அண்மை

சாலை ஓரம் ஒரு கவிதை

 


மெல்ல போகிறேன்

பாதசாரி

சிரிக்கிறான்

வேகமெடுக்கிறேன்

எமன் சிரிக்கிறான்

🛵 🛵 🛵


இளவெயிலில்

நிற்பவன்

வெட்ட,

நீர்சொட்டிக்

குடிக்குமோர்

சங்கம்

🛵 🛵 🛵


தர்பூசணிக்கும்

அன்னாசிக்கும்

போட்டி,

யார் முதலில்

மரணமடைவோம்

என்று

🛵 🛵 🛵


தார்தீ மிதித்து

குளிர் கப்பறை

ஏந்தி நிற்குக்கும்

குச்சி ஐஸ்

காரர்

🛵 🛵 🛵


சூடு என

தெரிந்தும்

சூடாய் விற்று

முடிந்தது

மாங்காய்

🛵 🛵 🛵


மர நிழலில்

இளைப்பாறி

மரம் வெட்ட

கிளம்புகிறான்

ஒரு மடையன்

🛵 🛵 🛵


செயற்கை

துப்புரவாளர்கள்

வராததால்,

இயற்கை

துப்புரவாளர்கள்

புற்றிலிருந்து

ஆயத்தமானார்கள்

🛵 🛵 🛵


'இது கைகழுவும்

இடம் அல்ல'

செடிகள்

கூச்சலிட்டது

எனக்கு

மட்டுமே கேட்டது

🛵 🛵 🛵


சில்லரை 

இல்லாத

அந்த தட்டில்

சூரியனின்

பிச்சையே

மிச்சம்

🛵 🛵 🛵


மணி அடித்து

பூஜை போட்டு

படையல் வைத்து

கதவு மூடப்பட்டது,

கோவில் வாசலில்

பசி குரல்

🛵 🛵 🛵


மாலை கட்டும்

அம்மாவுக்கு

தெரியவில்லை

இன்று மாலை

அன்னாபிஷேகமென்று

🛵 🛵 🛵


இடமே இல்லாத

நிலையில்

'படியில் நிற்காதே

உள்ளேவா'

என்றார், அந்த

அறிவாளி

நடத்துனர்

🛵 🛵 🛵


பஸ்ஸை விட்டது

தெரியாமல்

நகைத்து

கொண்டிருந்தான்

ஒரு முகநூல்

பயனாளர்

🛵 🛵 🛵


சிரித்து

கொண்டிருந்த

பூக்கள்

பொறாமை 

கொண்டது

பள்ளி மணியோசை

கேட்டு

🛵 🛵 🛵


வீட்டுக்கு

செல்லும்

குழந்தைகளை

விடவும்

மகிழ்வானார்கள்

மிட்டாய்

கடைக்காரர்கள்

🛵 🛵 🛵


மின் விளக்கு

ஒளி பிடிக்காமல்

ஆதவன் கிளம்பினான்

நானும்

கிளம்பினேன்

🛵 🛵 🛵….


தீசன்

தென்றல் இதழ் 35

1 கருத்துகள்

  1. என்ன ஒரு உண்மையான கவிதைப் பயணம்..ஆஹா..‌‌உண்மைகலந்த நகைச்சுவை கவிதைகள்❤️

    பதிலளிநீக்கு
புதியது பழையவை