சோழர் காலம். மன்னன் இராசேந்திரன் ஆட்சியில் மக்கள் மாண்புடன் வாழ்ந்து மகிழ்ந்திருந்த காலம். உழவு செய்து மக்கள் உயர்வடைந்த நேரம். ஆடி பதினெட்டு, குடகு மலை தோன்றி, வெள்ளை நுரையை அள்ளிக்கொண்டு, ஆடி ஆடி, அசைந்து அசைந்து, கோடி மக்கள் வீட்டில் வெள்ளாமையை கொடுத்து, இல்லாமையை விரட்ட, தேடி தேடி வருகிறாள், ஆர்ப்பரிக்கும் அலையோடு, பாடி பாடி வருகிறாள் காவேரி. அறுபத்து நான்கு சிவாலயங்களை கடந்து ஓடி வரும் காவேரி, கும்பிடத்தக்க குலதெய்வம்தானே வேளாண்மை செய்யும் வெள்ளாளருக்கு.
ஆர்ப்பரிக்கும் கடலாய், அள்ளிவரும் நீரை கல்லால் அணை கட்டி காத்து நின்ற கரிகாலனுக்கு வாழ்த்துப் பாடி, வரும் நீரை வரவேற்க, மலர்ந்து விட்ட எல்லா மலரையும் சூடி, சிறுவர் சிறுமியர் ஆடிப்பாடி, சப்பரம் இழுத்து, தோரணம் கட்டி, மங்கள பொருளாம் மஞ்சளையும், குங்குமத்தையும், ஆறு மீது நடந்து வரும் அந்த காவிரித் தாய்க்கு பூசி, மகிழ்ச்சி கொள்கின்றார் மங்கல மங்கையர்.
இந்த ஆண்டு ஒரு புதுமை, மகதத்தை வென்று பாடலிப்புத்திரத்தை தன் ஆட்சிப்பகுதியாக்கி கொண்டு இருந்தான், மாமன்னன் இராசேந்திரன். மகத மன்னன் மகிபாலன் தோல்வியுற்றாலும் மகத மக்கள் சோழனின் ஏவலில் வாழ்வதை மகிழ்வோடு ஏற்றார்கள். தங்களது அரசின் தலைநகராம் தஞ்சையை பார்க்கவும், தமிழ் மக்கள் கொண்டாடும் ஆடிப்பெருக்கில் பங்கேற்கவும் பாடலிபுத்திரத்திலிருந்து ஒரு சாரார் தஞ்சை வந்தனர். வந்தாரை வரவேற்கவும், மகுடம் தந்தாரை மகிழ்விக்கவும் கோயில் நகராம் குடந்தையில் ஆரணங்குகள் நடத்தும் ஆடிப்பெருக்கை பார்த்து மகிழ பேரரங்கு ஒன்றை ஏற்படுத்தி தந்தான் இராசேந்திரன். உணவுக்கும் உறங்குதலுக்கும் உரிய இடம் ஒதுக்கப்பட்டது. பணிகளை ஒழுங்கு படுத்தி சிறப்பிக்க, படை வீரர்கள் நூறு பேரை குடந்தைக்கு அனுப்பி வைத்தான் மன்னன். படைவீரர் நூறு பேருக்கும் தலைவன் இளையகுமாரன். இருபது வயது காளை. தரைப்படை தளபதியின் மகன். அழகோடு ஆற்றலும் நிறைந்தவன். தளபதிக்கு பிறகு தன் மகன் தலைவன் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் பத்து வயதிலேயே வாளேந்த கற்றுக் கொடுத்தான். வாள் பயிற்சியும் வேல் பயிற்சியும் முடித்த இளையகுமாரன் வேழப்படையை ஏற்று நடத்த சேர நாட்டில் சிறப்பு பயிற்சியை முடித்தான். யானைகளோடு உரையாடி உறவாடும் அளவுக்கு உறவினன் ஆனான். கடலிலே கப்பலை செலுத்தவும், நடுக்கடலிலே கப்பல் கவிழ்ந்தாலும் நீந்தியே கரை சேரும் வழியையும் அறிந்தவன். வலிமையும் வாய்ந்தவன். விழா தொடங்கியது. கல்லணையில் அடைத்து வைத்த நீரையெல்லாம் ஆடிப்பெருக்கு கொண்டாட திறந்து விட ஆணையிட்டு இருந்தான் மன்னன். அதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அதே நேரம் லேசாக தொடங்கிய மழை விடாமல் பெய்யத் தொடங்கியது. ஆடியிலே ஒரு அதிசயமாய் பெய்கின்ற மழை கண்டு, ஆடித்தான் போனார்கள் குடந்தை வாழ் மக்கள். மாலை வரை விடவில்லை மழை. காட்டாற்று வெள்ளம், கரை உடைத்து பாயத்தொடங்கியது. ஆற்றுக் கரையினிலே வீடு கட்டி வாழ்ந்தோரின் இல்லங்களில் அழையா விருந்தினராய் மழை நீர் புகுந்தது. ஆற்று ஒரங்கள் எல்லாம் மரண ஓலங்கள். எதை எடுப்பது, எதை விடுப்பது என்று அலைபாய்ந்து உயிர் மட்டும் மீண்டால் அது போதும் என்றெண்ணி, அருகில் உள்ள அன்ன சத்திரங்கள், கோவில் மண்டபங்களில் அடைக்கலம் புகுந்தனர் ஆற்றுக் கரையோர மக்கள். குடந்தை வந்துள்ள குடிமைப் படை வீரர்களும் மக்களுக்கு உதவும் மகத்தான பணியில் ஈடுபட்டனர். இதையேதும் அறியாமல் வீட்டுக் கொல்லைப்புற ஆற்றுக் கரையில் குளித்துக் கொண்டு இருந்தாள் எழில் வாணி. சாத்தப்பன் மகள். அலைகளின் வேகத்தை அறியாத பருவமகள் ஆற்றின் அலைகளால் கன நேரத்தில் அடித்து செல்லப்பட்டாள். செல்ல மகள் தங்கள் கண் எதிரே அலைகளால் அடித்து செல்லப்படுவதை பார்த்த தாயும் தந்தையும் அலறி துடித்தார்கள். அலறல் ஒலி கேட்டு ஓடி வந்த இளைஞர்கள் அலையோடு போராட ஆற்றில் குதித்தார்கள். அலை அவர்களையும் இழுத்ததே தவிர எழில் வாணியின் அருகே கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. மகளை மீட்க முடியாவிட்டால், நானும் நீரில் வீழ்ந்து மாய்த்து கொள்வேன் என புலம்பி தவித்தான் சாத்தப்பன். எழில் வாணியும் நீச்சல் தெரியாதவளல்ல, இருந்தாலும் அலையின் வேகத்தில் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இளைஞர்கள் சிலர், குடிமை படை வீரர்கள் தங்கி உள்ள முகாமில் தகவல் சொன்னார்கள். நல்ல வேளை இளைய வீரன் இருந்தான். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, புரவியின் மேலேறி புயல் போல் புறப்பட்டான். ஆற்றுக் கரையோரமாக குதிரையை செலுத்தினான். பாய்ந்து வரும் வெள்ளத்தில் பரிதவிக்கும் பாவையை கண்டான். அலைகளோடு பாய்ந்தான். அவளருகே சென்றான். இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தால் மயங்கி மூழ்கி இருப்பாள். பூங்கொடி போல் துவண்டு கிடந்த எழில் வாணியை கரங்களால் தாங்கினான். தன் முதுகிலே கிடத்தினான். நீந்தி கரை சேர்ந்தான். எழில் கொஞ்சும் இளங்குமரியின் ஈர உடலை தன் தோலில் கிடத்தி, ராட்டினம் போல் சுற்றி வயிற்றில் உள்ள நீரை வாய்வழியே வெளியேற்றினான்.
கட்டழகு வீரனின் கரங்களில் சுழல்வதை கண்டாள். இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாமே என தினவெடுத்த அவன் தோல்களிலே தஞ்சம் கொண்டாள். உயிரை கடவுள் கொடுத்ததே இந்த உத்தமனை அடையத்தானோ என உவகை கொண்டாள். இளையவீரனும் எழில் கொஞ்சும் பூவினும் மெல்லிய உடல் கொண்ட ஒரு பூவையை தன் உடலில் இதுவரை சுமந்ததில்லை. சுத்த வீரனான இளையவீரனையே ஒரு நிமிடம் சுகம் காண வைத்துவிட்டாள் இந்த சுந்தரி. கண் திறந்து பார்த்தாள். உயிர் பிழைத்தாள் என ஊர்கூட்டம் மகிழ்ந்தது. அவளை தன் தோல்களில் இருந்து இறக்க மணமில்லாமல் இறக்கினான். அவளும் இறங்க மணமில்லாமல் இறங்கினாள். இளைஞனாய் இருந்தாளும் இளையகுமாரனின் கால்களிலே விழுந்து நன்றி செலுத்தினார்கள், சாத்தப்பனும் அவன் மனைவியும். எல்லோரிடமும் விடை பெற்று புறப்பட தயாரானான் இளையகுமாரன். இளையகுமாரன் யார் என்பதை கேட்டு தெரிந்து கொண்டாள் எழில்வாணி.
புறப்பட்டு செல்ல எத்தனித்த இளையகுமாரனை வழி மறித்தாள் எழில்வாணி."ஆயிரம் பேர் முன்னால் என் உடலைத் தொட்டு தூக்கிய பின் வேறு ஆடவர் யார் என்னை மணக்க முன் வருவார்கள்? அழகிற்கு ஆசைப்பட்டு என்னை மணக்க முன்வந்தாலும் உங்கள் கரங்கள் தீண்டிய உடலை உங்களைத் தவிர யாருக்கும் தர மாட்டேன். ஆற்றோடு போக வேண்டிய உயிர் உங்களால்தான் உயிர் பெற்று வந்தது. அது உங்களுக்கே சொந்தம். என்னை மணமுடித்து அழைத்துச் செல்லுங்கள். இல்லையேல் உயிர் வாழ போவதில்லை" என்று திடமாகக் கூறினாள்.
"இளையகுமாரன் தளபதியின் மகனென்றாலும், எழில்வாணியை போல் அழகு ராணி இந்த பதியிலேயே இல்லை என்பதால் மணமுடித்தால் என்ன தவறு" என்று கூடி நின்றோர் குரலெழுப்பினர். இச்செய்தி இளையகுமாரன் தந்தை வரை சென்றது. எல்லோரும் அமர்ந்து பேசினார்கள். தொழிலில் வேறுபாடு காண்போர் இருந்தனரே அன்றி சாதி என்பது அக்காலத்தில் இல்லை. மணம் ஒப்பி மாலையிட தீர்மானித்து மணமும் நடந்தேறியது. முதலிரவு அவர்களுக்கு முடிவு இல்லா இரவாக அமைந்தது. யாருக்கும் கிடைக்காத ஒரு பொருள் தனக்கு கிடைத்தது போல் மனம் மகிழ்ந்தாள் எழில்வாணி. எழில்வாணி ஒருத்தி இருக்கும்போது ஏழுலகம் கிடைத்தாலும் அது அவளது எழிலுக்கு உகந்த பொருள் ஏதுமில்லை என ஓரிரவில் உணர்ந்து கொண்டான் இளையகுமாரன். காலை பொழுது புலர்ந்தது. கார் காலத் தோகை விரித்தாடும் மயிலை கோலமாக போட்டுக் கொண்டு இருந்தாள் எழில்வாணி. அப்போது புரவியொன்றின் குளம்போசை கேட்டது. எழில்வாணியின் அருகே வீரன் ஒருவனைத் தாங்கி அந்த புரவி வந்தது. புரவியில் வந்தவன் "இளையகுமாரர் இங்குதான் உள்ளாரோ" என விசாரித்தான். ஆம் என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றாள். இளையகுமாரன், அவன் வந்த நோக்கம் என்ன என்று விசாரித்தான்" ஈழ நாட்டில் அரசுக்கெதிரான கிளர்ச்சி வேகம் பெற்று இருப்பதால் மன்னன் ஆயிரம் பேர் கொண்ட படை ஒன்றை இலங்கைக்கு அனுப்புகிறான். அதில் பெயர் இடம் பெற்றுள்ள இளையகுமாரனை இன்று மாலைக்குள் கோடிக்கரை நாவாய் தளத்துக்கு வருமாறு மன்னன் பிறப்பித்த ஆணையின் ஒலையை காட்டினான்.
மன்னனின் ஆணையை மகிழ்வுடன் ஏற்ற இளையகுமாரன், எழில்வாணியின் உதடுகளில் முத்தங்களை பலமுறை பதித்து விடைபெற்றான். அவளும் கண்ணீருடன் விடை தந்தாள்.
ஈழத்திலும் இராசேந்திரனின் ஆட்சி நடைபெற்றாலும், ஆட்சியை இழந்த சில குழுக்கள் கொரில்லா படை தாக்குதலை தொடருவதால் சோழப் படைகள் சில நேரம் நெருக்கடிக்கு ஆளாகிறது. அதனால் போர் முடிவக்கு வராமல் தொடருகிறது. இளையகுமாரன் ஈழம் வந்து அப்படி இப்படி ஆறு மாதம் ஓடி விட்டது. தொண்நூறு சதவிகிதம் வந்த வேலை முடிந்தாலும், முற்றிலும் வேலை முடிந்த பின்தான் தாய் நாடு திரும்பவது என்பதில் உறுதியாக இருந்தான் இளையகுமாரன்.
கடல் கடந்து போனாலும், காதல் கடந்து போகமாட்டான் என்பதில் எழில்வாணிக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் காதல் நோய் வாட்டுகிறதே அதற்கு அவள் என்ன செய்வாள்? வாசலில் வந்து நிற்பவன் எல்லாம் தன் கணவனாக இருக்க மாட்டானா? என அவள் கண்கள் ஏங்குவதை அவள் யாரிடம் சொல்ல முடியும்?
வருவார் எல்லார் வரும் வழி நோக்கி தெருவோர் எல்லோர் உருவையும் தேக்கி, மணந்தவன் வரமாட்டானா? என காத்திருந்து காத்திருந்து எதிர் பார்த்திருந்தாள். தோழி வேனிலிடம் மட்டுமே தன் உள்ளம் படும் வேதனைக் கதைகளை கூறுவாள். தோளைத்தொட்டதையும், கனி முத்தங்களை பெற்றதையும், காற்றுப்புகா இடைவெளியில் கட்டுண்டு கிடந்தையும் மாதம்தான் போயின. மறப்பாள் இல்லை.
அழகுப்படுத்தி கொள்வதையும், அலங்காரப் படுத்தி கொள்வதையும் அவன் இல்லாத போது யாருக்காக செய்வாள்?
அழகு அவளுக்கு வாய்த்தது. அதனால் அவளுக்கு பயன் இல்லை. அந்த அழகை பெறுவதற்கு உரியவன் அவள் கணவன்.
அவனுக்கும் பயன் இல்லை. காலம்தான் போகிறது. இளமையும் போகிறது. கட்டழகன் எப்போது வருவான்?
அவள் தோழி வேனிலிடம், காதல் நோய் தன் உடலை வாட்டுவதையும் உடல் துவண்டு பொன்னிறமாய் மாறி போனதையும் சொல்லி வருந்தினாள்.
மணந்தவன் எப்போது வருவானோ? மாந்தளிர் போன்ற பூந்தளிர் உடலை மீண்டும் எப்போது பெறுவாளோ?
ஜெ மாரிமுத்து
குறுந்தொகை பாடல் 27
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்கா ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீ இயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
வெள்ளிவீதியார்.
பொருள்
நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல் அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.
இலக்கிய சிறுகதைக்கே உரிய இலக்கணத்தை கூறும் அருமையான கதை 😍💖
பதிலளிநீக்கு