அண்மை

என் உடம்பு வீண் | குறுந்தொகை 27 கதை

kurunthogai 27

 

"நான் சொல்லறேனு தப்பா நினைச்சிகாத சரோஜா… உன் மகனுக்கு இன்னொரு கல்யாணத்த பண்ணிடு, இத வச்சி மாரடிக்க முடியாது சொல்லிப்புட்டேன்"


"மெதுவா பேசுங்க மாமி…"


"ஏன்?, அவ கேட்டா என்ன பண்ணுவா?"


"அதனால இல்ல"


"அப்பறம் என்ன?, சரவணன்ட பேசி அவன் மனச மாத்தபாரு. அப்பறமா அவள அவ இருந்த அனாத ஆசரமத்துக்கே துரத்திவிட்டுடு. சரி, நேரமியிட்டு. மாமா கடைக்கி கிளம்புறாரு, சட்டினி செய்யனும், நான் அப்பறமா வாறேன்"  என்று சொல்லி மங்கலம், சரோஜா தந்த தக்காளியை வாங்கிக்கொண்டு தன் வீட்டை நோக்கி போனாள்.  சரோஜா வீட்டின் உள்ளே நுழைந்து, கட்டிலில் முழுவதும் முக்காடிட்டு படுத்திருந்த சந்தியாவை பார்த்தப்படியே மனதில் எதையோ சிந்தித்தபடி கொல்லைப்புறம் சென்றாள். 


இவர்கள் பேசிய அனைத்து வார்த்தையும் சந்தியாவின் காதில் விழுந்தது. அவளுக்கு கோபம், வருத்தம், அழுகை இவை ஏதும் இல்லை. 'ஒரு நல்ல வழி கிடைத்துவிட்டது' என்ற ஓரு மகிழ்ச்சி உணர்வு தான் இருந்தது.


ஒரு வருடத்திற்கு முன்பு...


சரவணன் சந்தியாவை காதலிப்பதாக வீட்டில் கூறினான். வீட்டில் ஒத்துழைக்காததால் அவளை திருமணம் செய்து கொண்டு அரியலூர் மாவட்டம், முனியப்பங்கோவில் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி இரண்டு மாதம் ஆகிய நிலை - "சந்தியா நான் வரேன், கொஞ்சம் மாசத்துக்கு நீ இங்க இருக்குற மாதிரி இருக்கும்‌‌. அப்பறமா எங்க வீட்ல பேசி எப்புடியாவது உன்ன எங்க வீட்ல தங்கவைக்க ஏற்பாடு பண்ணுறேன். இந்தா இப்போதைக்கு என்ட நூறுவா இருக்கு இத வச்சிக்க‌. (சந்தியா அதை வாங்கிக்கொண்டாள்) மளிகை கடைல பொருள் வாங்கிக, அவர்ட நான் விசயத்த சொல்லிருக்கேன். வீட்டுகாரரு வந்தா அவருக்கு அடுத்த மாசம் வாடக தரதா சொல்லு"


"காலைலயே அவரு கண்டபடி சத்தம் போட்டுடு, நாளைக்கு சாயுந்தரத்துக்குள்ள வாடகைய தரனும்னு சொன்னாரே?"


"விசயத்த எடுத்து சொல்லு, வச்சிருந்த காசெல்லாம் டிக்கெட் எடுக்கவே பத்தல. கடன் வாங்கி தான் நானே போறேன். மாசம் பணம் வந்ததும் அக்கவுண்ட்ல போடுறேன். அத எடுத்து மளிகை கடன், வீட்டு வாடகையை கொடுத்துடு. அதுவரைக்கும் அவசரமா மருத்துவ செலவுக்கு ஏதும் வேணும்னா பக்கத்து வீட்ல கடன் வாங்கிக்க"


"ம்ம். சரிங்க"


"மொத்தமா அப்பறம் வாங்கிகிறேன். சில்லறையா இப்ப கொடேன்"


"என்னது?"


"மொத்தமா அப்பறம் வாங்கிகிறேன். சில்லறையா இரண்டு வருசம் தாங்குற மாதிரி, ஒரு கிஸ் கொடேன்"


(சிலநொடி நெருக்கத்திற்கு பிறகு)


"போய் இறங்கிட்டு ஃபோன் பண்ணுங்க"


"ம்ம். நான் கிளம்புறேன்" என்று கூறி சரவணன் கிளம்பினான். 


அடுத்த நாள் காலை சந்தியா வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருக்க "எங்கம்மா உன் புருஷன் வெளிநாட்டுக்கு கிளம்பிட்டாரா?" என்றாள் பக்கத்து விட்டு மீனாட்சி.


"நைட்டு கிளம்பிட்டாரு''


"நேத்து வோனரு சத்தம் போட்டாரு போலயே"


"ஆமா அக்கா, கொஞ்சம் மரியாதையா சொல்லியிருக்கலாம். கண்டபடி பேசிட்டாரு"


"அவுரு அப்புடிதான். முன்னடி ஒரு குடும்பம் தங்கி இருந்திச்சி, எல்லாத்துக்கும் ஏதாவது நொட்ட குறை சொல்லிக்கிட்டே இருப்பாரு. அதுனாலையே அவுங்க வீட்ட காலிபண்ணிட்டு கிளம்பிட்டாங்க"


"அக்கா, எனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணுறீங்களா?"


"இந்த பொட்ட கிராமத்துல உனக்கேத்த வேலய எங்க தேடுறது!"


"எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை. வாடகை பணத்த சீக்கிரம் கொடுக்கனும் அதுவும் இன்னைக்கே ஏதாவது வேலை வேணும்!"


"நடவும் இல்ல, அறுப்பு அறுக்குற சீசனா இருந்தாலும் உன்ன அழைச்சிட்டு போகலாம். சரி, என் கூட சித்தாள் வேலைக்கு வரியா? இருநூத்தி ஐம்பது தான் சம்பளம்!"


"பரவாயில்லை, அந்த காச  கொடுத்து சமாளிச்சுடுவேன். வரேன் அக்கா"


"சரி எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிடு"


இருவரும் சேர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள அந்த மூக்கால்பங்கு வேலை முடிந்த மாடி கட்டடத்துக்கு சென்றனர். கல் மற்றும் கலவைக்கு மண் கொட்டும் வேலையை இருவரும் பார்க்க, மேஸ்திரி மேலே கான்கிரீட் வேலைமுடிந்த அந்த வீட்டுக்கு மேல் சுவரை கட்டிக்கொண்டிருந்தார். கீழிருந்து ஒரு ஆடவர் மட்டும் மேஸ்திரிக்கு தேவையான சிமெண்ட் கலவை மற்றும் செங்கற்கள் மேலே சென்று கொடுத்து வந்தார். வேலை இப்படியே தொடர்ந்தது. 


"அம்மா நான் கடைக்கு போயி சாப்பாடு வாங்கிட்டு வந்துடுறேன். கொஞ்சம் கல்ல மேல மேஸ்திரிக்கிட்ட கொட்டிக்கிட்டு இருங்க" என்று சொல்லி அந்த ஆடவர் கிளம்ப, கல்லை அடுக்கி ஒருவர் பின் ஒருவராக இருவரும் மேல சென்று கொட்டினர்.  சந்தியா மேலே சென்று கல்லை கொட்டிவிட்டு படியில் ஏறி இறங்கிய களைப்பின் காரணமாக புதிதாக கட்டப்பட்டு இன்னும் காயாத அந்த சுவரின் மீது கைவைக்க சுவரும் சரிந்தது இவளும் மல்லாக்க சாய்ந்தாள். 


அந்த நிகழ்வில் அவளது கழுத்து எலும்பு உடைந்து அவளது வலது கை மற்றும் வலது காலின் நரம்பு மண்டலம் செயல் இழந்து போனது. சரவணனுக்கு இந்த விசயம் தெரியவர அவனால் வரமுடியாத சூழல்,  நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் படி அவன் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தே ஆகவேண்டும்.  தன் தாய் சரோஜாவிடம் மன்னிப்புக்கேட்டு நடந்தவற்றை சொல்ல, அவளும் எல்லாவற்றையும் மறந்து சந்தியாவுடன் சென்னையில் மேல் சிகிச்சைக்கு துணையாக இருந்தாள். 'சந்தியாவின் வலது கை, கால் செயல்படாது!, அவர் கழுத்தும் ஒரு புறமா தான் இருக்கும் அவர் கழுத்த திருப்ப முடியாது!. இனி ஒருவர் எப்போதும் இவர் கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை வெளிநாட்டில் பார்த்தால் மட்டுமே அவர் எழுந்து உட்கார வாய்ப்பு இருக்கிறது.' என்று மருத்துவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அவளை தன் வீட்டுக்கு அழைத்து சென்று வைத்திருந்தாள் சரோஜா.  ஓராண்டாக அவள் படுத்த படுக்கையாகவே தான்  இருக்கிறாள். அவளால் நடக்க முடியாது. படுத்த படுக்கையிலேயே கிடக்க வேண்டிய கொடிய நிலமை‌. இப்படி அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் இரண்டு வருடம் வேலைக்குச் சென்றவன், தன் மனைவியின் மேல் சிகிச்சைக்கு லட்சங்களில் செலவு ஆகும் என்பதை உணர்ந்து கூடுதலாக ஒர் ஆண்டு தன் வேலையை அதிகரித்துக் கொண்டான். மங்கலம் போன்ற உறவினர்கள் சரோஜாவிடம் சந்தியாவை பற்றி உசுபேத்தும் படி பேசிவந்ததால் சரோஜாவும் சரியாக சந்தியாவை கவனிப்பது இல்லை‌.  இவ்வாறு நடந்ததால் தான், அவளை பற்றி பலர் பேசுவதை கேட்டும் அவளால் ஒன்றும் செய்ய முடியாத நிலமை. 


சரோஜா மங்கலம் கூறியது சரியென நினைத்தபடியே, கொல்லைப்புறம் செல்ல, சந்தியா செயல்படும் அந்த வலது கையினால் முக்காடிட்ட போர்வையை விளக்கினாள். அவளது கழுத்து வலது புறமாக சாய்ந்து இருந்தது.


"அக்கா எந்துருச்சிடீங்களா?"  பக்கத்து வீட்டு தோழியான பவித்ராவின் குரல். சந்தியாவுக்கும் அவளுக்கும் ஒரு வயது வேறுபாடு.


"ம்ம், நீ காலேஜ் கிளம்பலையா?"


"இன்னக்கி ஞாயித்து கிழமைல, லீவு" என்றாள் பவித்ரா. மீண்டும் "அக்கா என்னக்கா!? உங்க வலது கண்ணுக்கு கீழையும் உதட்டு ஓரத்துலையும் எதோ புண்ணு மாதிரி இருக்கு" என்று கேட்க, சந்தியாவின் செல்பேசி ஒலித்தது.


"பவி, யாருனு பாரு"


"மாமா தான் கால் பண்ணுறாங்க"


"இங்க கொடு" இடது கையினை சிரமப்படுத்தி அந்த செல்பேசியின் அழைப்பை அனுமதித்து இடது காதில் வைத்தாள்.


"சந்தியா, தூங்கிட்டு இருந்தியா?"


"இல்ல… சொல்லுங்க"


"சரியா சாப்புடுறியா, இல்லையா நீ?. டாக்டர் ஃபோன் பண்ணி சரியா சாப்புடுறதே இல்லைனு சொல்றாங்க?''


"அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க, உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும். பவித்ரா அத்த கொல்லைல நிக்கிறாங்களானு பாரு (மேலும் கீழுமாக தலையை ஆட்டினாள் பவித்ரா) நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணிக்குங்க"



"என்ன பேசுற சந்தியா! யாரவது ஏதும் சொன்னாங்களா? அம்மா ஏதாவது..."


"அத்த எதும் சொல்லல, நான் தான் சொல்லுறேன்"


"லூசு மாதிரி ஏதாவது பேசாத, என்ன நடந்தாலும், நீ தான் எனக்கு சாவுற வரைக்கும் பொண்டாட்டி. ஃபோன் வைக்குறேன்" என்று கோபமாக சரவணன் அழைப்பை துண்டித்தான்‌.


"அக்கா, ஏன் இப்படி சொன்னீங்க?"


"அதெல்லாம். உனக்கு புரியாது"


"சரவணன் மாமாவ சீக்கிரமா இங்க வர வைக்கதான சரியா சாப்புடாம இருந்தீங்க?, அது மாதிரி தான இப்பையும் இப்புடி பேசி வரவைக்க ட்ரை பண்ணுறீங்க?, அவர பாக்காம உங்களால இருக்க முடியல?"


"பச்சயாவே சொல்லுறேன். அவர் என்ன கடைசியா பாத்த என் உடம்புதான் அவருக்கு பயன்படாம இருந்தாலும், அட்லிஸ்ட் எனக்கு ஒரு கிஸ் கொடுக்கவாது என் முகம் பழைய படி இருகனும். ஒரு பக்கமே என் கழுத்து சாய்ந்து இருக்குறதுனால என்னோட முகம் தோள் அழுகி புண் ஆகுது. அது சரி பண்ணணும்னா, நான் சீக்கிரம் எழுந்து உட்காரனும் டாக்டர் சொல்றாங்க. இப்போதைக்கு அது நடக்காதுனு. என் உடம்ப சரிபண்ண சில வருசம் ஆகும். அவர் வந்து என்ன பாக்கும்போது - என் உடம்பு மாதிரியே முகமும்… அவருக்கும் பயன்படாம போயிடும்!" என்று கண்ணீர் வீட்டு சந்தியா அழ, அமைதியாக நின்ற பவித்ராவின் கண்களில், கண்ணீர் படலம் சூழ்ந்தது.


குகன்


குறுந்தொகை 27 செய்யுள்


(தலைவி கூற்று)


கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குலென் மாமைக் கவினே


வெள்ளிவீதியார்  


குறுந்தொகை 27 பாடல் விளக்கம்


நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல, என் மாந்தளிர் போன்ற அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையின்  நிறம் வெண்மை நிறமாக ஆகி, மேனி முழுவதும்  பசலைப் படர்ந்து விட்டது. இத்தகு என் அழகு எனக்கும் பயன்படாது என் காதலனுக்கும் பயன்படாமல் அழிந்து போகிறது. தலைவன் வரும் வரை அந்த பாதிப்பை என்னால் நிறுத்தி வைக்க முடியாது. என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

தென்றல் இதழ் 36

2 கருத்துகள்

  1. அகப்பாடல்களில் பிரிவின் ஆற்றாமையை கொண்டுதான் நிறைய பாடல்கள் புனையப்பட்டு உள்ளன. காதலனோ கனவனோ பல மாதங்களோ பல ஆண்டுகளோ பிரிந்து சென்று இருக்கலாம். நந்தவனத்தில் பூத்த மலர் ஒன்று பூஜைக்கு செல்லவேண்டும், அல்லது மங்கைகக்கு சூடிக்கொள்ள செல்ல வேண்டும். செடியிலேயே பூத்து யாருக்கும் பயனின்றி பறிக்காமல் அழிவது போல மீண்டும் வராத இளமைக்காலம் வீனாவதை என்னியே கன்றுக்கும் செல்லாமல் கன்றது உரிமையாளனுக்கும் கிடைக்காமல் நிலத்தில் வீழ்ந்து வீனாவதை தன் உடலோடு பொருத்தி பார்க்கிறாள். முதல் நாள் வீனான மலர் மறுநாள் காலை பூத்தால் பயண்படும்.அதுபோல தலைவன் வந்து விட்டால் அவளின் நிலையும் மாறிவிடும். நிலையாக அவள் உடல் பயண்படாது என்பது போல குகன் எழுதியிருப்பது வெள்ளிவீதியாரின் கருத்துக்கு முரனானது ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. குறைகளை எடுத்துச் சொன்னமைக்கு நன்றி 🙏

      தவறுக்கு மன்னிக்கவும்.

      (அடுத்த முறை சரி செய்துவிடுகிறேன்...)

      நீக்கு
புதியது பழையவை