அண்மை

அன்பின் வழியது உயிர்நிலை கட்டுரை

 

அன்பின் வழியது உயிர்நிலை கட்டுரை

தூறல் மழை விட்ட பிறகு அந்தி வானத்தை காண்கிறோம். வான்அணி வானவில் தெரிகிறது. உடனே, 'அம்மா வானவில்...வா, அக்கா பார்…. வானவில், பொடியா பாரங்கே, எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் வானத்தை பாருங்கள்' என்கிறோம்.


வானத்தை பார்த்து கொண்டே இருக்கும் போது சட்டென ஒரு விண்கல் விழுந்தால் கண்கள், மினுப்பதற்கு அடுத்து அருகிலொரு நபரைத் தேடுகிறது.


கையில் கிடைக்கும் ஒரு பொருளை அடுத்தவருக்கு பகிர்ந்தளிப்பதில் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.


பிறர் சிரிக்கும் போது நம் இதயமும் புன்னகைக்கிறது. பிறர் அழுகும் போது நம் மனதும் சேர்ந்தே அவர்களுடன் துடிக்கிறது.


எறும்பு கூட்டம் வெல்லத்துண்டை சேர்த்து தூக்கி செல்வது போல நாமும் நம்முடனானவர்களின் உணர்வுகளை சேர்த்து சுமக்கிறோம். எறும்புகள் சேர்ந்து சுமப்பதால் சுமை சம பாகமாக பிரிக்கப்படுகிறது. மனம் உணர்வை பகிரும் போதோ சுமை இரட்டிப்பாகிறது. 


ஒன்றை இதிலிருந்து தெளிந்து கொள்ளலாம். மனம் பகிர விரும்பும் உயிர் சாதனம். அது அன்போ, அலைச்சலோ, சிருங்காரமோ, ஜீவ நாதமோ, ஏதோ… 'கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது' என்பது மட்டும் உண்மை. 


Happy - மகிழ்ச்சி. இச்சொல்லின் மூலம் happ எனும் சொல்லாகும். இதற்கு அதிஷ்டம் என்பது பொருள். மகிழ்ச்சி கிடைப்பதே அதிஷ்டம் என்பது இதன் உள்ளர்த்தம். மகிழ்ச்சியே அதிஷ்டத்தினால் தான் கிடைப்பது என்பது தவறான புரிதல் ஆகும்.


மகிழ்ச்சி எனும் கனிகள் நற்செய்கை என்ற மரத்திற்கு அன்பு எனும் நீர் விடுவதால் விளைவதாகும்


அறம் மரமானால் அதன் வேர் அன்பாகும்.


நாம் அன்பை பகிர்வதில் தவறு செய்கிறோம்


அதற்கு மனிதன் ஏதும் இடம் காலம் வரையறை செய்கிறானோ என்றும் எனக்கு தோன்றுகிறது.


உங்களிடம் பத்து ரூபாய் இருக்கிறது. சாலையில் நடந்து போகும் போது கீழிருந்து இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்றை எடுக்கிறீர்கள். அதற்கு சமீபத்தில் மேலுடம்பை மறைக்கும் சிறு துணிக்கு கூட வழியில்லாத வகையில் ஒரு 60 வயது முதியவர் புங்கை மர நிழலில் கால் நீட்டி அமர்ந்து, 'ஐயா, ரொம்ப பசிக்குது ஏதும் போடுங்கையா' என்கிறார். என்ன செய்வீர்கள்?


'பத்து ரூபாயை போடுவேன், இரண்டாயிரத்தை வைத்து கொள்வேன்' என்று சொல்வோர் உண்டு.


'இரண்டாயிரத்து பத்தாய் தருவேன்' என்று சொல்வோரும் உண்டு.


தர்மத்திற்கும் அன்பிற்கும் எத்தனை விரோதம் உண்டு என்பதை நீங்கள் இங்கே அறியலாம்.


'பத்து ரூபாய்' உங்களது பணம். அதை நீங்கள் எவருக்கும் கொடுக்க சந்தேகமின்றி உங்களுக்கு உரிமையுண்டு.


ஆனால் இரண்டாயிரத்தை நியாயப்படி நீங்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு சேர்த்தல் வேண்டும். அது நம் பணம் அல்ல. தானம் வழங்க இயலாது.


இது தான் தர்மம்.


'ஆனால் பத்து ரூபாயை கொண்டு வறியவரொருவரால் தன் பசியை எவ்வாறு தீர்த்து கொள்ள முடியும்? இரண்டாயிரத்தை கொடுத்தால் ஒரு வேளை என்ன… ஈர் ஆறு வேளையை எளிதாக கடத்தலாம்'. கருணை மேலிட கண நேரத்தில் தோன்றிய இந்த எண்ணம் உங்களை இரண்டாயிரத்து பத்தையும் தர செய்தால்,


அது தான் தயை


தயையும் தர்மமும் நெஞ்சிலே நிறைத்து நடத்தைக்கு கொண்டு வரும் நமக்கு நிச்சயம் ஒருநாள் அது தர்ம சங்கடமாகவோ அன்பு சங்கடமாகவோ நம்மை எதிர்நோக்கும்


இருந்தும் நான் முன் சொன்னது படியே உரமான வைராக்கியம் உள்ள இந்த தர்மத்தை கோர்த்து வார்த்து ஆக்குவதே இந்த இலகிய அன்புதான்.


ஆம்! அன்பு தான் அறத்தின் தாய். அன்பு பெற்றெடுத்த பிள்ளை தான் தன் தாயையே கொல்லும் பாவத்தையும் ஏற்கிறது. அதையே நாம் 'தர்மம்' என்போம். இன்னும் விளங்க கூறுவதாயின்,


"மரத்தை வெட்டும் கோடரியின் கைப்பிடியை பெற்றெடுத்தது ஒரு மரம்"


'தர்மம் இரக்கமில்லாதது என்று நான் பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். சிங்காதனத்தை போலவே நெஞ்சமும் வயிரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாமென்று நினைத்தேன். அது பிழை; தர்மம் பக்ஷபாக மற்றது, குருட்டன்பு இல்லாதது. ஆனால், அருளும் விவேகமும் கலந்து வார்க்கப்பட்ட விக்கிரகம் தர்மம்' என்கிறார் பாரதி.


அன்பு அப்படிபட்டதல்ல அதற்கு நியாயம் அநியாயம் எல்லாம் தெரியாது. அதர்மமே தனக்கு பிள்ளையாய் பிறந்திருந்தாலும் அவற்றை அரவணைத்து அன்பு செலுத்தினார் திருதராஷ்டிரர். இங்கே தர்மம் அதர்மத்தை கண்டு கொள்ளாததற்கு மூல காரணம் அன்பாகும். எனில்


தர்மத்தையே தோற்கடிக்கும் அரியவலி படைத்தது அன்பு ஒன்றேயாகும் எனலாமா?


எனினும் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் அன்பை பற்றிய விளக்கத்தை எழுத்தாளர் வி.பாலகிருஷ்ணன் தருகிறார். அது,


"உண்மையில் அன்பு குடிகொண்ட இதயத்தில் மோகமானது தோன்றுவதில்லை. அன்பெனும் பாவம் கருணையிலிருந்து பிறப்பது. மோகம் அகங்காரத்திலிருந்து பிறக்கிறது. அன்புள்ளமானது எனது புதல்வனுக்கு இறைவன் கிருபையால் அனைத்தும் கிட்டும் என்று கூறும், ஆனால் மோகமானது என் புதல்வனுக்கு நான் அனைத்தையும் வழங்குவேன் என்றுரைக்கும். அன்பின் பாவமானது பொதுநலத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது. ஆனால் மோகமானதோ சுய நலமே முக்கியம் என்றெண்ணுவது. அன்பானது முக்தியை நல்கும். மோகமானது பேராசையை அளிக்கும். அன்பு தர்மமாகும். மோகம் அதர்மம்"


மனிதன் தர்மமான இத்தகைய அன்பை பகிர்வதில் கூட சுய நலத்தை கொள்வதால் அவன் உயர்வாக எண்ணக்கூடிய அன்பு என்ற நிலை கூட மோகத்திற்குள் தள்ளப்படுகிறது.


நான் எனது எனக்காக என்ற நிலைக்குள் வரும் அனைத்து பாசங்களும் ஈர்ப்புகளும் கூடியமட்டில் மோகமாகும்.


அன்பின் பார்வை விசாலமானது. உறவினர்களிடம் காட்டும் அன்பும் ஊராரிடம் காட்டும் அன்பும் ஓரளவாக கொண்டால், அங்கே அன்பின் மிகுதியோ தாழ்வோ இருக்கபோவதில்லை. 


அன்பு ஒரு சாரரிடம் மட்டுமே காட்டும் போது தானே அன்பு இருக்குமிடம் அன்பு இல்லாதயிடம் என்ற வகைபாடுகள் தெரியும். 


அன்பின் சமநிலையோடு எவரிடம் நடத்தைகள் செலுத்தப்படுகிறதோ அவரே உண்மையான அன்பாளர். உண்மையான பேரிரக்கவாதி.


எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். 'இவனை கண்டாலே எனக்கு பிடிப்பதில்லை' என சிலர் சொல்லி நான் கேட்டதுண்டு. 


ஆத்மார்த்தமாக ஒன்றை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள்.


நாம் எல்லோரும் உறவினர்கள். நாம் எல்லோரும் நண்பர்கள். நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்.


நான் தர்மத்தை நேசிப்பவன் தான், அதன்படியே வாழ விரும்புபவனும் கூட, இருந்தாலும் அந்த இரண்டாயிரத்து பத்து ரூபாயையும் இறைவனின் பெயரால் தானமாய் தருவதில் நான் ஆனந்தம் கொள்வேன். காரணம், 


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


தீசன்

தென்றல் இதழ் 34

6 கருத்துகள்

  1. எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. அருமை.

    பதிலளிநீக்கு
  2. ஞானத்தை தேடி நூலில் இதையும் இணைத்து கொள்ளலாம். நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு
  3. இவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை!

    பதிலளிநீக்கு
  4. 1. அது(இறைவன்)+ இஷ்டம்= அதிர்ஷ்டம்
    2. நான் கீழிருந்து பல முறை இது போல பணத்தினை எடுத்ததுண்டு. உண்மையில் அதை தானம் செய்யும் உரிமை எனக்கில்லை. ஆனால் என் கருத்து என்னவென்றால், அப்படி தர்மம் செய்வதால் அதை தொலைத்தவருக்கு புண்ணியம்‌ கிடைக்கட்டும் என்பதே.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை