அண்மை

நல்லதே நடக்கும் | சிறுகதை

 


அரசு மேல்நிலைப் பள்ளி தேவூரில் இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்.

அதில் கலந்து கொள்ளும், பத்தாவது படிக்கும் தனது மகள் விமலாவை அனுப்பி வைக்க காலை 4 மணிக்கே எழுந்து காலை, மதிய உணவை தயார் செய்து கொண்டு இருந்தாள் லட்சுமி.


தேவூர் பதினைந்து கிலோமீட்டர்தான் என்றாலும் இரண்டு பஸ் பிடித்து போக வேண்டும். குளித்து முடித்து டிரெஸ் மாற்றி கொண்டு இருந்தாள் விமலா.

அப்போது "விமலா" என்ற அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது.

ஓடி வந்து பார்த்த போது லட்சுமி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தாள்.


பக்கத்தில்தான் ஆரம்ப சுகாதார நிலையம்.

அந்த கிராமத்தில் ஒரே ஒரு ஆட்டோதான்.

அதில் ஏறி ஆஸ்பத்திரி வந்து விட்டார்கள்.


டாக்டர் சாதாரண சோதனைகளை மேற்கொண்டார்.


"ஓன்றுமில்லை.

காலையில் எழுந்து சாப்பிடாமல் தொடர்ந்து வேலை செய்ததால் பிரஷர் குறைந்து இப்படி ஆகிவிட்டது" என்று கூறி ஒரு ஊசி மட்டும் போட்டார்.


ஓரளவு சகஜ நிலைக்கு வந்து விட்டாள் லட்சுமி.


"விமலா!  உடனே நீ கிளம்பு. எனக்கு இப்போ தேவலை. கார்த்தி சார் உன்னை ரொம்ப எதிர்பார்த்து காத்திருப்பார்" என்றாள்.

விமலா நூறு மீட்டர் ஓட்டம், நானூறு மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டுக்கும் பெயர் கொடுத்து இருந்தாள்.


கார்த்தி சார் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்.

மூன்று வருடங்களாக தற்காலிகமாகத்தான் வேலை செய்கிறார்.


மாவட்ட அளவில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வைத்தால் நிரந்தரம் செய்வதாக மாவட்ட கல்வி அலுவலர் சொல்லி இருந்தார்.


அந்த ஒரு வெற்றிக்காக ஏகப்பட்ட பிள்ளைகளை தயார் செய்து வந்தார் கார்த்தி.


விமலா ஏழாவது படிக்கும்போது விளையாட்டாக அவள் தோழியின் பேனாவை பறித்து கொண்டு ஓட, அவள் துரத்த, மைதானத்தை மூன்று முறை சுற்றியும் விமலாவை பிடிக்க முடியவில்லை.


இதை மாஸ்டர் ரூமில் இருந்து கவனித்த கார்த்தி சார், நூறு மீட்டர் ஓட்டத்திற்கு சரியான ஆள் இவள்தான் என அன்றே முடிவெடுத்து பயிற்சியையும் ஆரம்பித்து விட்டார்.


"நீ மட்டும் நூறு மீட்டரில் வெற்றி பெற்று விட்டால் ஸ்போர்டஸ் கோட்டாவில் போலிஸ் வேலைக்கு போகலாம்" என ஊக்கப்படுத்துவார்.


இந்த முறை விமலாவுக்கு வெற்றி நிச்சயம் என்று நம்பினார்.


விமலா அவசரம் அவசரமாக சாலைக்கு வந்தாள்.

8 மணி பஸ் போய்விட்டது.அடுத்த பஸ் பத்து மணிக்குதான்.

ஒரே ஆட்டோ டவுனுக்கு போய்விட்டது.

"நான் வெற்றி பெற்றால் சாருக்கு வேலை நிரந்தரமாகும். எல்லாம் என்னால் கெட்டுவிட்டதே!" 

அழுகை அழுகையாக வந்தது விமலாவுக்கு.


அதே நேரம் தேவூரில்...


எல்லோரும் வந்து விட்டார்கள். விமலா மட்டும் வரவில்லை.

கார்த்தி சார் கொஞ்சம் பதட்டமானார்.

"நூறு மீட்டருக்கு வேறு ஆள் இல்லை. தொடர் ஓட்டத்துக்கு ஒரு கை குறைந்தாலும் ஒரு ஈவென்ட் போய்விடும்"

பஸ்தான் பிரச்சினை ஆகி இருக்கும்.

திடீரென ஒரு யோசனை.


தனது பழைய பைக்கை பெட்ரோல் போட்டு எடுத்துக்கொண்டு பஸ் போகாத குறுக்கு வழியான பட்டமங்கலம் வழியாக நெடுங்குடி வந்தார்.


வீட்டை நோக்கி சோர்வாக நடந்து வந்த விமலா, சாரின் பைக்கை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.

உடனே புறப்பட்டார்கள்.

இருபது நிமிடத்தில் தேவூர் வந்து விட்டார்கள்.

விமலா தான் கலந்து கொண்ட இரண்டிலும் வெற்றி தேடித் தந்துவிட்டாள்.


மாலை 4 மணி...

பத்து போட்டிகளில் கலந்து கொண்ட கார்த்தி சாரின் பள்ளி ஆறில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.


மாவட்ட கல்வி அலுவலர் கார்த்தியை கட்டி தழுவி பாராட்டினார்.


விமலா ஜெயித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்ற கார்த்தியின் நல்ல எண்ணமும்,

கார்த்தி சாருக்கு வேலை நிரந்தரமாக வேண்டும் என்ற விமலாவின் நல்ல எண்ணமும் இரண்டு பேருக்கும் நல்லதாய் முடிந்தது.


நல்லதை நினைத்தால்

நல்லதே நடக்கும்.


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 27

1 கருத்துகள்

புதியது பழையவை