தேர்தல் திருவிழா
தேர்த்திருவிழா போல தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது.
இனி காரியம் ஏதும் ஆகவேண்டும் என்றால், காலில் விழுந்து வாக்கு கேட்டவர்கள் காலில், நாம் விழ வேண்டும்.
சுய உதவிக்குழுக்களுக்கு ஓட்டு கேட்கும் வேலை முடிந்துவிட்டது.
இனி உழைத்துதான் சாப்பிட வேண்டும். இனி சோறு ஆக்கித்தான் சாப்பிட வேண்டும்.
போனவாரம் செத்தவனுக்கு ஆளுயர மாலையும் நிதியாதரவும் கிடைத்திருக்கும். அடுத்த வாரம் சாவுகிறவன் நிலையோ அய்யோ பாவம்.
ஆறு பேர் உள்ள வீட்டில், ஓட்டு உள்ள நாலு பேருக்கு மட்டும் மதிப்பும் மரியாதையும் கிடைத்திருக்கும்.
நோட்டீஸ் அச்சிட்டவன் போன வாரமே கூலி வாங்கியிருந்தால் அதிஷ்டக்காரன்.
ஐந்து வருடம் கொள்ளையடிக்க நாம் தரும் அனுமதிச் சீட்டுதான், அவன் தரும் ஐநூறு ரூபாய்.
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்று அண்ணா சொன்ன வார்த்தை அமுலுக்கு வருவது ஐந்து வருடத்தில் இந்த தேர்தல் நாளில் மட்டும்தான்.
பணக்காரனைவிட ஏழையை மதிப்பதும் இந்த ஒருநாளில்தான்.
வாங்கியக் காசுக்கு வஞ்சனை இல்லாமல் வாக்களிப்பவன் வறியவன் மட்டும்தான்.
வாசல் குப்பையை கூட்டி, வாக்கு கேட்டவனிடம், இனி தெருவில் தேங்கும் குப்பையை கூட்ட சொல்லி காட்டவேண்டும்.
எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓரினம் ஓட்டுப் போடும் போது மட்டும்தான்.
படித்தவனுக்கும் ஒரே விலை, படிக்காதவனுக்கும் ஒரே விலை. சமத்துவம் உண்டு. ஓட்டுக்கு விலை வைக்கும்போது.
வாக்கு கொடுத்த வேட்பாளரின் சாயம் வெளுக்கு முன் அவர் கொடுத்த கொலுசின் நிறம் கருத்து போகும்.
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல நோட்டா இல்லாத இயந்திரத்தில் போட்டா போட்டி போடும் சில லெட்டர் பேடு கட்சிகள்.
டாஸ்மாக் தினசரி வியாபாரம் 80 கோடி. தேர்தலுக்கு மூன்று நாள் விடுமுறை. விடுமுறைக்கு முதல் நாள் வியாபாரம் 300 கோடி. திறப்பது இலாபமா? மூடுவது இலாபமா?
மது விற்கும் கடைக்குத்தான் விடுமுறை. மதுவை குடிக்க விடுமுறை இல்லை.
அண்ணன் தம்பி அக்கா அம்மா மாமா வாக்காளரில் எத்தனை உறவுகள் வேட்பாளருக்கு, தேர்தல் வரை.
வேட்பாளரை பொருத்தவரை பதினேழு வயது வரை உள்ளவன் எல்லாம் பயனில்லாதவனே!
பாவிகளை தேர்ந்தெடுக்க பக்கதுணையாக இருப்பதால் தலைகுனிந்து நிற்கிறது பள்ளிக்கூடம்.
கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே! இது பகவத்கீதை. ஓட்டுப்போடு பலனை எதிர்பார்க்காதே! இது அரசியல் பாதை.
பனிரெண்டாண்டுக்கு ஒரு முறை பார்க்கலாம் குறிஞ்சி மலரை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை பார்க்கலாம் வெற்றி வேட்பாளரை.
விரலில் வைக்கும் கருப்பு மை, உன் வாழ்க்கைக்கு வைக்கும் கரும்புள்ளி.
ஒன்றாம் வகுப்பு படிக்காத ஒருவனை மந்திரியாக மாற்ற ஒரு விரல் புரியுது மாயாஜாலம்.
அவன் காலடி பணிந்து குற்றவேல் புரிய குவிந்து நிற்கும் ஐஏஎஸ் கூட்டம்.
காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கு ஓட்டு போடாமல் தோற்கடித்தவர்கள் அண்ணாவை விட அறிவாளிகளா?
இரண்டு பிரதமரை உருவாக்கிய காமராசரை, விருதுநகரில் தோற்கடித்தவர்கள் காமராசரின் கால் நகத்துக்கு இணையானவர்களா?
தேர்தல் முடிந்தவுடன் டார்வின் தத்துவம் உண்மை என்பது நிரூபிக்கப்படும்.
இந்த கட்சியிலிருந்து அந்த கட்சிக்கும் அந்த கட்சியிலிருந்த இந்த கட்சிக்கும் குரங்கு போல தாவுதல் நடக்கும்.
தாவும் போது கரன்சிகளும் தாவும், பாயும். போட்ட முதலை எடுக்க வேண்டும் அல்லவா?
ஓட்டுப்போடுவது கடமைதான். அதற்காக கடமைக்கு ஒட்டு போடுவதா? அது மடமை அல்லவா?
அரிசி போடுவதை விட அரிசி வாங்க வசதி தரும் வேலை வாய்ப்பை ஏற்படுத்துக.
வடித்த வார்த்தைகள் எல்லாம் பழைய வரலாறுகள் கொண்ட அரசியல்வாதிகளை பார்த்தே கூறப்பட்டவை.
புதிய விடியல்களாய் புறப்பட்டிருக்கும் இந்த தேர்தலின் வெற்றியாளர்கள் வரலாற்றை மாற்றி அமைக்கலாம்.
அப்படி நடந்தால் அடுத்த தேர்தலில் அவர்கள் வாக்கு கேட்காமலேயே வாகை சூடலாம்.
பெண்களுக்கு பாதி இடம் கொடுத்தாச்சு. வீட்டை பார்த்து கொள்வது போல நாட்டையும் பார்த்து கொள் பெண்ணே.
கம்பன் ஏமாந்தான் என்று கண்ணதாசன் சொன்னது போல் ஏமாற்றி விடாதே எம்குல பெண்ணே.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் ஆசையை உண்மையாக்கு பாரதி கண்ட புதுமை பெண்ணே.
பாதி சரியானால் போதும். மீதி சரியாகிவிடும்.
நல்லதே நடக்கட்டும். நாடு நலம் பெறட்டும்.
ஜெ மாரிமுத்து