அண்மை

வள்ளியின் அலெக்ஸ் காதல் சிறுகதை

 

வள்ளியின் அலெக்ஸ் காதல் சிறுகதை

இரவு நேரம், பழனி முருகன் கோவிலில் வசந்த விழாவுக்காக முருகன், வள்ளி - தெய்வானை ஒரு சேர அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். ஓதுவார்கள் ஒரு சேர சுதியுடன் முருகனுக்கு துதி பாடினர். மல்லாரி இசையை தொடங்கும் முன் வாசிக்கும் அலாரிப்பை மேளம் வாசிப்பவர் சொல்லிக் கொண்டிருந்தார்.  சிறிது நேரத்துக்கு பின் பிரகாரத்தை சுற்றி வர, முருகனை அங்கிருந்த இளைஞர்களும் மூத்தோரும் தோளில் சுமந்தனர்.  நாதமும் மேளமும் மல்லாரியை வாசிக்க தொடங்கியது.  அந்த மல்லாரி இசை மெதுமெதுவாக வேகமெடுக்க முருகனை சுமந்தவர்கள் வலியை மறந்து, ஏதோ ஒர் வெறி வந்ததுபோல் முருகனை முன்னும் பின்னுமாக ஓடியும் இடதும் வலதுமாக அசைத்தும் முருகனின் ஆனந்த வசந்தத்தை நடத்த தொடங்கினர். அங்கிருந்த அனைவரின் கவனமும் முருகன் மீது இருக்க வள்ளியின்‌ பார்வை அருகிலிருந்த வைதேகியை பதட்டமுடன் நோக்கியது. வைதேகி கால்களில் தாளமிட்டுக்கொண்டே இசைக்கேற்ப உடம்பை சிறிதாக அசைத்துக்கொண்டிருந்தாள். உடனே அவள் கையை பிடித்து அமைதிபடுத்த முயன்றாள் வள்ளி. ''ஏ… புள்ள,  அடுத்த மாசம் கல்யாணம், இன்னும் நீ சாமி ஆடுறத நிறுத்தமாட்டுற!?" என்று வள்ளி கேட்க "வையாத புள்ள, நான் என்னப்பன்றது.‌ சின்ன வயசுலேந்தே என் உடம்புல சாமி வந்து இறங்குது… நான் என்ன பண்ண முடியும்?" என்றாள். "இதையே சொல்லி ஊர ஏமாத்து, உங்க அம்மாவும் எங்க அம்மாவும் உன் நடிப்ப நம்பலாம், நான் நம்ப மாட்டேன்.  இந்த பழக்கத்த விட்டு தொலை" சலிப்பான குரலில் வள்ளி கூறினாள்.


இந்த உரையாடலுக்குள் மக்கள் கூட்டம் முருகனை பின் தொடர்ந்து சிறிது தூரம் போனது. வைதேகியும் பின் தொடர முற்பட மீண்டும் அவள் கையை வள்ளி பிடித்து "டைம் ஆகிட்டு புள்ள, அவுக வந்துடுவாக. வா நாம போகலாம்" என்று கூறி கோயிலுக்கு வெளியே செல்ல அவளை பின்தொடர்ந்தே வைதேகியும் நடந்தாள்.


அவள் கோயிலின் வெளி வந்ததுமே 'அலெக்ஸ்' எதிர்பட்டான். உடனே கோயிலின் வெளிப்புறம் உள்ள நைப்பு தன்மையில் இருந்த சிமெண்ட் கட்டையில் வள்ளியும் அலெக்ஸூம் அமர வைதேகி அவர்களுக்கு நேராக சிறிது தொலைவில் அமர்ந்து கொண்டாள்.


வள்ளி ''என்ன கீழ நிக்கிறேனு சொல்லிட்டு மேல வந்துடீக!?" என்று கேட்டாள்.


"ஆமா அவசரமா கிளம்பனும் அதான் உன்ட கடைசியா பேசலாம்னு வந்தேன்"


"கடைசியாவா??"


"இல்லடி. சென்னைலேந்து ஒரு மாசம் கழிச்சு தான் வருவேன் அதான் கடைசியானு சொன்னேன்"


"எப்ப கிளம்புறீக?"


"அப்பா அம்மாலாம் சாயுங்காலமே கிளம்பிட்டாங்க. நான் இப்ப கிளம்பிடுவேன். வேலைல சேர்ந்துட்டு நிலமை சரியானதும்… நேரா உங்க வீட்டுக்கே வந்து உன்ன அழைச்சிக்கிட்டு போறேன்" என்று அவன் சொல்லிய உடன் வள்ளியின் முகத்தினிலே ஒரு வித சோகம். 


அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்த வைதேகி ‘இரு மனம் சேர்ந்து மதம் எனும் மதில் சுவரை கடந்து ஓர் அற்புத உலகில்’ அவர்கள் இருப்பதை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்க, அவள்  அருகில் ஒரு குரங்கு ஒன்று வந்தது அதை பார்த்த வைதேகி  வெடுக்கென்று எழுந்து  அதனிடமிருந்து சிறிது தொலைவு போனாள். அந்த குரங்கு, வைதேகி அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்து எதிரே வள்ளியையும் அலெக்ஸையும் பார்வை விளக்காமல் நோக்கியது. இதை பார்த்த வைதேகிக்கு தான் அந்த குரங்கை போல அவர்களை நோட்டமிட்டதை நினைக்க, அவளே அந்த குரங்காக தோன்றியது. 'ச்சீ' என்பது போல முகத்தை சுழித்தாள். சில நிமிடங்களில், அலெக்ஸ் வள்ளியிடம் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட வைதேகி வள்ளியை நெருங்கினாள்.


அன்று தான், வள்ளி அவனை இறுதியாக கண்டாள். நான்கைந்து மாதங்கள் கடந்துவிட்டன. அவள் தோழி வைதேகிக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஆடி மாதம் காரணமாக அவள் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். உடல் சற்று சதை போட்டிருந்தது மற்றபடி பேச்சிலும் குணத்திலும் அவள் மாறாது அப்படியே இருந்தாள். வள்ளியை காண வள்ளியின் வீடான பக்கத்து வீட்டுக்குள் புக "வைதேகி...வாமா… புருஷன் வீட்ல இருக்கிறவுக எல்லாம் நல்லா இருக்காகலா?" என சிரித்த முகத்துடன் வள்ளியின் தாய் மீனாட்சி வரவேற்றாள்.


"நல்லா இருக்காக… எங்க வள்ளி காணல?"


"கொல்லைல உட்காந்துகிடக்குறா. போய் பாரு…"


பைய நடந்து கொல்லைப்புறம் வந்த வைதேகி, தண்ணீர் தேக்க தொட்டியின் மீது அமர்திருந்த வள்ளியை நெருங்கி ''வள்ளி... நல்லா இருக்கிறீயா?" என்று கேட்க "ம்ம்… இருக்கேன்" என்று கூறினாள்.


"என்ன ஆச்சு? அவுக வந்தாகளா?"


"இல்ல…"


"நீயாவது உங்க அம்மாகிட்ட விவரத்த சொல்லலாம்ல?"


"அலெக்ஸ்னு ஒருத்தன் இருந்தான். அவன் என்ன லவ் பண்ணான். என்ன கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லி ஏமாத்திடான் அந்த களவாணிபய, அவன தான்  கல்யாணம் பண்ணிபேன்னு சொல்ல சொல்றியா புள்ள?"


"ஆமா…"


"அப்படி நான் சொன்னா எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. ஏனா அவன் வேற ரிலிஜன். அந்த கடவுள் வந்து சொன்னாதான் ஏதாவது நடக்கும்!" என்று கூறி மௌனத்துடனே அந்த தண்ணீர் தொட்டியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டிருக்க வைதேகி அவளை தேற்ற ஆறுதல் வார்த்தை இல்லாமல் கொல்லைப்புறத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைய மீனாட்சி எதிர்பட்டு "ஏதாவது சொன்னாளா?" என்று கேட்டாள்.


"இல்ல ஒன்னும் சொல்லல…"


"உன்கிட்டையும் அவ சொல்லலையா?, ஏதோ பேயடிச்ச மாதிரியே இருக்கா!, சரியா சோறு திங்கிறதே இல்ல. உடம்பும் இளைச்சி போயிட்டு. அதான் உங்க அம்மா சொன்னாக குறி சொல்றவர கேட்டா விவரம் தெரியும்னு. நாளைக்கு வராராம், கேட்டு பாப்போம்!…"


வள்ளியின் தாய் மீனாட்சி கூறிய செய்தியால் வைதேகிக்கு ஒரு நல்ல யோசனை கிடைத்தது.


மறுநாள் காலை. சரியாக எண்ணெய் வைத்து வாராத சடைமுடி, கறுத்த நெற்றியை முழுவதும் நிறைத்த விபூதி, கழுத்தில் சிகப்பு மணிமாலை இவ்வாறான தோற்றத்தில் அந்த குறி கூறும் ஆள் வந்தார்.  ஆட்டோவில் வந்து அவர் இறங்கியதை கண்டதுமே வைதேகியின் அம்மா அவரை வள்ளியின் வீட்டுக்கு அழைத்து போக வைதேகியும் பின் தொடர்ந்து சென்றாள். 


அவர் ஒரு கறுப்பு சால்வையை விரித்து அதன் மீது அமர்ந்து பின் காளியின் கோரமான புகைப்படத்தை எதிரில் வைத்தார்.  அவர் எதிரில் வைதேகி அமர்ந்து தன் தோழியின் உண்மையான பிரச்சனைய எடுத்து சொல்லி காதலுக்கு உதவி செய்ய சொல்லலாமா? என்றுபடி அவர் முகத்தையே பார்த்து சிந்தித்து கொண்டிருக்க அவரோ ''ஏம்மா… இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உட்கார்ந்து இருக்கே இந்த பொண்ண தான் சொன்னீங்களா?"  என்று அவர் வைதேகியை பார்த்து கேட்க வைதேகிக்கு சற்று கோபம் வந்தது. 


"இவ இல்ல சாமி.  வள்ளி இங்குட்டு வா…" என்றதும் வள்ளி வந்து குறி கூறுபவரின் எதிரில் அமர்ந்தாள். அவர் கையில் இருந்த உடுக்கையை அடித்துக்கொண்டே கண்களை மூடினார். வைதேகி, உண்மையான காரணம் இந்த கூறி கூறுபவர் கூறினாலே வள்ளியின் பிரச்சினை கால்வாசி தீர்ந்ததுபோல ஆகிவிடும் என்று நினைக்க  அவர் "தெய்வம் வரல… ம்ம். தெய்வம் வாசல்லையே நிக்கிது. அதான் உன் கஷ்டத்தையும் உன் குடும்ப கஷ்டத்தையும் போக்க மாட்டுது! அது உள்ள வந்தால்தான் உன் மக சரியாவா...ம்ம்'' என்று அவர் சொல்லியதும் வைதேகிக்கு ஏமாற்றம். உடுக்கையின் சத்தத்தை  நிறுத்தாது அவர் மீண்டும் கண்மூட "ஏய்…" என்றது மற்றொரு குரல். அது வைதேகியின் குரலே, அவள் நாக்கை துருத்தி கைகளை பின்னிக்கொண்டு உடலை முன்னும் பின்னுமாக அசைக்க கண்மூடி இருந்த குறி கூறுபவர் கூட கண்களை திறந்து உடுக்கையை நிறுத்தாது அவளை உற்றுநோக்கினார்.


"ஏய்… நான் மாரியாத்தா வந்துருக்கேன்… ம்"


சுற்றி இருந்தோர் ஒருகணம் நடுங்கி போனார்கள்.


"சொல்லு ஆத்தா" என்றது குறி கூறுபவரின் குரல்.


"தெய்வம் நான் உள்ள வந்துட்டேன். இந்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணாதான், அவ உடம்பு மனசு எல்லா சரியா ஆகும். அதுவும் அவ மனசுக்கு பிடிச்சவன, புரியுதா…?"


"யாரு தாயி அது!?" என்றது பதட்டத்துடன் மீனாட்சியின் குரல்.


"அதுவா… அவென் இந்த ஊர்ல தான் இருந்தான். அவென் வேற மதத்தை சேர்ந்தவனா இருந்தாலும் இவ மனசுக்கு புடிச்சதால அவன தான் கல்யாணம் பண்ணி வைக்கனும். அவென், இவள ஏமாத்திட்டு வேற ஊருக்கு போயிட்டான்.  இந்த குரங்குக்கு வேணா அவன தெரியாம இருக்கலாம்! (குறி கூறுபவரை நோக்கி கையை நீட்டி கூறினாள்) ஆனா மல கோயில்ல உள்ள ஆம்பள குரங்கு ஒன்னு இவுங்க ரெண்டு பேரும் பழகியத கண்டுச்சி. அது பொய் பேசாது இவன மாதிரி (அவர் முகத்தில் சின்ன பீதி). நான் தொடர்ந்து இங்குனையே இந்த வீட்டுக்குள்ளயே இருக்கனும்னா, நான் சொன்னத செய்!. இல்ல, நான் பாட்டுக்கு போயிறுவேன்…" என்று கூறி மயக்கமானாள் வைதேகி.


"என் உடுக்கை சத்தம் கேட்டாலே சாமி வீட்டுக்குள்ள வந்துடும்! தெய்வம் சொன்ன படி செய்ங்க… சரியா?'' என்றார் குறி சொல்பவர். "இப்புடி தான் அன்னக்கி…" என்று வைதேகியின் தாயும் வள்ளியின் தாயான மீனாட்சியும் மேலும் குறி கூறுபவர் சொல்லியதை வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருக்க, வள்ளி உள்ளே சென்று தண்ணீரை எடுத்து வந்து வைதேகியின் முகத்தில் தெளித்தாள். மெதுவாக எழுந்த வைதேகி, வள்ளியின் காதருகில் "தெய்வமே சொல்லிட்டே புள்ள! பிறவு என்ன?" என்றதும் வள்ளியின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட, அதை பார்த்த வைதேகிக்கு மன நிறைவு அடைந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. 


குகன்


குறுந்தொகை 26 செய்யுள் 


அரும்பறமலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கெழு பெருஞ்சினைஇருந்ததோகை

பூக்கொய்மகளிரிற்றோன்றுநாடன்

தகாஅன்போலத்தான்றீ துமொழியினும்

தன்கண்கண்டது பொய்க்குவதன்றே

தேக்கொக்கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய் 

வரையாடுவன்பறழ்த்தந்தைக்

கடுவனும்அறியும்அக்கொடியோனையே.


பாடியவர்: கொல்லனழிசி


குறுந்தொகை 26 உரை விளக்கம்


அரும்புகள் மலர்ந்து கரிய அடிப்பக்கத்தை கொண்ட வேங்கை மரத்தின் மேலே உள்ள பெரிய கிளையில், இருந்த மயிலானது, அந்த மலரைக் பறிக்கும் மகளிரைப் போலக் காட்சி அளித்தது. அத்தகைய நாட்டை உடையவன் தலைவன், அவன் இவளுக்கு உரியவனாகும் தகுதி இல்லாதவன் என்பது போலவும், தலைவியின் நோய்க்குக் காரணம் தெய்வத்தால் வந்த குற்றம் என்று கட்டுவிச்சி கூறினாலும், தேன் போன்ற இனிய மாங்கனியை உண்ணுகின்ற, முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் சிவந்த வாயையும் கொண்ட, மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையாகிய, ஆண் குரங்கும், அந்தக் கொடியவனாகிய தலைவனை கண்டிருக்கிறது.  தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை, தான் கண்டதில்லை என்று அந்த ஆண்குரங்கு பொய் சொல்லாது.

தென்றல் இதழ் 34

3 கருத்துகள்

  1. எழுதும் ஆற்றல் கூடிக்கொண்டே செல்வது கண்டு முகம் மட்டும் அல்லாது அகமும் மகிழ்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. தலைவரின் கதை என கதை ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் கீழே பார்த்ததும் மிக மகிழ்ச்சி அடைந்தேன்.🥰

    பதிலளிநீக்கு
புதியது பழையவை