சாலையில் போகும் ஒரு யாசகன் உங்களை கண்டு நெருங்குகையில் என்ன தோன்றும்?
இவருக்கு பொருள் தானம் தர வேண்டும் அல்லது உணவு தானம் செய்ய வேண்டும்.
இந்நிலை மனதால் எவ்வாறு ஏற்கப்படுகிறது? என்பதை என்னால் மூன்றாக வகைப்படுத்த முடியும்
துக்க நிலை, சாந்தி நிலை, விரக்தி நிலை
துக்கம் கருதி அந்த யாசகனின் மேற்பட்ட வருத்தத்தால் தானம் செய்வது துக்க நிலை.
தானத்தை செய்த பிற்பாடு இனி அவருக்கு கஷ்டம் இல்லை என்றும் தான் புண்ணியம் அடைந்ததாகவும் மன சாந்தி அடைவது சாந்தி நிலை.
பலன் கருதி செய்த போதிலும் தவம் எளிது. தானம் அரிது. சாந்தி நிலை பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் ஓர் நல்ல குணமாகும்.
அடுத்து விரக்தி நிலை. பூ உலகில் ஒருவேளை சோற்றுக்கே வழியற்று சிலர் இருக்கையில் நமக்கு ஏன் இந்த சுவை சோறு? என வருந்தி வருத்தி கொள்வது
பசித்த ஒருவனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
பாரதியாரின் விரக்தியால் எழுந்த வார்த்தையே இது.
எனது தேசத்தில் ஆடையற்று பலர் இருக்கையில் எனக்கெதுக்கு பகட்டாடை என்று காந்தி மாற்றமடைந்தது போல்.
தேடி வரும் யாசகனுக்கு இருந்தும் இல்லையென கூறுவோரை நான் எவ்வகைதனிலும் சேர்க்க விரும்பவில்லை. நிற்க.
வள்ளல் பெருமானின் விரக்தி நிலையால் உதித்ததே சத்திய தரும சாலை. அதன்படி பசித்தோரின் பசி பிணியை களைவதும் உலக உயிர்களை அன்புடன் ஒழுகுவதுமே ஜீவகாருண்யம்
பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே ஜீவகாருண்யத்திற்கு முக்கிய லட்சியமென்றறிய வேண்டும்
பசியென்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது, ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் ஜீவகாருண்யம்
கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சீவ தேகங்களென்ற ஆலயங்கள் பசியினால் பாழாகும் தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவ் வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே ஜீவகாருண்யம்
தம் பசியினால் தூக்கம் பிடியாமல் துன்பப் படுகின்ற ஏழை ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்கி தூக்கம் பிடிக்க வைப்பதே ஜீவகாருண்யம்
ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல், ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள், கடவுள் அருளுக்கு சிறிதும் பாததிரமாகார்கள். அவர்களை ஆன்ம விளக்க முள்ளவர்களாகவும் நினைக்கப்படாது. ஜீவகாருண்யமில்லாது செய்யப்படுகிற செய்கைகளெல்லாம் பிரயோசனமில்லாத மாயாஜாலச் செய்கைகளேயாகுமென்று அறிய வேண்டும்
சமுசாரிகள் விவாகம் முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளை செய்வித்தும், ஆடல் பாடல் வரிசை ஊர்வலம் முதலிய விநோதங்களையும் அப்பவர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடு களையும் நடத்தியும் எக்களிப்பில் அழுந்தியிருக்கும் தருணத்தில் பசித்த ஏழையர் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை
தமது குடும்ப செலவை கூடிய மட்டில் சிக்கனம் செய்து, ஏழைகளின் பசியை நீக்குதல் வேண்டும்
வள்ளலார் சுட்டிய கருத்துகளின் ரீதியில் இன்று கொடுமை என்னவெனில் பசித்த ஏழையர் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை
என்ற வரி பல விரக்தி நிலை மனதாரர்களை வதைக்கிறது.
காரணம் இன்றும் பசித்த ஏழையர் எல்லோர் கண்களிலும் பட்டுக்கொண்டு தான் உள்ளார்கள்.
வாரம் வாரம் விடுமுறை நாளை அறுசுவை உணவுக்கென ஒதுக்கும் குடும்பத்தோர் தங்களது குடும்ப செலவுகளை குறைத்து ஏழைகளின் பசியை நீக்குங்கள்.
அதனால் வள்ளல் பெருமானின் கருத்துபடி பசி பிணியை களைய முற்படும் நான் மேற்சொன்ன மூன்று நிலையவருமே ஜீவகாருண்ய வாதிகளே.
ஆனாலும் உங்களது கருணை மனிதரிடத்திலே மட்டுமே செயல்படுமேயானால் அவர் மனித காருண்யவாதியே ஆவார். ஜீவகாருண்யவாதி அல்ல.
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
சகல உயிர்களிடமும் எழும் கருணையே ஜீவகாருண்யம்.
ஜீவகாருண்யம் கடினமல்ல. அது ஒரு விழிப்பு நிலை அவ்வளவு தான். ஜீவகாருண்யம் என்றாலே ஊன் உணவை (அசைவம்) ஒதுக்கி வைப்பது என்றவாறு மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது.
அதனால் அதன் உண்மையான மகத்துவத்தை மனித மனம் இயல்பாகவே கொண்டிருப்பதை யாருமே அறிய முற்பட வருவதில்லை.
துக்க நிலை, சாந்தி நிலை, விரக்தி நிலை இம்மூன்றும் எல்லா உயிரிடத்திலும் செயல்படுமாயின் அதுவே ஜீவகாருண்யம்.
தம் பசியினால் தூக்கம் பிடியாமல் துன்பப் படுகின்ற ஏழை ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து என்ற வள்ளலாரின் வரியில் ஜீவர்களுக்கு என்பது அனைத்து உயிர்களையுமே அடக்கியது என்பதை உணருதல் வேண்டும்
எனினும் ஜீவகாருண்ய வாதிகள் சைவ உணவை மட்டுமே எடுக்க காரணம்,
தான் இந்த அகிலத்து உயிரனைத்தையும் சொந்தமாக கருதுகிறேன். நான் வாழ வேண்டி பிற உயிரை கொல்லுதலை என் உயிர் ஏற்காது என்ற மன பக்குவமே.
உயிர்களை ரட்சிக்க வேண்டிய மனிதனே அதை ருசிக்கவும் செய்கிறான் எனில் அம்மனதில் கருணை ஏற்படாது. அங்கே காருண்யம் விருத்தி பெறாது.
கருணை இல்லாத இடத்தில் இறைவனும் இருக்க மாட்டார். ஒற்றுமையும் இருக்காது. பேதங்கள் உருவாகும். சண்டைகள் தோன்றும். குரோதமும் சினமும் சகஜமாகும்.
இவை அனைத்தையுமே தடுக்கவே வள்ளல் பெருமான் தன் அருளான ஜீவகாருண்யத்தை உறுதிபட உரைத்தார்.
இனி வள்ளல் பெருமானின் கொள்கைகளை உங்களுக்கு விளங்க வைப்பது எளிது
உயிர்க்குலம் அனைத்திற்கும் தெய்வம் ஒன்றே என்று நம்புதல்
அது மனிதர்களை ஒருமுகப்படுத்தும். சத்திய வழியில் செயல்பட வைக்கும். ஆணவத்தை தடுக்கும். அடக்கத்தை அளிக்கும்.
அந்த தெய்வத்தை விக்கிரக வழியில் புரிந்து பின் ஞான ஒளி வடிவில் வழிபடுதலே சிறந்தது
ஞானமார்க்கத்தையும் அபிஷேகமென்ற பொருள் வீணையும் அது தடுத்து மக்களை நல்வழிப்படுத்தும்.
சாதி சமய வருண பேதங்களை அறவே விடுத்து மொழி வழிப்பட்ட இனங்கள் நாடுகளிடையே ஒற்றுமை கண்டு ஆன்ம நேய ஒருமைபாட்டை உண்டாக்கல்
இனம் சாதி என்ற பிரிவினை வாதங்களுக்குள் உட்படாமல் அமைதி வழியில் எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ வழிவகை செய்தலே அன்பு மயமான உலகத்தை ஆக்க முதற்படி ஆகும்
உலகம் முழுவதையும் ஒன்றுபடுத்தும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டினுக்கேயன்றி, இந்திய நாட்டில், மொழிவழி இனங்களிடையே சகோதர உணர்வை வளர்த்து, அவற்றிடையே உணர்ச்சி பூர்வமான ஒருமைப்பாடு காணல்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றபடி வாழ்வதோடு 'நானொரு உலகத்து குடிமகன்' என்று உணருதல் வேண்டும்.
உடைமையாளர் வறுமையாளர் (பணக்காரர் ஏழை) என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வை தொலைத்து, எல்லோரும் வயிறார உண்டு, உடம்பார உடுத்து வாழும் சமதர்ம சமுதாயத்தை படைத்தல்
உள்ளவன் இல்லாதவனுக்கு அளித்தும் இல்லவன் வறியோருக்கு அடைக்கலம் அளித்தும் ஏற்ற தாழ்வு அற்ற சமூகத்தை படைக்க நாம் முயலுதல் வேண்டும்
ஆண் பெண் என்ற பால் வேற்றுமையின்றி மக்கள் எல்லோருக்குமே கல்வி அளித்தல் - குறிப்பாக ஞான மார்க்க கல்வியை பெண்களுக்கும் அளித்தல்
மரணமில்லா பெருவாழ்வு வாழும் பேற்றினை பெறுவதற்கான வழிவகைகளை மக்களுக்கு அவரவர் தாய் மொழியின் வாயிலாகவே பயிற்றுவித்தல், குறிப்பாக தமிழருக்கு தமிழின் வாயிலாகவே பயிற்றுவித்தல்
புலால் உண்ணுதல், தெய்வத்திற்கு காரியம் சடங்கென உயிர்ப்பலி தருதல் ஆகிய தீய பழக்க வழக்கங்களை அடியோடு ஒழித்தல்
உயிர்கள் அனைத்தையும் சமமாக கருதி, அவற்றிடையே இரக்க உணர்வும் தயையும் காட்டத்தக்க ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மக்களுக்கு போதித்தல்
கிருபானந்த வாரியாரிடம் யார் சைவன்? யார் அசைவன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அம்மகான் சொன்ன பதில்,
ஓர் உயிரை கொல்லும் போது கண்களில் நீர் சுரந்தால் அவன் சைவன், வாயில் நீர் சுரந்தால் அவன் அசைவன்
சமீபத்தில் நான் கேட்டு வியந்ததொரு வசனம், "அறம் மரமானால் அதன் வேர் கருணை ஆகும்".
கருணை உள்ளவன் கொலையினால் தன் உடலை வளர்க்க விரும்பமாட்டான்
கருணையிலாத் துன்மார்க்கர் அரசியல் நடத்துவதை உலகெங்கணுமிருந்து ஒழித்து, அருள் நெறி வழிபட்ட சுத்த சன்மார்க்கர் ஆட்சி தோன்ற செய்தல்
சங்கம் என அழைத்துக் கொண்டிருந்த வள்ளல் பெருமான் கருணை உள்ளோர் அனைவரும் உலோகோரை அரவணைத்து வாழ வழிவகை செய்யும் பொருட்டு சுத்த சன்மார்க்க கழக நேர் நின்ற கருணை மாநிதியே என்றழைத்து அதை ஒரு கழகமாக்கவும் முயன்றார்.
எனவே வள்ளலாரின் கொள்கைகள் இல்லறத்தை துறந்த துறவறவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றெண்ணத்தை கைவிட வேண்டும்.
வள்ளலாரின் கொள்கைகள் மன அமைதிக்கு மட்டுமல்ல உலக அமைதிக்கு வழிவகுப்பதாகும். அதனால் எல்லோரும் சன்மார்க்கம் பயிலுங்கள், அதன்மூலம்
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவளயமெங்கும் ஓங்குக
ஈசதாசன்
தமிழகம் தரணிக்கு அளித்த தலைசிறந்த ஆன்மீக மகான் வள்ளலார்.
பதிலளிநீக்குவெறுமனே மகான்களையும் உருவப்படத்தையும் கஷ்டகாலத்தில் வணங்கி வேண்டிக்கொள்வதோடு நில்லாமல் அவர்களது கருத்துகளின் நெறிநின்று இயன்ற வரை வாழ முயல வேணும்.
அதிகம் படிக்க வாய்ப்பற்றுபோன நல்லவற்றை தேடியாய்ந்து தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஆடம்பர திருமணங்களை நடத்துவோர் ஏழைகளுக்கு ஒரு தொகையை ஒதுக்கலாம்.
பதிலளிநீக்குஏழைகளுக்கு தனி இடமளித்து உணவு அளிக்கலாம்.பசிப்பிணி என்பது பெரும்பாலும் தமிழ்நாட்டில் இல்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியாகும்.
எக்காலமும் எல்லோருக்கும் இருக்கும் ஒரே பிணி, பசிப்பிணி தான்
நீக்கு