என் பெயர் விமலா. பத்தாம் வகுப்பு படிக்கிறேன். இரவு பெய்யத் தொடங்கிய மழை காலையும் தொடர்கிறது. மழை பெய்ததால் பள்ளி உண்டா என அறிய, தொலைக்காட்சிக்கு முன்னே உட்காரவும், எனக்கு வழியில்லை. புயலே அடித்தாலும் பத்தாவதுக்கு பள்ளி உண்டு என வகுப்பு ஆசிரியர் முன்பே சொல்லியிருக்கிறார். அரசு என்ன உத்தரவு போட்டாலும் நான் படிக்கும் கிராமத்து பள்ளியில் எங்கள் ஆசிரியர் போடுவதுதான் உத்தரவு. அவருக்கு தேவை 100% தேர்ச்சி.
குடை பேருக்குதான். உடல் முக்கால்வாசி நனைந்து விட்டது. மெதுவாக பள்ளியில் நுழைந்தேன். மழைதானே பெய்கிறது. என்ன ஒரு புயல் அடித்தது போல் என்றுமில்லாத அமைதி. உள்ளே நுழைந்தால் யாருமே இல்லை. எல்லா நாளும் வர வேண்டும் என்ற உத்தரவு போட்ட ஆசிரியரே வரவில்லை. திரும்பி விடலாம் என நினைத்தபோது வகுப்பறை வாசலில் யாரோ அசைவது போல் தோன்றியது. கூர்ந்து நோக்கினேன். "அட நம்ம மதன்குமாரு". அவனருகே சென்றேன். நானாவது குடையோடு வந்தேன். அவனிடம் அதுவும் இல்லை. நனைந்திருந்தான். புத்தகப்பையை போட்டு துடைத்தது போல மழை நீர் திவலைகள் முழுமையாக போகாமல் இருந்தது. "இன்னைக்கு ஸ்கூல் இருக்கும்னு வந்திட்டியா? நானும் அப்படித்தான் வந்து விட்டேன்" என்றேன். என்னை பார்த்ததும் ஏனோ பயந்தான். குளத்திலே குதித்தோடும் மீன்கள் செதில்களை மூடி மூடி திறப்பது போல் கண்களை மூடி மூடி திறந்தான். அதுவே அவனுக்கு ஒரு அழகை தந்தது. மூன்றாண்டுகளாக அவனோடுதான் படிக்கிறேன். இவ்வளவு நெருக்கத்தில் அவனை பார்த்ததில்லை. ஆண்களை பார்த்தால் பெண்களுக்கு பயம் வரும். இங்கே தலைகீழாக என்னை பார்த்து அவன் மிரளுகிறான்.
கண்களாலேயே விடை பெற்றுச் செல்ல முயற்சி செய்தான். குடை எடுக்காமல் வந்தவனை மழையில் அனுப்ப எனக்கு மனமில்லை. "மழையில் நனையாதே வா என் குடையில் போகலாம்"என்றேன். சுற்றும் முற்றும் பார்த்தான். யாராவது பார்த்து விடுவார்களோ என பயப்படுவது அவன் கண்களில் தெரிந்தது. அவன் என்னருகில் வர மாட்டான். நான் அவன் அருகில் சென்று குடையை அவனுக்கும் சேர்த்து பிடித்தேன். அவன் உடல் என் மீது படாதவாறு கவனமாக நடந்தான். தப்பித் தவறி பட்டுவிட்டால் தொட்டாற் சுருங்கி இலைகளை போல துவண்டு போனான். ஒருவாறு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தோம்.
அவன் சகஜமாக என்னிடம் பேசி இருந்தால் அவன் மீது எனக்கு எந்த ஈர்ப்பும் வந்திருக்காது. அவனுடைய செய்கைகள் என் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து என்னை தூங்க விடாமல் செய்தது. மறுநாள் பள்ளிக்கு வந்த போது ஒரே குடையில் வந்த விஷயம் பலருக்கு தெரிந்து விட்டது. மதன் குமாரை பார்த்ததும் "அதோ உன் ஆளு வராண்டி" என என் முகத்தை கூர்ந்து பார்த்து கொண்டே ஒருத்தி கூறினாள். அவள் கூறிய வார்த்தைகள் என்னை கோபப்படுத்தும் என நினைத்து அவள் கூறியிருக்கலாம். ஆனால் அவளின் வார்த்தைகள் தேனை மொண்டு என் செவியில் ஊற்றியது போல் எனக்கு இனித்தது. வழக்கம் போல பாடம் நடந்தது. ஏதாவது அவனிடம் பேச வேண்டும் போல் தோன்றியது.
அவனருகில் சென்றேன். தமிழ் "தென்றல் நோட்ஸ்" உன்னிடம் இருக்கிறதா? கொஞ்சம் கொடேன்" என்றேன். எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவன் பரபரப்பது என்னால் உணர முடிந்தது. ஆனால் அவனிடம் அந்த நோட்ஸ் இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது. இருந்தாலும் "கொஞ்ச நேரத்தில் தருகிறேன்" என்று சொன்னான். யாரிடம் கேட்டானோ யார் காலில் விழுந்தானோ மாலை வீட்டுக்கு போவதற்கு முன் என் கைக்கு வந்துவிட்டது. நோட்ஸை கொடுத்து விட்டு ஏதோ சாதித்தது போல் என்னை கர்வமாக பார்த்தான். கண்களால் நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். புத்தகத்தை புரட்டினேன். முதல் பக்கத்தில் அவன் பெயருக்கு பதில் வேறு யாருடைய பெயரோ இருந்தது. அவன் பெயர் மட்டும் இருந்திருந்தால், அதை மடியில் போட்டு படித்திருப்பேன். மார்போடு அனைத்து ரசித்து இருப்பேன். இந்த புத்தகத்தினால் எனக்கு பயனில்லை. ஏனென்றால் ஏற்கனவே இந்த நோட்ஸ் என்னிடம் உள்ளது. ஒரு விஷயத்துக்கு இது பயன்படும், அது என்னவென்றால், மீண்டும் இதை திரும்ப கொடுக்கும் சாக்கில் அவனை சந்திக்க உதவும்.
மறுநாள் அந்த நோட்ஸை அவனிடம் கொடுத்து நன்றி சொன்னேன். "எனக்கு ஏதாவது பாடத்தில் டவுட் என்றால் உன்னிடம் கேட்கலாமா?" என்று அவனிடம் கேட்டேன். கண்கள் மலர "தாராளமாக" என்றான். நான் என்ன அவனிடம் சந்தேகம் கேட்க போகிறேன். அவனிடம் பேச எனக்கு ஏதாவது காரணம் வேண்டுமல்லவா?. அதற்காகத்தான் அப்படி சொல்லி வைத்தேன். முதல் திருப்புதல் தேர்வு வந்தது. ஐந்தாவது ரேங்க் வரும் நான் பத்தாவது ரேங்க் என்ற உடனேயே மதன் என்னை ஆதிக்கம் செலுத்துவது தெரிந்து விட்டது.
இன்னும் இரண்டு மாதம் தான். தேர்வு வந்து விடும். இடையில் மாவட்ட அளவினான ஸ்போர்டஸுக்கு தேதி குறித்து விட்டார்கள். மதன் 100மீட்டர், 400 மீட்டர் ரன்னிங்குக்கு பெயர் கொடுத்து இருந்தான். இந்தப் போட்டிகள் வெளியூரில் நடக்கும் என்பதால் மதனோடு நட்பை வளர்த்து கொள்ளலாம் என நானும் பெண்கள் பிரிவில் 400 மீட்டர் ஹடுல்ஸுக்கு பெயர் கொடுத்தேன்.
போட்டி நடக்கும் நாள் வந்தது. எங்கள் பள்ளியிலேயே ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் மதனை 100 மீட்டரில் இருந்து நீக்கி விட்டார்கள். அவனுக்கு அது அவமானமாக போனதால் வருத்தத்தில் இருந்தான். அதனால் பி.டி மாஸ்டர்களிடம் மதனுக்காக சண்டை போட்டேன். அவர்கள் நான் சொல்வதை கேட்கவில்லை. அப்படியானால் 400 மீட்டரிலும் கலந்து கொள்ளாதே என யோசனை சொன்னேன். என் மீது இருந்த மோகத்தில் ஸ்போர்டஸ் நடந்த அன்று மைதானம் பக்கமே மதன் செல்லவில்லை. நானும் செல்லவில்லை. இரண்டு போட்டியிலும் தோற்றதால் ஸ்கூலுக்கு கெட்ட பெயர் ஆகிவிட்டது. எங்கள் நட்பு ஊர்முழுவதும் தெரிந்து விட்டது.
இதனால் என் அப்பாவை ஸ்கூலுக்கு வரவழைத்து கம்ளைன்ட் செய்தார்கள். என் அப்பா ஒரு வங்கியில் வேலை செய்கிறார். "மார்ச்சில் டிரான்ஸ்பர் ஆகி திருநெல்வேலிக்கு செல்கிறேன் இன்னும் பத்து நாள்தான். அதுவரை பொறுத்து கொள்ளுங்கள். என் மகளால் உங்களுக்கு இனி எந்த கெட்டப்பெயரும் வராது" என்று என்று எனக்காக மன்னிப்பு கேட்டார். என்ன நடந்தது என்று அப்பா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மா அப்பாவிடம் கேட்டதற்கு "எல்லாம் வயசு கோளாறு" என்று ஒரு வார்த்தை மட்டும் கூறினார்.
தேர்வு எழுத ஏற்பாடு செய்து கொண்டு திருநெல்வேலி வந்துவிட்டோம். தேர்வும் முடிந்து தேர்ச்சியும் பெற்று அதே பள்ளியில் பதினோராம் வகுப்பும் சேர்ந்து படித்து வருகிறேன். இங்குள்ள மாணவர்கள் டீச்சருக்கே பாடம் எடுக்கும் புத்திசாலிகளாக உள்ளார்கள். மதனை போல பயந்து சாவுபவர்கள் இங்கு யாரும் இல்லை. போன வருடம் மதனோடு பழகியதை நினைத்தால் எனக்கே விளையாட்டாகத்தான் உள்ளது. இனக்கவர்ச்சி என்பது இதுதானோ? இப்போது உள்ள மெச்சூரிட்டி அப்போது எனக்கு இல்லை. புதிய உலகம், புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை வாழ்கிறேன். பொழுது நன்றாக போகிறது.
பத்தாம் வகுப்பு புத்தகம் பத்தாம் வகுப்போடு போவது போல் பத்தாம் வகுப்பு காதலும் பத்தாம் வகுப்போடு முடிந்தது.
ஜெ மாரிமுத்து
இக்கதையில் ஏதோ ஒரு ஜீவன் இருக்கிறது. அது என்னை, மீண்டும் மீண்டும் இக்கதையை படிக்கும் படி தூண்டுகிறது...
பதிலளிநீக்குஇந்த கதையை முறியடிக்கும் இன்னொரு கதையை எந்த ஒரு கொம்பனாலும் படைக்க இயலாது. இது தென்றல் இதழ் இணையத்தில் செய்திருக்கும் வரலாற்று சாதனை என்று தோன்றுகிறது...!
பதிலளிநீக்குபுதுமைபித்தன் சமைத்த உணவை கொண்டு வந்து ஜெயகாந்தன் கையினால் ஆவிபறக்க பரிமாறி சாப்பிட்டதுபோன்றதொரு உணர்வு எழுகிறது..!
பதிலளிநீக்கு��❤❤❤❤��
பதிலளிநீக்குஎல்லாம் வயது தரூம் பிரச்சனை தான்
பதிலளிநீக்குகதையினை படிக்க படிக்க எந்தன் பள்ளி காலத்திற்க்கு சென்று நினைவுகளை அனுபவித்தேன். எத்தனைக் காதல் வந்தாலும் பள்ளிக்காதலுக்கு தனி சிறப்பு தான் காரணம், அது ஒரு இனம்புரியாத உணர்வு. பத்துடன் நிற்கவில்லை❤️.
பதிலளிநீக்கு