அண்மை

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

 


ரோமாபுரியே பற்றி எரிந்த போது 'பிடில்' (fiddle) வாசித்தான் ஒரு மன்னன் என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள்.. ஆம், அவன் பெயர் நீரோ.


ரோமாபுரியின் நீரோ -வை போல "இந்தியாவின் நீரோ" என்றொருவரை வரலாறு கேலியாக குறிப்பிட்டு அழைக்கிறது. 


யார் அவர்?


19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்...,,

பல ஆயிரம் கோடி ஜனங்கள் பசியால் வாடி செத்துக்கொண்டிருந்தபோது, அதி ஆடம்பரமாக டெல்லி மாநகரில் ஒரு தர்பார் விருந்து நடத்தி  லட்சம் பேருக்குரிய உணவுகளை வீணடித்து குப்பையில் கொட்டிய பெருமைக்குரியவர்(!)


அநேக பாமர மக்கள் அகோரிகளை போல பிணங்களையும் உயிருள்ள கழுதைகளின் பச்சை மாமிசங்களையும்,, பசிக்கொடுமையால்.. புசித்துக்கொண்டிருந்த காலத்தில்,, 

'டஜன்' கணக்கான கப்பல்களில் 

மூட்டைமூட்டையாக 'டன்' கணக்கான அரிசியை, வரியாக வசூலித்து லண்டன் பேரரசியிடம் கப்பமாக கொண்டுபோய் கொட்டியவர்.


தன்னை எதிர்த்து கேள்வி கேட்டு விமர்சித்த பத்திரிகை களின் வாயை அடைக்க வேண்டி,, 'வட்டாரமொழி பத்திரிக்கை தடைச்சட்டம்' போட்டு வைத்தவர்.


அவர் இந்தியர் இல்லை. ஒரு பிரிட்டிஷ் காரர். இந்தியாவின் வைசிராய்-யாக ஆட்சிபுரிந்தவர். பெயர் லிட்டன் பிரபு (lord Lytton).


(நவீன காலத்திலும் ஒரு நீரோ இருக்கிறார்.. நான் அவரை பற்றி எதுவும் சொல்லவில்லை..  

Modern day - Nero னு type செய்தால் கூகிள் எதாவது சொல்லும்..)


உணவுகிட்டாத ஒரே காரணத்தால் அன்றைக்கு சுமார் 5 மில்லியன் (50இலட்சம்) அப்பாவி இந்தியர்கள் துடிதுடித்து மாண்டுபோனார்கள்...! அதிலும் நெல்லுக்கு பெயர் போன தஞ்சையும் ஆந்திராவும் இருக்கிற அன்றைய மதராஸ் மாகாணத்தில்... அந்த தாதுவருஷ பஞ்சம் தலைவிரித்தாடியது என்றால் யார் நம்புவார்கள்?


இயற்கையான பஞ்சம் என்றபோதிலும் மக்கள் மீது எள் அளவும் ஈவு இரக்கமில்லாத ஆட்சியாளரின் மெத்தன நடவடிக்கையால் அது செயற்கையாக மரணங்களை துரிதப்படுத்தியது. தானியக்கிடங்கில் சேமிப்பில் இருந்ததை அவசர காலத்தில் மக்களுக்கு விநியோகிக்காமல் தானுண்டு தன் கடமையுண்டென பொறுப்பாக எல்லா தானியங்களையும் தன் தாய்நாட்டிற்கு நாடுகடத்தினார்.


இதனால் ஹிட்லர் முசோலினி முதலிய கொடுங்கோலர்களுக்கு முன்னோடியாக நினைவுகூறப்படுகிறார்.


வரலாறு கொடியவர்களாக காட்டும் எல்லாரிடமும் ஏதேனும் நம்பமுடியாத கலைத்திறமையும் புதைந்துகிடப்பதை அதன் ஆழம் கண்டவர்கள் நன்கு உணருவார்கள். 


உதாரணமாக..


ராவணன் ஒரு ஆகச்சிறந்த இசைமேதை.


ஹிட்லர் மறுக்க முடியாத ஒரு ஓவிய கலைஞன்.


அவ்வகையில் இந்த லிட்டன் பிரபு ஒரு நல்ல இலக்கியவாதி.. ஒரு நல்ல கவிஞர்.


இவரது பிரபலமான படைப்பு ஒன்று இருக்கிறது.. அதன் பெயர்

"THE SECRET WAY " (இரகசிய வழி).


சரி இருந்து விட்டு போகட்டும்.. அதற்கென்ன என்கிறீர்களா?


விஷயம் இருக்கிறது..!


அந்த கதைக்கும் நம் தமிழ்நாட்டிற்கும் தொடர்பு உள்ளது. கதையில் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அந்த கதையை தழுவி நம்மாளு ஒருத்தர் நம் நிலத்திற்கு ஏற்றவகையில் புதுக்காவியம் ஒன்றை படைத்தார். அதன்மூலம் உண்டானது அத்தொடர்பு.


அதுதான் மனோன்மணீயம்! என்கிற நாடக காவியம்.

அதை படைத்ததினாலே மங்கா புகழ்பெற்றவரானார் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்கள். 


சோக முடிவு கொண்ட நாடகங்களே 

அதிகம் சோபித்த அந்த காலத்தில் மகிழ்ச்சி கரமான முடிவோடு வெற்றி நடை போட்ட நற்றமிழ் நாடகம் அது. 


பாண்டிநாட்டு மன்னன் மகளை சேரநாட்டு இளவரசனுக்கு மணமுடிக்க முயல்வார்கள். அதை பாண்டியநாட்டு அமைச்சரே சூழ்ச்சி செய்து தடுப்பார். அவரது சூழ்ச்சியை முறியடித்து சாமியார் ஒருவரின் உதவியால் திட்டப்படி திருமணம் நடைபெறுவதே மனோன்மணீயம் கதை. 


மிகவும் துள்ளல்நடையில் அருந்தமிழ் சொற்களை அமுதில் குழைத்து சற்றே உயர்ரக நடையில் முழு காவியத்தையும் மூச்சுமுட்ட இயற்றி வைத்திருப்பார் ஆசிரியர் சுந்தரம்.


இவர் பிறந்தது கேரளம் என்றபோதிலும் நாகப்பட்டினம் நாராயணசாமி என்பவரிடம் தான் தமிழ் பயின்றார். அதே ஆசிரியரிடம்தான் வேதாசலம் என்பவரும் மாணவராக சேர்ந்து பயின்று... பின்னாளில், தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளார் ஆனார்!


மனோன்மணீய நாடகத்தில் வரும் சுந்தர முனிவர் என்கிற கதாபாத்திரம் இவரது ஞான ஆசிரியரான கோடகநல்லூர் சுந்தரசுவாமி-யின் நினைவாக பெயரிடபட்டுள்ளதை உணரமுடிகிறது.


அத்வைத தத்துவத்தை அகிலமெங்கும் பரப்பிய ஆதிசங்கரர் பிறந்த கேரளபூமியில் பிறந்ததனால் இவரும் சைவசித்தாந்தங்களும் அத்வைத ஞானமும் இளமையிலே கரைத்துக்குடித்திருந்தார்.


இந்நூலின் பாயிரம் விஷேஷமானது. மொழிவாழ்த்தினையே கடவுள் வாழ்த்தாக சகல சாமூத்ரிகா லட்சணங்களோடு வாஸ்து சாஸ்திர முறைப்படி புனைந்துவைக்கப்பட்டுள்ளது...!


உள்ளபடி அந்த பாடல்,,


நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"


சற்றே விளங்க காண்போமேயாயின்...,,


முதலில் நம் பூமித்தாயினை ஒரு பூமகளாக/ நிலமடந்தையாக மனதில் உருவகம் கொள்ளுங்கள்..


விண்ணிலிருந்து பார்க்க பூமி நீலநிறக்கோளாக தெரியுமல்லவா?


ஆக இந்த புவி மடந்தை நீல நிற சேலை உடுத்தியிருக்கிறாள்!!

ஏது சேலை..? அதுதான் ஆர்ப்பரிக்கும் பரந்துவிரிந்து நிறைந்த கடல்..!


 பொங்கல் பொங்கி வழிவது போல  அந்த மடந்தையின் முகத்தில் அழகுமிகுந்து ஒழுகுகிறதாம்..!  அதுவும் எப்படி? முக லட்சணத்துக்கு என்று என்னென்ன சீர்சிறப்பு இருக்கிறதோ அது அனைத்தும் நிறைந்த எழில் ஒழுகுகிற வதனமாம். (முகவெட்டு)


(அப்படியா எங்கே காட்டுங்க பார்ப்போம்!)


எங்கும் தேட வேணாம்.. உலக வரைபடத்தை.... முடிந்தால் குறிப்பாக ஆசிய கண்டத்தின் வரைபடத்தை எடுத்துப்பாருங்கள்.


அதில் இருக்கிற ஒருங்கிணைந்த இந்திய திருநாடாம் பரதகண்டத்தின் அமைப்பை பாருங்கள்.. அடடா அதுவல்லவா முகத்தோற்றம்..! வேறு எந்த நாட்டிற்கு இப்படியொரு வடிவமைப்பு கிடைக்கும்?


சரி அதைவிடுங்க,


முகம்னு ஒண்ணு இருந்தா கண்ணு காது மூக்கு வாயி.. அதை பத்தி லாமும் சொல்லனுமே..


சொல்லனும்தான்.. ஆனா கண்ணியமிகு கவிஞர்களின் சிந்தனை வேறு மாதிரியானது.!


நிலமடந்தையை வருணிக்கும் போதிலும்கூட அவர் அவளின் நெற்றியையும் அதில் அவள் இட்டிருக்கும் திலகத்தையும் மட்டுமே குறிப்பிடுகிறார்.


பரதகண்டத்தின் வதனத்தில் அதற்கென்றே செய்தாற்போன்று தக்க, சிறு பிறைநிலா போன்ற நெற்றியாக தக்காணமும்,

அந்த நெற்றிப்பொட்டில் இட்ட நறுமணத்திலகமாக திராவிட திருநாடும் இருக்கிறதாம்..!


( இரு புருவங்களுக்கு மத்தியிலிருந்து இடப்படும் நெற்றித்திலகம் போலத்தானே ஆசிய நிலவரைபடத்தில் தென்னிந்தியாவின் தோற்றம் இருக்கிறது..!)


அத்திலகத்தின் வாசனை  (திராவிட நாட்டு வளம்) போல உலகின் ஏனைய பிரதேசங்களும் வளம்பெற்று இன்பமுற..  எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருமைக்குரிய தமிழ் அணங்கே..!

தமிழ் அணங்கே..!


நீ ஒரு அதிசயம்.. பரம்பொருள் போன்றவள்..! 


எப்படி?


ஒரு பானை இருக்கிறது. அதை கீழேபோட்டால் சுக்குநூறாகிவிடும். இனி அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி 'சில்' அவ்வளவுதான். முன்பிருந்த பானை இனி இல்லை.


ஆனால் ஆதியில் ஒன்றாக இருந்த பரம்பொருள்...., பலவாகி..

எல்லா உயிர்களையும் எல்லா உலகத்தையும் படைத்து அளித்து காத்து அழித்து என ஒரு எல்லையே இல்லாமல்  பிரிந்துவிட்டபோதிலும் இன்னமும் கூட அவன் மூலப்பொருளாக  ஒருவனாகவே இருக்கிறான்.(அத்வைதம்)

அதுவும் முன் இருந்தபடியே இப்போதும்.


அவனை போலவே.. 


கன்னடம் தெலுங்கு மலையாளம் துளு என பல பாஷைகளை உன் வயிற்றிலிருந்து பெத்து போட்டு,,

அவை ஒவ்வொன்றுமே பலவாகிவிட்டபோதிலும் நீ இன்னமும் இருந்துகொண்டு இருக்கிறாய்!!


ஆரிய மொழி கூட உலகவழக்கு அற்று ஒழிந்து போய்விட்டது. 


நீயோ ? பாரதி சொன்னமாதிரி "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ?" என கம்பீரமா நிற்கிறாய்.


அதைவிட ஆச்சரியம்..,

இத்தனை காலம் ஆகியும் இத்தனை பிள்ளைகளை பெற்றும் நீ கிழவியாக கூட ஆக வில்லை..!


சீரோடும் சிறப்போடும் மாறா இளமையோடும் இருக்கிறாய்..


உன் இளமையை தக்கவைக்கும் திறனை எண்ணி வியக்கிறேன்..


என் செயல்களை மறந்துபோய்

வாழ்த்துகிறேன்..!


யாம் நின்னை வாழ்த்துதும்..!

மனமாற வாழ்த்துதும்..!


இயற்றமிழ் இலக்கிய நடையில் சொற்கள் கோத்து கிடக்கிறதை கொஞ்சம் உதிர்த்துப்போட்டால்..,

அட இதைதான் இப்படி எழுதியிருக்காரா மனுஷன்? என்கிற அளவுக்கு எளிதாக நமக்கு விளங்கும்..


எடுத்துக்காட்டாக,


நீராருங் கடல் = நீர் ஆரும் கடல் 


(அதாவது தண்ணீ நிறைந்து ஆர்ப்பரிக்கிற கடல்)


உடுத்த = உடுத்திய /அணிந்த


நிலமடந்தைக் கெழிலொழுகும் = நில மடந்தைக்கு எழில் ஒழுகும்


சீராரும் = சீர் ஆரும் ( சிறப்பார்ந்த/ ஐஸ்வர்யம் பொருந்திய)


வதனமென = வதனம் (முகவெட்டு) என 


திகழ்பரதகண்டமிதில் = திகழ்கிற பரத கண்டம். இதில் ,


தெக்கணமும் = தக்காணம்/தக்ஷிணபிரதேசம்/Deccan (தென்னகமும்)


அதிற்சிறந்த = அதில் சிறந்த


திராவிட நல்திருநாடும்...


தக்கசிறு பிறைநுதலும் = தக்க(தகுந்த) சிறு பிறைநிலா நுதலும் (நெற்றியும்)


தரித்த நறுந் திலகமுமே = தரித்துக்கொண்ட நறுமண திலகமும் ஆகும்..


தமிழணங்கே = தமிழ் அணங்கே /தேவதையே


கன்னடமும் = கன்னட மொழியும்


களி தெலுங்கும்= களிப்பூட்டும் தெலுங்கு மொழியும்


கவின் மலையாளமும் = அழகிய மலையாள மொழியும்


துளுவும் = துளு பாஷையும்


உன்னுதரத்தேயுதித்தே = உன் உதரத்தில்(வயிறு) உதித்தே 


ஒன்றுபலவாகிடினும் = ஒன்றாயிருந்து பலவாக ஆகிடினும்


சீரிளமை = சீர் இளமை


ஆரம்பத்தில் கரந்தை தமிழ்ச் சங்கத்தால் போற்றி பாடப்பட்ட இப்பாடலை கேட்ட அறிஞர் அண்ணா இதன் 'திராவிட நல்திருநாடும்' எனும் சொல்லால் கவரப்பட்டு  திமுக வென்றபிறகு அதை தமிழக அரசால் அங்கீகரிக்க வைக்க எண்ணியிருந்தார். பின்னாளில் (1970) முதல்வரான கலைஞர், சிறிது மாற்றத்துடன் அப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அறிவித்தார்.

நன்மை கருதி செய்த மாற்றத்தை ஏதோ குற்றச்செயல்போல கருதி சிலர் கூக்குரலிடுவது வருந்தத்தக்கது.


மொழிவாரி மாநிலமாக பிரிந்தபிறகு.. அரசியல் சூழலில்,, மற்ற மொழிகளின் சுயமரியாதையை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக சில வரிகளை அவர் புறந்தள்ளியது பூரண நற்செயலே ஆகும்.

அதில் தேவையில்லாத விவாதங்களுக்கு இடமில்லை. 


தன்பாடல் தமிழகத்தின் மாநிலபாடலாக மாறும் என்று தெரிந்திருந்தால் மனோன்மணீய சுந்தரனாரே கூட இந்த வரிகளை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.


எந்த ஒன்றிலும் இருக்கிற நல்லதை காணுங்கள்....!


நல்லதையே கேளுங்கள்..!


நல்லதையே பாடுங்கள்..


எங்கே..  "முல்லைப்பாணி" என்கிற 'மோகன' ராகத்தில் தாய்த்தமிழ்நாட்டின் தலைவணக்கப் பாடலை அதன் பொருளுணர்ந்து ஒருமுறை தலைநிமிர்ந்து பாடுவோமா..?




நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்


தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!


அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!


தமிழணங்கே!


உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!


சூரியராஜ்

தென்றல் இதழ் 31

2 கருத்துகள்

புதியது பழையவை