கடவுள் இல்லை என்று சொன்னவர் பெரியார். கடவுள் என்று ஒன்று இல்லையென்றால் சந்திரன் ஏது? சூரியன் ஏது? மரம் செடி கொடி ஆறு கடல் அலை மலை எல்லாம் அமைத்தது யார்? என ஒருசாரார் வினா எழுப்புவதுண்டு. அதனால்தான் அவரது சீடர் பேரறிஞர் அண்ணா நம்மை கட்டுப்படுத்தவும், நம்மை மட்டுப்படுத்தவும், நம்மையும் மீறிய ஒரு சக்தி இருப்பதாக கூறி, அது கடவுளாகவும் இருக்கலாம், இயற்கையாகவும் இருக்கலாம் என்று கூறினார். பெரியாரின் கருத்திலிருந்து மாறுபட்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதே தனது நிலை என்றும் அறிவித்தார். இந்த சொற்றொடரை கேட்டதும் இது அண்ணா சொன்னது என்றே நினைப்பார்கள். இதைச் சொன்னவர் திருமூலர். பகுத்தறிவாளரான அண்ணா, மதங்களின் மீது ஆர்வம் செலுத்தாதவராக இருந்தாலும் சைவ சமய திருமுறைகள் பன்னிரெண்டையும் கற்று தேரந்தவர். இதில் பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சைவ சமயத்தவர் அன்றி அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு ஆகம நூல் ஆகும். சிவம் என்பது வேறு ஒன்றும் இல்லை அன்புதான் என்பார் திருமூலர். அன்பே சிவம் என்பார்.
"காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா" என்று பட்டிணத்தார் இந்த உடலை பரிகாசம் செய்யும் போது உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பே ஆலயம் என்று ஒங்கி உரைத்தவர் திருமூலர். உடம்பார் அழியில் உயிரால் அழிவர் எனக்கூறி" உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன். உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்பிளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே என்றார்.
உத்தமனான அந்த பரம்பொருள் குடிகொண்டுள்ள அந்த உடம்பை எப்படி காக்க வேண்டும்? உடலை சுத்தமாக வைக்காது போனால் அதில் உறையும் உயிரையும் அழிப்பதற்கு சமமன்றோ!
கயிலாயமலையில் குருகுல வாசம் இருந்த சுந்தர நாதர், திருமூலரின் முந்தைய பெயர், சிவபெருமானின் உபதேசங்களை பெற்று பல யுகங்கள் வாழந்தவர். ஆத்ம ஞானமும், அட்டமா சித்தியையும் பெற்ற அருளாளர். அவர் யோகங்களை முழுமையாக அறியும் பொருட்டு தமது உடன் படித்த பதஞ்சலி முனிவர், சிவயோக மாமுனி, சனகர், சனந்தனர் போன்றவர்களோடு பொதிகை மலையில் உள்ள அகத்தியரை தரிசிக்க எண்ணி கங்கையை கடந்து காளஹஸ்தி காஞ்சீபுரம் சிதம்பரம் வழியாக வருகிறார். தில்லையம்பதியில் ஆடல் வல்லானின் அற்பத நடனத்தை பார்த்தபின் திருநாரையூர் வருகிறார்கள். திருவாடுதுறை அருகே சாத்தனூரில் இடையர் சமுதாயத்தை சேர்ந்த மூலன் என்பவன் பசுக்களை மேய்த்து வரும்போது விதி முடிந்ததால் அரவத்தால் தீண்டப்பட்டு இறந்து போகிறான். இறந்து போனதை அறியாத பசுக்கள் அவனைச் சுற்றி நின்று போக வழி தெரியாமல் அழும் காட்சியை காண்கிறார் சுந்தரநாதர். இதைக் கண்டு இரங்கிய சுந்தரநாதர் தனது எட்டு மகா சித்தியில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் பரகாயப்பிரவேசம் மூலம் தன் உடலை ஒரு அரச மரத்தின் அடியில் வைத்துவிட்டு மூலனின் உடலில் புகுந்து மூலனுக்கு உயிர் ஊட்டுகிறார். உயிர் பெற்ற மூலனை பார்த்த பசுக்கள் மகிழ்ச்சி அடைகின்றன. பசுக்களை வீடுகளில் சேர்த்த பின் ஒரு கோயிலில் வந்து அமர்கிறார். கணவனை காணாது தேடி வரும் அவன் மனைவி கோவிலில் அமர்ந்து இருக்கும் கணவனை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறாள். தான் மூலன் அல்ல ஒரு முனிவன் என நடந்ததை விளக்குகிறார். மூலன் பாம்பின் விடம் தீண்டி இறந்துபட்ட செய்தியையும் உரைக்கின்றார். அழுது புலம்புகிறாள் அவன் மனைவி. உண்மையை அறிய அந்தணர்களை நாடுகிறாள். அந்தணர்களும் மூலனின் வார்த்தைகளை நம்ப மறுக்கவே செத்துக்கிடந்த ஆட்டின் உடலில் புகுந்து உயிரூட்டி நம்பவைக்கிறார் சுந்தரநாதர். மூலன் உடலை விட்டு தன் உடல் புக, தன் உடலை தேடி அரச மரம் செல்லும்போது அங்கே அவர் உடல் இல்லை. இதுவும் ஈசனின் விளையாடலாக இருக்கலாம் என்று கருதிய சுந்தரநாதர் அங்கேயே தவம் இருக்க தொடங்கினார். தான் பெற்ற ஞானத்தை உலகுக்கு அருளும் பொருட்டு, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வருடம் ஒரு பாயிரம் என மூவாயிரம் பாடல்களை மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வழங்கினார். என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே என்றார்.
உலகைப் படைத்த இறைவன் மக்கள் வாழும் முறைகளை அறியச் செய்ய, தானே பல அவதாரங்களை எடுத்ததுண்டு. மகாவிஷ்ணு, கிருஷ்னனாகவும் இராமனாகவும் பத்து அவதாரங்களை எடுக்கவில்லையா?. அதுபோல தனது தூதர்களாகவும் பலரை அனுப்பிவைத்தது உண்டு. இயேசு நாதரும் முகமது நபி போன்றோரும் அப்படித்தான். செத்துப் போன உயிரை சித்தர்களால் உயிர்ப்பிக்க முடிகிறது என்றால் சிலுவையில் அறையப்பட்ட ஏசு நாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததும் வியப்பில்லைதான். பெரியபுராணத்தில் புலவர் புராணம் என்று திருமூலர் வாழ்க்கை தொடுக்கப்பட்டு, நாயன்மார்களில் ஒருவராக உள்ளதே இவரது பெருமைக்கு சான்றாகும்.
திருமூலர் திருமணம் செய்து மணவாழ்வு வாழ்ந்ததாக எந்த செய்தியும் இல்லை என்றாலும் ஆண் பெண் சேர்க்கையால் தோன்றும் மாறுபாடுகள் கரு உருவாதல் போன்ற விளக்கங்களை மட்டும் 41 பாடல்களில் எழுதி உள்ளார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுவாசம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இடது மற்றும் வலது புற நாசி மூலம் மாறி மாறி நடைபெறும். வலது புற நாசி மூலம் சுவாசம் இருக்கும் போது ஆண் பெண் சேர்க்கை நடந்தால் ஆண் குழந்தை பிறக்குமாம். இடது புற நாசியில் சுவாசம் இருக்கும்போது சேரும் ஆணுக்கு பெண்குழந்தை பிறக்குமாம். இதுபோல அலியாக பிறத்தல், நூறாண்டு வாழும் பிள்ளை பிறத்தல் குட்டையாக பிறத்தல் மெலிந்து பிறத்தல் கூனாக பிறத்தல் என அனைத்துக்கும் பாடல் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் விரிவான விளக்கம் தேவைப்படுவோர் 3000 பாடல்கள் கொண்ட திருமந்திர நூலை விளக்க உரையுடன் படிப்பதே சிறந்த தீர்வாகும். இடது புற நாசி மூலம் மட்டுமே சுவாசித்து சுவாசத்தை நுரையீரலில் நிறுத்தி வைப்பவருக்கு ஆயுள் மிக அதிகமாம்.
"காற்றை பிடிக்கும் கணக்கறிவாளருக்கு கூற்றை உதைக்கும் குறி அது ஆமே". என்பார் திருமூலர். பிராணாயாமம் என்ற மூச்சு பயிற்சியை செய்யும் போது மூச்சை நிறுத்தும் காலம் அறிந்து செய்யவேண்டும் என்கிறார். இடது புற நாசியிலிருந்து 16 மாத்திரை அளவு மூச்சை இழுக்க வேண்டும். பின்னர் 64 மாத்திரை கால அளவு மூச்சை நிறுத்தவேண்டும். பின்னர் வலது நாசி வழியாக 32 மாத்திரை கால அளவில் அந்த மூச்சுக்காற்றை மெதுவாக விடவேண்டும். இதுதான் சரியான அளவாகும். இதனால் உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் எனும் பிராணவாயு செலுத்தப்பட்டு உயிர் அனுவான செல்கள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. இதனால் ஆயுள் அதிகமாகிறது. பிராணனும் மணமும் ஓன்றாக இணையும்போது பிறவா பெரு நிலை ஏற்படுகிறது.
வாழ்க்கை நிலையற்றது என்பதை விளக்கி பல பாடல்களை தொடுத்துள்ளார் திருமூலர்.
மண்ணொன்று கண்டீர் என்ற பாடலில் குயவன் பல வகை மண்பாண்டங்களை செய்தாலும் அவன் பயண்படுத்தும் மண் களிமண்தான், அது போல பல்வகை உயிரினங்களை இறைவன் படைத்தாலும் ஆத்மா ஒன்றுதான் என்கிறார். பௌர்ணமி தேய்ந்து பிறையாதல் போல் உடல் அழியக்கூடியது என்பார். ஆள், அம்பு, யானை, சேனை என்று எல்லாம் பெற்று கோலோச்சும் மன்னவன் கூட அவனினும் பலம் வாய்ந்த மன்னனிடம் போரில் பிடிபட்டு ஒன்றுமில்லாது போவது போல், உடலும் ஒரு நாள் நோயில் வீழும் என்றும் கொஞ்சி மகிழ்ந்த மனைவியும் கூட பிணத்தை எரித்த பிறகு பின்தொடர போவதில்லை என்றும் கூறுகிறார்.
செல்வம் அழியக்கூடியது என்பதால் இருக்கும் போதே இல்லாதவர்க்கு கொடுக்க வேண்டும் என்றும் அது ஈசனை அடையும் எளிய வழி என்றும் கூறுகிறார்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி.
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை. என்ற திருமந்திர பாடல் மூலம் இறைவனுக்கு பால் நெய் தங்க கிரீடம் எல்லாம் தேவையில்லை ஒரே ஒரு பச்சிலை போதும் என்றும் பசுவிற்கு ஒரு வாய் புல்லையாவது கொடுக்க வேண்டும் என்றும் மனிதருக்கு மனிதர் குறைந்த பட்சம் இனிய வார்த்தைகளை பேச வேண்டும் என்றும் விரும்புகிறார். உண்ணும் உணவில் ஒரு பிடி சோற்றை காக்கைக்கோ குருவிக்கோ கொடுப்பதால் குறையப்போவது ஒன்றுமில்லை.
நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் எப்படி உலகை வழிநடத்துகிறோ, அது போல உடலையும் நிர்வகிப்பதுவும் அதுதான். சமநிலை தவறினால் அக்னியின் சூட்டினால் பித்தமும், வாயுவினால் வாதமும், நீரினால் கபமும் உண்டாகிறது. நாடியை பிடித்து எது மிகுந்தது என கண்டு சீராக்கும் முறையெல்லாம் சித்தரிடம் உண்டு. 4800 நோய்களுக்கும் இலையையும் பூவையும் மரப்பட்டையும் ஒட்டையும் கடல் மண்ணையும் கிளிஞ்சலையும் கரியையும் புகையையும் கொண்டே நோயை ஆற்றுவிக்கும் ஆற்றலும் பெற்றவர்களாக போகர் போன்ற சித்தர்களும் வாழ்ந்தார்கள்.
அகத்தியர் போகர் கோரக்கர் கைலாச நாதர் சட்டைமுனி நந்தி கூன்கண்ணர் கொங்கனார் மச்சமுனி வாசமுனி கூர்மமுனி கமலமுனி இடைக்காடர் புன்னாக்கீசர் சுந்தரநாதர் ரோமரிஷி பரமமுனி என பல்வேறு சித்தர்கள் வாழ்ந்தாலும் திருமூலர் மட்டும்தான் ஆயிரம் ஆண்டு வாழும் அதிசயத்தையும், மறுஉடல் பாயும் வித்தையும், ஊண் உண்ணாமல் வாழும் நிலையும் மூச்சை பிடித்திழுத்து மரணத்தை வெல்லும் மகிமையையும் வெளிப்படையாக யோகத்தால் அனைவருக்கும் கற்றுத்தந்தவர். அவர் கூறும் பயிற்சிகள் இக்கால மனிதருக்கு சிறிதும் ஏற்றதல்ல. உடலை சாக்கடையாகவும் மாமிசக்குப்பைகளை கொட்டும் குப்பைத் தொட்டியாகவும் கொண்டோருக்கு யோகங்கள் கற்றாலும் அது பயன்தராது அல்லவா?
இன்றும் இமயமலையில் சித்தர்களை போன்ற யோகிகள் வாழ்வதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொல்கிறார். 800 ஆண்டுகளாக சிலரது கண்களுக்கு மட்டுமே காட்சி கொடுக்கும் பாபாஜியின் ஒளி வடிவத்தை தானே பார்த்ததாக கூறுகிறார். இப்படிப்பட்ட யோகிகள் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளவருடன் ஆன்மாவால் பேசும் அமைப்பை பெற்று இருப்பார்கள். இமய மலைச் சாலையில் தனது ருத்ராட்சத்தை இழந்து அதைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தபோது, யாசகம் கேட்கும் சாதுவின் தோற்றத்தில் இருந்த ஒரு யோகி "ருத்ராட்சத்தை தேடுகிறாயா" எனக்கேட்டு அது விரைவில் உன்னை அடையும் என்று சொன்னதையும் அது போல அந்த ருத்ராட்சம் தன்னை அடைந்தையும் இன்றும் வியப்பாகக் கூறுவார். சிறுவயதில் எத்தனை தீயபழக்கங்கள் உள்ளதோ, அத்தனையும் தெரிந்தோ தெரியாமலோ பெற்ற ரஜினி திருமணத்துக்கு சில ஆண்டுகள் பின்னர் அகவாழ்வில் இருந்து விலகி பரமஹம்ச யோகானந்தர் போன்றோரால் அடிப்படை யோகங்களை கற்று தூய இருதயத்துடன் செயல்பட்டதால் 72 வயதிலும் இளைஞனாக நடிக்கும் ஆற்றலையும் பொருளீட்டுவதிலும் முதலிடம் பெறும் நிலையை பெற்றுள்ளார்.
புணர்ச்சியை குறைத்து, அளவோடு உணவை அருந்தினால் ஆயுள் கூடும் என்கிறார். அளவான உணவு என்பது அரை வயிறு உணவு கால் வயிறு நீர் கால் வயிறு காற்று என்பதாகும். உடல் அழியா நிலையை அடைய அறுபதுக்கும் மேற்பட்ட காயகல்ப முறையை கூறுகிறார். யோக முறையையும் கூறுகிறார். மருந்து வேலை செய்ய உடல் மனம் ஆன்மா மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும். இம்மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு இருப்பதாக கூறுகிறார்.
அதனால்தான் ஔவையார்,
தேவர் குறளும் திருநான்மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என் றுணர் என்றார்.
ஆயிரம் நூல்கள் சொல்லும் செய்தியை மேற்கண்ட நூல்களை மட்டுமே கற்று அறியலாம்.
திருமூலரின் மூன்று நான்கு பாடல்களை படித்து விளக்கவே ஆயிரம் வார்த்தைகள் தேவைப்படும்போது மூவாயிரம் பாடல்களை படிக்கவும் விளக்கவும் ஆயுள் முழுதும் கூட தேவைப்படும். அதனால் வரும் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கடலைத் தாண்ட முயற்சி செய்வோம்.
ஜெ மாரிமுத்து
மிக அருமையான நூல் ஒன்றை முகப்பில் இருந்து கடைசி அட்டை வரை படித்த திருப்தியை தருகிறது இந்த கட்டுரை.
பதிலளிநீக்கு