நாடு பற்றி பாடுகின்றீர் - நன்று நன்று, நாடாளும் மன்னர் பற்றி பாடுகின்றீர் அதுவும் நன்று, நாடுதனை மீட்பதற்கும் புதிதாக பறிப்பதற்கும் கேடுகளைச் சுமந்து விழுப்புண்கள் ஏந்துகின்ற பீடுநடை வீரர் பற்றி பாடுகின்றீர் மிகவும் நன்று, ஏடுகொள்ளா இலக்கியங்கள் காதலையும் களம்புகுவோர் காதையையும் எடுத்தியம்பும் காரணத்தால் என் வழியை தனிவழியாய் ஆக்கிக் கொண்டு எல்லா ஊரும் எமது ஊரே! எல்லா மனிதரும் எமது உறவே! என எழுத தொடங்குகின்றேன் என்றான் ஒரு புலவன், அவன் தமிழ் திரு பெயரே கணியன் பூங்குன்றன். ஐயா கலைஞரின் கருத்துகள் வைத்தே சமைத்த இக்கட்டுரை அவருக்கே சமர்பிக்கப்படுகிறது
இன்று நாடாளும் வேந்தர்களும், நாட்டிலுள்ள மாந்தர்களும் இந்த ஒற்றை வரியின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளாததால் எத்தனை இன்னல்கள், எடுத்தியம்ப காலம் போதாது.
வேதனைகள் விரைந்து தொடர்வதும், அவை விலகித் தொலைந்து போவதும் கூட நாம் ஏற்றிடும் செயல்களால் என்றே நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்று நன்கு கணித்து நவில்கின்றான் கணியன்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அன்று தெள்ளிய தே தமிழ் புலவர் சொன்னதையும் பட்ட மரத்தில் கட்டி வைத்த தூளி போலே ஆக்கிவிட்டோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் உலக சமத்துவத்திற்கே விதையாகும் இவ்வாக்கும் வெறும் வறண்ட சொற்றொடர் ஆவது, நாட்டின் மதச்சண்டைகளும் இனப்பிரிவுகளும் காட்டி உரைக்கிறது.
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல் தமிழா? பாமணத்தால் கணியன் வாக்கை பரவும் வகை செய்தல் வேண்டாமா?
உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை, உயிரின் தன்மை, உயரிய வினைகள் - வாழ்வில் உற்ற துன்பமும் உவகையின்பமும் ஒன்றென கருதுதல், உயர்ந்துள்ள செல்வர்க்கு பணியாமை, வீணில் உழன்றிடும் சிறியோரை இகழாமை எனப்பல வண்ணமிகு மலர்கள் கொண்டு உயர் எண்ணம் தொடுத்தளிக்கும் பெரும் உள்ளம் காணுகின்றோம் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்ற ஒன்றை வரிதனில்.
பொது நாமம் தமிழரென கொண்டும், தமிழருக்குள் எத்தனை பிரிவு, திரு நாமம் இந்தியரென கொண்டும், இந்தியாவிற்குள் எத்தனை பிரிவு, இன நாமம் மனிதரென கொண்டும், மனிதருக்குள் எத்தனை பிரிவு
வேற்றுமையில் ஒற்றுமைதான் கொண்ட இந்தியா, வேகத்தோடு முன்னேறும் நமது இந்தியா என்னும் சிறு பிராயத்தில் படித்த கவிதையெல்லாம் நினைத்து பார்க்கையில் வேடிக்கையாகவும் வெறுப்பாகவும் தான் இருக்கிறது.
யாதும் ஊரே! யாவரும் கேளிர் - இன்றைய இந்தியா, இந்த கணத்தில் இந்தியா, அணுவளவேனும் கசடற்று புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பொது சத்திய வார்த்தையாகும்.
"இராணுவம் வேண்டியதில்லை, தளவாடம் தேவையில்லை, எல்லைகள் இருக்காது, இறுமாப்பு நெருங்காது, மதமான பேய் ஓடும், இனமென்ற பிரிவழியும், தெள்ளியதோர் வழியினையே திறம்படவே நாடடையும், இறுதியாக புள்ளினம் போல் வாழ புரிந்து கொள்வர் மக்கள் 'யாதும் ஊரே! யாவரும் கேளிரென' உணர்ந்தால்!"
இந்த அறைகூவல்தனை அன்றைய நாளில் ஒரு தமிழன் நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தை திறந்துக்காட்டி, விரிகடல் சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும் விழியும் ஒளியும் போல் மக்கள் எல்லாம் நம் உறவே என்றும், புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்து புரட்சி செய்தான்.
ஆனால் இன்றோ மலர்தலை ஞாலத்து மக்கள் எல்லாம் இது புரியாமல் பேய் பிடித்து, ஒருவரை ஒருவர் துன்பிழைத்து, இனமென்றும் மதமென்றும் என் ஊரே! எமது கேளிரே! என தன் நலமாய் தரணி நலன் கெடுத்திடுவதை காணும் போதெல்லாம், அறம் சொல்லும் தமிழர் நெஞ்சு வெதும்பி வெதும்பி துடிக்கிறது. புவியோரே தமிழன் அத்தகைய தன்மையன் அல்ல,
எருமை மாடு போல் ஒன்றுபட்டு கூட்டம் கூட்டமாய் கொடுத்து உண்டு வாழ்க என்பதேயே,
'பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க' என்கிறது நாலடியார்.
'பெரியவாம் ஆற்றவும் முன்கை நெடியார்க்கு தோள்' என்கிறது பழமொழி நானூறு
'அருளிலே பிறக்கும் அறநெறி எல்லாம்' என்கிறது நான்மணிக்கடிகை.
உலகத்தார் அனைவரோடும் நட்பினை பெருக்கி கொள்ளுதலே இனிது என்பதை 'தேரின் கோள் நட்பு திசைக்கு' என்கிறது இனியவை நாற்பது.
அதையே அன்போடு ஒன்றுபட்டு வாழ்தலை அறங்களிலே சிறந்ததாய் கருதி,
'அன்போடு நாள்நாளும் நாட்டார் பெருக்கலும் கேள்வியுள் எல்லாந் தலை' என்கிறது திரிகடுகம்.
இந்த உலகத்தில் வாழும் அத்துனை மக்களும் சமமே! அதனால் இவர்கள் அனைவருக்கும் ஒரே நீதி தான், ஒரே அறம் தான் என்று எண்ணிய கூடலூர் கிழார், தான் எழுதிய முதுமொழிக் காஞ்சியின் ஒவ்வொரு அதிகாரத்தின் தொடக்கத்திலும் 'ஆர்கலி உலகத்து மட்கட்கு எல்லாம்' என்று பீடுபட கூறி தமிழரின் விசாலமான ஒற்றுமை பார்வையை உலகறியச் செய்தார்.
'காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள' என்ற வள்ளுவப்பெருமான், உணவை கண்ட காக்கை கூட ஒளிக்காது கரைக்கும், தன் கூட்டத்தை அழைக்கும், கண்டதை கொடுக்கும் என்று ஒற்றுமையை உவமையால் கூறுகிறார்
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற சங்கத்தமிழ் சொல், தங்கத்தமிழ் நெஞ்சங்களில் ரத்தத்திலே கலந்ததுவாம்.
இன்று நம் மக்கள், 'ஒற்றுமையால் மேன்மையுண்டாம் ஒன்றையொன்று துன்பிழைத்தல் குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?' என்பதை புரிந்து கொண்டார்களேயானால் தமிழ் புலவன் பூங்குன்றன் சொன்ன ரத்தின வார்த்தைகள் நிகழ்கால நித்தியமாகும் என்பதை உணர்ந்து தெளிவர்.
இறுதியாக, உலக இன்னல் அனைத்திற்கும் ஒரே ஒரு ஒற்றை வரியில் ஔடதம் தந்து, பூந்தமிழில் வண்டாக புணர்ந்து கலந்து இந்த பூமிக்கே பொதுக்கவிதை கனியொன்றைத் தந்த கவிஞன் பூங்குன்றந்தனில் பிறந்த புலவன் கணியன் தான் என்கின்ற போது புல்லரித்துப் பூரித்துப் போகுதம்மா நம் எண்சாண் உடம்பு! - என்று ஐயா கலைஞரின் கைவண்ணம் வழியே உணரும் போது, உண்மையிலே "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" எனும் உலகப்பிணியின் ஔடதச்சொல்லை நம்மவர் சொன்னது ஈராயிரம் ஆண்டுக்கு முன் என்று அறிகையில் புல்லரிக்கிறது நம் எண்சாண் உடம்பு.
தீசன்
கலைஞர்னாலே அருமை தானே❤
பதிலளிநீக்குயாதும் ஊரே என்ற கணியன் மறக்காமல் தான் பிறந்த ஊரான பூங்குன்றத்தையும் தன் பெயரில் சேர்த்து கொண்டாரே! அதையும் போற்றத்தான் வேண்டும்.
பதிலளிநீக்கு