'இவன் மண்டையை திறந்து புத்தகத்தை வைத்தாலும் இவனுக்கு படிப்பு ஏறாது' என்று அண்ணன் சபாபதி தலையில் அடித்துக் கொண்டார்.
அண்ணியாரும் அன்பாக பலமுறை படிக்க சொல்லி பார்த்துள்ளார்கள்; பையன் கேட்கவில்லை.
'இனி இவனை படிப்பே கதியென ஆக்கினாலுங் கூட படிப்பான் என்று நினைத்தால் அதை விட பரம மூடத்தனம் இருக்காது சபாபதி' என்றே உற்றோரும் சுற்றோரும் சொன்னார்கள்.
அண்ணன் சபாபதி விடவில்லை. "இவனை மேல் அறையில் போட்டு பூட்டு. சோறு தண்ணீர் மட்டும் போடு. படித்தால் மட்டுமே இவனுக்கு புற வாழ்வு இல்லையேல் சிறை வாழ்வு தான்" என்று கண்டிப்பாக தன் மனைவியிடம் கூறி விட்டார்.
கண்ணீர்மல்க பையனை மாடி அறையில் போட்டு அடைத்தார் அண்ணியார்.
பால்மனம் மாறாத ஒன்பதே வயதுடைய பிஞ்சு சிறுவன் என் செய்வான்.
சிலருக்கு மட்டுமே இனிக்கும் கல்வி. இவனுக்கு கசந்தால் யாருடைய தவறது?
அறை கூட அவனுக்கு நேர்ந்த அநீதியை கண்டு அமைதியாய் இருந்தது.
அந்த தனிமையில் அப்போது அவனுக்கு துணையாக இருந்தது ஒரு புஸ்தகமும் ஒரு நிலைகண்ணாடியும் மட்டுமே.
புஸ்தகத்தை ஓரங்கட்டினான்.
நிலை கண்ணாடி முன்வந்தமர்ந்தான்.
அண்ணனுடன் பையன் சில கோவில்களுக்கு சென்றதுண்டு. அதிலொரு கோவில் அந்நேரம் அவன் மனதை பிடித்திழுத்தது.
அந்த கோவில் கருவறையில் பார்த்த சுந்தர முகத்தை மீண்டும் நினைக்கலானான்.
அவனது அந்த ஆழ்ந்த சிந்தனை எவ்வாறு இருந்ததெனில், 'தனது உயிர் தனது இந்த உடலோடு ஒட்டி உள்ளதோ' என்பதை கூட அவன் மறந்திருந்தான்.
அசைக்க முடியாத உண்மைக் கொண்டு கனா கற்பனா என்ற நிலையெல்லாம் தாண்டி அவனது சிந்தையில் உருவம் ஆழ்ந்து தெரியலானது.
லேசாக விழிகளை திறந்தான்.
நிலைக்கண்ணாடியில் அவனது முகம் தெரியாமல், தணிகை மலை கந்த பெருமான் தெரியலாயினர்.
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும்ஓர்
கூட்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருள்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
அதாவது அவன் கண்முன்னே, "ஆறு முகங்கள், கடப்ப மாலை தாங்கிய பன்னிரு தோள்கள், தாமரை மலர் போன்ற இரு தாள்கள், கையில் கூர்மை கொண்ட ஒரு வேல், இதனை தாங்குகின்ற பெருமையை பெற்ற மயில் மற்றும் ஒரு கோழிக் கொடியும் கொண்டு கருணையே வடிவான தணிகை இறைவன்" கந்தன் அப்பையன் முன் காட்சி தந்தார்.
அந்த சிறு பாலகன் தான் சிரஞ்சீவி வள்ளல் பெருமானார் ஆவார்.
வள்ளலார் மதங்களும் அதன் கடவுளர்களும் தத்துவ விளங்கங்களே என்று கூறி இருந்தாலும், எந்த ஒரு வடிவ வழிபாட்டையும் அவர் புறக்கணிக்கவில்லை, தூற்றவில்லை. அதுவும் ஞானம் தர வல்லது என்றார்.
அதனிலும் ஆறுமுகங்கொண்ட முருகப்பெருமானை அவர் ஆருயிராய் நேசித்தார்.
ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூச நட்சத்திரம் தைப்பூசம் என்று கூறப்பட்டு முருகப்பெருமானுக்கு வெகுவாக பல சுப சடங்குகள் செய்யப்படும்
அன்று தான் முருகப்பெருமான் தன் தாய் பார்வதி தேவியிடமிருந்து ஞான வேல் பெற்றதாய் ஐதீகம்.
தைப்பூசம் தரும் ஞான ஒளியை வள்ளல் பெருமான் ஜோதி வழி உணர்த்தலானார்.
தைபூசத்தன்று வடலூர் சத்திய ஞான சபையில் அமைந்துள்ள பெரியதோர் கண்ணாடி எதிரில் ஜோதியாகிய திரு விளக்கு ஏழு திரை மறைப்பிலிருந்து நீக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்டப்படும்.
சாதாரணமாக இறைவனது வழிபாட்டிலும் அபிஷேகத்திற்கு முன்னர் திரை போட்டு நீக்குவார்கள். நீங்கள் கண்டிருப்பீர்.
இச்செய்கைக்கு தத்துவ விளக்கமொன்று உண்டு.
தைப்பூசத்தில் ஜோதி தரிசனம் செய்ய ஏழு திரைகளை அறிய வேண்டியதவசியம். அதற்கு வள்ளல் பெருமான் தரும் விளக்கம்:
இந்த பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில், நான் ஆன்மா, சிற்றணு வடிவன், மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது. லலாட ஸ்தானமிருப்படம், கால் பங்கு பொன்மை முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகள் உண்டு. அவையாவன: கருப்புத் திரை மாயா சத்தி, நீலத் திரை கிரியா சத்தி, பச்சைத் திரை பராசத்தி, சிவப்புத் திரை இச்சா சத்தி, பொன்மைத் திரை ஞான சத்தி, வெண்மைத் திரை ஆதி சத்தி, கலப்புத் திரை சிற்சத்தி"
இது போன்று நாம் வழிபடும் ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் ஒரு ஞானத்தெளிவு இருக்கும்.
அதை உணர்ந்து செய்கையில் உருவ வழிபாட்டின் பூரணத்துவத்தை பெறலாம்.
முருகப்பெருமானுக்கு பல கைகளையும் அதில் மலரும் கொடியும் வீரமுணர்த்தும் சாதனங்களும் இடம் பெற்றிருப்பது, ஆறுமுகன் என்பதால் பன்னிரண்டு கரம் என்பது பொருளல்ல.
அது தயை மற்றும் வீரத்தினை அதிகப்படுத்தி காட்டுவதற்கானது. அதாவது கேட்பதை எல்லாம் கொடுப்பவனுக்கு இரண்டு கை போதாது என்பதை காட்டுவது. உலக துன்பத்தை எல்லாம் நீக்கவல்லவனுக்கு இரண்டு வீர சாதனம் போதாது என்பதை காட்டுவது.
இவ்வாறு முறையே பராசக்தி, ஈசன், விஷ்ணு, திருமால் என்றும் தீபாவளி, பொங்கல், திருவாதிரை, தைப்பூசம், விசாகம், சதுர்த்தி, சஷ்டி என்றும் வழிபடுவது அனைத்திற்குமே மூலம் ஞானமே ஆகும்.
வரும் ஜனவரி 18 ஆம் தேதி நாம் தைப்பூசத்தை நெருங்க உள்ளோம். அந்நாளை இன்நாளாய் மாற்ற வள்ளல் பெருமான் சொன்ன 7 திரைகளின் மயக்கங்களை களைந்து முருகப்பெருமானை வழிபட சோகம் விலகும், ஞானம் அணுகும்.
ஈசதாசன்
கெட்டும் பட்டணம் போ என்பார்கள். பட்டணம் போய் வாழ்ந்தவரும் உண்டு, தாழ்ந்தவரும் உண்டு. ஆனால் அடிகளார் சென்னை கந்தக்கோட்டத்தில் வாழ்ந்து நல்வழிபடுத்னார் என்ற செய்தி யாரையும் மகிழ வைக்கும். அவருடைய கருத்துக்களை தாங்கி வரும் கட்டுரைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு