கீதை யாரால் சொல்லப்பட்டிருக்கும் எனும் ஆராய்ச்சி பல நூற்றாண்டுகளாக தொடரத்தான் செய்கிறது.
விஞ்ஞான ரீதியிலும் மெய்ஞான ரீதியிலும் அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்துமே சத்தியமாகும்.
மேற்படி கண்ணனையும் அர்ஜூனனையும் பற்றி ஆராய்வதில் அதிக சிரத்தை எடுப்பது வீணே.
ஆனை எறும்பு கதையை கொண்டு வாழ்க்கை தத்துவத்தை சொல்வதில்லையா?
தேவையானது தத்துவம். கண்ணனே இதை சொல்லி இருப்பாரேயானால் சந்தோஷம்.
சமீபத்தில் கீதையை காட்சி வடிவத்தில் மகாபாரத தொடரில் கண்டேன். சுமார் ஒன்றரை மணி நேரமாக நீண்ட அந்த சம்பாஷனை கீதையில் கால் பங்கை தாண்டவில்லை.
ஆழ் கடல் நீரை கையால் அள்ள முடியாது தான். அதற்கென்று இத்தனை நீண்ட அறிவுரை அலுப்புதட்டி விடும்.
அன்றைய மறுநாளே 'மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா' பாடலையும் கேட்க நேர்ந்தது.
கண்ணதாசனை விஞ்சும் ஒரு கவிஞர் காசினியில் இல்லை என்றே நினைத்துக் கொண்டேன்.
நான் சலிக்கும் போதெல்லாம் கீதையை படிப்பவன். இருப்பினும் யோகங்களை பற்றி அதிகம் நான் கவனம் நிறுத்துவதில்லை.
அன்று நான் கண்ட தொடரில் அதை அதிகமே சொல்லி இருந்தார்கள். பிறகு கண்ணதாசனின் பாடலை கேட்ட பிறகு வியந்தேபோய் விட்டேன்.
ஒன்றரை மணி நேரமாக மூன்றே மூன்று யோகத்தை சொன்ன தொடர் எங்கே... ஐந்தே நிமிடத்தில் ஒட்டுமொத்த கீதையையும் சொன்ன கண்ணதாசன் எங்கே…
ஆம்.. கண்ணதாசன் 'மரணத்தை எண்ணி' பாடலில் சொன்ன கருத்துக்களே ஒட்டு மொத்த கீதையின் சாரமே ஆகும்.
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் (அர்ஜூன விஷாத யோகம்)
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திருக்கும் (சாங்கிய யோகம்)
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று (கர்ம யோகம்)
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்து தான் தீரும் ஓர் நாள் (ஞான கர்ம சந்யாச யோகம்)
என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் (தியான யோகம்)
கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் (விபூதி யோகம்)
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ (ஞான விஞ்ஞான யோகம்)
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே (பக்தி யோகம்)
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே (சந்நியாச யோகம்)
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான் (தெய்வாஸூர லம்பத் விபாக யோகம்)
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க (மோக்ஷ சந்யாச யோகம்)
இத்துடன் சில யோக கருத்துக்களும் ஆழ்ந்த பொருட்களில் கவிஞரின் வரிகளில் அடங்கியே உள்ளது.
கண்ணுக்கு அருகில் இமை இருந்தும் கண் இமையை காண்பதில்லை என்ற கவிஞரின் இன்மொழி படியே இந்த அரும் பாடல் எந்த படத்தில் இடம்பெற்றது என்பது கூட பலருக்கு தெரியவில்லை.
உங்களுக்காக இந்த பாடலை இங்கு தருகிறேன்
படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
கண்ணனும் கண்ணதாசனும் ஜீவிதமாக இப்பாடல் வரிகளில் ஒன்றாகிப் போனார்கள்.
பாரதியாரும் கீதைக்கு விளக்க உரை எழுதியுள்ளார். கண்ணதாசனும் கீதைக்கு விளக்க உரை தந்துள்ளார்.
ஆனால் பாருங்களேன் பாரதியார் பேரன் தன் தோள் பையில் கண்ணதாசனின் பகவத்கீதையையே வைத்துள்ளாராம்.
ஈசதாசன்