அண்மை

பாரதியாரின் கற்பனையில் தொழில் வளர்ச்சி

 

பாரதியாரின்  கற்பனையில் தொழில் வளர்ச்சி

தொழில் பெருக்கம்


"அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய், ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் மாமியும் மருமகளும் போல்வர் என்றும், கல்வியுள்ள இடத்தில் செல்வமும் செல்வமுள்ள இடத்தில் கல்வியும் ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் நமது நாட்டில் பரம மூடத்தனமான கொள்கை யொன்று பரவி நிற்கிறது" (தொழிலாளர் - பாரதி)


நாடு கல்வியை நாடுவது ஞானத்தை தேடுவதற்கு மட்டுமன்றி தொழில் கீர்த்தி பெருவதற்குமே ஆகும். கல்வியானது செல்வத்தை அடையும் சுகமான சுரம். அதனால் கலை செல்வியும் அலை செல்வியும் ப்ரிய தோழிகளே ஆவர். நாட்டின் வளம், ஜெயம், கீர்த்தி ஆனவை உழைப்பிலிருந்து உருவாகிறது. தொழில் பெருக்கத்தினால் தேசம் உழைப்பாளிக்கு நன்காகிறது. பாரத தேசத்தின் பரம ஏழை செய்யும் சிறு தொழில் கூட இப்பாரத தேவிக்கு அவர் வழங்கும் காணிக்கையாகும். 


"வியாபாரிகள் வெறுமே தம்முடைய வயிறு நிரப்புவது மாத்திரம் குறியாக கொள்ளாமல் தமக்கு லாபம் வரும்படியாகவும் பொது ஜனங்களுக்கும் கஷ்டம் ஏற்படாமலும் செய்தற்குரிய வியாபார முறைகளை கைக்கொள்ளும் படி அவர்களை வற்புறுத்த வேண்டும்" (ஜாதி குழப்பம் - பாரதி)


வணிகன் விற்பது கடமையென ஜனங்களுக்கும் இந்நாட்டுக்கும் கேடு தரும் பொருளை விற்பானேயானால் அது அநியாயமே ஆகும். 


"வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப் பழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழிதேட வேண்டும்" (வருங்காலம் - பாரதி) ஆனால் அது தர்மவழியாக வேண்டும்.


பணத்தினை பெருக்கு

பெரிதினும் பெரிது கேள் (பு.ஆ)


தொழில் பெருக்கி பணம் பெருக்குவதன் மூலம் ஏழையர் நிலை அடியோடு மாற வழியுண்டாக்க வேண்டும். ஏழ்மை ஒழிந்தால் களவு ஒழியும். காவலர் தேவை குறையும். கல்வி வளரும். நாடு மேன்மையுறும்.


"வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந்ததோ அது போலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலே சிறப்பு. முதலாளி யொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச் செய்யும் தொழிலே அதிக நன்மையை தருவதாகும்" (பொருள் நூல் - பாரதி)


ஏழையர் நிலை உயரவும் பாரதம் தொழில் வளம் பெறவும் உதாரண தொழில்கள் சிலவற்றை பாரதியே கற்பனை செய்தடுக்கியுள்ளார்.


"நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களும் சேர்த்து பட்டிலும் பஞ்சிலும் அழகான ஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்கு படிப்பில்லை, வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை. நம்முள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதை கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளை கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்" (வருங்காலம் - பாரதி)


பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்


"இரும்பு தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமுங் கொடுப்பது. எல்லா விதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்பு யந்திரங்களாலே செய்யப்படுகின்றன. ஆதலால் நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பல விதங்களிலே அறிவு விருத்தியும் ஜீவன ஸௌகர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்" (வருங்காலம் - பாரதி)


குடைகள்செய் வோம்உழு படைகள் செய்வோம்

கோணிகள்செய் வோம்இரும் பாணிகள் செய்வோம்


"வர்ணப்படம், தையல் வேலை, மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களின் அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால் இந்தத் தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்கு கொண்டு வந்து விடலாம். தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்" (வருங்காலம் - பாரதி) 


ஓவியம் செய்வோம் நல்லஊசிகள் செய்வோம்


தொழில் பெருக்கத்தினால் தனிமனித வளர்ச்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனின் மூலம் தேச வளர்ச்சியையும் கவி கற்பனித்தார்


சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் (பாரத தேசம்)


எனும் ஆகச்சிறந்த இந்த கற்பனை இந்திய தொழிற் பெருக்கம் மற்றும் விவசாய வளர்ச்சியின் கவனிக்கத்தக்க மிக முக்கிய அம்சமாகும். ஆனால் பாரத நாடோ தனது வளர்ச்சிக்கு தன் மக்களை நம்புவதை காட்டிலும் பெரு நிறுவனங்களை இன்று நம்பவேண்டியதாகியுள்ளது.


நம் நாட்டில் இருப்பது போலவே செல்வம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கப் பட்டிருக்கும் படி தொழில் பெருக்கம் செய்யப்படக்கூடாது. "ஏழைகளாக இருக்கும் படி செய்யும் வியாபார முறைகளை காட்டிலும், சாத்தியப்பட்ட வரை அநேகரிடம் பொருள் விரவியிருக்கும் படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாக பாரட்டத்தக்கது" (பொருள் நூல் - பாரதி)


படகில் ஒருபுறம் சேரும் அதீத எடை எவ்வாறு படகு முழுவதையும் கவிழ்க்குமோ, அதுபோல தொழில் பெருக்கத்தில் ஒருவரிடம் மட்டுமே சேரும் அதீத செல்வம் நாட்டையே கவிழ்க்க வல்லது. தொழில் மேம்பாடானது ஏழ்மை ஒழிப்பு, சூழல் நலன், தேச எதிர்காலம், தனிமனித உயர்வு, கல்வியின் முக்கியத்துவம் இவற்றையே நோக்கமாக கொள்ளுதல் வேண்டும். இதனை கொண்டே,


எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் (பாரத தேசம்)


எனும் பாரதியின் கற்பனை சொல்லி புரிய வேண்டியதில்லை. அது பாரத தொழில் தர்மமாகும்.


(அடுத்து பாரதியாரின் கற்பனையில் ஜீவகாருண்யம்)


தீசன்

தென்றல் இதழ் 34

கருத்துரையிடுக

புதியது பழையவை