அண்மை

சினிமா கட்டணம் குறையுமா?

 


நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். 1978 என்று நினைக்கிறேன். திருவாரூரில் தைலம்மை என்ற திரையரங்கம் ஒன்று 

திறந்தார்கள். அதுவரை திருவாரூர்கார்கள் பார்க்காத நவீன இருக்கைகளுடன்,நவீன இசையை வெளிக்கொண்டு வரும்

சவுன்ட் சிஸ்டத்துடன் அது வடிவமைக்கப்பட்டது


முதல் படமாக காஞ்சி காமாட்சி என்ற பக்தி படம் திரையிடப்பட்டது.

இரண்டாம் வகுப்பு கட்டணம் 65 பைசா. முதல் வகுப்பு கட்டணம்

ரூ 1-10. பால்கனி 2 ரூபாய்.

பாக்ஸ் 3 ரூபாய். புதிய தியேட்டர் என்பதாலும் பக்தி படம்

என்பதாலும் கிராமங்களில் இருந்து கோவில் திருவிழாவுக்கு வருவது போல தியேட்டருக்கு திரண்டு வந்தார்கள்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு நல்ல படம்  ஒரு ருபாய்க்கு பார்க்க முடிந்தது. 400 டிக்கெட் 65 பைசா 300 டிக்கெட் 110 பைசா என கொடுப்பார்கள். 1000 டிக்கெட்டும் தினமும் ஹவுஸ்ஃபுல்தான்.

சிறு நகரமான திருவாருரில் 80ல் வெளியான ஒருதலை ராகம் 110 நாள் ஓடியது.81ல் வெளியான அலைகள் ஓய்வதில்லை 106 நாள் ஓடியது.


திருவாரூரில் மட்டும்தான் இந்த கட்டணமா?

இல்லை தமிழகம் முழுவதும் இதுதான் கட்டணமா? என 

கூகுளில் தேடி பார்த்தேன். 1980-90 காலகட்டத்தில்

தமிழ் நாட்டில் தியேட்டர் கட்டணம் ரூ 2 முதல் 3 என ரிசல்ட் வந்தது.


அந்த காலகட்டத்தில் 500கி ஹார்லிக்ஸ் பாட்டில் 27 ரூபாய். 500கி அமுல் ஸ்பிரே 26 ரூபாய். 400கி பான்டஸ் பவுடர் 28 ரூபாய். முப்பது ஆண்டுகளுக்கு பின் இன்று, 500கி ஹார்லிக்ஸ் 240 ரூபாய்.

400 கிராம் பாண்ட்ஸ் 300 ரூபாய். 500 அமுல் ஸ்பிரே 200 ரூபாய்.

5ரூ ஹைப்பர் பேட்டரி இன்று 25 ரூபாய்.

5ரூ 200கி பிரிட்டானியா மேரி இன்று 28 ரூபாய்.


எல்லா பொருட்களும் 5 முதல் 10 மடங்கு விலை ஏறியுள்ளது.

ஆனால் தியேட்டர் கட்டணம் இன்று 150 ரூபாய்.

ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் டிக்கெட் 150 ரூபாய் என்றால்

75 மடங்கு முதல் 150 மடங்கு விலை ஏறி உள்ளது.


இது சினிமா துறைக்கு வளர்ச்சியா? கண்டிப்பாக இல்லை.

வீழ்ச்சி. 3000 திரை அரங்குகள் இருந்த தமிழ்நாட்டில்

இன்று ஆயிரம்தான் உள்ளன. மீதம் எல்லாம் திருமண மண்டபங்களாகவும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்

ஆகவும் மாறிவிட்டது. நாகை பாண்டியன்,

திருச்சி ஸ்டார் போன்ற தியேட்டர்களில் 

2000 பேரை கூட அடைக்கலாம்.

இன்று தியேட்டர் என்றாலே அதிகபட்சம் 500 பேர்தான்.


நான் பூண்டியில் தங்கி கல்லூரியில் படித்த போது,இரவில் அருகில் மாரியம்மன் கோவில் என்ற ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸுக்கு 

எப்போதாவது செல்வோம். 83-86 அப்போதைய காலத்தில் 

தரை டிக்கெட் 60 பைசா. பேக் பெஞ்ச் ஒரூ ரூபாய். சேர் இரண்டு ரூபாய்.

நாங்கள் கல்லூரி மாணவர்கள் அல்லவா?

அந்த கவுரவத்தை விட்டு கொடுக்காமல் இரண்டு ரூபாய் டிக்கெட் 

எடுப்போம். அந்த இரண்டு ரூபாயில்தான்

மண்ணாதி மன்னன், நாடோடி மன்னன், சம்பூர்ண இராமாயணம் 

வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற காலத்தால் அழியாத 

படங்களை பார்த்தோம்.


அன்று படம் என்றாலே குடும்பத்துடன்தான் போவார்கள்.

5 பேர் உள்ள குடும்பத்துக்கு மிஞ்சி போனால் 20ரூ செலவாகும்.

ஆனால் இன்று டிக்கட்டே 750 ஆகிவிடும். தியேட்டரில் பாப்கார்ன்

காபி ஐஸ்கிரிம் எல்லாம் பலமடங்கு. 1000 ரூபாய் இல்லாமல்

தியேட்டர் பக்கம் போகமுடியாது. அந்த ஐஸ்கிரிம் சாப்பிட்டால் மெடிக்கல் செலவு கண்டிப்பாக உண்டு.


இதனால் குடும்பத்தோடு படம் பார்ப்பது என்பதே இல்லாமல் போய்விட்டது. குறிப்பிட்ட வயது இளைஞர்களை குறி வைத்தே இப்போது படம் எடுக்கிறார்கள். அவர்களது தேவை வன்முறை ஆபாசம்

காதைக் கிழிக்கும் இசை. இது போதும் அவர்களுக்கு. 

அப்போது குமுதம் விகடனில் விமர்சனம் வந்த பிறகுதான் படம் பார்க்கவே போவார்கள்.


சென்னை போன்ற சிட்டியில் ஒரு பாப்கார்ன் 100 ருபாய்.

கார் பார்க்கிங் ரூ 500.


இந்த கட்டண உயர்வுக்கு அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்.


படம் எடுக்கும் பட்ஜெட் ஏறிவிட்டது. 200 கோடி வரை செலவாகிறது என்பார்கள். 200 கோடி செலவழிக்கும் இந்த காலத்தில் ஒரு கோடி ரூபாய்க்குள் படம் எடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பாரதி,மோகமுள், பெரியார், ராமானுஜன் போன்ற படங்கள் எடுத்த ஞான இராஜசேகரன் IAS, இப்போதும் கூட ஐந்து கதைகள் கொண்ட ஒரு படத்தை 50 லட்சத்துக்கள் எடுத்து முடித்துள்ளார். இயக்குனர் V.சேகர்,விசு போன்றவர்கள் குறைந்த முதலீட்டில் சிறந்த படத்தை எடுத்தவர்கள்தான்.


அப்படியானால் 200 கோடி எப்படி செலவாகிறது? பிரபலமான ஒரு நடிகருக்கு 100 கோடி. இயக்குனருக்கு 25 கோடி . இசையமைப்பாளருக்கு 10 கோடி. வெளி நாட்டில் பாடல்காட்சி என்று 50 பேர் சுற்றி பார்த்து விட்டு வருவார்கள். ஒரு பாட்டுக்கு 5 கோடிக்கு செட் போட்டேன் என்று பெருமை பேசுவார்கள். பாட்டெழுதும் கவிஞருக்கு மூட் வர

மாமல்லபுரத்தில் ரூம் போட்டு கொடுப்பார்கள்.


ஒரு படத்துக்கு ஒரு பெரிய நடிகர் 100 நாள் கால்ஷீட் கொடுக்கிறார்.

100 நாளுக்கு 100 கோடி ஒரு நாளுக்கு ஒரு கோடி.அதாவது

ஒரு நாளுக்கு 100 லட்சம். ஒரு நாளுக்கு 100 ரூபாய் சம்பாதிக்க முடியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பணக்கார வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கும் பெண்ணுக்கு 100 ரூபாய் கூட சம்பளம் இல்லை.

காய்கறி பழம் விற்கிறவர்களால் 200 ரூபாய் கூட மிச்சப்படுத்த முடிவதில்லை. 600 ரூபாய் சம்பளம் வாங்கும் கொத்தனார்,

ஆசாரி,பெயின்டர், பிளம்பர், எலக்ட்ரீசியனுக்கு மாதத்தில் 20 நாள் கூட வேலை இல்லை. 70 வயது முதியவர் கூட சைக்கிள் மிதித்து பழைய இரும்பு எடுத்து சம்பாதிக்கிறார்.


10 கோடி போட்டு ஒரு படம் 20 கோடி வசூல் செய்தால் 10 கோடி லாபம்.

200 கோடி போட்டு 190 கோடி வசூல் செய்தாலும் நட்டம் 10 கோடி. 

குறைந்த செலவில் படம் எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்ன கலைஞர். இரண்டாவது மாடியில் இருந்து விழுந்தால் காயத்தோடு தப்பி விடலாம். பத்தாவது மாடியில் இருந்து விழுந்தால் 

உயிரே போய்விடும் என எச்சரிக்கிறார்.


ஆயிரம் படத்தில் நடித்து சம்பாதித்த பணத்தை வி.கே.ராமசாமியும்,

மனோரமாவும் படம் எடுத்து அனைத்தையும் இழந்தார்கள்.

KT குஞ்சு மோன் ஆஸ்கார் ரவிச்சந்திரன் AVM கவிதாலயா ஜெமினி போன்ற நிறுவனங்கள் இன்று இல்லை. நாயகன் தளபதி போன்ற வெற்றி படங்களை வெளியிட்ட ஜீவி என்கிற வெங்கடேஸ்வரன் சொக்கத்தங்கத்துக்கு வாங்கிய கடனுக்காக தூக்கில் தொடங்கினார்.

100 படம் இயக்கி கின்னசில் இடம்பெற்ற இராமநாராயனன் மகன் முரளி மெர்சல் படத்தில் ஏற்பட்ட நட்டத்தால் இன்று வரை வேறு படம் எடுக்க முடியவில்லை.


அந்தக்காலத்தில் பாடத்தெரிந்த நடிக்கத்தெரிந்த நடனமாட தெரிந்த அழகான முகவெட்டு உள்ளவர்களுங்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்படிதான் தியாகனாஜ பாகவதர் கிட்டப்பா K B சுந்தராம்பாள் பானுமதி போன்றவர்கள் கொடி நாட்டினார்கள்.


இப்போது குரல் கொடுக்க ஒருவர் சண்டை போட ஒருவர் பாட்டுப்பாட ஒருவர் எல்லாமே டூப்பில் ஓடுகிறது. தனக்காக பைக் ஓட்டிய

தனக்காக சன்டை போட்ட துனை நடிகர்களை ரஜினி பாராட்டிய செய்திகளை எல்லாம் படித்து கொண்டுதான் இருக்கிறோம்.


எதிர்கட்சி தலைவராக இருந்த ஒரு நடிகர் எல்லோரையும் அடித்து உதைத்து படத்தில் பந்தாடுவார். ஆனால் நிஜ வாழ்க்கையில் தன் கட்சி மேடையில் கூட தனியாக ஏறமுடியாது.


இப்படி பிரபலமாகிய ஒரு நடிகர் இளைஞர்களை நட்டப்படுத்தி தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு

காசுக்காக விளம்பரம் செய்கிறார். ஒரு சீனியர் நடிகர்

எல்லோருக்கும் பாஸ் ஆணையும் பெண்ணையும் நூறு நாள் ஒரு அறையில் பூட்டி வைத்து கலாச்சாரத்தை சீரழிக்கும் ஒரு நிகழ்ச்சியை பதினைந்து கோடி பணம் கிடைப்பதால்

நடத்துகிறார். பெயர் வைத்த தனது தந்தையை தனது பெயரை கூறக்கூடாது என தடை வாங்கிய ஒரு நடிகர்,

ஏற்கனவே ஆடி கார் BMW 5,BMW X6,என பல

கார்கள் இருந்தும் பல கோடிக்கு கடைசியாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு உள்ளூர் வரி கடட மாட்டேன் என கோர்ட் படியேறுகிறார்.

அரசாங்கம் போடும் வரி ஏழைகளுக்கே போய்சேருகிறது.

அந்த ஏழைகளின் பணத்தால் வாழ்பவர்கள் அதை நினைப்பதில்லை.

இந்த ஆண்டு கொரனா பரவல் தினசரி 38000 என்ற நிலையை அடைந்த போது அரசு சகலதரப்பினரிடமும் உதவி கேட்டது.

பல ஆயிரம் கோடி உள்ள ஒரு உச்ச நடிகர்

போனால் போகிறது என 25 லட்சம் கொடுத்தார்.

இன்னொரு 100 கோடி நடிகர் நான் போன வருடம் கொரனா வந்தபோதே 25 லட்சம் கொடுத்து விட்டேன் என கணக்கு காட்டி விட்டார்.

இப்படிப்பட்ட காலத்தில் புனித் ராஜ்குமார் போன்ற நடிகர்களும்

இருக்கத்தான் செய்கிறார்கள். தான் சம்பாதித்த கடைசி பைசா வரை தர்மம் செய்தவர் நடிகர் N S கிருஷ்னன். அள்ளிக் கொடுத்த வள்ளலாய் இருந்த MGR,பின்னர் மக்களின் அன்பால் முதல்வரும் ஆனார்.

சிவாஜியை போல் நடிக்க ஒருவர் பிறந்து வரவேண்டும்.

இந்தியாவின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.

அவர் தனது வாழ்நாளில் அதகப்படியாக பெற்ற சம்பளம் பத்து லட்சம்தான். அதுவும் படையப்பாவில் நடித்த போது கிடைத்தது.


அப்படியானால் சினிமா டிக்கெட் குறைய என்னதான்

செய்ய வேண்டும்? மலையாள பட உலகத்தில் மம்முட்டி ஆனாலும் சரி,

மோகன்லால் ஆனாலும் ஜெயராமன் ஆனாலும் சுரேஷ் கோபி ஆனாலும்

பிரிதிவிராஜ் ஆனாலும் 5 கோடிக்கு மேல் அங்கு சம்பளம் இல்லை.

5 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கே மலையாளத்தில் நடித்தால் 50 லட்சம்தான்.அதுபோல தயாரிப்பாளர்கள்

ஒன்று சேர்ந்து 10 கோடிக்கு சம்பளம் கொடுக்கக்கூடாது என

உறுதியாக முடிவு எடுக்க வேண்டும்.


ஆந்திர அரசைப் போல எல்லா தியேட்டர்களின்

ஆன்லைன் டிக்கட்டை தகுந்த வெப்சைட் மூலம்

அரசே விற்க வேண்டும். வரி ஏய்ப்பும் இருக்காது.

பிளாக்கிலும் விற்க முடியாது.


தியேட்டர் கட்டணம் ரூ 50 என நிர்ணயிக்க வேண்டும்.

150 ரூபாய் விற்கும்போது 30 டிக்கெட் விற்று 4500 சம்பாதிப்பவர்கள்

50 ருபாய் என்றால் 100 டிக்கெட்டாவது விற்கும். 5000 கிடைக்கும்.

குடும்பத்தோடு பார்க்க வருவார்கள்.

100 பேர் வந்தால் கேன்டினாவது நன்றாக ஓடும்.

அதிகம் சம்பளம் கேட்கும் நடிகர்களின் படங்களை ரசிகர்களும்

புறக்கணிக்க வேண்டும்.


இதை பின்பற்றா விட்டால் 1000 தியேட்டர் 500 ஆகி திரையுலகத்தின்

அழிவு தொடங்கிவிடும்.


சினிமா கட்டண குறைப்பே இதற்கு ஒரே தீர்வு.


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 27

1 கருத்துகள்

  1. தென்றல் மின்னிதழில் பத்திரப்படுத்த வேண்டிய பொக்கிஷ கட்டுரைகளுள் ஒன்று...

    பதிலளிநீக்கு
புதியது பழையவை