இரவு நேரம், ரேணுகா வாசல் வராண்டாவில் புத்தகத்தின் பக்கங்களை புரட்டிய படியே சோக முகத்துடன் அமர்ந்திருந்தாள். அவளை பார்த்த படியே சென்ற அவள் தாய் ஜனகம் 'அப்படி அந்த புத்தகத்திலும் என்ன சோக கதை இருக்கிறதோ?' என்று நினைத்து கொண்டு தன் வீட்டில் இருந்து எதிரே இருக்கும் மீனாட்சி வீட்டுக்குள் புகுந்தாள். மீனாட்சியின் முகத்திலும் சோக கலை வெளிப்படுவதை கண்ட ஜனகம் மேலும் உள்ளே செல்ல, தொலைக்காட்சி பெட்டியில் குடும்ப சீரியல் ஒன்றில் குமிறி அழும் காட்சி ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருந்தது.
"மீனாட்சியம்மா…"
"வாங்கம்மா… உட்காருங்க"
"என்ன ஓரே அழுகாச்சியா இருக்குது?"
"அது ஒன்னுமில்ல, இதோ இந்த புள்ள இருக்காளே அவ ஒருத்தன காதலிச்சா, அவென் இந்த புள்ளய ஏமாத்திட்டு போயிட்டான். அந்த பய ஒரு மாதிரியான ஆளு, அவனெல்லாம் வெஞ்சாமரத்த எடுத்து வீசுனாதான் சரிவரும்"
"சரி, கோவபடாதீக, இது சீரியல் தான."
"அதுவும் சரிதான்"
"எங்க செல்விய ஆளே காணல?"
"சமச்சிக்கிட்டு இருக்கா"
"ம்ம்… என் வீட்ல உள்ளது. ஒன்ற மாசம் பித்து புடுச்ச மாதிரியே உக்காந்து கிடக்குது, சரியா சாப்பிடுவதும் இல்ல தூங்குறதும் இல்ல"
"சூட்டிகளான ஆளாச்சே?"
"ஆமா, அன்னக்கி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போயிட்டு வந்ததிலேந்து இப்படியே தான் கிடக்குறா, என்னமோ தெரியல!?" என்று வருத்த வார்த்தையை கூறி ஜனகம் அமைதியானாள். சமையல் அறையில் இருந்து வெளியே வந்த செல்வி "ஆத்தா உப்புமா செஞ்சிட்டேன். நீ துவையல அரச்சிடு"
"செத்த அதையும் செஞ்சிடு கண்ணு"
"போ ஆத்தா… இப்ப மட்டும் கண்ணுனு கூப்புடு அப்பறம் என்னையே வைவ, போ... நீயே செஞ்சிக்க" என்று கூறி ரேணுகாவை பார்க்க அவள் வீட்டை நோக்கி ஓடினாள். மீனாட்சியும், ஜனகமும் மீண்டும் கதை பேச தொடங்கினர்.
வாசலில் புத்தகத்தை கூர்ந்து பார்த்தபடியே அமர்ந்திருந்த ரேணுகாவை நோக்கி "என்ன புள்ள?, என்ன படிச்சிக்கிட்டுகிடக்குறவ?" என்று செல்வி கேள்வி எழுப்பினாள்.
ரேணுகாவின் முகம் மெல்ல மேலேழுந்து செல்வியை நோக்கியது. அவள் கவலை தொய்ந்த முகத்தை பார்த்த செல்விக்கு அந்நோடியே அவள் கவலை குறித்த வரலாறு, பலிச்சென நினைவில் வந்து சென்றது.
முன்பொரு நாள்…
அன்று காலை பத்து மணி, ரேணுகாவும் செல்வியும் கல்லூரிக்கு ஒன்றாகவே விடுமுறை போட்டுவிட்டு திருபரங்குன்றம் கோயிலுக்கு செல்வதற்க்காக இருவரும் பேருந்தில் ஏறினர். பயண முடிவில் கோவிலை அடைந்த அவர்கள், கோயிலின் உள்ளே சென்று மணக்கோலத்தில் இருந்த முருகனை மனம் உருக வேண்டி கோயிலின் உள்ளே அமர்ந்து யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நேரம் செல்ல செல்ல, ரேணுகாவிற்கு கவலை அதிகரித்து ஆனால் செல்வி எதையோ சிந்தனை செய்தபடியே சாதாரணமாக அமர்ந்திருந்தாள்.
"இன்னக்கி குறி சொல்ற குறத்திங்களாம் இங்க வாராங்களாம்!"
"என்ன சமாச்சாரம்?"
"அது ஒன்னுமில்ல அவுக இங்குட்டு வந்து சாமிய கும்பிட்டுட்டு பக்கத்துல இருக்குற ஊர் ஊரா போய் குறி சொல்லுவாங்களாம்! இப்புடித்தான் போன வருசம் பழனில பண்ணாக!"
"நிறைய பேரு வருவாக போலயே!?"
"ஆமா…" என்றபடி இருவர் பேசிக்கொண்டது செல்வியின் காதில் விழ. செல்வியும் அதை குறித்து சிந்திக்க தொடங்கினாள்.
மூத்த வயதுடைய குறி கூறும் பெண்களும் சற்றே இளவயதுடையோரும் கோயிலின் உள்ளே செல்ல தொடங்கினர்.
தன் காதலி ரேணுகாவை பார்க்க வந்த குமரன் தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கோயிலின் உள்ளே செல்ல முற்பட்டான். அப்போது ஒரு வயதான மூதாட்டியின் மீது பைக் ஒன்று மோதி நிற்காமல் சென்றது. உடனே அங்கு கூட்டம் சூழ்ந்தது. மூதாட்டிக்கு கைகள் சிராய்த்து ரத்தம் வடிந்தது. கால்களில் பலத்த அடி. மயக்க நிலையில் அந்த மூதாட்டி கிடந்தாள். உடனே அவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து, ஒர் கூறிப்பிட்ட தொகையை அவரிடம் தந்து விட்டு மீண்டும் கோயிலை நோக்கி கிளம்பினான்.
கோயிலின் உள்ளே இருந்த ரேணுகாவும் செல்வியும் நேரம் ஆனதால் மீண்டும் பேருந்தில் ஏறி தன் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
கோயிலுக்கு வந்த குமரன் ரேணுகாவை தேடி பார்த்து பின் ஏமாற்றம் அடைந்தான். விமானப்பயணத்துக்கு நேரம் ஆனதால் அங்கிருந்து புறப்பட்டான்.
அன்றிலிருந்து இன்று வரை காதலனை காண முடியாத வருத்தத்தினால் ரேணுகா உள்ளத்தோடு சேர்த்து உடலையும் கவலையடைய செய்தாள்.
அதனால் அவள் சோகத்துடனே இருந்து வந்தாள்.
"இந்தா புள்ள, அதான் அவரு வெளிநாடு போயிட்டு இரண்டு வருசம் கழிச்சி வந்துடுறாகனு சொன்னாங்கள்ல?"
"ஆனா அவுக கடைசியா என்ன கோயிலுக்கு வரச்சொல்லிப்புட்டு, ஏமாத்திட்டு போய்டாக" என்று அழத்தொடங்கினாள்.
"ஏ அழாத புள்ள, அன்னக்கி சாயுங்காலமே பிளைட்க்கு புறப்படுனும்ல அதான் ஏதோ சோலினு கிளம்பிருப்பாக, தயிரியமா இரு புள்ள நீயி" என்று செல்வி ஆறுதல் தேற்றும் போதே, மீனாட்சி வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு வந்தாள் ஜனகம். வெளியில் அமர்ந்த இருவரையும் பார்த்து விட்டு உள்ளே சென்றாள். செல்வியும் ரேணுகாவின் விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டில் புகுந்தாள்.
சில நாட்கள் சென்றன…
ஞாயிறு என்பதால் அன்று கல்லூரி விடுமுறை. ரேணுகாவின் வீட்டிலே செல்வியும் இருந்தாள். அப்போது ஒர் மூதாட்டி "தாயி… குறிசொல்றேன் தாயி… குறிசொல்றேன்" என்று சத்தம் எழுப்பினாள்.
வெளியே வந்து பார்த்த ஜனகம். சற்று சிந்தித்துப் பின் உள்ளே இருந்த ரேணுகாவை அழைத்தார்.
அந்த குறி கூறும் மூதாட்டியை வராண்டாவில் அமர செய்தாள்.
"யாருக்கு தாயி பாக்கனும்?"
"இவளுக்குத் தான்" என்று ரேணுகாவை சுட்ட, அவள் மூதாட்டியின் எதிரே அமர்ந்தாள். அவள் அருகிலேயே செல்வியும் அமர்ந்தாள்.
'எதிர் வீட்டில் என்ன நடக்கிறது?' என்று நோட்டமிட மீனாட்சியும் வந்து சேர்ந்தாள்.
ரேணுகாவின் கைரேகையை பார்த்துவிட்டு பின் சோழிகளை கையில் எடுத்தாள்.
"கந்தா, குமரா, என் அப்பா
வந்து குறி சொல்லப்பா
இவள் வினையை தூக்கி செல்லப்பா
பட்டும் படாமல் பதமாக சொல்லப்பா
நாக்கில் நின்று நிலையா சொல்லப்பா"
என்று கூறி கண்களை மூடி சோழிகளை உருட்டிப் பின் கண்திறந்து பார்த்தாள் அந்த மூதாட்டி.
"குறி சொல்ற அப்பத்தா! திரும்ப பாடு அந்த பாட்ட, அந்த குமரன் சொல்லி பாடினியே... அந்த பாட்ட" என்று செல்வி சொன்னதும் அமைதியாக அமர்ந்திருந்த ரேணுகா மூகத்தில் பதட்டத்துடன் செல்வியை நோக்க செல்வி தனது இடது கண் சீமிட்டி ஏதோ சொல்ல வந்தாள்.
"ஏ அதிகப்பிரசங்கி சும்மா கட" என்று மீனாட்சி செல்வியை திட்டினாள்.
மீண்டும் கண்களை மூடிக்கொண்ட மூதாட்டி "இவ, அவன ரொம்ப நாளா பாக்கல, அவன் ஒரு ராஜகுமரன், இவ இல்லைனா அவனும் ஆண்டி தான். அவன் கிட்டத்தான் இவ சேரனும், நல்ல எதிர்காலம் இவளுக்கு இருக்கு! - அவனொட சேந்தா மட்டும்" என்று கூறி எழுந்தாள்.
உடனே ஜனகம் "என்ன அவென் இவனு சொல்ற?, அத தெளிவா சொல்லு?" என்றாள்.
"அதையும் கூடிய சீக்கிரம் அவனே புரிய வைப்பான்" என்று கூறி எழுந்தாள் மூதாட்டி. உள்ளே சென்று ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து வேண்டா வெறுப்பாக அந்த மூதாட்டி கையில் தந்தாள் ஜனகம். ரேணுகாவோ காதலன் குமரனின் நினைப்புடனே வீட்டிற்குள் சென்றாள்.
"உங்க வீட்டுல யாருக்காவது பாக்கனுமா?" என்று மூதாட்டி மீனாட்சியை பார்த்து கேட்க "இல்ல வேண்டாம்… வேண்டாம்" என்றாள் மீனாட்சி.
"சரி தாயி, நான் வரேன்" என்று கூறிய மூதாட்டி செல்வியை பார்த்து வலது கண்ணை சிமிட்டி உதட்டோரம் சிரிப்பை தந்து முக்கால் வாசி கைகளில் ஆறிய காயத்தில் ஈ உட்கார அதை தட்டி விட்டு ஒரு காலை தாங்கி தாங்கி நடந்து சென்றாள்.
ஜனகமும், மீனாட்சியும் அந்த பெண்மணி கூறியதை குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
செல்வியோ, 'நான் குமரனை பாடச்சொல்லி கேட்டதையும், அதை கேட்ட ரேணுகா பதட்டம் அடைந்ததையும் பார்த்த இந்த மூதாட்டிக்கு உள் அர்த்தம் புரிந்து. நம்மை போலவே விஷயத்தை சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறாள்' என்று நினைத்து. ஒரு தோழியை போல அறத்தோடு நின்று காதல் சமாச்சாரத்தை மற்றவருக்கு புரியவைக்க உதவியதை எண்ணி மனதுக்குள் அந்த மூதாட்டிக்கு நன்றி செலுத்தினாள்.
குகன்
குறுந்தொகை 23 செய்யுள்
(குறிஞ்சி - தோழி கூற்று)
அகவன் மகளேஅகவன்மகளே
மனவுக்கோப் பன்னநன்னெடுங்கூந்தல்
அகவன் மகளேபாடுகபாட்டே
இன்னும் பாடுகபாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம்பாடியபாட்டே.
ஆசிரியர் - ஔவையார்
குறுந்தொகை 23 உரை விளக்கம்
கட்டுவிச்சியே! கட்டுவிச்சியே! (குறி சொல்லும் பெண்) சங்கு போல வெண்மை நிறம் கொண்ட நீண்ட கூந்தலை உடைய கட்டுவிச்சியே, பாடு நீ பாடிய பாட்டை இன்னும் பாடு, நீ பாடிய பாட்டை, நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் பற்றிப் பாடிய பாட்டை, மீண்டும் பாடுவாயாக.
முகம் பார்த்து உளவியல் கூறும் அகவன் மகள்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
பதிலளிநீக்குசங்க பாடலோடு
இந்த கதை கச்சிதமாய் பொருந்துகிறது..
குறுந்தொகைக்கு உரை
பதிலளிநீக்குகூறும் சிறுகதை எழுதும்
திறனை வளர்த்துக் கொண்டால் குறுந்தொகை
மூலம் பெருந்தொகை
ஈட்டும் காலமும் வரும்.
வாழக.
😍😍👍
பதிலளிநீக்கு