அண்மை

சமய திணிப்பு இல்லாத சுதந்திரமான குடியரசு தினம் வேண்டும்

 

குடியரசு தின அணிவகுப்பு 2022

73 - வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. எத்தனை போராட்டம் தியாகங்களுக்கு பிறகு சுதந்திரம் பெற்றிருப்பார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளிலே நமக்கென்று சட்டத்தினை வகுத்தும் தந்திருக்கிறார்கள். அந்த நாளையே நாம் குடியரசு தினமாக சனவரி 26ல் வருடம் தோறும் கொண்டாடி வருகிறோம்.


"இந்தியாவில் உள்ள ஒரு சிறப்பான விசயம் என்ன தெரியுமா? வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு, இந்தியா மதச்சார்பற்ற நாடு; அனைத்து மதங்களும் சமம் என்று நம் இந்திய மக்கள் காகிதத்தில் எழுதவில்லை தங்களின் இதயத்தில் எழுதியுள்ளார்கள்"


ஆகா! என்ன ஒரு அற்புதமான கொள்கை. என்னே ஒரு அற்புதமான பொய். இந்த பாரதநாட்டில் நானும் ஒரு குடிமகனாக வாழ்வதை எண்ணி பெருமிதம் அடைகிறேன் தான். ஆனால் தற்போது நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பை பார்த்ததும் எனக்கு ஒரே மன வருத்தமாகிப்போனது. தமிழக மற்றும் பிற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், டெல்லி அணிவகுப்பில் இந்து மத கடவுள்கள் மட்டுமே அணிவகுப்பில் இடம் பெற்றதை குறித்தே அந்த வருத்தம். அதை பார்த்ததும் இந்தியாவில் உள்ள மற்ற மதத்தவர் மற்றும் ஏனைய பிற சமய நம்பிக்கைகளை கொண்டோரின் எண்ணம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்தால் உங்களுக்கும் அந்த வருத்தம் ஏற்பட்டிருக்கும். இந்துகள் கூட்டாக இணைந்து பிற சமயத்தவரை ஒதுக்குவது போல் ஆகாதா இது? 'நம் தாயவள் நம்மை புறக்கணிக்கிறாளே' என்று அவர்களுக்கு தோன்றாதா? இது என்ன நவீன தீண்டாமை. ஒரு தாய்க்கு இரண்டாவது பிள்ளை பிறந்தவுடன் முதல் பிள்ளைக்கு பெற்றோர்கள் தன்னை தனிமையாக்கி விட்டார்கள் என்று தோன்றுமாம். ஒரு இஸ்லாமிய-இந்திய தேச பக்தனுக்கோ ஒரு கிறிஸ்தவ-இந்திய தேச பக்தனுக்கோ இப்படிபட்ட மனநிலையை அல்லவா இந்திய அரசு தந்துவிட்டது.


எல்லா மதங்களும் சமம் எல்லோரும் இங்கு ஒத்துமையாக வாழ்கிறோம்! என்ற பெருமையை சொல்லும் விதமாக ஒரே ஒரு அலங்கார ஊர்தியையாவது வைத்திருக்கலாமே?  இல்லையெனில், மதம் சார்ந்த ஊர்திகளையே அனுமதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுவரையில் ஆட்சி செய்த எந்த அரசும் ஒற்றுமை நோக்கோடு எதையும் செய்யவில்லை. 


அந்தந்த அரசு அதற்கென்று  பொருந்தும் கொள்கையின் படியே அலங்கார ஊர்தியை ஆளும் முறைமையையும் முதன்மை படுத்திக்கொள்கிறதே? 


72 -வது குடியரசு தின விழாவில், பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பில் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. 71 -வது குடியரசு தின விழாவில் தமிழகம் சார்பிலே 'ஐயனார் சிலை' அணிவகுப்பில் இடம்பெற்றது. 


இது போன்று மத சின்னங்களையும் பாடல்களையும் ஒரு பெரிய பொது குழுவுக்கு வைத்தால் அதே குழுவிலோ அல்லது அதை சார்ந்து இருக்கும் பிற சமயத்தை சேர்ந்தோருக்கும் தங்களை நிராகரிப்பது போன்ற எண்ணம் வராமல் இருக்காதா?


இதைவிட என் மனதில் தோன்றிய அதிகமொரு தாக்கம், அலங்கார ஊர்திகளை பரிசீலித்து அதனை அனுமதிக்க அமைக்கப்பட்ட எக்ஸ்பர்ட் குழுவினர் தமிழ் நாடு அலங்கார ஊர்தியை அனுமதிக்காதற்கு சொன்ன காரணம் தான்.  


என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா? வெளிநாட்டினருக்கு தெரிந்தவர்களையே அலங்கார ஊர்திகளில் அமைக்கவேண்டும் என்று சொல்லி தமிழ்நாடு ஊர்தி நிராகரிக்கப்பட்டது.  அந்த ஊர்தி நிராகரிக்கப்பட்ட காரணம் வீரமங்கை வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சி, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர்களை தெரியாதாம் வெளிநாட்டு தலைவர்களுக்கு! கேள்வி என்னவென்றால் வெளிநாட்டினருக்கு இவர்களை தெரியவில்லையா? இல்லை, மத்திய அரசால் அமைக்கப்பட்ட எஸ்பர்ட் குழுவினருக்கு இவர்களை தெரியவில்லையா? என்பதே.  ஜான்சி ராணிக்கு முன்பே,  வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள், கணவனை இழந்து தனி ஒர் ஆளாக நின்று சிவகங்கை சீமையை ஆங்கிலேயரிடம் இருந்து காத்து அவர்களது பின்னங்கால் பிடறியில் அடிபட  ஓடச்செய்தவர்.


இந்தியாவில் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியவரும், ஏழைகளுக்காக பல போராட்டங்களை நடத்தி, தன் சொத்து முழுவதையும் விற்று இரண்டு கப்பல்களை வாங்கி கப்பலோட்டிய தமிழன் எனும் பெயரை பெற்றவரும் பல வருடங்களாக சிறையில் அவதிப்பட்டு செக்கு இழுத்து செக்கிழுத்த செம்மல் என்ற பட்டத்தை பெற்றவரும் ஆவார் வ.ஊ.சி.


ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு ஞானத்தெளிவை வைத்து பாடியவரும் தமிழக மக்களிடையே விடுதலை உணர்வை பிழிந்து தன் கவிரசத்திலே ஊட்டி எந்த கவிஞரும் எட்டாத உயரமான மகாகவி என்ற பீடத்தில் அமர்ந்திருப்பவர் தான் மகாகவி சுப்ரமணிய பாரதியார். 


இவர்கள் யாவரையும் தெரியவில்லை என்று கூறுவது, அதுவும் இந்திய வரலாற்றையே ஆக்க பாடுபட்டோர்களை அறிய வேண்டிய எக்ஸ்பர்ட் குழுவே தெரியவில்லை என்று கூறுவது, நம் வரலாற்றை அடக்கி ஒடுக்கி நசுக்கவே செய்த ஏற்பாடாக தோன்றுகிறது. அது மட்டுமின்றி பன்னிரண்டு மாநிலங்கள் அதுவும் மத்திய அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி இருப்பதும் ஒரு அரசியல் ரீதியிலான காரணமாக இருந்தாலும் இப்படி உண்மையாக சுதந்திரத்திற்கென உழைத்த உத்தமர்களை 'எங்களுக்கு தெரியாது' என்று கூறுவது என்னைகேட்டால் சுத்த மடத்தனம்.


முறைப்படி குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டுக்காக போராடி விடுதலை வாங்கி தந்தவர்களை சிலையாக வைக்கலாம், இல்லையெனில் நாட்டுக்காக விளையாடிய வீரர்கள், தற்போது நாட்டுக்காக உழைக்கின்ற உத்தமர்கள் போன்றவர்களை அணிவகுப்பில் வடிவங்களாய் வைக்கலாம். ஆனால் சுதந்திரத்திற்கும்,  குடியரசுக்கும் சம்பந்தமே இல்லாத ஆஞ்சிநேயரையும், சன்னியாசிகளையும், ராமர் கோவிலையும், பிள்ளையாரையும் அலங்கார ஊர்திகளில் வைத்து, சுகந்திரத்திற்காக உழைத்த தலைவர்களை நிராகரிப்பது எந்த வகையில் நியாயம்?


இந்தியநாடு மதசார்பற்ற நாடு என்பதை எப்படி மறந்து போனதோ, அது போன்றே அது மாநிலசார்பற்ற நாடு என்பதையும் மறந்து போனது இந்நிகழ்வின் மூலம்.


மாணவர்களும் இளைஞர்களும் நம் தேசத்திற்காக பாடுபட்டு உழைத்த நல்லவர்களை மறக்காமல் இருக்கவேண்டியாவது அடுத்தடுத்த ஆண்டுகளில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க வழிவகை செய்தல் வேண்டும்.


ஒராயிரம் பேர் அதிகாரத்தில் இருந்து கொண்டு இது தான் இந்தியா என்றால், அது இந்தியா ஆகாது. வேண்டுமானால் அவர்கள் எழுப்பும் அதிகார ஒலி ஏனைய பிற நாடுகளுக்கு எளிதில் சென்றடையலாம். ஆனால் உண்மையில் இந்தியா என்பது மக்கள். மக்களாகிய நாம் ஒற்றுமையாக இருந்தால் எத்தனை கேட்டையும் தகர்க்கலாம்.


வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறியும் 12 மாநிலங்கள் மட்டும் இந்த அதிகார நடப்புக்கு தலையசைத்து உள்ளதென்றால், பெரிய மூவர்ணங்கலந்த ஆட்டு மந்தையில் பன்னிரண்டு காவி ஆடுகள் புகுந்துவிட்டதென்று பொருள்


"யாதும் ஊரே யாவரும் கேளிர்"


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"


இதையெல்லாம் தமிழன் மட்டுமே கிளி பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக்கொண்டுள்ளான். எவரும் காது கொடுத்து கேட்பதாய் எனக்கு தோன்றவில்லை.


குகன்

தென்றல் இதழ் 35

கருத்துரையிடுக

புதியது பழையவை