அண்மை

மூதுரை வழி வாழ்ந்திட செய்வீர்



சுதந்திர போரட்டத்தில் எத்தனையோ பேர் ஈடுபட்டாலும் மகாத்மா காந்தியைத்தான் நம் நாட்டு குழந்தைகள் தாத்தா என்று உரிமையோடு அழைக்கிறார்கள். நேருவைத்தான் மாமா என்று அழைக்கிறார்கள். சங்க கால பெண்பாற் புலவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தாலும் நம் ஔவை பாட்டியைத்தான் பாட்டி என்று அன்புடன் அழைக்கிறார்கள்.


ஏனென்றால் சொந்த பாட்டி போல நம் எல்லாருக்கும் வாழும் வழி சொன்னவர் ஔவை.


இந்த வாரம் ஔவையை பற்றி எழுதலாம் என ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவற்றை படித்துக் கொண்டு இருந்தேன். கொன்றை வேந்தனில் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், 

தாயிற் சிறந்தொரு கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை போன்ற வரிகளை படித்தேன். இந்த வரிகள் பல முறை படித்ததுதான். பலமுறை பலரால் கேட்டதுதான். இருந்தாலும் என் வாழ்க்கையை இந்த வார்த்தைகளோடு பொருத்திப் பார்த்தேன். தாய்க்கு சோறு போடாமல் கோவில் கோவிலாக அலைவதால் பயன் இல்லை. எனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் கழித்து வியாபார நிமித்தமாக தனிக்குடித்தனம் செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்டேன்.  இந்த செய்தி கேட்டு, நான் நிரந்தரமாக பிரிந்து விடுவேனோ என்று," நீ படித்த படிப்பு உனக்கு இதைத்தான் சொல்லி தந்ததா?" என்று வேதனைப்பட்டார்கள். ஆனால் புதிய வீட்டுக்கு வந்து விளக்கேற்றி வைத்து ஆசிர்வதித்தார்கள். இதன் பின்னர் 250 வாரம் அவர்கள் உயிரோடு இருந்தார்கள். அந்த 250 வாரத்தில் 240 வாரமாவது அம்மாவை ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தோடு சந்தித்து பல செய்திகளை பேசிவருவோம். தனக்கு இது வேண்டும் என்று எப்போதும் கேட்டதில்லை. முகம் பார்த்து பேசினால் போதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கலாம். 30 வயதிலிருந்து பல நோய்களோடு போராடினாலும் 80 வயது வரை வாழ்ந்தார்கள்.


நாங்கள் சகோதர சகோதரிகள் 4 பேர் சிறுவர்களாக இருந்த போது தேரோட்டத்துக்கு எங்கள் தந்தையார் அழைத்து சென்றார்கள்.  ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் தேர் தெரியாததால் ஒவ்வொருவரையும் தூக்கி காட்டினார்கள். சிலரை தோல் மீதும் சிலரை தலை மீதும் தூக்கி காட்டினார்கள்.  தனக்கு தெரியாதது கூட தன் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும் என நினைப்பவர்தான் தந்தை. இறக்கி விட்ட போது கூட்ட நெரிசலில் ஒரு இடத்தில் காணாமல் போய்விட்டேன். என்னோடு வந்தவர்களை கூட்டம் இழுத்து சென்று விட்டது. நான் அழ ஆரம்பித்து விட்டேன்.  சிறுது நேரத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. என்னுடைய அழுகை சத்தத்தை துல்லியமாக கேட்டு 200 மீட்டருக்கு அப்பால் இருந்த என் தாய் என்னை தூக்கிய பின்புதான் எனக்கு உயிர் வந்தது.


என் தந்தை, எனது 23 ஆம் வயதில் தான், ரிடையர் ஆன போது தனது வேலையில் சேர சொன்னார்கள். அவர்கள் சொன்ன வேலையில் சேர்ந்து இருந்தால் எட்டு மணி நேர வேலைக்கு இன்று ஒரு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்து இருப்பேன். சில காரணத்தால் நான் அதை பிடிவாதமாக மறுத்துவிட்டேன். தந்தை ஆதரவுடன் தொழிலில் இறங்கிவிட்டேன். தந்தை சொல்லை கேட்காததில் அவர்களுக்கு வருத்தம்தான். வியாபாரம் என்றால் ஏற்றமும் இருக்கும். இறக்கமும் இருக்கும். ஏற்றமாக இருந்த போது " நீ செய்தது சரிதான்" என என் தந்தை என்னிடம் கூறியதுண்டு. இறக்கமாக இருந்த போது தந்தை சொல்லை கேட்டிருக்கலாமே என நானும் நினைத்ததுண்டு. ஒரு ஆடவனுக்கு  தன் வயது ஒத்தவர்களோ, தன்னோடு படித்தவர்களோ தன்னை விட ஒரு படி முன்னேறினால் இயல்பாக மணதில் பொறாமை தோன்றும். ஆனால் தனக்கு மகனாக பிறந்தவன் பத்து மடங்கு உயர்ந்தாலும் அவனது மகிழ்ச்சிக்கு அளவிருக்காது.


மூதுரையில் முப்பது பாடல் இருந்தாலும் ஒரு சில பாடல்களின் கருத்துக்களை தொகுத்து கூறுவது மட்டுமே என் நோக்கம்.


கல்வி கேள்வியில் தேர்ச்சி பெறுவதே மனிதனின் அடிப்படை வளர்ச்சிக்கு காரணமாக அமையும் என்பார் அவ்வை.

நற்குணம் அமைவது கல்வியாலும், பிறந்த குலத்தினாலும் என்பார். நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஒடி புல்லுக்கும் பாய்வது போல் நல்லார் ஒருவர் உளரேல் அவருக்காக  எல்லோர்க்கும் பெய்யும் மழை என கூறுகிறார்.


மன்னனும் மாசறக் கற்றோனையும் சீர் தூக்கி பார்த்தால் கற்றவனே சிறப்புடையவன் என்பார் அவ்வை. ஏனென்றால் மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டும்தான் சிறப்பிருக்க முடியும். கற்றவனுக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு கிடைக்கும். நற்றாமரை கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற் போல கற்றாரோடு கற்றாரே சேருவார்கள். மூர்க்கரோடு மூர்க்கர் இணைவதை முது காட்டில் பினத்தோடு சேரும் காக்கைக்கு உதாரணம் காட்டுகிறார்


மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர் என்று வள்ளுவர் கூறியதற்கு வைரமுத்து கோபமாகி மரத்தின் அருமைகளை வார்த்தைகளில் வடித்திருப்பதை நாமும் படித்திருப்போம். ஔவையும் மரத்தை பற்றி சொல்கிறார். கவையாகி கொம்பாகி காட்டகத்தே நிற்பதெல்லாம் நல்ல மரங்கள் இல்லையாம். சபை நடுவே ஒரு வார்த்தையைகூட படிக்கத் தெரியாதவனும் குறிப்பு அறிந்து செயலாற்ற தெரியாவனும் தான் நல்ல மரங்களாம்.


காட்டிலே மயில் ஆட அதைக்கண்ட வான்கோழி தானும் அதுவாக பாவித்து தன் பொல்லா சிறகை விரித்து ஆடுவது போல கல்லாதவன் கற்ற கவியால் எந்த பயனும் கிடைக்க போவதில்லை என்கிறார் ஔவை.


உருவத்தை வைத்து ஒருவரை அறிவால் பெரியவர் சிறியவர் என பிரித்து பார்க்கக் கூடாது. மடல் பெரிது தாழை. மகிழ் இனிது கந்தம். தாழம்பூ மடல் பெரிது என்றாலும், சிறிய மகிழம்பூவின் நறுமணத்துக்கு அது ஈடாகாது. கடல் பெரிது என்றாலும் கடல் நீரால் துணியைக் கூட துவைக்க முடியாது. கடலுக்கு அருகில் உள்ள சிறு ஊற்று கூட சுவையான நீரை அள்ளித்தரும். அதனால் சிறியோர் என்று யாரையும் உருவத்தால் இகழ்தல் கூடாது.


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல். குளத்திலே தண்ணீர் எவ்வளவு உள்ளதோ அந்த அளவுக்கு அல்லியின் தண்டுகள் நீண்டு மலரும். அது போல ஒருவனுடைய நுன்னறிவு என்பது அவன் பெற்ற கல்வியின் அடிப்படையில் உண்டாவதாகும்.

நமக்கு ஏற்படும் நற்செயல்கள் முன்னோர் செய்த புண்ணியத்தின் அடிப்படையில் அமையும். நமக்கு வாய்த்திருக்கும் குணம் என்பது தோன்றிய குலத்தினை சார்ந்தே அமையும் என ஔவை கூறுகிறார்.


நற்பண்பு கொண்டவர்களோடு நாம்  கொண்ட நட்பு நம் நிலை தாழ்ந்தாலும் நீடிக்கும். தீய குணம் கொண்டோரிடம் விரும்பி நட்பு கொண்டாலும் அது நீடிக்காது.

இதை நமக்கு புரியும்படி எளிமையாக அட்டாலும் பால் சுவையிற் குன்றாது. அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்கிறார். பாலை சுன்ட காய்ச்சினாலும் அதன் சுவை குறையப் போவதில்லை, நெருப்பிலிட்டு சுட்டாலும் சங்கின் வெண்மை மாறப்போவதில்லை என்று கூறி விளக்குகிறார்.

அதனால்தான் நல்லாரை காண்பதுவும் நன்றே, நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே என்றார்.


ஒருவருக்கு ஒரு உதவியை பிரதிபலன் பாராது செய்ய வேண்டும். அப்படி செய்தால் அதற்குரிய பலன் என்றாவது ஒரு நாள் தானாக வந்துவிடும். நன்றி ஒருவரக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல்? என வேண்டாம் என்கிறார். நின்று தளரா வளர்தெங்கு தான் உண்ட நீரை தலையாலே தான் தருதலால். தென்னை தன் வேருக்கு ஊற்றிய நீரை மறக்காமல் சுவையுடைய இளநீராய் பல ஆண்டுகளுக்கு பிறகு திரும்பத் தருவதை நன்றிக்கு உதாரணமாக காட்டுகிறார்.


உறவுகள் என்றால் அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? நம்மிடம் பணம் இருந்தால் நம்மை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். இல்லாமல் போனால் சுற்றமும் இல்லாமல் போகும். இல்லானை இல்லாளும் வேண்டாள் என்பார்கள். அதைத்தான் அற்ற குளத்தில் அறுநீர் பறவை போல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் என்கிறார். குளம் வற்றியவுடன் ஒடி விடும் பறவை போல் அல்லாமல்  உறவுகள் , அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு என்கிறார். குளம் வற்றி விட்டாலும் கொட்டியும் அல்லியும் நெய்தலும் குளத்தை விட்டு அகலாது நீர் வரும் வரை காத்திருக்கும். அது போல உறவு இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை சொன்னவர்தானே ஔவை.


துணைவன் இல்லா  பெண்ணுக்கு எவ்வளவு அழகு வாய்த்தாலும் பயன் இல்லை. அதுபோல இளமையில் வறுமையும் முதுமையில் செல்வமும் கொடியதாகும். அது போல நற்குணம் வாய்ந்த இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றும் இல்லை என்கிறார்.


நாம் நினைத்த காரியங்கள், நினைத்த நிமிடமே நடந்து முடிந்து விடாது. அதற்கான காலம் கூடி வரும் வரை காத்திருக்க வேண்டும். உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றி பழா, அதாவது உயரமான மரம் என்பதால் அது வருடம் முழுவதும் பழங்களை கொடுத்துக் கொண்டு இருக்காது. அதற்குரிய பருவத்தில்தான் பூக்கும் காய்க்கும் பழுக்கும். அது போல காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.


அடக்கமாக ஒருவர் இருப்பதால் அவர் அறிவில்லாதவர் என்று கருதவும் கூடாது. மடைத்தலையில் ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவு வாடி நிற்குமாம் கொக்கு என்பதன் மூலம் தனக்குரிய காலத்திலேயே

தனது தேவைகளை அறிவுள்ளோர் காத்திருந்து முடிப்பார்கள்.


எல்லாவற்றுக்கும் மேலாக ஔவையின் முதல் பாடலான விநாயகர் துதியை கடைசியாகக் கூறி முடிக்கிறேன். விநாயகரை துதித்து வாழ்பவர்களுக்கு நல்ல வாக்குத் திறமை கிடைக்குமாம், நல்ல மனமான வாழ்வும் மாமலரில் வீற்றிருக்கும் அந்த மகாலட்சுமியின் அருளும் நோயற்ற வாழ்வும் கிடைக்குமாம்.


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.


ஜெ மாரிமுத்து 

தென்றல் இதழ் 32

1 கருத்துகள்

  1. நல்லாயிருக்கு...

    பழைய ஆல்பங்களை புரட்டினால் கிடைக்கும் மகிழ்ச்சி போல...

    சிறுபிராயத்தில் கற்ற ஔவைபாடல்களை இப்போது கேட்டாலும் மகிழ்ச்சி தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை