அண்மை

பாரதியாரின் கற்பனையில் நல்லிணக்கம்

பாரதியாரின் கற்பனையில் நல்லிணக்கம்


நல்லிணக்கம்

'இந்த நாட்டில் எல்லோருமே ஏழையாக இருந்தாலும், ஏழை என்ற வகையில் கூட ஒற்றுமை இல்லாத பூமியல்லவா இது' என்பார் கவியரசு கண்ணதாசன். நல்லிணக்கம் என்பது இன மத சாதிய ரீதியாக மட்டுமே பார்க்கப்படுகிறது ஆனால் உண்மையில் நல்லிணக்கம் எப்படி இருத்தல் வேண்டுமெனில்,


முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே மாதரம்)


தனக்காகவும் தன் வீட்டுக்காகவும் மட்டுமே உழைத்து சமைத்து வாழ்பவன் சோற்றை உண்ணவில்லை. பாவத்தையே உண்கிறான். (சாங்கிய யோகம்)


மனிதர்களிடத்தே ஒற்றுமை வேண்டும். அது இன மத சாதிய ரீதியாக மட்டுமே இருத்தல் ஆகாது. பழக்கமில்லாத மனிதர் ஒருவரின் பசி நமக்கு துன்பம் தருமாயின் அப்போதே நாட்டில் நல்லிணக்கம் தோன்றியதாய் கொள்ளலாம். எனில் 


தனியொருவனுக் குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடுவோம் (பாரத சமுதாயம்)


என்ற பாரதியின் கற்பனையில் ஆத்திரம் மட்டுமல்ல நல்லிணக்கமும் மறை பொருளாகும்.


"ஜாதிக் கொள்கை வேரூன்றி கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்வம் எனும் கொள்கைகளை நிலை நிறுத்துவதென்றால் அது சாதாரண வேலையா? கொஞ்ச சாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம்! நூளை நூற்றெட்டாம்! அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும், நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும் பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள்; ஒன்றுக் கொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது. கேலி; கேலி; பெருங்கேலி" (ஜாதி குழப்பம் - பாரதி)


நல்லிணக்க சிதைப்பிற்கு ஜாதியோர் பெருங்காரணம். பெயரோடு நில்லாமல் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற விதையை பிறப்பிலே கொடுக்கும் எக்காரணியும் நல்லிணக்க அழிவிற்கு வழியாக்குவதாகும். 


நல்லிணக்கமானது வெறும் ஒன்றுபட்டு இருப்பது என்பதாக அல்லாமல் தன் மனவிருப்பத்தை ஆக்குவதற்கும் வழி செய்ய வேண்டும். பெண்களின் தேவையை பெண்களே நிவர்த்தி செய்யும் காலம் என்றைக்கு தோன்றுமோ அன்றைக்கே ஆண் - பெண் நல்லிணக்கம் உறுதிபெறும். 


"ஸ்த்ரீகளை மேன்மைப்படுத்துதற்குரிய காரியங்களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமே முற்பட்டு தமக்கு வேண்டிய சீர்த்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும்" (ஆசாரத் திருத்த மஹாசபை - பாரதி)


அத்தோடு பாரதியாரின் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய கற்பனை, "இருபது கோடி ஹிந்துகளையும் ஒரே குடும்பம் போல செய்துவிட வேண்டுமென்பது என்னுடைய ஆசை" (மதிப்பு - பாரதி) என்பதாகும். 


பாரதி 20 கோடி ஹிந்து என்று கூறியது இன்று 138 கோடியாக ஆனது. அதாவது இங்கு ஹிந்து என்பது மதத்தினை குறிப்பதல்ல என்பது பொருள்.


"எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன், சீனத்தில் பிறந்தவன் சீனன், ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து" (ஹிந்து முகமதிய சமரசம் - பாரதி)


ஊர் கூடி இழுக்கையில் தான் தேரே நகருமெனில் நாட்டுத்தேரை இழுக்க நாடே வேண்டுமல்லவா? "பிச்சைக்காரர் கூடத் தனித்தனியே பிச்சையெடுப்பதைக் காட்டிலும், நூறு பேர் கூட்டம் கூடிப் பிச்சைக்கு போனால் அதற்கு மதிப்பு மிகுதியுண்டு" (மதிப்பு - பாரதி) நாட்டின் வலிமையை சேர்க்க கூட்டம் ஒன்றே உபாயம். ஒருமித்த தர்ம கருத்துடன் ஒருமித்த நல் எண்ணத்துடன் வாழும் மக்களிடையே நல்லிணக்கம் வலிமையுறுகிறது.


ஒற்றுமையால் மேன்மையுண்டாம் ஒன்றையொன்று - துன்பிழைத்தல்

குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே? (காலை பொழுது)


ஓர் அகத்தில் இருந்து கொண்டே இனங்களைக் கொண்டு ஒருவரையொருவர் வேறுபடுத்திக் தாக்கி கொள்ளப்படாது. "வேதாந்த சாஸ்த்ரமோ பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயம், பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்வாவின் அம்சங்களே அன்றி வேறல்ல என்று பல நூற்றாண்டுகளாக பறையறைந்து கொண்டு வருகிறது" (மனுஷ்யத்தன்மை - பாரதி)


ஆனால் இத்தகைய மேன்மைமிக வரிகளுக்கு யாவரும் செவி கொடுக்கும் பக்குவத்திற்கு வருவதில்லை. 


"இதை விட்டுப் பொய்யும் புலையுமாக, திராவிடர்களென்றும் ஆரியரென்று முள்ள பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதனால் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும். எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது. (ஜாதிபேத விநோதங்கள் - பாரதி)


பிரிவினை வாதத்தால் பிரிவினையை பிராப்தம் பெறுவோமே அன்றி, வேறு பெறுவதற்கு ஒன்றுமில்லை. பாரத தேசத்தின் வருங்கால சந்ததியினர் ஒற்றுமையுடனும் அன்புடனும் கீர்த்தியுடனும் நலமோடும் வாழ நல்லிணக்கம் மிக அவசியம். கல்வியும் செல்வமும் உப அவசியங்களே. ஆதலால் நல்லிணக்கம் செய்யுங்கள் தன்னை உயர்வாகவும் பிறரை தாழ்வாகவும் எண்ணுவதை கைவிடுங்கள். 


"எல்லா மதங்களும் உண்மைதான். ஒரு மதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லௌகீக விஷயங்களைப் போலவே மதவிஷயங்களிலும் ஒப்பு, உடன்பிறப்பு விடுதலை மூன்றும் பாரட்ட வேண்டும்"  (உண்மை - பாரதி) எனவே "தெய்வங்களை பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களை கட்டோடு விட்டுவிடுங்கள்" (மதபடிப்பு - பாரதி)


வன்முறை நன்முறை அல்ல இன்முறை தண்முறையே எனவுணர்ந்து அன்பு கொள்ளுங்கள்.


இந்த புவிதனில் வாழும் மரங்களும்

இன்ப நறுமலர் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும்

ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்

எந்த தொழில் செய்து வாழ்வனவோ?


உங்களுக்குத் தொழிலிங்கே! அன்புசெய்தல் கண்டீர் (அன்பு செய்தல்)


(பாரதியின் கற்பனையில் பாரத்தேசம் முற்றிற்று)


தீசன்

தென்றல் இதழ் 37

கருத்துரையிடுக

புதியது பழையவை