.
அதாவது உலகத்தாரோடு ஒத்து வாழும் தன்மையை பெறாதவன் எத்தனை கற்றிருந்தாலும் அறிவில்லாதவன் என்றே கருதப்படுவான் என்பது பொருள்.
உலகம் மது வாடையை எப்படி மறைப்பது என்பதையும், புகையினால் எப்படி வளையம் செய்வது என்பதையும் கற்கும் போது அதோடு ஒத்து போகாதவனே அறிவு உள்ளவன் என்பேன் நான்.
மது புகை போன்ற அவலமான கலாச்சாரங்களை தீ நண்பன் மற்றும் ஒழுக்கம் புகட்டாமை என்ற வஸ்துகள் மூலம் அக்னி ஹோமம் நடத்தி வளர்ப்பதே பள்ளி மற்றும் கல்லூரிகள் தான்.
முளையிலேயே கிள்ள வேண்டும் இல்லையேல் திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்.
இரண்டிற்குமே வாய்ப்பற்று போகும் நிலை வந்தால் நாமெல்லாம் உண்மையில் இத்தேசத்தின் வருங்காலம் குறித்து கவலை கொள்ள வேண்டும்.
என் பார்வையினுள் இன்றிந்த விஷயத்தை கொண்டு வந்ததற்கான காரணமும் இந்நாடு அந்நிலையை எட்டி விட்டது என்பதை அனைவரின் கவனத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்று தான்.
சமீபத்தில் இளைஞர்கள் கூடி, 'பாடங்களை ஆன்லைனில் நடத்தினீர்கள் அல்லவா தேர்வையும் ஆன்லைனில் தான் வைக்க வேண்டும்' என்று போராட்டம் செய்தார்கள்.
ஆனால் இத்தகைய நியாயத்தை மனதில் வைத்து போராடிய மாணவர்களை தமிழ்நாட்டிலே விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் இரு கை விரல் போதும்.
மீதி அத்துனை பேரும் எதற்காக வந்து இத்தனை சிரமமெடுத்து போராடினார்கள் என்பதனை, புத்தக வரிகளை அச்சு பிசகாமல் அப்படியே கொண்ட அவர்களது ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் கூட அறியும்.
இதற்கும் முழுமையான பழியை மாணவர்கள் மீதே போட்டுடைக்க முடியாது, கல்லூரிகளில் நடத்தப்படும் சின்ன சின்ன தேர்வுகளையும் ஒழுங்காக நடத்த பட வேண்டிய மாதிரி தேர்வுகளையும் வீட்டிலே உட்கார்ந்து எழுதி எடுத்து வாருங்கள் எனக்கூறும் ஆசிரியர்களே இத்திருட்டு தனத்தை முதலில் அறிமுகப்படுத்தும் துரோணாச்சாரிகள் ஆவர்.
கேக் துண்டுகளை முகத்தினில் பூசி கொள்ளும் பழக்கத்தை யார் உண்டாக்கியது என்பது தெரியவில்லை ஆனால் அதில் பல புதுமைகளை சேர்த்து பிறந்த நாளையே இறந்த நாளாக மாற்றுமளவிற்கு கொண்டு வந்தது நம் இளைய சமுதாயமே
இதற்காக சமீபத்தில் ஒரு விழிப்புணர்வு காணொலி பதிவும் வெளியானது
கத்தியால் ஒருவனை குத்தி கொலை செய்வது போன்று நடித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் உலவவிட்டு அகம் மகிழும் இளைய சமுதாயம் லட்ச கணக்கில் உள்ளது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா...?
பிரபல நடிகர் ஒருவரை ஆரத்தழுவி முத்தமிட வேண்டும் அதனை போட்டோ எடுத்து வீட்டில் தொங்க விட வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்ட இளைய சமுதாயம் ஆட்டு மந்தை போல் பெருகி கொண்டே போகிறது என்பதை உங்களால் ஏற்க முடிகிறதா?
இதெல்லாம் உண்மையென கல்லூரி மாணவர்களின் பழக்கத்தை கொண்டு அறிந்தீர்களேயானால் அதிர்ச்சியடைவீர்கள்.
நான் ஒன்று நிச்சயமாக சொல்வேன். நல்ல தரமான கல்வி இவர்களது மன மயக்கங்களை மாற்ற வல்லது. நாட்டின் ஏற்ற தாழ்வுகளை நீக்க வல்லது. எல்லோரையும் ஒழுக்கமிக்கவராய் உயர்த்த வல்லது.
நாம் அதை சரணடைவோம்.
நம்மை கல்வி உயர்த்தும். நேர்மையான முறையில் தரப்படும் நேர்மையான கல்வி இந்த நாட்டின் தலை எழுத்தை மாற்றும்.
நல் ஒழுக்கமிக்க சமுதாயத்தை உருவாக்க எண்ணும் ஆசிரியோர்களும் பெற்றோர்களும் இதற்கு துணை புரிவர்.
இளைஞர்கள் பலரால் இந்த நாடு இப்போது நாசமாகிக் கொண்டு இருந்தாலும். இனி அந்நிலைக்கு செல்லக்கூடியபடி விட்டுவிட கூடாது.
விட மாட்டோம், விட மாட்டேன்.
தீசன்
தலையங்கங்களின் தலையங்கம்..!
பதிலளிநீக்குவிவேகானந்தர் மனதில் இருத்தி கேட்ட அந்த நூற்றில் ஒருவன் முளைத்து விட்டான்.
தலைப்பை நேர்மறையாக வைத்து இருக்கலாம்.
பதிலளிநீக்கு