அண்மை

வாலி என்றொரு வல்லவன்..!

 

நேர்மை என்பது என்ன?


உண்மையே பேசு..

நியாயமாய் இரு..

அறத்தோடு வாழ்..

தர்ம வழியில் செல்..

நாணயமாய் நட..


என்றெல்லாம் சொல்லுகிறார்களே ஏன்..?


வாழ்வு முடியும் போது அது எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருக்க போவதில்லை.


காந்தி மகானுக்கும் சரி..


முண்டாசு கவி பாரதிக்கும் சரி..


காசியிலும் காஷ்மீரிலும்... ஏன் கயிலாயம் இருப்பதாக நம்பப்படும் மானசரோவரிலும் கூட நடந்த சண்டையில் செத்துமடிந்த ராணுவ வீரனுக்கும் சரி..


காரணமே இன்றி ஹெலிகாப்டர் விபத்தில் தீக்கிரையான முக்கடல் சங்கமிக்கும் திருநாட்டின் முப்படைத் தளபதிக்கும் சரி..


நேர்ந்த மரணங்கள் நியாயமற்றவை. அர்த்தமற்றவை. அல்லது அவற்றுக்கு அப்பாற்பட்டவை!


இவர்களுள்

இறந்த பிறகு சிலர் கவனிக்கப்படலாம்..! இறந்த பிறகும் சிலகாலம் வரை நினைவுகூற படலாம். எனினும் அவர்களுக்கு வந்து நேர்ந்த இறப்பு/மரணம் தர்ம நியாயம் பார்த்தா வந்தது...?

நல்லவனுக்கு நல்ல சாவு கெட்டவனுக்கு கெட்ட சாவு என்று ஏதும் இயற்கைவிதி இருக்கிறதா என்ன?


இல்லை..!


பிறகு எதற்கு தருமம் நியாயம்..? 'அதன்படி நட!' என காலங்காலமாய் ஓர் அறிவுரை?


சங்கடம்தராத நிம்மதியான மரணம் கருதியோ,

அடுத்தடுத்த பிறவிக்கான கர்மபலன் கருதியோ இவை போதிக்கப்படவில்லை.  நிச்சயமாக அதற்கான உத்திரவாதம் ஏதும் இந்த நடைமுறை உலகில் இல்லை.


அப்புறம் எதற்கு கடைபிடிக்க சிரமமான இந்த நேர்வழி, நியாயமார்க்கம், சத்திய பாதை மண்ணாங்கட்டி எல்லாம்?


சார்லஸ் டார்வின் என்று ஒரு மேதை மறுக்கவே முடியாத ஒரு மெய்யியலை உலகிற்கு பொட்டில் அடித்தாற்போல சொல்லி சென்றார்..!


தகுந்தவை தப்பி பிழைக்கும்.

(survival of the fittest)


அதை இன்னொரு பாணியில் சொல்லதாயின்,


வலியது வெல்லும்...!


ஆம் அதுதான் இயற்கையின் நியதி...!


நல்லதோ கெட்டதோ.. நேர்வழியோ குறுக்கு வழியோ.. 

தர்மமோ அதர்மமோ.. எது  வலிமையுடையதோ அந்த நேரத்தில் அதுதான் வெல்லும்.


உண்மை நீண்ட நாள் உறங்காது என்பார்கள்.. உண்மை உறங்கலாமா? அதுவே தவறில்லையா?


உறங்கி கொண்டிருக்கிற உண்மையை விட உலாவருகிற பொய் வலியதாகிறது.

பிறகெங்கிருந்து வாய்மை வெல்லும்?


வழக்கு.. வாய்தா வாங்கி வாங்கி,, முடிவில்

இறந்துபோன எத்தனையோ பேருக்கு நீதியும் வழங்கமுடியாமல் தண்டனையும் தரமுடியாமல் நீதிமன்றங்கள் பலமுறை திண்டாடியிருக்கின்றது.


கண்ணதாசன் சொல்வார்..

"குற்றம் சாட்டியவனும் நீதி கேட்கிறான்..

குற்றம் சாட்டப்பட்டவனும் நீதி கேட்கிறான்.

முடிவில் அதை யாருக்கு வழங்குவது என்பதை

 'பணம்' முடிவு செய்கிறது!" என்று..,


ஆம். சில நேரங்களில் பணம் தான் வலியதாய் இருக்கிறது!


புராணங்களிலும் காவியங்களிலும் வருகிற மகத்தான சில கதாபாத்திரங்களுக்கு கூட அர்த்தமற்ற வகையில் சில மரணங்கள் சம்பவித்திருக்கின்றன...


மகாபாரதத்தில் கர்ணன்..!


இராமாயணத்தில் வாலி...!


(கிஷ்கிந்தா காண்டம்)


சீதையை தொலைத்துவிட்டு,, தேடித்தேடி கால்போன போக்கில்- மனம்போன திக்கில் - காட்டில் உலாவும் 

இராம இலக்ஷ்மணரை பார்த்து பயந்தோடி ஒளிந்த சுக்ரீவன், அநுமனை போய் விசாரித்துவர சொல்லினான். இருவரையும் இனம் கண்டு வந்து சுக்ரீவனுக்கு தெரிவிக்கிற போது அனுமன் கூறினான்.

"வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்


காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்"


(அளவிலா வலிமையுடைய வாலியையே போட்டுத்தள்ள ஒரு எமன் வந்திருக்கான்யா.. இனி கவலைஇல்லை துன்பக்கடலை கடந்திடலாம்..)


இப்படி சொன்னபிறகுதான் சுக்ரீவனுக்கு நம்பமுடியாத நிம்மதி உண்டாகிறது.

ஆவலோடு சென்று ராமனை கண்டு நட்புகொண்டு பேசி அளவளாவி.. தானே அருகில் இருந்து விருந்தோம்புகிறான்..! பொதுவாக விருந்தோம்பலை வீட்டின் குடும்ப தலைவிதான் செய்வது மரபு. இங்கோ சுக்ரீவனே விருந்தோம்பியதை பார்த்து,, ராமன் கேட்டான் " நண்பா! நீயுமா இல்லாளை பிரிந்து இருக்கிறாய்?"


(பாம்பின் கால் பாம்பறியுமல்லவா?)


சுக்ரீவன் துக்கம் மேலிட வாயடைத்து நிற்க.


"ஆமாம் ஐயனே..! கேள் அவர் சோக கதையை.." என்றவாறு அநுமன் தொடர்ந்தான்,,


"நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி

வேலி அன்னவன், மலையின் மேல் உளான்,

சூலிதன் அருள் துறையின் முற்றினான்,

வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்"


(நாலு வேதங்களாகிய கசடற்ற கடல்களுக்கு வேலிபோன்றவன் இந்த மலையின் மீது உள்ளான். சூலம் ஏந்திய ஈசனின் அருளை பூரணமாய் பெற்றவன். அவன் தான் வரம்பிலா ஆற்றல் கொண்ட வாலி என்பவன்!)


அடுத்து அவனது சிறப்பம்சத்தை கூறுகிறான்..


தனக்கு சமமா யாராவது சண்டைபோட கிடைக்கமாட்டானா?னு எப்போதும் ஏங்கி கிடப்பானாம். கிடைச்சா மொத்து மொத்துனு மொத்தி எடுக்கலாமேனு திணவெடுத்து திரிவானாம்.. அப்படி யாராவது கிட்டினால் எதிராளியின் பலத்தில் பாதியை இவன் அடைந்திடுவானாம்.. 


"கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர்

பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;

எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,

அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்; "


நாமெல்லாம் சாமியை கும்பிட கோயிலுக்கு போவோம்,, அல்லது வீட்டிலே விக்கிரகத்தை வைத்து வழிபடுவோம் அல்லவா? ஆனா வாலி என்ன செய்வான் தெரியுமா?


சட்டுனு பறந்து எட்டுத்திசைகளின் இறுதி எல்லைவரை சென்று அட்டமா மூர்த்தியாம் ஆதிசிவனை அருகிலே கண்டு வணங்கி வருவானாம்...! அதுவும் என்றைக்கோ ஒருநாள் அல்ல.. தினசரி ஒவ்வொரு நாளும் சென்று வருவான் என்பதைதான் "நாளும் உற்று.. " என

அழுத்தி சொல்கிறான் அனுமன் வாயிலாக கம்பன்.


அடுத்த இரு பாடல்களும் மிக பிரபலமானவை அட்டகாசமானவை...


வாலிவலிமையை இதைவிட பிரமாதமாக எடுத்தியம்ப வால்மீகியாலும் இயலாது!


இதோ,,


'கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்

வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்

வால் செலாத வாய் அலது, இராவணன்

கோல் செலாது; அவன் குடை செலாது அரோ. "


(பொருளுணர)


கால்=காற்று.. செல்லாது - அவன் முன்னால்! அது புயலோ தென்றலோ எதுவாயினும் சரி.

கிரவுஞ்ச மலையையே இரண்டாய் பிளந்த கந்தபெருமானின் வேல் செல்லாத இடமில்லை‌. ஆனால் அதுவே வாலியின் மார்பை துளைக்க செல்லாது. வெற்றிக்காக பிறந்தவனான வாலியின் வால் எங்கெல்லாம் தொட்டு புரண்டு போனதோ அவ்விடம் நீங்கலாக அல்லாது ஏனைய ஈரேழு லோகங்களை கட்டி ஆளும் ராவணன் செங்கோல் ஆட்சியின் செல்வாக்கு செல்லாது. அவன் குடைகூட செல்ல முடியாது!


(வல்லரசுகளுக்கெல்லாம் வல்லரசு என்று தன்னை பறைசாற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, ஏனோ வடகொரியாவிடம் மட்டும் தன் வாலினை சுருட்டிக்கொண்டு இருப்பதைபோல... 


வாலியிடம் அகலாது அணுகாது தீக்காய்ந்து வந்தான் ராவணன் என்பதை அறிக.)


'மேருவே முதல் கிரிகள் வேரொடும்

பேருமே, அவன் பேருமேல்; நெடுங்

காரும், வானமும், கதிரும், நாகமும்,

தூருமே, அவன் பெரிய தோள்களால். 


(வாலி மட்டும் தான் இருந்த இடத்தைவிட்டு அசைவானேயானால், அந்த அதிர்வலைகளால் நிலம்நடுங்கி மேருமலை முதலாக ஏனைய கிரிகள் எல்லாமே வேரோடு பெயருமாம்! எழுந்து நின்றானேயானால், உயர்ந்து முட்டுகிற அவனது தோள்கள் முட்டி,, வானம்.. வானத்து மீன்கள்.. கார்மேகம், கதிரவன், நிலவு, எல்லாம் கீழே தூறலாய் தூறிவிடுமாம்..!)


இப்பேர்பட்ட மகாவீரனின் கூடப்பிறந்த தம்பிதான் சுக்ரீவன்!

வாலி வானரவேந்தனாக ஆண்டுகொண்டிருந்த காலத்தில்,,

ஒருமுறை மாயாவிஅரக்கன் ஒருவனோடு சண்டை மூண்டது. வாலியிடம் மோதி நன்றாக "அடி" வாங்கி கட்டிக்கொண்ட பிறகு, தான் தப்பிக்க வேண்டி அந்த மாயாவி ஒரு பெரிய ஆழ்துளை பிளவுக்குள் ஓடி ஒளிந்திட... அவனை துரத்தி கொல்லும் பொருட்டு வாலியும் அதனுள் புகுந்துவிட்டான். 28 மாதங்களாகியும் இருவருமே திரும்பாததால்,, வானர அமைச்சர்கள் ஒன்றுகூடி இளவலான சுக்ரீவனுக்கு முடிசூட்டி விட்டனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக பிறகொருநாள் மாயாவியின் உயிரை குடித்து வெற்றிக் களிப்போடு பிளவை பிளந்து கொண்டு வெளியேவந்த வாலி, சுக்ரீவன் அரசனாய் நின்ற கோலம் கண்டு வெகுண்டு,, அவனை தவறாக நினைத்து விட்டான். எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேளாமல்,, 


"அடல் கடந்த தோள் அவனை அஞ்சி, வெங்

குடல் கலங்கி, எம் குலம் ஒடுங்க, முன்

கடல் கடைந்த அக் கரதலங்களால்,

உடல் கடைந்தனன், இவன் உலைந்தனன். "


(பகைகடந்த தோளுடைய வாலியை கண்டு அஞ்சி, குடல்கலங்கி குரங்கு குலமே நடுங்கி ஒடுங்கிட... முன்பு தேவாசுரர்களோடு சேர்ந்து பாற்கடலை கடைந்த தன் கரங்களால் வாலி, இப்போது சுக்ரீவனின் உடம்பை கடைந்து உருவிபோட.. இவனும் உருக்குலைந்து போனான்)


பிறகு எப்படியோ சுக்ரீவன் தப்பிப்பிழைத்து, தனது அரசு, உரிமை, மனைவி, சுற்றம் இழந்து இந்த மலையினில் வந்து தஞ்சம் அடைந்து ஒளிந்துவாழ்கிறான். முன் பெற்ற சாபத்தினால் வாலி இந்தமலைக்கு வருவதில்லை!


இப்படியாக வாலியின் வரலாற்றையும் சுக்ரீவன் சோககதையையும் அநுமன்கூற கேட்ட ராமன் , சுக்ரீவனிடம் சென்று..


"உலகம் எழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி

விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி,

தலைமையோடு, நின் தாரமும், உனக்கு இன்று தருவென்;

புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு' என்று புகன்றான்."


(ஈரேழு உலகமும் திரண்டுவந்து வாலிக்கு ஆதரவாக நின்றாலும் சரி,  என் வில் இடையே சில சரங்களை தொடுத்து உனக்கு சேரவேண்டிய பதவி, உன் மனைவி இரண்டையும் இன்றே மீட்டுத்தருகிறேன். எங்கே அவன் உறைவிடம்? எனக்கு கொஞ்சம் காட்டு..!) என்றான்.


அட இரு ராமா! நீ எத்தனை வல்லவன் ஆயினும்,, வாலியையே வீழ்த்துகிற வல்லமை இருந்திடினும் உன்னால் அவனை நேருக்கு நேர் நின்று வீழ்த்திட இயலாது! அவன் பெற்றிருக்கும் வரம் அப்படி.


முதலில் ஏழு "மரா" மரங்களில் ஒன்றையாவது நீ ஒரே அம்பு விடுத்து சாய்க்க வேண்டும்.


"ப்பூ..! இவ்வளவுதானா? எங்கே அவை?" என்று ராமன் கேட்க, அவ்விடம் அழைத்து சென்றான் சுக்ரீவன்.


ஏழில் ஒன்றை அல்ல ஏழையுமே சாய்த்தான் ஒரே பாணத்தில்..! அது அத்தோடு நில்லாமல் பாதாள உலகம் ஏழையும் சேர்த்து துளைத்து அதைத்தாண்டி வேறு ஏழு ஏதும் இல்லாமையால் திரும்பி வந்துவிட்டதாம்!

அதுதான் ராமபாணம்.


"ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்

ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற

ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி....!"


பிறகென்ன...? அடுத்து actionல இறங்கிட வேண்டியதானே...!


ராமன் யோசனையின் பேரில் சுக்ரீவன்,

நேராக வாலி இருப்பிட வாயிலில் நின்று துவந்த யுத்தம் செய்ய அண்டங்கள் அதிர அறைகூவல் விடுத்தான். 


வாலி சாதாரணமாவே சண்டை பிரியன்.. யாரேனும் வலிய வந்து கூப்பிட்டால் சும்மா விடுவானா?


"இதோ வந்துட்டேன்! வந்துட்டேன்!" என திசை எட்டும் ஆர்ப்பரிக்கும் ஆவலுடன் சுக்ரீவனின் உயிர் பறிக்க எழுந்து வந்தான்... 

அவனது மணிமுடி உரசியதில் வானிலிருந்த நிலவும் உடுக்களும் உதிர்ந்து போயின...


"வந்தனென்! வந்தனென்!' என்ற வாசகம்

இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன;

சந்திரன் முதலிய தாரகைக் குழாம்

சிந்தின, மணி முடிச் சிகரம் தீண்டவே.!"


உலகமும் கடலென பரந்த நால்திசைகளும் அவற்றை தாங்குகிற வானமும் இவற்றை எல்லாம் படைத்த மூலமும்,,, ஒருநாள் முற்றி முடியும் தருவாயில் அவற்றை அழிக்குமே ஒரு ஊழித்தீ! அத்தீயாகிய காலன் போன்றவனாய்..


பாற்கடலை கடைந்தபோதில் வெளிவந்த கொடியநஞ்சாம் ஆலகால விஷத்தை போன்றவனாய் யாவரும் அஞ்சிட வெளிவந்தான் வாலி...!


அந்த வரிகளையும் காணுங்கள்..


"ஞாலமும், நால் திசைப் புனலும், நாகரும்,

மூலமும், முற்றிட முடிவில் தீக்கும் அக்

காலமும் ஒத்தனன்; கடலில் தான் கடை

ஆலமும் ஒத்தனன், எவரும் அஞ்சவே...!"


வாலிக்கு ஒரு மனைவி பெயர் "தாரை."

இத்தனை நாள் தலைகாட்டாத இளவல் இன்று எதிரேவந்து அறைகூவல் விடுக்கிறான் எனில்.. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என நுட்பமாய் கணித்து கூறி வாலியை தடுத்தாள். வானர அரசி ஆதலால் ஒற்றர்கள் மூலமாக ராமன் என்றொரு மானுட வீரன் சுக்ரீவனோடு நட்புகொண்டதையும் அறிந்திருந்தாள் போலும்..! அதையும் சொல்லி எச்சரித்தாள்..


அதற்கு வாலி,,


"தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்

இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்,

எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்

அம்பு இடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்?"


(தன் தம்பிகளை விட்டால் தனக்கு வேறு உயிர் இவ்வுலகில் இல்லை என்று அரசபதவியையே துறந்த ராமனா எனக்கும் என் தம்பிக்கும் இடையே நடக்கும் சண்டையில் இடையே புகுந்து அம்பு தொடுப்பான்..? ச்சே..! ச்சே..! வாய்ப்பே இல்லை! அவன் ஒரு அருட் கடல்.  கருணை பூத்த அப்பிராணி!)


மனையாள் சொல்லை தட்டி கழித்தவாறு, அன்றொரு நாள் தூணை பிளந்து வந்த நரசிம்ம அவதாரம் போல இன்று இந்த வாலி தான் வசித்த குன்றை பிளந்து கொண்டு வெளியே வந்தான்..


"நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச,

தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி,

குன்றூடு வந்து உற்றனன் - கோள் அவுணன் குறித்த

வன் தூணிடைத் தோன்றிட மா நரசிங்கம் என்ன..!"


வாலிக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த சண்டையை வருணித்து தனி அத்யாயமே எழுதலாம்..


மலையும் மலையும் மோதுவது போல..

சிங்கள் இரண்டு சீறி பாய்வன போல...

மதயானைகள் ஒன்றோடொன்று முட்டுவது போல..


அவர்கள் சண்டையிட்டனர்.


சகோதரர் இருவரின் உருவ ஒற்றுமை யார் வாலி? யார் சுக்ரீவன்? என வேறுபடுத்த முடியாததால் மறைவில் நின்றிருந்த ராமன் தயங்கினான்.


சிங்கம் ஒன்று தட்டான்பூச்சியை நசுக்குவதுபோல  சுக்ரீவனை வாலி ஊதி தள்ளினான். 

நைந்து வந்தவனை ராமன் தேற்றி,, "நீ கொடிப்பூ ஒன்றினை சூடிக்கொண்டு போ அப்பதான் எனக்கு வித்யாசம் தெரியும்..!" என்றிட..


அவ்வாறே கொடிப்பூ அணிந்துகொண்டு போய்

மீண்டும் தன் தேகத்தை புடம்போடுவதற்காக வாலியிடம் ஒப்படைத்தான் சுக்ரீவன்!


விடுபட்ட பூஜை மறுபடி தொடங்கிற்று..!


எனினும் இம்முறை ராமன் தாமதிக்கவில்லை.. 


சுக்ரீவனை தலைமேல் தூக்கி கயிறுபோல சுற்றிக்கொண்டிருந்த 

வாலியை.... ராமபிரான் தொடுத்த வாளி(அம்பு) ஆனது, வாழைப்பழத்திலே ஊசி நுழைவது போல ஊடுருவி சென்றது... இல்லை இல்லை சென்று சொருகி நின்றது!!??


வாலி சரிந்தான்.


"கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்

சேரும் ஊசியின் சென்றது - நின்றது என், செப்ப? -

நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த

பாரும், சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி.!"


எத்தனையோ அரக்க அவுணர்களை.. துளைத்து மறுபுறமாக வெளிவந்த ராமபாணத்தால் கூட வாலியின் உடம்பை துளைக்க முடிந்ததே தவிர மீள முடியவில்லை. நீரும் நீரை படைத்த நெருப்பும் அதை தருகிற காற்றும் கீழ் இருக்கும் உலகம் யாவும் திரட்டியதுபோன்ற உரம்படைத்த உடல் கொண்டவனல்லவா வாலி?


ராமனா இப்படி கோழைத்தனமாக மறைந்திருந்து

தன்னை எய்தான்? என அந்த அம்பே கூட திகைத்து நின்றுவிட்டது போலும்! 


ராமபாணம் துளைத்த பிறகும் கூட அதை பிடுங்கி விட்டு உயிர் போகும்வரை உதிரம் கொட்ட தொடர்ந்து பேசும் வல்லமை முழுக்காவியந்தனில் வாலிக்கு மட்டுமே இருந்தது!!!


வாலி உயிரை விடாது பிடித்துக்கொண்டு தனக்கு நிகழவிருக்கிற தன் மரணத்திற்கு  நியாயம் கேட்டான்..


ஒவ்வொன்றும் இந்தியாவின் அட்டார்னி ஜெனரலையே வாயடைக்க செய்யும்வகையில் சரியான பாயிண்ட்.-டாக இருக்கும்


"வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்

தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!

தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?

தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்! "


(கொடுத்த வாக்கும் மரபும் காத்து தன் உயிரையே துறந்த தசரத வள்ளலின் மைந்தனா நீ?


பண்பில் சிறந்த பரதனின் முன்தோன்றலா நீ?


தாய்மையோடு நட்பும் தருமமும் தழுவி நின்ற அந்த ராமனா நீ?


யாரையோ காக்க வேண்டி நீ தவறு செய்தால் செய்தது தவறில்லை என்று ஆகிவிடுமா என்ன?)


"நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,

காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ? "


(நாட்டில் ஒரு காரியம் செய்தாய்..

உன் தம்பிக்கு அரசை பெற்று தந்தாய்!

இன்று காட்டில் ஒரு காரியம் செய்திருக்கிறாய்..

என் தம்பிக்கு அரசை நல்கியிருக்கிறாய்!

இன்னும் வேற என்னலாம் கருமத்தை பாக்கி வெச்சிருக்க..?)


"இருவர் போர் எதிரும் காலை, இருவரும் நல் உற்றாரே;

ஒருவர் மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல், ஒளித்து நின்று,

வரி சிலை குழைய வாங்கி, வாய் அம்பு மருமத்து எய்தல்

தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? தக்கிலது என்னும் பக்கம்!"


(நாங்க ஏதோ அண்ணன் தம்பி.. அடிச்சிக்குவோம் புடிச்சுக்குவோம். அது எங்க பிரச்சினை. நீ யாரு நடுவுல??

சரி வந்ததுதான் வந்த.. 

அது என்ன அவன்கிட்ட மட்டும் அன்பை காட்டிவிட்டு என் மீது உன் அம்பை காட்டுகிறாய்..? அதுவும் மறைந்து நின்று? ஒருதலைபட்சமான உன் செயல் தருமமா? அதர்மமா? நீயே சொல்லு..!)


இன்னொரு பாட்டில் இப்படி கேட்டான்.... பாருங்கள்,,


ஒருவேளை ராவணனை வெல்ல கருதி, உன் கூட்டணிக்கு ஆள்சேர்க்கும் பொருட்டு சுக்ரீவனுக்கு ஒத்தாசை செய்ய நினைச்சியோ?

அப்படி பாத்தாலும் நீ என்கூட அல்லவா சேர்ந்திருக்கனும்.. இவன்கூடபோய் சேர்ந்திருக்கியே? 

லூசு பயலே! புயலை(யானை) பிடிக்கனுனா  சினங்கொண்ட சிங்கத்தை விடுத்து எவனாவது சிறு முயலை துணைக்கு அழைப்பானா?


"புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி, ஓர்

முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ? "


மேலும்....


"கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று

ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,

சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,

ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ! "


இத்தனை நாளாய் சந்திரனுக்குதான் பெரிய களங்கம் (கரும்புள்ளி) இருந்துவந்தது..! புண்ணியவான்... இனி சூரியனுக்கும்  களங்கம் (பழி) தோன்றிடத்தான் சூரியகுலத்தில் நீ வந்து பிறந்தாயோ?


என ராமன் விட்ட ஒரு சரத்துக்கு காரணம் கேட்டு ஆயிரம் ஆயிரம் கேள்வி சரங்களை தொடுத்தான் வாலி.


வாலியின் சுடுமொழிக்கு ராமனும் பதில் சொன்னான்.. எனினும் அது போதிய விளக்கமாய் சரியான சமாளிப்பாக இல்லை..! பிறகு

இளவல் லட்சுமணன் ஒரு வாறு சமாளித்தான்..


இலக்குவன் தந்த விளக்கம்..,


முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, "முறை இலோயைத்

தென் புலத்து உய்ப்பென்" என்று செப்பினன்; செருவில், நீயும்,

அன்பினை உயிருக்கு ஆகி, "அடைக்கலம் யானும்" என்றி

என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 


(பொருளுணர)


இந்த பாருப்பா வாலி! முந்தி உன் தம்பி எங்க ராமனிடம் வந்து சரணடைந்து அடைக்கலம் கேட்டான். அதனை ஏற்றதோடு என் அண்ணன், ' உன்னிடம் முறைதவறி நடந்துகொண்டவனை தென்புலத்தில் எமலோகத்திற்கு அனுப்பி வைப்பேன்' என வாக்கு கொடுத்துவிட்டார். அதை நிறைவேற்றுவது எங்கள் முதல் தர்மம்! ஒருவேளை உன்னை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்து நீயும் என் அண்ணனிடம் டக்குனு வந்து சரணடைந்து விட்டாயானால்... சரணடைந்தவரை கொல்வது என்பது இயலாது. கொல்லாதுவிட்டால் உன்தம்பிக்கு தந்த வாக்கு பொய்யாகிவிடும். ஆக, இந்த தர்ம சங்கடத்தை தவிர்க்கவே மறைவிலிருந்து அம்பு எய்த வேண்டியதாயிற்று.!


என்றான்.


ராமன் தர்மசங்கடத்துக்கு உள்ளானது உண்மைதான்.

மனிதன் உணர்ச்சிவசப்படும் சமயங்களில் ஆற்றுகிற செயல் அவனை எதிர்பாரா சங்கடங்களுக்கு இழுத்துச்செல்லும்.

தர்மத்துக்கு சங்கடம் வராமல் பார்த்துக் கொள்வதே ஒரு தனி கலை..! எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிடில் கருமம் ஆற்றமுடியாத செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

ஏக காலத்தில்  எவராலும் இரு முரணான கருமங்களை (தருமங்களை) ஆற்ற இயலாது.

 அத்தகைய நேரத்தில் நாம் ஒரு தருமத்தை கடைபிடித்து  மற்றொன்றை கைவிடநேரிடும். இது நியதி. இரண்டில் எந்த தர்மத்தை பார்த்து கடைபிடிக்கிறோம் என்பதில் தான் ஒருவரின் குணம்/தன்மை வெளிப்படும். நல்லோர் பொதுநல தருமத்தையும் வல்லோர் சுயதருமத்தையும் பார்ப்பர்.


ராமன் செய்த செயல் சந்தேகமின்றி தவறுதான். இதனால் காலத்துக்கும் அவனுக்கு பழி இருக்கும்!

எனினும் அந்த பழிதரும் காரியம் உலகிற்கு நல்லதையே செய்தது..! சுக்ரீவன் உயிரையும் காத்தது. 


 புகழை வாலிக்கு தந்து பழியை தனதாக்கி கொண்டான் ராமன்!

நல்லதை  பிறருக்கு அளித்து துன்பத்தை தனதாக்கி கொள்வது தானே ஒரு கதாநாயகன் லட்சணம்


வாலி -ராமன் போன்றே ஒரு இக்கட்டான நிலை மகாபாரதத்தில் கர்ணன்-கிருஷ்ணன் இடையே உண்டாகும்..!


உச்சகட்ட பாரத போரில்.. பள்ளத்தில் சிக்கிய தன் தேர்சக்கரத்தை நகர்த்த கர்ணன் முயலும் எதிர்பாரா சமயத்தில் கிருஷ்ணன் உத்தரவின்பேரில் அர்ஜூனன் அம்பெய்து கர்ணனை வீழ்த்துவான்.


கர்ணனுக்கும் சரி வாலிக்கும் சரி..


அவர்களது வருத்தமும் கேட்கிற நியாயமும் எதுவெனில்,, "வீரத்தால் புகழடைந்த நான் ஏன் இப்படி கோழைத்தனமாக செத்துமடிய வேண்டும்..? உண்மையில் நேரடியாக சண்டையில் தோற்றிருந்தால் கூட மனசு ஆறி இருக்குமே.. ! ஏற்க முடியாத தோல்வியால் இப்படி அர்த்தமேயின்றி அற்ப காரணத்தினால் சாகிறோமே.." என்கிற நியாயமான வருத்தம் தான்... அது.!


கர்ணனுக்கு கண்ணன் தந்த விளக்கம் வாலிக்கும் பொருந்தும்..!

அதுவே அவர்களின் வீரத்துக்கான அங்கீகாரமும் கூட...


தரும வழியில் அவர்களை நேரடியாக வெல்வது ஒருபோதும் இயலாது என்பதால்... இறைவனே அவதாரம் எடுத்துவந்து தருமத்தை புறந்தள்ளி குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்து வீழ்த்தினார் என்றால்..

அவர்களின் வீரத்தையும் வலிமையையும் பறைசாற்ற இதைவிட வேறு என்ன இருக்க போகிறது??


அதாவது நேர்வழியில் அந்த வல்லவர்களை வெல்ல இன்னொரு வலியது இல்லை. ஆனால் காலம் கணியும்போது குறுக்கு வழியில் அத்தகைய வலிமையான வழி புலப்படுகிறது.

அந்த வாய்ப்பை  இறைவனும் நமது ஊழ்வினை விதியும் பயன்படுத்திக்கொள்கின்றன.


வெற்றிதான் குறிக்கோள் என்றான பிறகு.. அங்கு வலிமைதான் பொருட்டே தவிர நியாய அநியாயம் அல்ல. ஆனால் நியாயத்துக்காக வெற்றியை துறந்தவர்களும் இருக்கிறார்கள்.. வாலியும் கர்ணனும் அப்படித்தான் வெற்றியை இழந்தார்கள்.


சாலையில் தன் முன்னே போகும் வாகனத்தை முந்தும் பொருட்டு 

பின்னால் வரும் வாகனம் சில கணம் தன் நேர்வழியை விட்டு விலகி வேகமாய் முன்னேறி மீண்டும் தன் பழைய பாதைக்கே வருவதுபோல .... நீண்ட நீடித்த தருமம் கருதி சில க்ஷண நேர சந்தர்ப்பங்களில் மாற்றுப்பாதையில் பயணிப்பதும் பூவுலகில் இயல்பான ஒன்றுதான்!


ஆனால் இதுவுமே உணர்ச்சிவசப்பட்டு அவசரம்/ அவசியம் காரணமாக வெற்றி தேடுபவர்களுக்குதானே தவிர மற்றவர்களுக்கு எப்போதுமே தருமமே தரமானவழி! 


நீதி.. நேர்மை.. நியாயம்.. நாணயம்..

எல்லாம் வெற்றியை நோக்கமாக கொண்டு போதிக்கப்படவில்லை.

சகல உயிர்களுக்குமான நன்மையை கருதி போதிக்கப்பட்டது..!


வலியதுதான் வெல்லும்..  அந்த வலியதும் நல்லதாக 

இருந்தால் மட்டுமே அந்த வெற்றி செல்லும்!!


பிறப்போ இறப்போ ஒரு பொருட்டல்ல..


வாழ்காலத்தில் ஒருவனின் சிறப்பே பொருட்டாகும்..


வெற்றி முக்கியமல்ல..

நல்லறம் தான் முக்கியம்!


நீதியை யார் வேணுமானாலும் தர இயலும். ஆனால் மன்னிப்பை பாதிக்கப்பட்டவனால் மட்டும்தான் தரமுடியும். அவ்வகையில் பெரும் பழிக்கு ஆளான தசரத ராமனை அந்த பழியிலிருந்து விடுவித்து மன்னித்து அருளியதும் வாலி தான்!!


அதுவும் வால்மீகி வாலியால் அது இயலவில்லை. நம் கம்பநாடாழ்வார் காட்டிய வாலியால் தான் அதுவும் முடிகிறது!


"கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -

ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?

ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த

தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! "


(அட ராமா! ஓவியத்தில் கூட தீட்டமுடியாத அழகோடு விஞ்சி இருக்கிறாயே! ராஜ தர்மம் என்பது உன் குலத்தில் பிறந்தோர்க்கு உடைமை போன்றதல்லவா?

நீ இப்படி செய்து விட்டாயே..!

சரி போ! நீ என்ன செய்வாய் பாவம்?.

நீயோ.. உன் உயிரானவளை, ஜனக மகாராஜாவின் அன்னப்பறவையை, அமுதோடு வெளிவந்த திருமகள் ஆனவளை கிடைத்தற்கரிய தேவியை -அதான் உன்மனைவியை..  பிரிந்து வாடுகிறாய். உன் மனம் மறைகழன்று புத்தி பேதலித்து விட்டது! திகைத்து நிற்கிறாய்! பைத்தியம் போன்று ஆயிற்று உன் செய்கை! வேறென்ன செய்வாய்? போ! தொலைந்து போ!)


இந்திய தண்டனைச் சட்டம் 84 வது பிரிவின்படி, (IPC-84)

சித்த சுவாதீனமற்ற நிலையில் ஒருவர் செய்யும் செயல் குற்றம் ஆகாது! 


ஆக,, ராமன் குற்றவாளி அல்ல என்பதை வாலியே தன் வாயினால் வாக்குமூலம் தந்துவிட்டார்.!


கடவுள் தான் இக்கட்டான நேரத்தில் மனிதனை காப்பார். ஆனால் இங்கோ கடவுளுக்கே ஒரு இக்கட்டான நிலை தோன்றிய சமயத்தில் அவரை நம் தமிழ் கவிஞன்தான் காத்தான்.!  என்று கம்பனுக்கு மணிமகுடம் சூட்டுவார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.


அவ்வகையில் பார்த்தால் தமிழ் தான் வல்லவனுக்கு வல்லவனாக வையகத்தில் நீடித்து நிற்கிறது..!

அதுவே நமக்கெல்லாம் நல்லதாகவும் இருக்கிறது..!


சூரியராஜ்

தென்றல் இதழ் 31

3 கருத்துகள்

  1. உண்மையில் இராமனுக்கு பைத்தியம்தான் பிடித்து இருக்கிறது. நீதி நேர்மை தர்மத்தை மறந்து விட்டானே!
    சுயநலத்துக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு போர் செய்து சீதையை மீட்டு, அவளின் மீது சந்தேகப்பட்ட அவனை...நீங்கள் சொன்னபடி மதிகெட்டவன் என்று தான் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  2. வாய்மையே வெல்லும் என்பது மறைந்து, வலிமையே வெல்லும் என்பது அப்போதே நடந்திருக்கிறது...!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை