அண்மை

கடந்த வருடம் 2021

 


நமது ஜனங்களுக்கு ஒரு விஷேச சக்தி உண்டு. லட்சியம் செய்ய வேண்டியதை அலட்சியம் செய்வர். எதையும் சீக்கரம் மறந்து போவர்.


2021 முடிந்து போனது. இனி எல்லாம் நேற்றே நடந்தவை தான். ஆனால் அந்த நேற்று தான் நாளைக்கான கணிப்பை வழங்கக்கூடிய 'நிகழ்'தகவு என்பதை மறக்க வேண்டாம்.


சென்ற வருட துவக்கத்தில் ஒரு செல்வந்தர் சொன்னதாய் ஞியாபகம், 'யார் இந்த வருட இறுதி வரை உயிரோடு இருக்கிறார்களோ அவரே செல்வந்தர் அவரே அதிஷ்டசாலி' என்றார்.


அந்த வகையில் நாமெல்லாம் இறைவனின் கருணைக்கு பாத்திரமானவர்கள்


எத்தனையோ இன்னல். எத்தனையோ இழப்பு. ஒவ்வொருவர் குடும்பத்திலிருந்தும் ஒருவரையேனும் கொரோனா அழைத்துக் கொண்டது.


உள்ளம் உருக பிராத்தனை செய்தோம். ஐயோ! போனவர்கள் போனவர்கள் தானே. 


யாரோ ஒருவரின் மரணம் கூட மன வலியை தருவதாய் அமைந்த வருடம் இது. அதன் மூலம் இந்த 2021 லிருந்து நாம் கற்பது அநேகம்.


ஜனவரி மாதம் உங்களுக்கு நினைவிருக்குமென்று நம்புகிறேன். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் பனியில் வாலிபரிலிருந்து வயோதிகர் வரை போராடினார்கள். குடியரசு தினத்தன்று டெல்லியில் கடும் அமளியாகிப்போனது.


பெரும்பங்கு மக்கள் எதிர்த்தும் அச்சட்டத்திலிருந்து உறுதிப்பிடியை அப்போது மத்திய அரசு தளர்த்தவில்லை. எனில் கடலில் கரைத்த கைப்பிடி சீனிக்கு உதாரணமே இந்த ஜனநாயக ஆட்சி.


நன்மை திணிக்கப்படுமாயின் அதுவும் நஞ்சே. நஞ்சே திணிப்பானாயின் சொல்வதற்கொன்றுமில்லை.


பிறகு எங்கு பார்த்தாலும் வாக்சின் போடும் மையங்களும் அது குறித்த செய்திகளும் தீவிர படுத்தப்பட்டன


நமக்கெல்லாம் பிடித்தமான நகைச்சுவை கலைஞர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் ஏப்ரல் 17 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்


இரண்டாம் அலை. டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவியது. அதுவும் தமிழகத்தில் ஒருநாள் தொற்று சுமார் 36,000 வரையிலும் எட்டியது. இதனால் ஏப்ரல் 20 முதல் மே 28 வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறைபடுத்தி இருந்தார்கள். மே 7 ஆம் தேதி புதிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார்.


பிறகு இயல்பாகவே படிப்படியாக தொற்று எண்ணிக்கையோடு மன பாரமும் குறைய தொடங்கியது. 


கூடும் இடங்களுக்கு சில கெடுபிடிகள் இருந்தது. பெரும்பாலும் கடைகள் இயல்பாயின.


ஜூன் ஜூலை போன்ற மாதங்களில் டிவியை போட்டு செய்தியை வைத்தாலே ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்துகொண்டிருந்தார்.


கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அதிர வைத்தார். ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழகத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். 2019க்கான தாதா சாகேப் பால்கே விருது கொரோனா காரணமாக தள்ளி சென்று சென்ற வருடம் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது


செப்டம்பர் மாதத்தில் புதிய கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். பிறகு அக்டோபர் மாதத்திலிருந்து பருவ மழை தொடங்கி கொட்டத்துவங்கியது.


சென்னை மீண்டும் பஞ்சாங்கத்தில் சொன்னதுபடியே மூழ்கியது. வடகிழக்கு பருவ மழையால் 105 பேர் தமிழகத்தில் பலியாகினர்.


உண்மையில் தருமமிகு சென்னை அதிசிரமத்திற்கு உள்ளானது. வீடுகளில் முழங்கால் வரை தண்நீரோடு பலர் நிற்பதை பார்த்தோம். தண் எனும் சொல் குளிர்ச்சி என்ற பொருளை தருவதோடு கருணை எனும் பொருளையும் குறிப்பதாகும்.


மழைநீர் தன் கடமையினை ஆற்றும் போது மண்ணுக்கு எவ்வாறு மகிழ்வோ புற்றெறும்பிற்கு அத்தனை துயரம் சேரும்.


அதுபோல இயற்கை தன் கடமையினை ஆற்றும் சென்னை வாழ் மக்கள் இத்தண்டனையை அவர்கள் வாழும் நிலத்தின் இயல்பரிந்து மனதாற ஏற்பதே அவர்களுக்கு நிம்மதி தரும்.


பிறகு கொரோனாவின் பிறழ்வு வடிவமான ஒமிக்ரான் லேசாக பரவத்தொடங்கியது


இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்பட மொத்தம் 14 பேர் ஹெலிகாப்பட்டரில் நீலகிரி குன்னூர் பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்கள்


டிசம்பர் 13ஆம் தேதி இஸ்ரேலின் எய்லட் நகரில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார். 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு இந்திய பெண் மிஸ் யூனிவர்ஸாக தேர்வு செய்யப்ட்டது பெரும் சாதனையாக பேசப்பட்டது.


எப்போதும் போல வருட இறுதி மீண்டும் தன் வேலையை செவ்வண்ணமே பார்க்க, ஒமிக்ரான் தொற்றும் வேகமாக பரவத்தொடங்கியது


பின் புத்தாண்டு வந்தது. இதோ இரண்டாம் நாள்.


நாம் ஒவ்வொரு வருடமும் ஒன்றை புதிதாக கற்போம் அதுவே அறிவு. நாம் ஒவ்வொரு வருடமும் ஒன்றை புதிதாக பெறுவோம் அதுவே வளர்ச்சி


இந்த வருடம் உண்மையில் ஒரு துர் வருடமே. ஆனாலும் ஒரு நல்ல குரு இன்பத்திலிருந்து மட்டுமல்ல துன்பத்திலிருந்தும் அறிவுதர தக்கவரே. 


அவ்வாறிருக்க, இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடக்கவிருப்பவை நன்மையாக விளையட்டும்


தீசன்

தென்றல் இதழ் 31

1 கருத்துகள்

  1. ஒரு வருஷத்தையே டிரைலர் டீசர் மாதிரி கண்முன் ஓடவிட்டு விட்டீரய்யா..!

    அவ்வளவுதான் அவ்வருடம்..!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை