முத்துக்குமார் தனது சைக்கிள் கம்பெனியில் பழைய டயரை கழட்டி புது டயர் ஒன்றை மாற்றி கொண்டு இருந்தான். வயது 46 ஆகிவிட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்பா அம்மா இரண்டு பேரும் பதினைந்து வருடத்துக்கு முன்பே இறந்து போய்விட்டார்கள். அந்த நேரம் கல்யான தரகர் சீனிவாசன், முத்துக்குமாரை பார்க்க அவன் கடைக்கு வந்தார். சீனிவாசனுக்கு சீனிவாசன் என்ற பெயர் வைத்தவர் வாயில் சீனியைதான் போட வேண்டும். மனிதன் பேச்சு மட்டும் இனிக்க இனிக்க இருக்கும். செயலில் ஒன்றும் இல்லை. பத்து வருடமாக அவன் கடைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார். வரும் போதெல்லாம் ஐந்து பெண் வீட்டு ஜாதகங்களை கொடுப்பார். கையோடு ஐநூறு ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவார். ஆரம்பத்தில் ஐந்து ஜாதகம் கொடுத்தால் இருநூறு ரூபாய்தான் கொடுப்பான். இப்போது விலைவாசி ஏறிவிட்டதாம். ஆரம்பத்தில் அவர் வந்தாலே மகிழ்ச்சி அடைவான். இப்போது அவனுக்கு அவரை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது. ஐநூறு ரூபாய் அந்த ஆளுக்கு அழ வேண்டுமே!
"இந்த பாரு முத்துக்குமாரு, இது வாத்யார் வீட்டு பொண்ணு. இது விஏஓ தம்பி பொண்ணு." என்று வரிசையாக ஒவ்வொரு ஜாதகத்தை பற்றியும் விவரித்தார். வாத்தியார் பொண்ணு ஜாதகம் மட்டும் போட்டாவோடு இருந்தது. "இதுல ஒண்ணு கண்டிப்பா முடிஞ்சுடும் கவலைப்படாதே. ஒன்ன பத்தியும் நல்லபடியா சொல்லி வச்சிருக்கேன். தினமும் சைக்கிள் கம்பெனியில் 1000 ரூபாய் வீதம் மாசம் முப்பதாயிரம் சம்பாரிக்கிறேன்னு சொல்லி வச்சிருக்கேன்" என்றார். "மாதம் முப்பதாயிரம் நான் சம்பாதிக்கிறேனா? இந்த ஆளுக்கு பணம் கொடுக்கவே எங்கே போறதுன்னு தெரியல" மனதுக்குள் நினைத்துக் கொண்டான். கழட்டி ஆனியில் மாட்டி இருந்த சட்டைப்பையில் கையை விட்டு பார்த்தான். மூன்று நூறு ரூபாய் தாள்கள் மட்டும் இருந்தது. அதை அவரிடம் கொடுத்தான். "என்ன இருநூறு ரூபாய் கொறச்சிட்டே" என்று தலையை சொறிந்தார். இனிமே என்னிடம் காசு எதுவும் கேட்காதீங்க. ஆனால் பொண்ணு வீட்டில் இருபது பவுன் போட்டா நீங்க பத்து பவுன் எடுத்துக்குங்க, பத்து பவுன் போட்டா அஞ்சு பவுன் எடுத்துக்குங்க" என ஆடி தள்ளுபடி போல ஒரு அதிரடி ஆஃபரை அறிவித்தான். " கேக்க நல்லாத்தான் இருக்கு இவனுக்கு எவன் பவுன் போட போறான்" என மனதில் நினைத்தவாறே இடத்தைவிட்டு நகர்ந்தார் சீனிவாசன்.
வழக்கமாக சதாசிவ அய்யரிடம்தான் ஜாதகத்தை கொடுத்து பொருத்தம் பார்ப்பான் முத்துக்குமார். அவனும் அவரிடம் பத்து வருடமாக பொருத்தம் பார்த்து கொண்டுதான் இருக்கிறான். சாதரணமாக ஜாதக பொருத்தம் பார்க்க இருநுறு ரூபாய் வாங்குவார். ஆனால் முத்துக்குமார் பத்து வருட வாடிக்கையாளர் என்பதால் ஐம்பது ரூபாய் மட்டும் வாங்குவார். ஒரு மாதத்தில் பத்து ஜாதகமாவது கொண்டு வருவான். பொருத்தம் இல்லை என்று சொல்லி விட்டால் அந்த சோகத்தில் அவருக்கு பணம் கொடுக்காமல் கூட போய்விடுவான். அன்றும் வழக்கம்போல் அந்த ஐந்து ஜாதகத்தையும் சதாசிவ அய்யரிடம் கொடுத்து மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தான். மறுநாள் போனான். அவர் "இந்த நாலு ஜாதகமும் பொருத்தம் இல்ல. இந்த ஜாதகத்துல மட்டும் பத்து பொருத்தம் இருக்கு" என்று சொல்லி ஒரு ஜாதகத்தை மட்டும் கையில் கொடுத்தார். "அப்ப அந்த வாத்தியார் பொண்ணு ஜாதகம் " என்று இழுத்தான் முத்துக்குமார். "அந்த பொண்ணுக்கு நாக தோஷம் இருக்கு. அத கட்டுனா ஆயுள் குறையும். பரவாயில்லையா?" என்றார் அய்யர். "ஏற்கனவே முக்கால்வாசி ஆயுள் முடிஞ்சு போச்சு. இதுல இது வேறயா" என்று நினைத்த முத்துக்குமார் பொருத்தமாக இருந்த அந்த ஒரு ஜாதகத்தை மட்டும் எடுத்துகொண்டு புறப்பட்டான்.
முப்பது வயதிலேயே முத்துக்குமாருக்கு திருமணம் நடந்திருக்க வேண்டியது. எல்லாம் அவனது தாய் மாமனால் கெட்டுவிட்டது. ஆத்தூரில் சீதா என்ற ஒரு பெண்ணை பார்க்க போயிருந்தார்கள். பெண் நடிகை திரிஷா போல நல்ல உயரம் நல்ல அழகு. ஆனால் போலியோவினால் கால் பாதம் கொஞ்சம் ஊனம். லேசாக விந்தி விந்தி நடப்பாள். முத்துக்குமாருக்கு அது ஒன்றும் குறையாக தெரியவில்லை. ஆனால் தாய்மாமா திடீரென்று முத்துக்குமாரை அழைத்து கொண்டு வெளியே வந்தார். "டேய்! அப்பா அம்மா இல்லேன்னா நீ அனாதை ஆயிடுவியா? இந்த மாமன் இருக்கிற வரைக்கும் ஒரு நொண்டி பொண்ண கல்யாணம் கட்டிக்க விடமாட்டேன். கொஞ்சம் பொறு அந்த கிளியோபாட்ராவையே உனக்கு கட்டி வைக்கிறேன்" என்று கூறி அழைத்து வந்து விட்டார். இவனுக்கு கிளியோபாட்ரா யார் என்றே தெரியாது. அந்த வயதில் அவனால் மாமாவை எதிர்த்து பேச முடியவில்லை.
கொஞ்ச நாள் போயிருக்கும் முத்துக்குமார் வீட்டுக்கு சீதாவின் அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். அவர்களை பார்த்ததும் முத்துக்குமாருக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. "தம்பி யாருமே என் மகளை பெண் பார்க்க வராமல் இருந்தாங்க. நீங்க முதன்முதலில் பார்க்க வந்த நல்ல நேரம், அடுத்து ஒரு நல்ல வரண் வந்து நல்லபடியாக முடிந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை கல்யாணம். இந்தாங்க முதல் பத்திரிக்கை" என்று கையில் அழைப்பிதழை திணித்தார்கள். பத்திரிகை அவன் கைநழுவி போனதை கூட கவனிக்காமல் அவர்கள் சென்று விட்டார்கள்.
சதாசிவ அய்யர் பொருத்தம் என்று கொடுத்த ஜாதகத்தை எடுத்து பார்த்தான். கொசல்யா என்று பெயர் இருந்தது. அப்பா மளிகை கடையாம். கான்டக்ட் நெம்பர் இருந்தது. அந்த நெம்பருக்கு ஒரு போன் போட்டான். அப்பாதான் எடுத்தார். முத்துக்குமார் மாமா பேசுவதாக கூறி முத்துக்குமாரே பேசினான். கௌசல்யா பற்றி விசாரித்தான். "இப்போதான் கௌசல்யாவை பிரசவத்துக்கு அனு ஆஸ்பிடலில் சேர்த்துட்டு வந்தேன். நீங்க யாருன்னு சொன்னீங்க" என்றார். அதற்கு மேல் பேசவில்லை. போனை வைத்து விட்டான்.
"படுபாவி பய கல்யாணமான பொண்ணு ஜாதகத்தை கொடுத்து ஏமாத்திபுட்டான் அவனை நாலு வார்த்தை கேட்காம விடமாட்டேன்"என்று கருவியபடியே போனை போட்டான். புரோக்கர் சீனிவாசனுக்கு போட்ட போன் வேறு சீனிவாசனுக்கு போய்விட்டது. அந்த சீனிவாசனிடம் கைமாற்று வேறு வாங்கி இருந்தான். பேசி சமாளிப்பதே பெரும்பாடு ஆகிவிட்டது. திட்ட வேண்டும் என நினைத்தவனைக்கு நல்லா திட்டு விழுந்தது. இதைத்தான் விதி என்பதா? மாமாவிடமே இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கேட்டுப் பாரத்துவிட்டான். அதற்கும் அவர் "தாய்மாமா பெண்ணை ஏன் திருமணம் செய்யக்கூடாது" என பெரிய விஞ்ஞானியை போல அரைமணி நேரம் விளக்கம் கொடுத்துவிட்டார். அதுவும் வேலைக்கு ஆகவில்லை.
இதற்கு மேல் பொறுமையாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்த முத்துக்குமார் நேராக புரோக்கர் சீனிவாசன் வீட்டுக்கே சென்று ஒரு முடிவு செய்து விட வேண்டும் என நினைத்து சீனிவாசன் வீட்டுக்கே சென்று விட்டான். பத்தாவது படிக்கும் மகன்தான் வாசலில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தான். முத்துக்குமாரை பாரத்ததும் "வாங்க பெரியப்பா" என்றான். "சீனிவாசனுக்கு என் வயதுதான் இருக்கும். இருந்தாலும் மகனிடம் பெரியப்பா என்று என்னை பற்றி சொல்லி வைத்து இருக்கிறான். கேடு கெட்ட பய. கலிகாலம் என்ன செய்வது?" என்று மனதில் நினைத்தவாறு உள்ளே நுழைந்தான்.
"இத பாரு முத்துக்குமாரு உனக்கு 46 வயது ஆனதால்தான் எல்லா ஜாதகமும் ரிஜக்ட் ஆகிகிட்டே வருது நான் ஒரு யோசனை சொல்றேன். எனக்கு தெரிந்த ஜாதகர் ஒருத்தர் இருக்காரு. அவரை பார்த்து உனக்கு 36 வயதுன்னு போட்டு ஒரு ஜாதகம் ரெடி பண்ணுவோம். எனக்கு தெரிந்த குருக்கள் வீட்டு பொண்ணு ஒன்னு இருக்கு. குருக்களுக்கு வருமானமும் இல்லை, வயதும் ஆகிவிட்டது. பொண்ணுக்கு முப்பது வயது இருக்கும். ஒன்னும் போட மாட்டாங்க. நாமதான் செலவு பண்ணிக்கனும். ஓ கே ன்னா சொல்லு ஞாயிற்றுக்கிழமை போய் பார்ப்போம். "நல்ல பையனா இருந்தா போதும். ஜாதி பிரச்சனை இல்லைன்னு அய்யரே சொல்லிட்டாரு" என்றான்.
அய்யர் வீட்டு பொண்ணு என்றதும் முத்துக்குமாருக்கு உடம்பிலே ஒரு கிளுகிளுப்பு வந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை போக சரி சொல்லிவிட்டான். அவனது முகத்தில் உள்ள ஜொலிப்பை பார்த்ததும் "ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தா கொடேன். ரொம்ப சிரமமா இருக்கு" என்றான் சீனிவாசன். "என்னிடம் இப்போது ஒன்றும் இல்லை "என்றான்." கூகுல் பே நெம்பர் தருகின்றேன் வீட்டுக்கு போய் அனுப்பி வை" என்றான். அதற்கும்"என்னிடம் டச் செல்லே இல்லையே" என்று நழுவிவிட்டான். வெளியில் செல்ல எத்தனித்த முத்துக்குமாரிடம் சீனிவாசன் "ஒரு விஐபி ஹேர்கலர் வரும் போது போட்டுக்க. நீ இப்போ 36 வயசு. அதை நெனவுல வச்சுக்க" என்றான்.
மறு ஞாயிற்றுக்கிழமை, அய்யர் வீட்டுக்கு மைதிலியை பெண் பார்க்க சென்றுவிட்டார்கள். பெண்ணை அலங்கரித்து வைத்து இருந்தார்கள். "பொண்ணு வெள்ளையா அழகாத்தான் இருக்கு. ஆனா எலும்பும் தோலுமால்ல இருக்கு. அவங்க அப்பன் சோறே போட்டு இருக்க மாட்டான் போல இருக்குதே! சாமிக்கு வைக்கும் நெய்வேத்தியத்தை இதுக்கும் கொஞ்சம் வச்சிருக்காம்ல மொத்தமே 30 கிலோதான் இருப்பாள் போல" என்று சீனிவாசனிடம் புலம்பினான். "உன் வீட்டுக்கு வந்ததும் சாப்பாட ஏத்து" எல்லாம் சரியாகிவிடும் என்றான். அடுத்த முகூர்த்தத்திலேயே அவர் பூஜை செய்யும் கோவிலிலேயே திருமணம் முடிந்து விட்டது. மைதிலியை அவன் வீட்டுக்கு அழைத்து செல்ல தயாரானான். மூன்று மறுவீடு அழைப்பதது பற்றி பேச்சு வந்தது. "இரண்டு முறை மறுவீடு அழைத்து அனுப்புவது போல நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்க மூனாவது வீடு அழைக்க நானே வருகிறேன்" என்றாள் பெண்ணோட அம்மா. முத்துக்குமாரும் மைதிலி கூட இருந்தால் போதும் என இந்த டீலுக்கு ஒத்துக்கொண்டான்.
முதலிரவு. இரண்டு பேருக்குமே ஏக்கத்தை தீர்க்கும் இரவாக முடிந்தது. இரண்டு பேருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. முத்துக்குமாரின் அரை நூற்றாண்டு கனவுக்கு முடிவாக அந்த இரவு அமைந்துவிட்டது. காலையில் எழுந்த மைதிலி அவனுக்கு காபி போட்டு கொடுத்தாள். அவன் வாழ்க்கையில் அப்படி ஒரு அய்யர் வீட்டு காபியை அவன் குடித்ததே இல்லை. ஒருநாள் இரண்டு பேரும் எம்ஜிஆர் படம் பார்த்து கொண்டு இருந்தார்கள், அப்போது முத்துக்குமார் "உனக்கு எந்த நடிகரை பிடிக்கும்?" என கேட்டான். அதற்கு மைதிலி "மோகனை பிடிக்கும், பாக்கியராஜை பிடிக்கும், கார்த்தியை பிடிக்கும்" என்றாள். "எந்த கார்த்தி சூரியா தம்பியா?" என கேட்டான். அதற்கு அவள்" சீச்சி அவன் சின்ன பையன். மௌன ராகம், சின்னதம்பி, அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்து இருப்பாரே அந்த கார்த்தி" என்றாள். இவள் என்ன வித்தியாசமான கேரக்டரா இருக்கிறாள்" என்று நினைத்தான். அது மட்டுமல்ல "எம்ஜிஆரை சின்ன புள்ளையிலேயே பார்த்து இருக்கிறேன்" என்றாள். உடனே முத்துக்குமார் ஜாதகப்படி நீ பொறந்ததே 91ல் தான். 87ல் செத்துபோன எம்ஜிஆரை நீ எப்படி பாரத்திருப்பே" என்று கேட்டான். "எனக்கு ஜாதகமே இல்லை. அந்த சீனிவாசன்தான் ஒரு ஜாதகம் ரெடி பண்ணினார்" எனக்கூறினாள். "அடப்பாவி! சீனிவாசா! 46ஐ 36 ஆக்கியதுபோல் 40ஐ 30 ஆக ஆக்கிவிட்டாயா? ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்பார்கள். விட்டால் இவன் இரண்டாயிரம் பொய்கூட சொல்லுவானா"
முத்துக்குமாரால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. தேள் கொட்டிய திருடன் போல் ஆனான். இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்கிறார்களோ.
முத்துக்குமாருக்கு தலையை வலிக்க ஆரம்பித்து விட்டது. " மைதிலி உன் கையால் ஒரு காபி போடு" என்றான். "இந்தா வந்துட்டேங்க" என்று அடுப்படிக்கு ஓடினாள் மைதிலி.
ஜெ மாரிமுத்து
அசத்தலான கதை, இறுதியில் அருமையான டுவிஸ்ட் 😅.
பதிலளிநீக்குஅருமை
நீக்கு