அண்மை

பாரதியாரின் கற்பனையில் கல்வி

 

பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் - கல்வி

இதை வாசிப்பவர்களே! நீங்கள் எப்போதாயினும் மாரி காலத்தில் மழையில்லாத மாலைப்பொழுதிலே கடற்கரை மணல்மீது இருந்து கொண்டு, வானத்தில் மேற்புறத்தில் சூரியன் அஸ்தமிக்கும் போது, ரவி கிரணங்கள் கீழ் திசையிலுள்ள மெல்லிய மேகங்களின் மீதும் இடையிடையே தெரியும் வான வெளிகளின் மீதும் வீச, அதனின்றும் ஆயிர விதமான மெல்லிய அற்புதகரமான வர்ண வேறுபாடுகள் தோன்றுவதை பார்த்திருக்கிறீர்களா? இந்த அடிமை நாட்டிலே உங்களுக்கு பிரகிருதி தேவியின் சௌந்தர்யங்களை பார்த்துப் பரவசமடைய சாவகாசம் அடிக்கடி ஏற்பட்டிராது. (ஞானரதம் - பாரதி)


பாரதியாரின் பலதரப்பட்ட கட்டுரையை படிக்குங்கால் அவரது கற்பனையானது மனம் நிறைந்த மனோகரமானாலும் நெடிதுயர்ந்த துன்பகரமானாலும், அது பாரத தேசத்தை பற்றியே இருக்கும் என்பதை மேலுள்ள பத்தியின் மூலம் நீங்கள் அறியலாம்.


ஒரு கண்ணாடி சூரியனை பிரதிபலிக்கையில் அதை வெறுங் கண்கொண்டு எதிர்நோக்குவது எப்படி சாத்தியமற்று போகிறதோ அதுபோல அனுக்ஷணமும் பாரதம் குறித்தான பாரதியின் கற்பனா பிரதிபலிப்பை எதிர்கொண்டு அரிதள்ளுவது இயல்புக்கு கஷ்டம். இருந்தும் இக்கட்டுரையின் நோக்கம் பாரதியின் கற்பனை ஆக்கத்தின் மூலம் பாரத மக்களுக்கு வளர்ச்சி குறித்தான தாக்கத்தை ஏற்படுத்துவதே ஆகும்.


பாரதியின் கற்பனையில் கல்வி


ஆடையில்லா மனிதன் அரை மனிதன் எனில் கல்வி இல்லா மனிதன் கால் மனிதன் ஆவான். மனிதனுக்கு கல்வி அவசியம். பால்ய பருவத்தில் பெறப்படும் கல்வி ஞானமே லோக ஷேமத்திற்கான அஸ்திவாரமாகும். ஆனால் அடிமை படுத்தியவன் கல்வி மேலும் அடிமை படுத்துவதாகவே இருக்கும். பாரதி இதை நன்கறிந்திருந்தார். தேசீய கல்வியை ஊக்குவித்தார். பாரதி தேசீய கல்வி குறித்து கற்பனித்த அனைத்துமே தீர்க்கதரிசனமாகும். அதில் அநேகம் இன்று நடைமுறையிலும் உள்ளது. அத்தேசீய கல்வியின் வளர்ச்சி மூலமானது தாய்மொழிக் கல்வியாகும்.


"தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை. தமிழ் நாட்டில் தேசீய கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால், அது தேசீயம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை (குடும்பக் கல்வி - பாரதி)


தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி. இத்தேசத்து ஜனங்களின் கல்வி வித்து சத்தாக இருக்க வேண்டுமேயானால் மக்கள் தங்கள் தாய்மொழியிலே கல்வி தானம் பெற வேண்டும். அதுவே சகல வளர்ச்சியின் விஸ்பரூபத்திற்கும் வேராகும். அவ்வேருக்கும் நல்நீராக "அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜூனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும் படி செய்வது அந்த பிள்ளைகளின் இயல்பை சீர்திருத்தி மேன்மை படுத்துவதற்கு நல்ல ஸாதனமாகும். தேஷ பாஷை மூலமாகவே இவைகள் கற்பிக்கபட வேண்டுமென்பது உங்களுக்கு சொல்லாமலே விளங்கும்" (பாடங்கள் - பாரதி) 


அத்தோடு மட்டுமல்லாமல் "வேதகால சரித்திரம், புராண கால சரித்திரம், பௌத்த காலத்து சரித்திரம், ராஜபுதானத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப் போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மகாணத்தின் சரித்திரம் விசேஷமாக பயிற்றுவிக்கப்பட வேண்டும்" (பாடங்கள் - பாரதி) 


பிள்ளைகளுக்கு போதிக்கப்படும் ஞானம் கிணற்றுத் தவளை போல் அடங்கிவிடக் கூடாது. பொது நோக்குடன் அவர்களது அறிவு சமூக நலனுக்கென உழைத்தல் வேண்டும். "இந்தியர்களாகி நம்மவர் வெளித்தேசங்களில் எங்கெங்கே அதிகமாக சென்று குடியேறி இருக்கிறார்கள் என்ற விஷயம் பிள்ளைகளுக்கு தெரிவதுடன் அங்கு நம்மவர் படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்த நிலையிலே இருக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரிய வேண்டும்" (பூமி சாஸ்திரம் - பாரதி) அத்தோடு "ஏழைகளுக்கு உதவிபுரிதல், கீழ் ஜாதியரை உயர்த்தி விடுதல் முதலியனவே ஜன ஸமூகக் கடமைகளில் மேம்பட்டன என்பதை கற்பிக்க வேண்டும்" (மதபடிப்பு - பாரதி)


பாரத வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவது அறிவியல். அத்தகு அறிவை சிறுபிராயத்திலிருந்தே சிறுவர்களுக்கு ஊட்டுவது பாரத எதிர்கால விளக்கிற்கு எண்ணெய் ஏற்றுவதற்கு சமமாகும். இதனால் பாரதி "பாரத பிள்ளைகளுக்கு இயற்கை நூல் (பிஸிக்ஸ்), ரஸாயனம் (கெமிஸ்ட்ரி), சரீர சாஸ்த்ரம், ஜந்து சாஸ்த்ரம், செடி நூல் (ஸ்தாவர சாஸ்த்ரம்) - இவையே முக்கியமாக போதிக்கப்பட வேண்டும்" (ஸயன்ஸ் - பாரதி) என்றும் அறிவியல் ஆர்வம் மேம்பட "பிள்ளைகளுக்கு தாங்களே 'ஸயன்ஸ்' சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்" (ஸயன்ஸ் - பாரதி) என்றும் சொல்லழுத்தி கூறினார். 


வானியல் அறிவியலிலும் பாரதிக்கு இருந்த நாட்டத்தை சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம் (பாரத தேசம்) என்ற கவிதை வரி விளக்கும்


இன்னும் ராஜ்ய சரித்திரம், மத படிப்பு, வியாபார கல்வி, தோட்டப்பயிற்சி, கைத்தொழில், விவசாயம் என அனைத்தையுமே அனைத்து தரப்பட்ட மக்களின் பிள்ளைகளும் கட்டாயக் கல்வியாக பெற வேண்டும் என்பதை கற்பனைச் செய்தார்.


'சுவரில்லாமல் சித்திரமெழுத முடியாது' என்பதால், "பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்யம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்திற்கும் அற்பாயுசுக்கும் இரையாகும் படி நேரிடும்" (சரீர பயிற்சி - பாரதி) 


"சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல பசியாயிருக்கும்போது கேப்பைப் களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும். விரைவிலே பலம் சேர்ந்துவிடும். பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுகளிலே போகவொட்டாதபடி தடுக்கும் பெற்றோர் தாமறியாமலே மக்களுக்கு தீங்கு செய்கிறார்கள்" (பசி - பாரதி) 


அதனால் பிள்ளைகளுக்கு அறிவுபலம் ஊட்டுவதடன் சரீரபலம் ஏற்றுவதும் பள்ளிகளின் கடமையாகும். மாணவர்களும், 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே' உடம்பை வளர்த்து நன்கு 'கற்றதை நிற்க அதற்கு தகவென' வாழ்தல் வேண்டும். பிள்ளைகள் சரீர பயிற்சியுடன் நின்று விடாமல் ஊரறிவு பெறவும் முனைதல் அவசியம். இதற்கும் பள்ளிகள் "பிள்ளைகளை யாத்திரைக்கு அழைத்துச் சென்று பிற இடங்களை நேருக்கு நேராக காண்பித்தல் நன்று" (பூமி சாஸ்திரம் - பாரதி)


இன்று சாதிகள் ஒழிய வேண்டுமென பல கூட்டங்கள் முழக்கமிடுகிறது. ஆனால் உண்மையில் அவை தேவையில்லை. "ஜாதி மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலே எழமாட்டார்கள் என்று பிறர் கூறும் அவச்சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், தேசீய கல்விக்கு துணை செய்யுங்கள்" (மிர்ஜா ஸமீ உல்லா பேக் - பாரதி)


நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் கல்வியின் தடம் இருக்குமெனில் கல்வியால் மாற்ற முடியாத சக்தி என்றொன்றில்லை.


தேசத்தின் கல்வியில் ஏற்படும் நல் மாற்றம், அத்தேசத்தையே மேலேற்றும் வல்லமை பெற்றது. பாரதியின் கல்வி குறித்தான கற்பனை அவர் கால தேவைக்கானது மட்டும் அல்ல என்பது சத்தியம். அது எதிர்கால பார்வை. அதனால் பாட்டார் சொன்ன நாட்டார் கல்வியே!


இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய்

இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் (நாட்டு கல்வி)


(அடுத்து பாரதியின் கற்பனையில் தொழில் பெருக்கம்)


தீசன்

தென்றல் இதழ் 33

3 கருத்துகள்

  1. பாரதி ஒரு பள்ளி ஆசிரியர் என்ற கோணத்தில் நோக்கினால் அவர் அதற்கு எட்டமுடியாத இமயமாய் தெரிகிறார்.

    மிதமிஞ்சிய ஞானப்பார்வையால்
    சில விஷயங்களை அவர் முன்கூட்டியே கணித்துகூறிவிட்டபடியால் அக்கால மக்கள் அதனை அத்தனை சுலபத்தில் சீரணிக்கமுடியாமல் போய்விட்டது.. இப்போது அவை நம்பமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. பாரதி எங்கள் வீட்டுக்குள் நுழைந்து நாளாகிவிட்டாலும் இப்படிப்பட்ட கட்டுரைகளால் இப்போதுதான் என் இதயத்தில் நுழைகிறார்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை