அண்மை

தமிழ் மெல்ல சாகிறது

 


"தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடம் தமிழ் மொழி மீதான பற்று பெயரளவிலேயே இருக்கிறது. அனைத்திலும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளைக் கலந்துகட்டி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.


தமிழ் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது. கல்வி, பணி, நிர்வாகம் என அனைத்திலுமே தமிழின் மதிப்பு குறைந்துகொண்டே செல்கிறது.


பிறந்த குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைக்க பலமுறை யோசிக்கிறார்கள். இதுவே இப்படியென்றால் பெயருக்கு முன்னால் இடப்படும் முன்னெழுத்தின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.


அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் "இனிஷியல்". தந்தை பெயரின் முதல் எழுத்தை பெயரின் அடையாளமாகக் குறிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.


தங்களுடைய பெயரை தமிழில் எழுதினாலும் அந்த முதல் எழுத்தை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். இந்த கலாச்சாரம் சில ஆண்டுகளாக அரங்கேறி கொண்டுள்ளது


தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில், அரசு ஆவணங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதி தங்கள் பெயரை எழுதுகின்றனர்.


இதை மாற்ற இனி தலைமை செயலகத்திலிருந்து கடைநிலை அரசு அலுவலகங்கள் வரை பெறப்படும் விண்ணப்பம் மற்றும் கோப்புகளில் தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் முன் எழுத்தும் தமிழிலே தான் இருக்க வேண்டும்


பள்ளி சேர்ப்பு விண்ணப்பத்திலிருந்து வருகை பதிவேடு, கல்லூரி சான்றிதழ் என  அனைத்து மாணவர்களின் பெயரும் தமிழிலே பதிவு செய்ய பட வேண்டும்"


இந்த அரசு ஆணையை பிறப்பித்தவர் தமிழக அரசர் திரு. மு க ஸ்டாலின் ஆவார்.


அத்தோடு மட்டுமல்லாமல் தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து பாடல்களை அரசு நிகழ்ச்சிகளில் ஒலி பெருக்கி கொண்டு ஒலிப்பதை விடுத்து பயிற்சி பெற்றவர்களுடன் கூட்டாக வாய் விட்டு தான் பாட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


கைபேசி எண்ணை கூட நினைவில் வைக்கவும் பிறருக்கு அதை பகிரவும் கூட ஆங்கிலத்தை பயன்படுத்துவோருக்கு இந்த உத்தரவுகள் கசக்கலாம்


ஆனால் உண்மையிலே இத்தகைய உத்தரவுகள் தேனில் ஊறிய பலாச்சுளை போன்றது.


நம் மக்கள் ஆங்கிலத்தை காட்டிலும் அதிகம் தமிழை நேசிக்கிறார்கள். ஆனால் தமிழை காட்டிலும் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.


மேடையில் நில்லாது தமிழை தொடர்ந்து ஒருவன் ஐந்து நிமிடம் பேசினால் சுற்றி உள்ளவர்கள் சிரிக்கிறார்கள். இதே ஆங்கிலத்தில் பேசினால் ஆச்சரியபடுவார்கள்.


வருங்காலம் உற்பத்தி செய்யும் அத்துனை பொருளிற்கும் தேர்ந்த கலைச்சொற்களை தமிழ்த்தாய் பிரசவித்து கொண்டே தான் உள்ளாள்.


அதனால் தமிழ் சொல் வளத்தை ஒன்றும் குறைத்து கொள்ளவில்லை. அவற்றை பயன்படுத்தாது குறைப்பதே நாம் தான்.


சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் வெளிநாட்டவர்கள் உபயோகிக்கும் எந்த சொல்லுக்கும் 'காஞ்சி' சொல் உருவாக்கி தமக்கு தகுந்தாற் போல் பேச்சுக்கும் எழுத்துக்கும் வடிகட்டி தான் பயன்படுத்துவார்கள்.


உலகமே ஒரு நாட்டை 'ஜப்பான்' என்று பெயர் வைத்து அழைக்கையில் ஜப்பான் நாட்டவர்கள் தங்களது நாட்டின் பெயரை 'நிஹோஜின்' என்பார்கள். அதற்கு சூரிய கதிர் விழும் முதல் நிலம் என்பது பொருள்.


ஆப்பிள் என்ற கனி தமிழ் நாட்டோருக்கு தொடர்பில்லாத ஒன்று. இருந்தாலும் அவை நமக்கு கிடைக்காமல் இல்லை. அதை விளைய வைத்தவன் என்ன பெயர் சொன்னானோ அதையே தான் நாமும் இங்கே கூவுகிறோம்.


ஆனால் ஆப்பிளின் உண்மை தமிழ் பெயர் குமளி ஆகும். ஆரஞ்சுக்கு கிச்சலி. தர்பூசணிக்கு குமட்டி. இன்னும் இது போன்று எத்தனையோ பழம் மற்றும் பொருளுக்கு நாம் தமிழை பயன்படுத்த தவறிவிட்டோம் அல்லது தெரிந்துகொள்ள கூட துணியவில்லை.


நாட்டவர்கள் மொழியினை செம்மை மாறாது பயன்படுத்தும் பயன்பாட்டிலே மொழி வளரும்.


நேற்று பாரதியாரின் பிறந்தநாள். கண்ணதாசன் சொல்கிறார்,


"பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.

என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.

பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..


இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி.  தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்..


காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்?” என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்


பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி.

அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.


துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!

பாரதியைக் கொண்டாடு! அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,

தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,

தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,

தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,

பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.” [கண்ணதாசன் இதழில் கண்ணதாசன்- செப்டம்பர் 1978]


கண்ணதாசன் சொல்வது போல் பாரதியை கொண்டாடுவதோடு மட்டுமல்லாது தமிழை வளர்க்கும் வகையில் விரைவில் கலைச்சொற்களும் தமிழ்நாட்டில் பரவலாக்கப்படும் என்று நம்புவோம்


அதற்கு அரசு எடுத்திருக்கும் இம்முயற்சி தமிழை நிச்சயம் தழைக்க வைக்கும்.


வாழ்க தமிழ்


தீசன்

தென்றல் இதழ் 28

3 கருத்துகள்

  1. நம் மக்கள் ஆங்கிலத்தை காட்டிலும் அதிகம் தமிழை நேசிக்கிறார்கள். ஆனால் தமிழை காட்டிலும் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.



    மேடையில் நில்லாது தமிழை தொடர்ந்து ஒருவன் ஐந்து நிமிடம் பேசினால் சுற்றி உள்ளவர்கள் சிரிக்கிறார்கள். இதே ஆங்கிலத்தில் பேசினால் ஆச்சரியபடுவார்கள்."




    சமகால தமிழ் மக்கள் இதயங்களை இத்தனை துல்லியமாக படம்பிடிக்க CTscan Xray MRI ஆல் கூட முடியாது..

    பதிலளிநீக்கு
  2. பாரதியின் காலத்தில் பாரதியை பெருமை படுத்தாமல் போனது வேதனைதான்.

    பதிலளிநீக்கு
  3. இதைப் பற்றி நான் கட்டுரை எழுதலாம் என இருந்தேன்.

    சில பெற்றோர்கள்.. தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் வராது என பெருமையாக சொல்வதைப் பார்க்கும் போது 'முட்டாள் மனிதா' என அவர்களை கூற வேண்டும் என தோன்றும்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை