அண்மை

சாலை விதிகளை மதிப்போம்

 

சாலை விதிகளை மதிப்போம்

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் உலக அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது சாலைவிதிகளை பின்பற்றாமல் இருப்பதாலேயே நடைபெறுகிறது.  நம் தமிழக அரசு, சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் தடுக்க விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்போருக்கு ரூ5,000 பரிசு தொகையாக கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


அதுமட்டுமின்றி, தமிழ் நாடு எல்லைக்குள் எந்த நாட்டினர், எந்த மாநிலத்தவர், எந்த மாவட்டத்தினை சேர்ந்தவருக்கும் சாலை விபத்து நேர்ந்தால் முதல் 48 மணிநேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். 1 லட்சம் வரையிலான செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது. நல்ல வரவேற்கத்தக்க திட்டமாக இருப்பினும் சாலை விபத்தினை தவிர்ப்பதே முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும். அதற்கு பல குண்டும் குழியுமான சாலைகளை அரசு சரி செய்ய வேண்டும். அப்படி சரியாக உள்ள சாலைகளிலும் விபத்து நடக்கத்தான் செய்கிறது. அதற்கு காரணம், வாகனத்தை இயக்கும் நம் கவனகுறைவே! நாம் பல சாலைவிதிகளை கடைப்பிடிக்காத காரணத்தாலேயே நமக்குகோ அல்லது நம்முடன் சாலையில் பயணிப்பவருக்கோ ஆபத்தை ஏற்படுத்துகிறது. 


இருசக்கர மோட்டார் வாகனத்தை, ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் திருப்ப இண்டிகேட்டரை யாருமே பயன்படுத்துவதில்லை.  அதனால் ஏற்படும் விபத்தை பலமுறை கண்டிருக்கிறேன். அது போல L வளைவில் வளையும் போது 'ஹாரன்' சத்தத்தை எழுப்பி எதிரே வாகனம் வருகிறதா என்பதை உறுதி செய்த பின்னரே வாகனத்தை வளைக்க வேண்டும். இதுபோல சிறு சாலைவிதிகளை மீறும் போது தான் அதன் விளைவு பெரிதாக இருக்கிறது.


ஆகவே நாம் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து சாலைவிதிகளையும் இந்த கட்டுரையில் பார்போம்!


நடந்து செல்வோருக்கு


சாலையில் வலது புறம் நடக்கவேண்டும். சாலையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கைக்கோத்து கதை பேசி செல்வதை தவிர்க்க வேண்டும். சாலையை கடக்கும் போது இருபுறமும் கவனித்து வாகனங்கள் தொலைவில் இருக்கும் பட்சத்தில் அல்லது வாகனம் வராத பட்சத்தில் கடக்க வேண்டும். சாலையை கடக்கும் போது ஓடக்கூடாது. (குறிப்பாக இதனை குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக் கொடுங்கள்!)  நடந்து செல்லும் நீங்கள், உங்கள் நண்பர் பைக் போன்ற வாகனத்தை இயக்கிக்கொண்டு சாலையில் செல்லும்போது நீங்களாக அவரை கூப்பிடாதீர்கள். உங்களை பார்த்துக்கொண்டே அவர் சாலையை கவனிக்காது விபத்து ஏற்படக்கூடும்.


சைக்கிளில் செல்வோருக்கு


சைக்கிளில் முன்னும் பின்னும், ஒளியை பிரதிபலிக்கும் சிகப்பு அல்லது வெள்ளை நிற பட்டையை கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும். இது இரவில் உங்கள் வாகனம் சாலையில் இயங்கி கொண்டிருக்கிறது என்பதை மற்ற வாகனங்கள் அறிந்து கொள்ள உதவும். சைக்கிள் ஓட்டும் போது பெடல்களை சீராக அழுத்த வேண்டும். ஒரே ஒரு பெடலை எகிறி மிதித்தால் சைக்கிளின் பெடல் உடைந்து நீங்கள் கீழே விழும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  அது போல சைக்கிளில் செல்லும் போது மற்ற சைக்கிள், பைக் போன்ற வாகனத்துடன் நெருங்கி பேசிக்கொண்டே செல்லவேண்டாம். 


மோட்டார் சைக்கிளில் செல்லும்போது


தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தொலைபேசியில் அழைப்புவந்தால் சாலையில், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேசவும். அது அல்லாமல், காதுக்கும் தோளுக்கும் இடையில் தொலைபேசியை பொருத்திவிட்டு ஒரு புறம் சாய்ந்தபடி சென்றால், நிலை தடுமாறும் போது வாகனத்தை பிடிப்பதா? இல்லை தொலைபேசியை பிடிப்பதா? என்று நீங்கள் குழம்பும் தருவாயில் எமன் உங்கள் உயிரை பிடித்து சென்றுவிடுவார். ஆகவே சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அல்லது வாகனத்தை இயக்கும் முன்னர் தொலைபேசியை அணைத்துவிடவும் . 


நீங்கள் வாகனத்தை இயக்கும் போது ஒர் ஞானியை போல செயல்பட வேண்டும். ஆம், உங்கள் கோபம், பொறாமை, சந்தோஷம் போன்ற அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அது உங்களை மட்டும் இன்றி உங்கள் எதிரே வருபவரையும் ஆபத்தில் சிக்காமல் காப்பாற்றும்.  


ஒரு வாகனத்தை முந்தி செல்லும் போது 'ஹாரன்' மூலம் சத்தத்தை எழுப்பி பின்னர் வலதுபுறம் முந்தி செல்ல வேண்டும். உங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் ஒலி எழுப்பினால் அவர்களுக்கும் வழிவிட வேண்டும்.


உங்கள் வாகனத்தை இடது அல்லது வலது பக்கம் திரும்பும் போது சரியான திசையில் உள்ள இண்டிகேட்டரை ஒளிரவிட்டு கண்ணாடியின் மூலம் பின்புற வாகனத்தை கவனித்து பின் கவனமுடன் திருப்ப வேண்டும். இல்லை கைகளின் மூலம் சைகை செய்துவிட்டு  திருப்பவேண்டும். வளைவுகளில் ஒலி எழுப்பி செல்ல வேண்டும்.  


உங்கள் வாகனத்தில் உங்கள் சக்திக்கு மீறி எடையுள்ள பொருளை ஏற்ற வேண்டாம். உங்கள் பின் அவசர ஊர்தி, தீயணைப்பு வாகனம் வரும்போது வழிவிட வேண்டும். இரவில் வாகனத்தை ஓட்டும் போது எதிரில் வருபவரின் கண்களை கூசும்படி முகப்பு விளக்கை எரிய விடவேண்டாம். U திருப்பம் இல்லாத இடங்களில் வாகனத்தை திருப்பக்கூடாது. 50 வயதுக்கு மேற்பட்ட சக்கரை, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் மோட்டார் வாகனத்தை இயக்காமல் இருப்பது நல்லது. 18 வயதுக்குள் இருப்பவர்களை சைக்கிளை தவிர எந்த வாகனத்தையும் இயக்க அனுமதிக்காதீர்கள். குறிப்பிட்ட மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் மட்டுமே செல்வது நல்லது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி மற்றவர் குடியை கெடுக்காதீர்கள். 


இலகு மற்றும் கனரக வாகனத்தை இயக்கும்போது


காரில் செல்லும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இரவு நேரத்தில் நீங்கள் வாகனங்களை நிறுத்தினால் உங்கள் வாகனத்தின் சைகை விளக்கை எரியவிடுவது நல்லது. இரண்டு மணிநேரம் தொடர் பயணம் மேற்கொண்டால் பதினைந்து நிமிட ஓய்வு அவசியம்.  கனரக வாகனங்கள் முந்தி செல்லும் போது கவனம் அவசியம். 


கனரக வாகனங்களை இயக்குவோர் மற்ற வாகனங்களின் செய்கையை உன்னிப்பாக கவனித்த பிறகே மிக ஜாக்கிரதையாக உங்கள் வாகனத்தை நிறுத்தவோ அல்லது முந்தி செல்லவோ வேண்டும். கட்டுப்படுத்த முடியாத வேகத்தில்  வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்பான இடைவெளியில் செலுத்தவும். அதிகம் வெளிச்சம் தரும் வகையில் முகப்பு விளக்கை எரியவிட வேண்டாம். எந்த வாகனம் ஆனாலும் வளைவில் முந்துவதை தவிர்க்கவும்.


பேருந்தில் பயணிப்போருக்கு


இந்த தலைப்பு தவறாக இருப்பதாக நீங்கள்  நினைக்கலாம். பேருந்தை இயக்குநரை விட பயணிப்போரினால் அதிகம் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. 


பேருந்துகளில் பயணிப்போர் குறிப்பாக  வீரன், முனிஸ்வரன் போன்ற கோயில்களில் சாலையோரமாக வைக்கப்பட்டிருக்கும்  உண்டியலை பார்த்ததும் கையில் இருக்கும் சில்லறை காசுகளை சன்னல் வழியாக வீசுவது வாடிக்கையாகிவிட்டது. இது எதிர் வரும் வாகன ஓட்டியின் கண் போன்ற பகுதிகளில்பட்டு காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. பேருந்தை விட்டு இறங்கியபின் பேருந்து பின் புறமாக சாலையை கடக்காதீர்கள். பேருந்து சென்ற பின்னர் வலது புற சாலையில் வாகனம் வருகிறதா என்பதை அறிந்த பின்னர் சாலையை கடக்க வேண்டும்.


அறிவியலில் ஒர் விதி இருக்கிறது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியான கிளாசியஸ் விதி அது, அதாவது எந்த ஒரு இயந்திரத்தின் திறனும் 100% சரியாக இருக்காது என்பது. இது இயந்திரத்துக்கு மட்டும் அல்லாமல் மனிதனுக்கும் பொருந்தும், நாம் 100% சரியாக ஒன்றை செய்யவில்லை என்றாலும் முடிந்த அளவு 100% சரியாக செய்ய முயற்சிப்போம். அது சாலை விதி உட்பட அனைத்துக்குமே பொருந்தும். ஆகவே நம் உயிர் போல மற்றவரின் உயிரையும் காக்கும் சாலைவிதிகளை மதித்து செயல்படுவோம்‌. காலம் போல உயிரையும் திரும்ப பெற முடியாது


மானிடராய் பிறத்தல் அரிது


குகன்

தென்றல் இதழ் 33

2 கருத்துகள்

  1. நம்மை நம்பி இருப்பவர்கள் நலன் கருதி சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஆண்டுதோறும் ஜனவரி பிறந்துவிட்டால் இரண்டாவது மூன்றாவது வாரங்கள் எல்லாமே தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என அனுஷ்டிக்க படுவதோடு.. விழிப்புணர்வு பிரச்சாரமும் விதவிதமாய் நடக்கும். ஒமிக்ரான் நடத்திய சித்து விளையாட்டால் அரசு இதனை மறந்து போனாலும் சமூக அக்கறை யோடு தென்றல் இதழ் இதனை முன்னெடுத்து முன்னுதாரணம் ஆகியிருக்கிறது..

    பதின்ம வயது பிள்ளைகள்,, வண்டியை ஓட்டுவதையே வாழ்நாள் லட்சியமென நம்பிக்கொண்டுதிரிகிற தம்பிமார்கள் கட்டாயம் படிக்கவேண்டியதை குகனார் படைத்துவைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை