அண்மை

தென்றல் வாழ்த்து கவிதை

 


கண்ணன் தாசன் கவிதனில் உதித்து

தென்னன் மார்க்க திசைதனில் லயித்து

வண்ண குழலன் கதையினில் வளர்ந்த

தென்றல் இனிதே திறம்பட வாழ்க


முன்னம் முதலே முத்தமிழ் தூது

செந்தண் நுதலே பெயரினை தைத்து

உந்தன் நாமம் நாளிதழ் பொருளில்

இன்தின தென்றல் இனிதே வாழ்க


காலம் மெல்ல கலைபட உருள

நாளும் நல்ல நடப்பினை யருள

வாழும் மாலும் சேதியை நல்க

வந்தே தென்றல் செய்திகள் வாழ்க


நாளிதழ் நோக்கம் நற்றமிழ் ஆக்கம்

தூளியின் ஏக்கம் குழந்தையின் தூக்கம்

ஆவியின் தாக்கம் இலக்கிய மாக்கும்

குறுந்தொகை யாக்கும் குகனார் வாழ்க


இந்திர மகனாம் அரிஜூன அறிவும்

எந்திரத் தறிவும் வியந்திடக் காண

தந்திட வந்தான் சூரிய பெயரான்

தந்திர உலகம் தைப்போன் வாழ்க


உம்பர் இடத்தில் கம்பர் உறைய

இம்பர் இங்கே இன்னொரு உரையன்

எம்பர் காணினும் இதுபோ லொருவன்

சூரிய அரிதன் அவனே வாழ்க


மானம் ஞானம் மனத்திலே ஈரம்

தானம் பேணும் போகமும் தாரும்

காலம் நீங்கா ஞாலம் வாழும்

கட்டுரைத் தென்றல் கதியே வாழ்க


அல்லல் துன்பம் அலர்களை அழிக்க

அல்லா ஈசன் இயேசு அளிக்க

எல்லா இன்னலும் இல்லாது செய்யும்

உள்ளூறுந் தென்றல் ஆன்மீகம் வாழ்க


அரிஓம் இவைவலை தளத்தை தறிக்க

அறிவோன் இதனின் ஆழந் தவிர்க்க

அறிவோம் இணையம் அறிவியல் பகுதி

தெளிய முனைந்த தெள்ளிடம் வாழ்க


கரோனா என்னும் நாசினி பார்வை

முரணா கமைந்தே இட்டது முட்டு

திறனாய் வந்த இன்தின தென்றல்

சிலநாள் முடங்கிப் போட்டது பூட்டு


அந்நாள் அலர்நாள் சூழ்ந்தது துயரால்

முன்நாளி ழைத்த முன்வினை பயனால்

பின்நாள் தன்னால் ஆனது வன்நாள்

துயர்நாள் அதுவே தென்றல் தவநாள்


தவநாள் தந்த தன்உள் தெளிவால்

சிலநாள் கழித்தே துதித்தது தென்றல்

இதுநாள் வரையில் இனிதாய் வார

தென்றல் இதழே இனிதே வாழ்க


பாரதி யாரின் காதலை விதைக்க

பாரதி போலே சூடியும் படைக்க

பாமதி கொண்டே பல்வரி கவிதை

அளித்த தென்றல் ஹைக்கூ வாழ்க


குறளை கவியாய் இட்டது மற்றும்

குறளை கட்டி உரையாய் போட்டும்

அறவழித் துணையாய் உதவிட வார

அறவான் குறளின் மகனார் வாழ்க


பெருகரு தந்து சிறுகதை மற்றும்

நறுகரு மூலம் கட்டுரை தொட்டும்

தருவிதை போலே தன்பல மடக்கி

அருபட எழுதும் அப்பா வாழ்க


பாரதி வாழ்க பெரியவர் வாழ்க

பாகதி சேர்ந்த குருவே வாழ்க

வாசக வாழ்க வாசக வாழ்க

பாசக த்தோடு படிப்போர் வாழ்க


உலகம் வாழ்க உயிர்கள் வாழ்க

எல்லா உயிரும் இன்புற வாழ்க

நல்லார் உடைய குடும்பம் வாழ்க

புல்லார் மேலும் அருளுடன் வாழ்க


கண்ணும் ஊனும் கடமைக் குதவ

இன்னும் பலரும் இனிதாய் வாழ்க

வள்ளல் கொள்கை இதழில் வளர

எங்கள் தென்றல் இதழே வாழ்க


தீசன்

தென்றல் இதழ் 31

5 கருத்துகள்

  1. சில வரிகள் விடுபட்டு விட்டன.....
    (தன்னடக்கம் கருதி ஆசிரியர் விட்டுவிட்டார்..
    என்னால் விடமுடியாதே..!)



    *****
    கானம் பாடும் கானக முனிகள்
    தானம் தந்த தகைசால் மறையை
    வானம் கூடி வழங்கிய அமுதென
    ஞானம் தேடி நவின்றவன் வாழ்க..!

    வீசும் காற்றும் வெண்ணிலவும்
    கூசும் ஒளிகொள் கதிர்அவனும் - தமிழ்
    பேசும் மானுடர் உள்ளளவும்

    காசும் பணமும் கருதாமல் -உயர் கொள்கை அதிலே வழுவாமல்

    ஏசும் நபியும் சொன்னவழி எங்கள் வள்ளல் பெருமான் வாழ்ந்த நெறி

    நித்தம் போதிக்கும் இனிய இதழ் - இது
    இணையத்தில் உலவும் இளைய இதழ்
    ஏழையும் படிக்கும் எளிய இதழ்..! -நம் தீசன் தீட்டிய தென்றல் இதழ்..!

    மன்னும் மறிகடல் மணல் அதினும்
    மின்னும் விண்மீன் தொகையதினும் இன்னும் இதழ் பல எழுந்திடவே..!


    வாழ்த்துகிறோம் தென்றல் வாழியவே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தன்னடக்கம் கருதியே ஆசிரியர் தீசனார் இதனை விட்டுவிட்டார். நீங்கள் அவருக்கு தகுந்த கவியை அழகாக சொன்னமையால். உங்களுக்கு, என் அன்பு கலந்த நன்றிகள்❤️🙏🙏

      நீக்கு
    2. மிகவும் அருமை.. கவிதையிலே பேசி கொள்கிறீர்களே

      நீக்கு
  2. நாளிதழ் நோக்கம் நற்றமிழ் ஆக்கம்
    தூளியின் ஏக்கம் குழந்தையின் தூக்கம்.
    நல்ல வரிகள்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை