அண்மை

தந்திர உலகம் - 13.பெருமணல் தீவு

தந்திர உலகம் 

முதல் பாகம் - புகைக்கூண்டு

13.பெருமணல் தீவு

தந்திர உலகம் 13


அது ஒரு அரண்மனை...! முழுவதும் உயர்ரக மெழுகு கொண்டு உலகின் ஆகச்சிறந்த வடிவமைப்பாளர்கள் மூலம் நுட்பமான வடிவமைப்புடன் அது  கட்டமைக்கப்பட்டிருந்தது..!

அந்த அரண்மனை அரசனால் அல்ல ஒரு பேரரசியால் ஆளப்பட்டு வருகிறது. அவள் ஒரு சர்வாதிகாரியும் கூட... எனினும் மக்கள் அவளது மேலாண்மையையும் அவள் ஏவுகிற கட்டளைகளையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வதினால் பார்ப்பதற்கு ஏதோ ஜனநாயக கட்டமைப்பு போலவே தோற்றமளித்தது..!

பொதுவாக அரசர்கள்தான் பலதார மணம்புரிவது வழக்கம். ஆனால் இங்கு இந்த பேரரசி பல ஆண்களை மணம்புரிந்திருந்தாள்..!

ஆனால் பட்டத்து அரசன் என்று எவரும் இருப்பதுபோல தெரியவில்லை. வர்ணாசிரமம் வர்க்கபேதம் முதலியன கடைபிடித்ததற்கு சான்றாக பணியாட்கள் உழைக்கும் மக்கள் பலவாறாக பிரிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் அயராத உழைப்பை அங்கிருந்த ஆதிக்க பிரபுக்கள் நோகாமல் சுரண்டி தின்று உடம்பையும் உயிரையும் வளர்த்தனர். அரண்மனையை மையப்படுத்தியே மக்களின் வாழ்வாதாரமும் இருந்தபடியால்... செய்யும் தொழில்களும் அதன்பொருட்டே நகர்ந்தது. அரண்மனைவாசிகளுக்கு வேண்டிய உணவும் இதரபொருளும் கொண்டுவருவதே பலருடைய தலையாய பணியாக இருந்தது. கோட்டையினுள் கஜானா என்று தனியாக ஏதுமில்லை.. அந்த கோட்டையே ஒரு கஜானா தான்! எனினும் அந்நியர் எவரும் அத்தனை சுலபத்தில் கோட்டையை நெருங்கிவிட முடியாது... அரண்மனையில் பிரத்யேக பயிற்சி பெற்ற காவல்வீரர்கள், மெய்க்காப்பாளர்கள் என அநேகர் இருந்தனர்.  


ஆடல்பாடல் என கலைநிகழ்ச்சிகளுக்கும் அங்கு பஞ்சமில்லை..! அரண்மனையின் உடைந்த சிதிலமடைந்த பகுதிகளை உடனுக்குடன் சீரமைக்க அதிரடி விரைவுப்படை ஒன்று தயாராக இருந்துகொண்டே இருக்கும். அதற்கு தோதாக எந்நேரமும் அவற்றுக்கு வேலையும் இருந்தவண்ணம் இருக்கும்.

அதுபோக அந்த அரண்மனையில் அநேக செவிலியர்களும் இருந்துவந்தனர். பிறந்த பச்சிளம் சிசுக்களுக்கு போஷாக்கான அமுது ஊட்ட அவர்களை விட்டால் அங்கு வேறு ஆள் இல்லை! ஆயிரம் ஜன்னல்களும் நூற்றுக்கணக்கான வாயில்களும்கொண்ட அந்த அரண்மனைக்கோட்டை அந்தரத்தில் ஒரு ஆகாச கோட்டையைப் போல தொங்கிக்கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஏனெனில் அதன் அஸ்திவாரம் அடியில் இல்லை மாறாக அதன் உச்சந்தலைப்பகுதியில் அமைந்திருந்தது. ஒரு வேங்கை மரக்கிளையில் கருஞ்சிவப்பு நிறத்தில் தோற்றமளித்து தொங்கிக்கொண்டிருக்கும் அந்த அற்புத அரண்மனையை "தேன்கூடு" என்றும் கூறலாம்.

ஒரு ராணி தேனீயும் சில ஆண்தேனீக்களும் ஏராளமான வேலைக்கார தேனீக்களும் பச்சிளம் புழுக்களும் (லார்வா-)மாக அந்த அரண்மனை மெழுகுக்கூட்டில் வாழ்வுநடத்தி வந்தன. நினைத்துப்பார்க்க முடியாத நீண்ட தொலைவுகளுக்கும் சென்று அரிதினும் அரிதான புதுமலர்களை தேடித்தேடி அதிலிருந்து அமுதம் நிகர்த்த மதுவை உறிஞ்சிக்கொண்டுவந்து தமதுகூட்டின் அறுகோண அறையில் துளிஇடம் மிஞ்சாமல் பத்திரமாக அந்த மதிப்புறு செல்வத்தை சேமித்து வைத்தன..!


செல்வம் எந்த வடிவில் சேமிக்கப்பட்டால் என்ன? ஓரிடத்தில் தங்காமல் 

சென்றுகொண்டே இருப்பதால் தானே அதற்கு 'செல்'வம் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்..!


இதோ.. இந்த செல்வமும் செல்ல வேண்டிய நேரம் வந்துசேர்ந்தது..!

பலவாரங்களாக பாடுபட்டு உழைத்து சேகரித்த அவற்றின் சேமிப்புக்கு பெருத்த அசம்பாவிதம் நேர்ந்தது... ஒரே ஒரு கல்..!


ஒரே ஒரு கல்... எங்கிருந்தோ வந்து தாக்கியதில் அந்த தேன்கூட்டு அரண்மனையின் மகரதோரணவாயிலை நொடிப்பொழுதில் இடிந்து உருக்குலைய வைத்தது. சேதாரம் ஆன பகுதிவழியே இந்த பூமிப்பந்தின் உயரிய சுவை வஸ்து கசிந்து வழிய தொடங்கியது...  அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான தேனீ படைகள் மருண்டுபோய் இந்த நாசகார செயலை செய்தவனை தேடி நாலாபுறமும் அலைந்து திரிந்தன.


இன்னொரு தேனீப்படை விரைந்து வந்து சேதமடைந்த இடத்தை சூழ்ந்து அதனை சீரமைக்க முயன்றன.  எனினும் அந்த சிலமணி நேரத்தில் சற்றே அதிகப்படியான தேன் அதிலிருந்து ஒழுகியதை அவற்றால் தடுக்க இயலவில்லை..


முயற்சியில் சிலந்தியையும்

சுறுசுறுப்பில் எறும்பையும் ஒன்றுகலந்த வடிவமென உழைப்புக்கு பெயர்போன தேனீ பூச்சிகளுக்கு காவல்செய்வதிலும் துப்பு துலக்குவதிலும் வல்லமை குறைவுதான் போலும். இல்லாவிடில் இப்படி யொரு பாதகசெயலை செய்துவிட்டு அதே மரத்தின் பருத்து திரண்ட தடிமனான வேருக்கு பின்னால் ஒளிந்துகொண்டு படுத்திருக்கும் சென்னியை கண்டுபிடித்து கொட்டாமல், இப்படி கூட்டையே சுற்றி சுற்றி வந்து ராகமிட்டு மொய்த்துக்கொண்டிருக்குமா என்ன??.


முன்னேற்பாடாக தேன் கூட்டின் நேர்கீழே வாழைஇலை போன்ற பரந்துபட்ட சில கிழங்கு தாவரங்களின் இலைகளை அடுக்காக பரப்பி வைத்திருந்தபடியால்,, சொட்டிய ஒவ்வொரு துளி தேனும் அந்த இலைகளில் வந்து விழுந்தது...! இலைகள் சற்று அகலமானவை ஆதலால் உயரத்திலிருந்து விழுந்து சொட்டியபிறகு தெறிக்கும் துளிகள்

கூட இலையின் விளிம்பை தாண்டி விழுந்திடவில்லை..


சில நாழிகை கடந்த பிறகு தேன் ஒழுகுவது நின்றுபோனது. தேனீக்களின் ரீங்காரமும் அடங்கியது. சேதமடைந்த கூட்டின் அந்த பாகத்தை அடையாளம் காணமுடியாதபடி அதில் கூட்டாக குழுமிக்கொண்டுவிட்டன தேனீப்படைவீரர்கள்..!


மிகுந்த தயக்கமும் யோசனையுமாய் அவ்வபோது அண்ணாந்து பார்த்தபடி மறைவிலிருந்து வெளியே வந்தான்..சென்னி.


தரையில் விரித்த இலைகளில் தான் திட்டமிட்டபடி சேகரமாயிருந்த தேனை ஆசையோடு ஒருகணம் நோக்கினான்.

கீழே உக்கார்ந்து விரலால் சிறிதளவு தொட்டு வாயில் இட்டு சுவைத்தான்.. அவன் கண் இமைகள் மூடின.. விரலோடு இருந்த வாயின் உதடுகள் மட்டும் விரிந்து கண்ணத்தை உப்பசெய்தன. அப்படியே மெய்மறந்து உறைந்தான்.


விரல் வெளியே வந்ததும் வாய் உச்சரித்தது... , 

" ம்..ம்..ம்..!! அற்புதம்.. அதிஅற்புதம்!"


*************


(வெள்ளொளி வீசி கதிரவன் கலங்கடிக்கும் நண்பகல் நேரம்...! தேன்கூடு இருந்த பகுதியிலிருந்து கூப்பிடு தொலைவில்.. ஒரு புதர்.. அதிலிருந்து பேச்சு குரல் கேட்கிறது..)


"யப்பா சாமி! இனியும் என்னால் பொறுக்க முடியாது..! நானே எதாவது செய்து அதை எடுத்துக்கொள்கிறேன்.. போனவன் அங்கேயே தூங்கிவிட்டான் போலிருக்கிறது.. ஏம்ப்பா..! நந்து பையா! உண்மையிலே உனக்கு எதாவது தெரிகிறதா..?... இல்லை சும்மனாச்சும்  முன்னாடி உக்காந்து செடிக்கு சொறிந்துவிட்டுக்கொண்டிருக்கிறாயா..?.." வெகுநேரம் காத்திருந்த களைப்பினால் கத்திக்கொண்டே  நந்துவின் முதுகை நொந்துபோய் தட்டினான் ஆக்கூ.


"உஷ்.....ஷ்..! கத்தாதே ஆக்கூ..! " என்று சைகையாலே நந்து மறுமொழிகூறிட..


ஆக்கூ மறுபடியும் ஏதேதோ உளறி புலம்பிக்கொண்டிருந்தான்.


சென்னியின் செயல்களை வெகுதூரத்திலிருந்து நந்துவின் இரு நேத்திரங்கள் உற்றுநோக்கியபடி இருந்தன. தான் மறைவாக அமர்ந்திருந்த புதரின் ஒரு கொடிஇலையை கையால் விலக்கியபடி முழங்கால் இட்டு அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் நந்து. அவன் அருகிலேயே ஆக்கூ , நன்னன், பதுமன் ஆகியோரும் ஒன்றாகவே பதுங்கி இருந்தனர்.


நன்னன் சொன்னான்.., " அடேய் ஆக்கூ! சற்றே பொறு ! காரியத்தை கெடுத்து விடாதே! உள்ளபடி தேன் கிடைத்துவிட்டால் ,, என் பங்கையும் உனக்கே தந்துவிடுகிறேன்..! அதுவரை அமைதியா இரு..."


"ஆஹா! நன்னா நீ நல்லவன் என்று எனக்கு தெரியும்.. ஆனால் இத்தனை நல்லவனாய் எப்போது மாறினாய்?"


"அவசரப்படாதே ஆக்கூ! இதுவும் என் சுயநலம் பொருட்டுதான் சொல்கிறேன்.. இத்தனை சின்னஞ்சிறு பூச்சிகள் எத்தனை அரும்பாடுபட்டு எத்தனை மாதங்கள் மெனக்கெட்டு இந்த தேனை சேகரித்திருக்கும்.. அதை இப்படி ஒரு கணத்தில் திருடி கொண்டுவந்து சுவைக்க முனைவது பாவமல்லவா? அந்த பாவம் எனக்கு வேணாம்! நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்..! அதான் அப்படி சொன்னேன்."


நன்னன் இப்படி சொல்லவும் ஆக்கூ தன் தலையில் அடித்துக்கொண்டு..  நந்துவை நோக்கி,


"கேட்டாயா.. நந்து! வர வர இந்த நன்னன் கிறுக்கனாகிவிட்டான். நான் எது செய்தாலும் என்னமோ பஞ்ச மா பாவத்தை செய்த கொடியவனை போல என்னை சித்தரிக்கிறான். இன்னும் கொஞ்சம் விட்டால்,,,  ' எங்கும் நடந்து போகாதே எறும்பு செத்திடும்' என்றுகூட சொல்லுவானோ என்று பயமாய் இருக்கு..!" 


நந்து புன்முறுவல்மட்டுமே பதிலுக்கு பூத்தான்..


ஆனால் பொடியனான பதுமன் தன் கருத்தை பாய்ச்ச தொடங்கினான்..


"ஆக்கூ அண்ணன் சொல்வது சரிதான் நன்னண்ணா! 'இரக்கம் மிதமிஞ்சி போய்விட்டால் மனிதவாழ்வே சுணக்கம் கொண்டுவிடும்!' என்பார் எங்கள் மகாகுரு.. உங்களால் எல்லா பிராணிகளிடமும் இரக்கத்தை காட்ட முடியுமா என்ன? அல்லது இரக்கத்தை எதிர்பார்க்கத்தான் முடியுமா? சொல்லுங்கள்..! "  ஆக்கூ பல நாளாய் கேட்க நினைத்திருந்ததை இப்போது

பதுமன் பளிச்சென்று கேட்டே விட்டான்.


"உண்மைதான் பதுமா! என்னால் எல்லா பிராணிகளிடமும் இரக்கத்தை காட்டவும் முடியாது எதிர்பார்க்கவும் முடியாதுதான்! என்றாலும் கூட என்னால் காட்டமுடிகிற வாய்ப்பு இருக்கிற இடத்தில் இரக்கம் காட்ட தவற கூடாதல்லவா? தவறவே மாட்டேன்..! 

முடிந்த மட்டும் முயல்கிறேன். முடியாவிட்டால்.. பார்த்துக்கொள்வோம்! "


"நீங்கள் பெரிய கொள்கைவாதி போலிருக்கு நன்னண்ணா!" பதுமன் வியப்பு மேலிட கூறினான்.


"கொள்கை என்றோ குறிக்கோள் என்றோ இதை சொல்ல முடியாது பதுமா! இருந்தாலும் நான் கடைபிடிக்கிற வாழ்வியல் நெறியாக இதை வைத்திருக்கிறேன்..!.

இருந்தாலும் சில பிராணிகளிடம் இன்னமும் என்னால் இரக்கம் காட்ட முடியவில்லை... தெரியுமா?"


"அப்படியா..? அந்த துரதிருஷ்டகரமான பிராணி எது நன்னண்ணா?"


"உன் பக்கத்திலேயே நிற்கிறதுபார் ஆக்கூ என்கிற மனித பிராணி! அதன்மேல் தான் இரக்கமே பிறப்பது இல்லை எனக்கு! "


பதுமன் சிரித்து விட்டான்..!


ஆக்கூவுக்கு மானக்கேடாக போய்விட்டது.


"என்னடா சொன்னாய் நயவஞ்சகா! என்னை பிராணிகளின் பட்டியலிலா வைத்திருக்கிறாய்?!! உன்னை இன்று விடப்போவதில்லை..! " என்றபடி ஆக்கூவும் நன்னனும் துவந்த யுத்தம் தொடங்கி கட்டிப்பிடித்து புரள ஆரம்பித்தனர்.


இவ்விதம் இவர்கள் மாறி மாறி பூசல்கொண்டிருக்கையில்...


அங்கே சென்னி லாவகமாக இலைகளை கூம்பாக மடித்து தேனை சேகரித்து எடுத்து வந்துகொண்டிருந்தான்.. 


சில அடிகள் எடுத்துவைத்தபோது ஒருமாதிரி உணர்வு தோன்றியது..

மூளைவழியாக உள்ளிருந்து அவன் மூக்கை வருடிவிட்டு யாரோ அவன் தொண்டையையும் நெருடுவது போல இருந்தது.  சில நொடிகள் அப்படியே விக்கித்து நின்றான்.


"ங்.ஙே.... ங்..ஙே.. ஞ்... ச்சூ....சூ...!!"


ஒரு பலமான தும்மல்!


காட்டின் அந்த பகுதியே குலுங்கி அதிர்ந்து விட்டது..


தூரத்தில் ஒளிந்திருந்த நால்வருக்குமே அது தெளிவாக கேட்டது. 


தும்மலின் வீரியத்தில் கண்கள் கலங்கிவிட ,, கைகளில் தேன் இருந்ததால் தோள்பட்டையால் முகத்தை துடைத்தான்.


துடைக்கும்போது அவனது கையில் ஒளிரும் வண்ணத்தில் ஒரு பூச்சி உக்காந்திருந்தது... சாட்ஷாத் அது அந்த தேனீக்களில் ஒன்றுதான்.


"அட ! இது எங்கிருந்து வந்தது.? ப்பூ.. ஓடிபோ.. பற பற.. ப்பூ.." என ஊதினான்.


அது இறக்கையை நொடிக்கு நாலாயிரம் தடவை ஆட்டி ஒலியை உண்டாக்கிகொண்டே பறந்து அவன் முகத்தினருகே சுற்றியது..


இன்னும் அதிகமான ரீங்கார ஓசை அவன் செவிகளை பின்புறமிருந்து தாக்கியது..


திரும்பி பார்க்கவே அவன் அஞ்சினான்.. இரண்டடி நடந்துவிட்டு மூன்றாம் அடியிலேயே அதை ஓட்டமாக மாற்றி ஓடத்தொடங்கினான்..


அவன் அஞ்சியது சரிதான்..


தேனீக்கள்..! தேனீப்படை அவனை துரத்துகிறது.. கும்பல் கும்பலாக.


ஏற்கனவே சிறுவயதில் தேனீயிடம் கொட்டுவாங்கிய அனுபவம் அதுதந்த சுளீர் வேதனை எல்லாம் நினைவுக்கு வரவே சென்னி தன்னை மறந்து கத்தியபடி ஓடினான்..!


"ஆ..! ஐயோ..! தேனீ துரத்துதே..!

நன்னா!! நந்து..! ஆக்கூ ஓடுங்க ஓடுங்க.. ஓடிடுங்க..!" 


அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை.. யோசிக்க நேரமுமில்லை.. சென்னி தலைதெறிக்க ஓடினான்..! 


அவன் ஓடுவதை பார்த்து இன்னது என சுதாரித்துக்கொண்டு இவர்களும் புதரை விட்டு எழுந்து ஓடினர்.. 


ஆக்கூவும் ஓடினான்.. முன்னால் ஓடும் சென்னிக்காகவோ..  பின்னால் துரத்தி வருகிற தேனீக்காகவோ அல்ல சென்னியின் கைகளில் இருக்கிற தேனுக்காக...,


உண்மையில் தேனீ அவர்களை சிறிது தூரம் விரட்டிவிட்டு திரும்பிபோய்விட்டது. சென்னி தான் ஏதோ ஒருவித அச்ச உணர்வால் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருந்தான்.


கண்ணாபின்னா வென எங்கெங்கோ ஓடியவன் தன்முன்னே போய்க்கொண்டிருந்த ஒருவரை போய் வேகமாக மோதி விழுந்துவிட்டான். அவரையும் தள்ளி விட்டுவிட்டான்.


மூச்சு இறைத்தது


இதயம் துடித்தது.


தலை சுற்றியது..


காடே சுற்றியது..!


****


சிறிதுநேரம் கழித்து சித்த சுவாதீனம் அடைந்து நிதானம் பெற்ற பின் சென்னி கண்விழித்து பார்த்தான். 


தன் தோழர்கள் மூவரும் அந்த பதுமனும் அவ்விடம் இருந்தார்கள்.

அவர்களின் நாலிரண்டு எட்டு விழிகளும் இவனை பார்க்காமல் அருகே வேறு யாரையோ பார்த்துக்கொண்டிருந்தன‌.


எட்டோடு இவனது இருவிழியுமாய் சேர்த்து பத்து விழிகள் அங்கே கீழே விழுந்து இறைந்துகிடந்த கிழிஞ்சல்களையும் சங்குகளையும் சிப்பிகளையும் அவை நிரம்பிகிடந்த பெரிய அழகான மூங்கில் கூடையையும் பார்த்தன..


இன்னும் தெளிவாக சொல்லவேணுமாயின்.. இறைந்துவிட்ட சங்குகளை சிப்பிகளை எடுத்து தன் கூடையில் அடுக்கிக்கொண்டிருக்கும் தாழம்பூ சூடிய ஒரு மரகதபதுமையை பார்த்துக்கொண்டிருந்தன..!


ஒரே ஒரு முறை அந்த பதுமை நிமிர்ந்து தன் வேல்விழியால் கோப பார்வை வீசிட ,, ஏக காலத்தில் அந்த பத்து விழிகளும்

திக்குக்கு ஒன்றாய் சிதறி போயின..


தன் செங்காந்தள் கரங்களால் வெண்சங்கில் ஒட்டியிருந்த நுண்மண்ணை தட்டி ஊதித்தள்ளி, அவள் மெல்லிடையினில் சுற்றிய தோல்செய் துணியால் துடைத்து கூடையில் இட்டாள்...


எல்லாவற்றையும் எடுத்து கூடைதனில் போட்டபிறகு எழுந்துநின்று, அந்த கூடையையும் தூக்கி தன் பூங்கூந்தலில் இருத்தினாள்.


சென்னியால் நடந்தது என்ன என்று ஒருவாறு புரிந்து கொள்ள முடிந்தது.


அதனால் அவனே பேச்சுகுடுத்தான்...

"ஆ..ங்..  இது.... இதுவந்து.. தெரியாமல்  நேர்ந்துவிட்டது.. பொறுத்துக்கொள்ளுங்கள்..!  ஏதும் உடைந்து விட வில்லையே..?


அவள் பதிலேதும் சொல்லாமல் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு தான்போகவேண்டிய திசையினில் புறப்பட்டாள்..


அவள் போகும்போது சரியாக அடுக்காமல்விட்ட சங்கு ஒன்று கூடையிலிருந்து துள்ளி, கூந்தலில் சருக்கி.. கீழே விழுந்தது..

மேலும் அது மிகவும் சிறியதாகவும் இருந்தது..


சென்னி விரைந்து ஓடிச்சென்று அதை எடுத்துக்கொண்டு..அவள் முன்னே போய் நின்றான்.. 


"இதோ.. இது கீழே விழுந்து விட்டது.. கவனிக்கவில்லையா..?"


அவள் அவன் கையில் இருந்த சங்கினை பார்த்தாள்.. அது ஒன்றுக்காக மறுபடி கூடையை இறக்கவேண்டுமா என அலுப்படைந்தவளாய் தயங்கி நிற்க.. அதை அவளின் முகத்தில் படித்துவிட்ட சென்னி ,


"ஓ..! இதற்காக கூடையை இறக்க வேண்டாம்.. நானே அதில் போட்டுவிடுகிறேன்..!" என்றவன் ஒரு துள்ளல் துள்ளி தலைக்குமேல் அவள் வைத்திருந்த கூடையில் போட்டான். ஆனால் எதிர்பாராத விதமாக அவன் கை பட்ட விசையில் அதிலிருந்து மேலும் சில சங்குகளும் கிழிஞ்சல்களும் கீழே விழந்துவிட்டன...


அவள் கடுப்படைந்தவளாய் கண்ணை ஒரு முறை மூடி திறந்தாள். 


இப்போது சென்னிக்கு தர்மசங்கடமாய் போய்விட்டது.


நடந்தவற்றை பார்த்த நன்னனும் நந்துவும் சிரித்தனர். ஆக்கு அவள் பெண் என்று தெரிந்த பிறகு அந்த இடத்தைவிட்டு சற்றுதள்ளி நகர்ந்தே போய்விட்டான். பதுமன் மட்டும் மறுபடி கீழே இறைந்ததை சேகரித்தான்.


அவள் மறுபடி நடக்க தொடங்கினாள்.


"ஆ..! அக்கா! நில்லுங்கள்..! இதெல்லாம் வேண்டாமா?"


"வேண்டாம்..! " அவள் உதிர்த்த முதல் சொல்லே எதிரிடையாக இருந்தது.


"ஆனால் இவை சின்னதாய் மிக அழகாய் எவரையும் கவருவதாய் இருக்கின்றனவே..! சந்தையில் நல்ல விலைபோகும்.."


"பிறகு? சுரிவளை விற்பவை தரமற்றா இருக்கும்?"


"உங்கள் பெயர் சுரிவளை யா அக்கா?"


"ஆம்..! ஏன் புதிதாக இருக்கிறதா?"


"புதிதாக இருந்தால் பரவாயில்லை புரியாமல் இருக்கிறது..!" என்றான்.


மெல்ல புன்னகைத்த அவள்.. "இருக்கட்டும்..!" என்று சொல்லிவிட்டு மேலும் நடந்தாள்.


"ம்.. இதை என்ன செய்வது..?" கையில் சங்குடன் பதுமன் விழித்தான்.


பதுமன் கையில் இருந்ததை தரும்படி சென்னி கேட்டான்...

இருசிறு கரங்களில் வைத்திருந்த முன்று/நான்கு  கிளிஞ்சல் சங்குகளை சென்னியிடம் பதுமன் தர அதை அவன் ஒரே கரத்தால் பெற்றுக்கொண்டான்.


மீண்டும் ஓடிச்சென்று அவள் முன்நின்று.. "சற்று பொறு,,,..சு..சு.. சுரிவளை! நீ மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை.. என்னால் இதை இழக்க வேண்டாம்." என்றவன் அவள் ஒரு கையை பிடித்து அவளது கரங்களில் அந்த சங்குகளை ஒப்படைத்தான்..! மறுபடியும் அவள் தலைமேல் இருந்த கூடையில் அதை போடமுடியாமல்.. தயங்கவே.

"வேண்டுமானால் மறுபடி நானே ஒழுங்காக போடட்டுமா..? இம்முறை கவனமாக வைத்துவிடுகிறேன்..!" என்றான்.


"இல்லை..! இதன் பொருட்டு மேலும் சங்குகளை இறைக்க நான் விரும்பவில்லை..! என்னை தள்ளிவிட்டதற்கு பரிசாக இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்..!"

என்றவாறு அவள் அவனது கைகளில் திரும்ப தந்துவிட்டு.. மீண்டும் புறப்பட்டாள்.


"தள்ளிவிட்டதற்கு பரிசா? " என குழம்பி நின்றவனை நன்னன் வந்து கூப்பிட்டு "அவள் உன்னை மன்னித்துவிட்டாள் போலும்.!."  என்றான்.


ஆனால் அச்சமயம் அருகில் வந்து ஆக்கூ.. வேறுமாதிரி சொன்னான்.., "நான் எட்டி நின்று எல்லாவற்றையும் பார்த்தேன்.. அவள் உன்னை மட்டம் தட்டிவிட்டு போகிறாளடா சென்னி மடையா!" என்றான்.


சென்னிக்கு சட்டென கோபம் வந்தது.. "என்ன.. ? அப்படியா சொல்கிறாய்..?"


மீண்டும் வேகமாய் ஓடி அவள் முன் போய் நின்றான். 


மூர்க்கனை போல கோவமாய் போனவன் அருகே சென்றுஅவளது  மூக்கின் நுனியையும் புருவங்களையும் கண்டமாத்திரத்தில் மூர்ச்சை யாகிவிட்டான். கதிரவனை கண்ட பனிபோல அவனது கோபம் மறைந்து போய்விட்டது!


"இப்போது என்ன?" அவள் கேட்டாள்.


சட்டென எதாவது சொல்லனுமே என தடுமாறியவன். வேறொன்றை கேட்டான்..


"அது.. ஒன்றுமில்லை..! பெருமணல் தீவு க்கு எப்படி போகணும்..? வெகு தூரத்தில் இருந்து வந்தோம்.. வழியில் தேன் எடுக்க முயன்று தேனீக்களுக்கு பயந்தோடி பாதைமாறி இங்கே வந்துவிட்டோம்...!"


"தேனீ துரத்தி தான் ஆள் போவது கூட தெரியாமல் மேலே வந்து விழுந்தீரோ..? "


"ஆமாம்..! நம்பாவிடில் இதோ பார்! என தான் கையில் வைத்திருந்த தேன் உள்ள இலைச்சுருளை காட்டினான்."


சரியாக அந்நேரம் மற்றவர்களும் அவ்விடம் வந்து சேர..  எங்கே இவன் அதனை அவளிடம் தந்துவிடுவானோ என்ற பயத்தில்.. முன்னெச்சரிக்கை யாக ஆக்கூ, தேன் உள்ள இலைச்சுருளை அவனிடமிருந்து பிடுங்கி கொண்டான்..! 


"இதை என்னிடம் கொடு! நல்லவேளையாக நீ விழுந்து  புரண்டு எதைஎதையோ கொட்டியபோதும் இதை சிந்திடவில்லை..!" என்றவன் அதை பிரித்து கொஞ்சம் எடுத்து சுவைத்துக்கொண்டான்.


"ஆஹா..! மதுரமாய் இருக்கிறது..!"


ஆக்கூவின் அதிகப்பிரசங்கித்தனம் சென்னியை வெறுப்பேற்றினாலும் அவன் அதை புறந்தள்ளிவிட்டு..

சுரிவளையை நோக்கினான்.


"ஆமாம் அதுஎன்ன இப்படி ஒரு பெயர்? சுரிவளை... என்ன பொருள் அதற்கு? ஏதும் வளையல் பற்றிய பெயரா?" சென்னி கேட்க,


"என் பெயருக்கு பொருள் வேண்டுமா..? நீங்கள் போகிற ஊருக்கு வழி வேண்டுமா? இரண்டில் எதுவென முதலில் முடிவெடுங்கள்..!" என்றாள் அவள்.


உடனே தாமதியாமல் சென்னியை முந்திக்கொண்ட நன்னன், "ஊருக்கு வழி தான் முதலில் வேண்டும்..!" என்றான்.


"நீங்கள் பெருமணல்தீவு செல்லவேண்டுமாயின் வந்தவழியே திரும்பிச்செல்லுங்கள்... அங்கே ஓரிடத்தில் பாதை இரண்டாக பிரியும்... அதில் அதிகம் புழங்கிய பாதை பார்த்தாலே தெரியும். அவ்வழி போனால் சிறிது தூரத்தில் தீவை அடைந்து விடலாம்... நான் அங்கிருந்துதான் இப்போது வருகிறேன்.. நாளைக்கும் கூட வரவேண்டி இருக்கும்..!


இதை அவள் சொல்லிக்கொண்டே சிறிதுதூரம் நடந்து போய்விட்டாள்.


"ஆமாம் நீ.. எங்கே போகிறாய்..?

இந்த பக்கம் போனால் எந்த ஊர் வரும்?  குடியிருப்பு ஏதும் அருகில்

இருக்கிறதா??.."


அடுக்கடுக்காய் அவன் கேட்ட எதையுமே அவள் சற்றும் செவிமடுத்ததாக தெரியவில்லை..!


தலையில் சங்குகள் நிறைந்த கூடையும்...

கீழே இடைவரை சுருண்டு அலைபாயும் கூந்தலையும்..

மேனியில்  அணிமணி ஆபரணங்களும் ஆங்காங்கே மந்திரித்து கட்டிய கயிறுகளும்..

இடையில் தொடங்கி முழந்தாள் தொடைவரை சுற்றியிருந்த தோலாடையும் என ஓவிய பாவையாய் ஒய்யார நடையிட்டு  

போய்க்கொண்டே இருந்தாள்.!


" அக்கா!.. கொஞ்சம் இதைமட்டும் சொல்லுங்களேன்... உங்கள் பெயரின் அர்த்தம்...?.." பதுமன் அடங்காத ஆர்வமோடு இழுத்தான்.


அதை சென்னியும் கூட ஆமோதித்தான்..


"ஆமாம் சுரிவளை! அதையாவது நீ சொல்லக்கூடாதா? உன் பெயரின் பொருள் என்ன..?"


அதுவரை திரும்பாமல் கூடையை தூக்கியபடி போய்க்கொண்டிருந்தவள்.. சட்டென நின்றாள். ஒரு கரத்தால் தலையிலிருந்த கூடையை பிடித்துக்கொண்டு, இடைக்கு மேல் உள்ள உடல் மட்டும் வளைந்திட தலையை மெதுவாக திருப்பி ஓரக்கண்ணால் சென்னியை நோக்கினாள்.


"என் பெயருக்கான பொருளை முன்பே உங்களிடமே தந்துவிட்டேன்..! யோசியுங்கள்..

நாழி ஆகிறது.. வீணே தொந்தரவு செய்யாதீர்கள்..நான் செல்கிறேன்" என்றவள் மீண்டும் பழையபடி திரும்பிக்கொண்டாள். அடுத்த சில நொடிகளில் படமெடுத்த நாகம் ஒன்று நகர்வது போல அவள் விறுவிறுவென நடந்தோடி மறைந்தாள்..!


சென்னியும் நன்னனும் அவள் போனபிறகும் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தனர்.

பதுமன் மட்டும் ஏதோ புரிந்தவன் போல ஆழ்ந்த சிந்தனையில் மெதுவாக தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.


"பெயருக்கான பொருளை தந்து விட்டாளா? எப்போது ? முழுசா பத்து வாக்கியம் கூட பேசவில்லையே..அவள் ?!" சென்னி தவித்தான்.


நந்துவும் கூட தாடையில் விரல்வைத்து தட்டியபடி வானத்தை பார்த்து சிந்தித்தான். ஒன்றும் கிட்டவில்லை.


சென்னி தவிப்பதை கண்ட நன்னன் சிரித்தபடி.. "சரிவிடு சென்னி! நாளை வருவாளாமே..! அவளிடமே மறுபடி கேட்டுக்குவோம்." என்றான்.


"திமிர் பிடித்தவள்! கேட்ட கேள்விக்கு நேராக பதில் சொல்வதை விடுத்து புதிர்போடுகிறாளாம் புதிர்!" என்று ஆக்கூ முனுமுனுத்தான்.


"ஐயோ! இப்போதே எனக்கு விடை தெரிந்தாக வேண்டும்.. இல்லாவிடில் பித்து பிடித்து விடும்போல் இருக்கிறது...! நன்னா நல்லா யோசி நன்னா!" சென்னி கெஞ்சினான்.


கீழ் உதட்டை பிதுக்கி காட்டியபடி.. தனக்கு தெரியாததை உணர்த்திய நன்னன்.. சட்டென பதுமன் முகத்தை பார்த்தான். அது சலனமற்று பரவசமாய் இருந்தது.


"ஓய் பதுமா! ஒளிவீசும் உன் முகம் உனக்கு ஏதோ விளங்கிவிட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறது..! தெரிந்தால் சீக்கிரம் சொல்லிவிடு இல்லாவிட்டால் சென்னி செத்துவிடுவான்."


நன்னன் இவ்விதம் சொன்னதும் சென்னி , ஆக்கூ இருவரும் கூட பொடியனான பதுமனை விழுங்கிவிடுவது போல பார்க்கத்தொடங்கினர்.


பதுமன் நேராக சென்னி யின் அருகினில் சென்று அவன் வலது கரத்தை பற்றி இழுத்தான். 


"அந்த அக்கா உங்களிடம் தந்ததாக சொன்ன பொருள் உங்கள் கைகளிலேயே இருக்கிறது சென்னி அண்ணா!" 


சென்னி தன் கையில் வைத்திருந்த அந்த சின்ன சின்ன கிளிஞ்சல் மற்றும் சங்குகளை பார்த்தான்..

" இதுவா.. ? இதில் எது சுரிவளை- க்கான பொருள்?"


"சுரி கொண்டு சுழிந்து வளைந்த இந்த சங்குகள் தான் சுரிவளை என்ற பெயருக்கான பொருளாய் இருக்கும்... சென்னி அண்ணா!"


" என்ன? !! ஓ..!  ஹ..ஹா! இதுதான் சுரிவளையா? அட ஆம்.. அவளும் இந்த வெண்சங்கு போன்றவள்தான்..! சுரிவளை..!சரியான பெயர்தான். பலே! பதுமா பலே! நன்னன் முன்பே சொன்னான் நீ கெட்டிகாரப்பயல்தான்!"


பதுமன் புகழ் கூச்சம் கொண்டு  

நாணம் உற்றான்.


அதன்பிறகு அந்த கிழிஞ்சல் சங்குகளை ஏதோ அரிய பொருளை பார்ப்பதுபோல ஒவ்வொருவராய் எடுத்து உருட்டிக்கொண்டிருந்தன.


ஆக்கூ இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. அவன் கடுத்த முகத்தோடு வேகமாய் நடக்கத்தொடங்கினான்.


அவன் நடைவேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நால்வரும் பின்னாலே ஓடவேண்டியதாயிற்று!


வழியில் இரண்டொருபேர் அவ்வபோது இவர்கள் எதிரே கடந்துபோனார்கள். அவர்களுக்கு இந்த ஐவரின் கூட்டணி விசித்திரமாய் தோன்றியதை அவரவர் கண்களும் புருவங்களும் கோணலாகி காட்டின.


வெகு விரைவில் அவள் சொன்னதுபோல அவர்கள் அந்த பாதை இரண்டாக பிரியும் இடத்திற்கு வந்து சேர்த்தார்கள்.

அதிகம் புழங்காத கால்தடம் பதியாத பாதையை விடுத்து, வண்டிகளும் கால்நடைகளும் பல மாந்தர்களும் நடந்ததில் குண்டும் குழியுமாயிருந்த பாதையை தேர்வு செய்து கவன நடைபோட்டனர்.


அவர்கள் பேச்சை குறைத்து அமைதியாக போகும் போது தூரத்தில் காற்றின் சத்தம் இரைச்சலாக 'ஹோ..'. வென கேட்டது.. 

நந்துவின் பஞ்சவர்ண கிளி அடிக்கடி உயரே பறப்பதும்.. பின் காற்றால் தள்ளப்பட்டு பின்னோக்கி சென்று மீண்டும் அவன் தோளில் வந்து அமர்வதுமாய்..  அதற்குதெரிந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தது.


"திடீரென காற்று பலமாக வீசுவது போல இருக்கிறதல்லவா நன்னா?" சென்னி கேட்டான்.


"திடீரென இல்லை சென்னி.. கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே வரவர அப்படி இருக்கிறது.. வெயிலும் அவ்வளவாக உரைக்கவில்லை. இதமாகவே இருக்கிறது.." நன்னன் சொன்னான்.


"காரணம் இங்கே மரங்களின் அடர்வு குறைவாக இருக்கிறது.. தென்னையும் பனையும் தாழை செடிகளும் முட்புதர்களும் மட்டும்தான் எங்குபார்த்தாலும் தெரிகின்றன.." ஆக்கூ தனக்கு பட்டதை சொல்லினான்.


" காற்றின் இரைச்சலையும் தாண்டி எனக்கு ஏதோ கூச்சல் கேட்கிறது ஆக்கூ அண்ணா..!

அதற்கெல்லாம் காரணம் அலைமோதும் கடல் நெருங்கி விட்டது..! இல்லை இல்லை.. கடலை நாம் நெருங்கி விட்டோம்.! அதோ பாருங்கள்...!" என்றவாறு பதுமன் கிழக்குதிசையில் கை காட்டினான்.


தொடுவானின் வான நீலத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டிக்கொண்டிருந்தது நீண்டு பரந்திருந்த அந்த நீலக்கடல்...!


கண்ணுக்கெட்டிய தொலைவில் வெண்மணலாக பரவி கிடந்த கடற்கரையில் அவர்கள் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத மக்கள் வெள்ளத்தையும் கரையெங்கும் குன்றுபோல குவிந்துகிடந்த ஏராளமான சரக்குகளையும் காய்கனி பழங்களையும் கலைப்பொருட்களையும் கண்டு நால்வரும் உறைந்தே போயினர்.


மூட்டை மூட்டையாக தானியங்களும் கணக்கிலடங்கா கால்நடைகளும் விதம்விதமான மேடை வடிவமைப்பும்.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலங்கார குடில்களும் குடும்பம் குடும்பமாக ஜனங்களும் மொய்த்துக்கொண்டிருந்தனர்.


இருதினங்களாக கால்கடுக்க நெடுந்தொலைவு கடந்துகாண வந்த பேரதிசயம் இப்படி கண்ணெதிரே திடீரென காணக்கிடைத்ததில் வாயடைத்து போயினர். வார்த்தை எழாமல் விழிவிரிய கண்டு ரசித்து கண்படைத்ததின் கர்மபலனை ஐவரும் அடைந்தனர்..!


எதற்கும் இருக்கட்டுமே என ஒரு உறுதிபாட்டுக்காக எதிரே வந்த ஒரு முதியவரை பார்த்து நன்னன் கேட்டான்..

"ஐயா! பெரியவரே.. இது என்ன இடம்..?"


"யாரப்பா நீங்கள்? ஊருக்கு புதிதா? இதுதானப்பா  பெரும் பெரும் மரக்கலங்கள் வந்து கரைதட்டும் பெருமணல் தீவு! வந்ததுதான் வந்து விட்டீர்கள்.. இன்று இரவு நிலவுவிழாவினை பார்த்துவிட்டு போங்கள்... !" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.


ஐவரும் அந்த ஆழ்கடல் சமுத்திரத்தின் முன் திரண்டிருந்த ஜனசமுத்திரத்தில் புகுந்து உற்சாகமாய் நீந்த விரைந்தனர்.


புறப்பட்டவர்களை எடுத்த எடுப்பிலேயே தடுத்தது ஓடை போல ஒரு நீர்நிலை.


ஆம் கடற்கரைக்கு இடையூறாக நீண்டு வளைந்து பரந்த தொரு உப்பங்கழி  குறுக்கே கிடந்தது..!


சூரியராஜ்

தென்றல் இதழ் 33

4 கருத்துகள்

  1. நீண்ட நாளுக்கு பிறகு வந்திருந்தாலும் கதையை படிக்க படிக்க அந்த எண்ணம் மறந்து போகும்வண்ணம் மிக சுவாரஸ்யம்

    சுரிவளையின் பாத்திர படைப்பு எனக்கு பூங்குழலியை நினைவு தருகிறது....

    அடுத்த தொடருக்காக காத்திருக்கும்

    -பதுமன் fan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவன் எத்தனை பெரும் எழுத்தாளனாக இருந்தாலும் (அது கல்கியாகவே இருந்தாலும்) பொன்னியின் செல்வன் வாசித்த பிறகு அதன் தாக்கம் இல்லாமல் கதைசமைக்க இயலாது. அதேபோல்.. ஒரு சிறந்த வாசகன் எத்தகைய வரலாற்று நாவல்களிலும் உலாவரும் கதைமாந்தருள் பொன்னியின் செல்வன் பாத்திர சாயலை எளிதாக இனம் கண்டு விடுவான்.

      நீக்கு
  2. தேனி துரத்தினாலும் தமிழ் தாலாட்டுகிறது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை