தர்ம ஸ்தாபிதம்
எதை பெறவும் தர்மமே நேர்வழி. அது நேர்மைக்கான வழி. கல்வியிலும் அறத்தை கொடுக்காது பணத்தை கொடுக்கும் படிப்பை பெறுவதால் பலன் இல்லை. அறத்தால் வரும் செல்வமுமே இன்பத்தை அளிக்க வல்லது. நல்லிணக்க ஆதாரமும் தர்மமே ஆகும்.
"தர்மமுள்ள இடத்தில் வறுமை கிடையாது. அதர்மம் தர்மத்திற்கு உணவு" (ஞானரதம் - பாரதி)
இன்றைய நம் பாரத நாட்டில் தர்மம் வேஷதாரியாக்கப் பட்டுள்ளது. அரசாங்கமே உண்மையான தர்மத்தை ஆழ கடைபிடிப்பதில்லை.
"குற்றஞ் செய்த மனிதனை சீர்த்திருத்தி இனிமேல் அவன் அக்குற்றஞ் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்ய வேண்டும். இந்தக்க கருத்துடன் தண்டனை செய்வோரேயை தர்ம தேவதை க்ஷமிக்கலாம். பழிக்குப்பழி வாங்கிவிட வேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற அதிகாரம் மனிதனுக்கே கிடையாது. ஏழையைப் பணக்காரனாக்கினால் பிறகு திருடமாட்டான். பேராசைக் காரனைக் கொஞ்சம் ஏழையாக்கினால் பிறகு திருடமாட்டான். மூடனுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்தால், இந்திரியங்களைக் கட்டியாள முடியாதவனை விரதங்களிலே போட்டால், உயர்ந்த பதவியிலிருப்போர் எப்பொழுதும் நியாயத்தையே செய்து காட்டினால், பிறகு களவு இராது.
'பள்ளிக்கூடங்கள் தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும்' என்பதை அநேக நீதி சாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார்களின் தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின் கீழ், பள்ளிக்கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்" (தண்டனையின் கருத்து - பாரதி)
ஆனால் இன்றோ சிறைச்சாலை என்பது முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பென தரம் பிரிக்கப் படுவதோடு நில்லாமல் புற உலகத்தைக் காட்டிலும் சகல வசதிகளும் நிறைந்துள்ளபடியே அரசு தண்டனை தர்மத்தை மேற் கொள்கிறது. தண்டனையின் நோக்கம் மீண்டும் இத்தவறை செய்யாத படி அறிவு தருவது. அதர்ம அறியாமையை விலக்குவது.
"கைதிகளை அன்புடன் நடத்த வேண்டும். அவர்களும் மனிதர் தானே? ஏன் குற்றம் செய்தார்களென்று கோபிக்கிறாய்? ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். ஒழுங்கானபடி யிருந்தால் செய்திருப்பார்களா? தெளிந்த புத்தியிருந்தால் நடந்திருக்குமா? நல்ல ஸவஹாஸத்திலே பழக்கப்படுத்தி இருந்தால் இந்த நிலைக்கு இழிந்திருப்பார்களா? ஜன ஸமூகத்திலே சிலரை நாகரிக நிலைக்குக் கீழே, தர்ம நடைக்கு கீழே லௌகீக ஸாதனத்துக்கும் கீழே அமிழ்த்து வைத்த குறை யாரை சேர்ந்தது?" (விசாரணை - பாரதி)
அதன்படி குற்ற அறியாமையை விலக்கும் தண்டனை தர்மம் இத்தகைய முறையில் இன்று அரசால் நிறைவேற்றப்படுவதில்லை. மீண்டும் இவ்விடம் வரவேண்டும் என்றபடியான மனநிலை தரும் சிறைகள் இருக்கையில் தண்டனையாளன் தன் தவறை உணர்ந்து தர்ம வழி நகர வழி யாது?
அதிலும் பெரு திருடனுக்கு பெரு சிறை. சிறு திருடனுக்கு சிறு சிறை. அரசியல் பிரமுகருக்கு அகண்ட வசதி கொண்ட சிறை, ஆண்டிக்கு ஓர் நொண்டி சிறை. வந்து வந்து செல்பவனுக்கோ தனி அறை என பாரத நாட்டில் தர்மம் இன்று முடமாகிப் போயுள்ளது.
"நீதி என்பது பொது ஒழுக்கம். ஒரு கிராமத்தில், வலியவனுக்கு வேறு நியாயம் எளியவனுக்கு வேறு நியாயமாக இருந்தால், அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், கிராமம் விரைவில் அழிந்துவிடும். ஜனங்கள் குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றஞ் செய்யாமல் ஜனங்கள் பார்த்து கொள்ள வேண்டும். நீதிக் காரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு. நியாயஸ்தலங்களிலிருந்து நீதியை பரிபாலனம் செய்வோர் ஒரு பகுதி. நீதி (சட்ட) சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி. இவ்விரு திறத்தாரும் கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொது ஜனங்களைச் சேர்ந்தது" (நீதி - பாரதி)
தர்மத்தை சுயதர்மம் பொது தர்மம் என இரண்டாக வகை பிரிக்கலாம். நாம் மேற்கொள்ளும் இயல்பு வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரிடத்திலும் சுயதர்மம் அவசியம். ஆனால் அத்தர்மம் பொது தர்மத்திற்கு பங்கம் தருமானால் அதை அக்கணமே கழட்டி எறிதல் உசிதம். சூது மண்டபத்தில் அன்னை திரௌபதி துகிலுறியப்படும் போது தருமனும் பீஷ்மரும் துரோணரும் தங்களது சுயதர்மத்தை தியாகம் செய்திருப்பாரேயானால் பொது தர்மம் காக்கப் பட்டிருக்கும். 'மகாபாரதம்' எனும் பெரும் நாசப்போர் விளைந்திருக்காது.
"பொதுவாக அநேகரிடத்தில் ஒரு துர்குணமிருக்கிறது. தான் ஒரு குற்றஞ் செய்தால், அதை சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதை பூசனிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம். மனிதனுக்கு, உண்மையாகவே புத்தித் தெளிவும் யோக்யதையும் தொடங்கும் போது, பிறர் குற்றங்களை க்ஷமிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. மூடன் தான் செய்த குற்றத்தை மறந்துவிடுகிறான். அல்லது, பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான்; அல்லது, பொய்க் காரணங்கள் சொல்லி அது குற்றமில்லை என்று ருஜூப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்கு காரணம் அறியாமை. அதை நீக்கும் வழி ஸத்ஸங்கமும் தைர்யமும். பிறர் குற்றங்களை க்ஷமிக்கும் குணம் குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும். குற்றம் செய்வோர் பரஸ்பரம் மிகுந்த எரிச்சலோடிருப்பார்கள்" (க்ஷமை - பாரதி)
பாரத தேசத்தார் தர்மத்தை உதிரியாய் பார்க்கின்றனர். சாலை வளைவில் வலது புறமாக வாகனத்தை திருப்பும் போதும், ஒரு வழி பாதையுள் விதி மீறி நுழையும் போதும், முககவசத்தை சாலையில் எறியும் போதும், அரசாங்க சலுகைகளை அனுபவிக்க பொய் சொல்லும் போதும், அரசை ஏமாற்ற குறுக்குவழியில் செல்லும் போதும், திரையரங்கில் அல்லது OTT தளத்தில் பார்க்க வேண்டிய திரை படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்கும் போதும் அவர்களின் கண் முன் தர்மம் இருப்பதில்லை. 'இதெல்லாம் ஒரு தவறா?' என்ற எண்ணம் அவர்களுக்கு,
"தமிழா, உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சிவிட்டன. உனது மத கொள்கைகள், லௌகீக கொள்கைகள், வைதீக நடை - எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கட்டடத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்; உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதை நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறு தான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கு எல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்" (தமிழருக்கு - பாரதி)
அறனை மறவேல் (ஆத்திசூடி)
'தர்மத்தை மட்டுமே கொண்டிருந்த அரிச்சந்திரன் துன்பமல்லவா எய்தினான். வாழ்வே சேறாய் இருக்க பேறு கொண்டு ஆவதென்ன?' என்று உண்மைக்கு அஞ்சுவோர் சிலர். நன்கு தெளிக, 'அஞ்சுபவன் எல்லாம் கோழை அல்ல உண்மை சொல்ல அஞ்சுபவனே உண்மையான கோழை'.
பாரத தேசம் பாரினில் உள்ள பற்பல தேசத்திற்கு ஞான தர்மம் செய்ததாகும். 'மா' தர்ம கதை மூலம் 'தே' நிலைக்கு உயர்ந்ததாகும். அத்தகைய மேலான இப்பரந்த பாரத நாட்டிலே தர்ம வழிக்கு அஞ்சி வாழும் மக்கள் விரவி இருப்பது, சீனியில் உப்பு கலந்ததற்கு சமமாகும்.
"தர்மம் இரக்கமில்லாதது என்று நான் பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். சிங்காதனத்தைப் போலவே நெஞ்சமும் வயிரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று நினைத்தேன். அது பிழை; தர்மம் பக்ஷபாக மற்றது, குருட்டு அன்பு இல்லாதது. ஆனால், அருளும் விவேகமும் கலந்து வார்க்கப்பட்ட விக்கிரகம் தர்மம்" (ஞானரதம் - பாரதி)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் (குறள் 131)
"வீடு தீப்பற்றி எரியும் போது, தகப்பன் தன் காரிய ஸ்தலத்திற்கும், மகன் பள்ளிக் கூடத்திற்கும், பெண்கள் பூஞ் சோலைக்கும், தாய் கோயிலுக்கும், வேலைக் காரன் காய் கிழங்குகள் வாங்கும் பொருட்டுக் கடைக்கும், பரிசாகரன் சமையலுக்காகத் தண்ணீருக்கும், உல்லாசமாய் புறப்பட்டுக் கொண்டிருக்கலாமா? நெருப்பை அவிக்க முயல வேண்டியது எல்லோருக்கும் கடமை" (ஞானரதம் - பாரதி)
அதுபோல செய்கைகளிலும் சமத்துவத்திலும் நுழைந்த பொய்யினை விரட்டி அடிப்பது பாரத தேசத்தாராகிய நம் கடமை அல்லவா!
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தருமமறு படிவெல்லும் எனுமி யற்கை
மருமத்தை நம்மாலே யுலகங் கற்கும்
வழிதேடி விதியிந்த செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலுங் காண்போம் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
தருமத்தை யப்போது வெல்ல காண்போம் (பா.ச, அர்ஜூனன் சொல்வது)
இப்போது பாரதி சொல் கேட்டல் செய்வோம்.
(அடுத்து பாரதியின் கற்பனையில் நல்லிணக்கம்)
தீசன்