அண்மை

பாரதியாரின் கற்பனையில் ஜீவகாருண்யம்

 


பாரதியார் செய்ததிலே மிக உயர்ந்த கற்பனை அதே சமயத்தில் பாரதி பித்தர்கள் பலராலே அதிகம் பாராட்டப்படாத கற்பனை 'ஜீவகாருண்யம்'. பாரதி கவிதை கட்டுரைகளில் எத்தனைக்கு எத்தனை விடுதலை உணர்வும் ஒற்றுமையும் பிரதிபலிக்குமோ அதேபோல் ஜீவகாருண்யமும் உள்ளிருக்கும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாரத தேசத்தில் இக்கொள்கை இயல்பே. அந்நிய கலாச்சார நாட்டம், அதிக ஆசை, இறை கொள்கையில் நம்பிக்கை இன்மை, உயிர்களிடத்தே அருளின்மை என வீழ்ந்து பாமரராய் விலங்குகளாய் இகழ்ச்சிக்கு உள்ளாகும்படி ஆகி போயினர் நம் மக்கள். குறிப்பாக தமிழ் சாதியர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித நேயத்தை காட்டிலும் உயிர் நேயத்தை அதிகம் காதலித்தது தமிழர்களே.


தன்னூன் பெருக்கத்திற்கு தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251)  என்று திருக்குறளும்,


ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிது (4) என்று இனியவை நாற்பதும்


சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது (8:10) என்று முதுமொழிக்காஞ்சியும்


புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா (12) என்று இன்னா நாற்பதும்


கொலைநின்று தின்றொழுக் வான் யாதும் கடைபிடியா தான்' (74) என்று திரிகடுகமும்


என்றும் புலைக்கு எச்சில் நீட்டார் விடல் (90) என்று ஆசாரக் கோவையும்


உயிர் நோவக் கொல்லாமை நன்று (38) என்று சிறுபஞ்சமூலமும்


கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான் விண்ணவர்க்கும் மேலாவான் (2) என்று ஏலாதியும்


இன்னும் எத்தனையோ தமிழிலக்கிய செய்யுள்கள் வலியுறுத்தியும் நாச்சுவை கருதி ஜீவகாருண்யத்தை அனுவளவேனும் கடைபிடியாத தமிழர்கள் பலர்.


ஜீவகாருண்யமே மோக்ஷ வீட்டின் திறவுகோல் ஞானபாதையின் படிகட்டும் அதுவே (ஞானத்தை தேடி)


பாரத தேசத்தார் அனைவரும் ஜீவகாருண்யவாதிகளாக வேண்டுமென்பது பாரதியாரின் மிகப்பெரிய கனாவாகும்.


"எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்புச் சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமமான அறிவுடையோராய் விடுவார்கள். மாமிஸ போஜனம் செய்யும் வகுப்பினர் அதை நிறுத்தி விட வேண்டும். கீழ் ஜாதியரை நல்ல ஸம்ஸ்காரங்களால் பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடை வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கின்றன. எந்த ஜாதியாக இருந்தாலும் சரி. அவன் மாமிஸ பக்ஷணத்தை நிறுத்தும் படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டு காயத்திரி மந்திரம் கற்பித்து கொடுத்துவிட வேண்டும். அந்தபடி இந்தியா முழுதையுமு பிராமண தேசமாக செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம்" (ஜாதி குழப்பம் - பாரதி)


ஆனால் இன்றைய நம் மக்களுக்கு 'பிராமணர்' என்பது ஓர் நிலை என்றும் அது பிறப்பால் வருவதல்ல ஒழுக்கத்தால் வருவது என்று சொல்லி புரியவைப்பது கஷ்டம். காரணம் முன்னையர் செய்த பிரிவினை பேச்சாலும் அந்நியர் இழைத்த அநியாய சூழ்ச்சியாலும் பாரத உறுப்புகள் இன்று பல விரோத இனக்குழுக்களாக சிதைவுப்பட்டுவிட்டது. இதற்கு சரியான தீர்வு அன்பு மற்றும் உயிர் கருணை என்பதை பாரதி மிக ஸ்திரமாக நம்பினார், அதனாலே பள்ளி பிள்ளைகளுக்கு 'சிபி சக்கரவர்த்தி புறாவை காப்பாற்றும் பொருட்டாக தன் சதையை அறுத்துக் கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி மாணவர்களுக்கு ஜீவகாருண்யமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்க வேண்டும்" (மதபடிப்பு - பாரதி) என்று ஜீவகாருண்யத்தை தேசீய கல்வி பாடமாக்க எண்ணினார்.


சிறுவயதில் பெறப்படும் அறிவு உறுதியானது. அதிலும் அன்பும் கருணையும் இளம் பிராயத்தில் பெறுவோமேயானால் நாட்டில் இராணுவங்கள் தேவையில்லை. ஆயுதங்கள் அர்த்தமற்றதாகி போகும். எல்லைகள் வேண்டியதில்லை. புள்ளினம் போல் வாழ்வோம். எனில் உண்மையான சுதந்திரம் உயிர் கருணையில் விளையும்.


"கண்ணபிரான் 'எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்' என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் - எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மன மொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வர வேண்டும் என்பது ஹிந்து மதத்தின் மூல தர்மம் என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளும் படி செய்தல் வேண்டும். மாமிஸ போஜனமும் மனிதன் உடல் இறைச்சியை தின்பது போலாகும் என்றும், மற்றவர்களை பகைத்தலும் அவர்களை கொல்வது போலேயாகும் என்று ஹிந்து மதம் கற்பிக்கின்றது" (மதபடிப்பு - பாரதி)


உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார் பெறின் (257)


"எல்லா மனிதரும் உடன் பிறந்த சகோதரரைப் போல் ஆவார்கள் என்றும், ஆதலால் எல்லாரையும் ஸமமாகவும் அன்புடனும் நடத்த வேண்டும் என்றும் கருதுகிற தர்மிஷ்டர்கள் தம்முடைய கருணாதர்மத்தை நிலைநிறுத்த கொலை முதலிய மஹாபாதகங்கள் செய்வது நமக்குச் சிறிதேனும் அர்த்தமாக கூடாத விஷயம். கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் 'தம்மை தாம் உணராத பரம மூடர்கள்' என்று நான் கருதுகிறேன். அதர்மத்தை தர்மத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையாலே தான் வெல்ல முடியும். கொலையும் கொள்ளையையும் அன்பினாலும் ஈகையாலும் தான் மாற்ற முடியும். இது தான் கடைசி வரை கைவரக்கூடிய மருந்து மற்றது போலி' (செல்வம் - பாரதி)


பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய் (பகைவனுக்கு அருள்வாய்)


ஜீவகாருண்யத்தின் எளிய இலக்கணம் 'எல்லா உயிரும் இன்புற்று வாழ்க' என்று மனத்தில் நிறுத்துவதாகும். அது பகைவனானாலும் சரி. பாம்பானாலும் சரி.


"உலகத்து மனிதர்களெல்லாரும் ஒரே ஜாதி. 'இந்த சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே' என்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன். அப்படியிருந்தும் ஐரோப்பியா மடிவதில் எனக்கு சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு' (தமிழ்நாட்டின் விழிப்பு - பாரதி)


பார்வையில் கருணை பிறந்தால் பார் இதன் மேல் சமத்துவம் பிறக்கும். சமத்துவம் அமைதியையும் அமைதி சுகத்தையும் பிரசவிக்கும். எனில் கருணை நெறியை காருண்ய வழியில் அடைவதே உயர்ந்த அறமாகும்.


"மனிதன் செய்யும் அநியாயங்களில் மாமிஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயமென்று என் புத்திக்கு நிச்சயமாய் புலப்படுகிறது. மனிதன் செய்யக் கூடிய பாபங்கள் அனைத்திலும் இதுவே மிகக் கொடிய பாபம் என்று என் புத்திக்கு ஐயந்திரிபற விளங்கி யிருக்கிறது" (மிருகங்களை நாகரிகப் படுத்தும் வழி - பாரதி)


உயிர் கொலை செய்து உணவெடுப்பவன் எவனோ அவனை இறைவன் விரும்ப மாட்டார் என்பது என் துணிபு. தான் பிரசவிக்கும் குழந்தைகளையெல்லாம் கொல்லும் குழந்தையை எந்த தாய்க்கு பிடிக்கும்? இதிலும் மூட செயல் அனைத்திற்கும் மூத்த மூட செயல். அந்த இறைவனையே காரணமாய் கொண்டு உயிர் பலி தருவதாகும்.


"நமது தேசத்து சில்லரைத் தெய்வங்களின் கோயில்களிலே பூஜை தோறும், சில இடங்களில் 1000 ஆடு 10000 ஆடு வீதம் கூட வெட்டுப்படுவதை நினைக்கும் போது எனக்கு அடக்க முடியாத கோபமுண்டாகிறது.


ஆடு மாடு தின்போரை நாம் வாய்க்கு வந்தபடி வைதால், அதனின்றும் அவர்களுக்கு நம்மீது கோபம் அதிகப்படுமே யொழிய, அவர்கள் மாமிஸ பக்ஷணத்தை நிறுத்த வழியுண்டாகாது. தக்க நியாயங்கள் காட்டுவதும் அவர்களுடைய காருண்யத்தை நாம் கெஞ்சுவதுமே மனிதர் நாம் சொல்லும் கக்ஷியை (ஜீவகாருண்யம்) அங்கீகரிக்கும்படி செய்யும் உபாயங்களாம்" (மிருகங்களும் பக்ஷிகளும் - பாரதி)


ஊனுடலை வருத்தாதீர், உணவியற்கை கொடுக்கும் (அன்பு செய்தல்)


பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே ஜீவகாருண்யத்திற்கு முக்கிய லட்சியமென்றறிய வேண்டும் (வள்ளலார் என மதிக்கப்படும் இராமலிங்க அடிகளார்)


எனில் பசியினால் வரும் துன்பத்தை களைவதுமே ஜீவகாருண்ய நீதி என்றறிதல் அவசியமாகிறது.


"சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேரிகள் என்பதும் உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனாலும், பிச்சையென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை" (செல்வம் - பாரதி)


அதன்படி எல்லா உயிரும் இன்புற்று வாழ வழி செய்ய வேண்டிய மனிதனே ஊன் உணவை உட்கொண்டு ஜீவநாசத்திற்கு வழியாகிறானே என வருந்திய பாரதியார் தன் காருண்ய கட்டுரை இறுதியில் சொல்கிறார், "உங்கள் காலில் வீழ்ந்து கோடி தரம் நமஸ்காரம் செய்கிறேன். மாமிஸ பக்ஷணத்தை நிறுத்துவதற்கு வழி செய்யுங்கள்" (மிருகங்களும் பக்ஷிகளும் - பாரதி) என்று.


வீர உரமிக்க வரிகளை விதைத்த மகாகவியே லோக உயிர்களை காக்கும் பொருட்டு 'காலில் வீழ்ந்து கோடி நமஸ்காரம் செய்கிறேன்' என வேண்டுவது உண்மையில் வலியுண்டாக்குவது மட்டுமல்ல பாரத மக்களுக்கு ஜீவகாருண்யம் எனும் பெரும் தர்மம் எத்தனை முக்கியப்பட்டது என்பதையும் விளக்குகிறது.


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்

உண்மை யென்று தானறிதல் வேணும்

வயிர முடைய நெஞ்சு வேணும் இது

வாழும் முறைமையடி பாப்பா (பாப்பா பாட்டு)


வாழும் முறைமையான பாரதியின் இந்த கற்பனை உத்தமமானதாகும். ஆதலால் பாரததேசமே ஜீவகாருண்யத்தை விட்டுவிடாது நிறைவேற்றுவதாகுக. இன் மொழி பயக்கும் தமிழர்களே! நாம் நமது நித்திய தர்மமான ஜீவகாருண்ய நிலைக்கே செல்வோமாகுக.


(அடுத்து பாரதியின் கற்பனையில் தர்ம ஸ்தாபிதம்)


தீசன்

தென்றல் இதழ் 35

1 கருத்துகள்

  1. அருமை. அடுத்து பாரதியின் பார்வையில் தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் 🙂

    பதிலளிநீக்கு
புதியது பழையவை