பள்ளியில் பயிலும் போது வாயிலார் புராணத்தையும் பூசலார் புராணத்தையும் படித்து,
"வாயிலாரே பூசலார் போல் மனத்தில் கோவில் பூசி இருக்கலாமே" என்றொரு கவிதை எழுதினேன்.
நாயன்மார் அறுபத்து மூவரில் வாயிலார் நாயனாரும் மற்றொருவரான பூசலார் நாயனாரும் ஏறத்தாழ ஒரே கருத்தை வலியுறுத்த பிறந்தவர்கள்.
பூசலார், தொண்டை நாடான திருநின்றவூரில் பிறந்தவர். நல்ல அறிஞர். மறையவர். சிவனடியார்.
அவருக்கு தொண்டை நாட்டிலே ஈசனுக்கென ஒரு கோவில் கட்ட வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு. ஆனால் அதற்குரிய செல்வம் அவரிடம் இல்லை.
இருந்தாலும் ஈசனுக்கு கோவில் கட்டியாக வேண்டும் என்ற முயற்சியை அவர் கைவிடவில்லை.
தியானத்தில் அமர்கிறார். உள்ளத்திலே ஒரு கோயிலை கட்டுகிறார். கோவிலை சுற்றிய பிரகாரங்கள், மதிற்சுவர்கள், கிணறுகள், செடிகள், வில்வமரங்கள் என அனைத்தையும் அமைக்கிறார்.
கோவிலில் ஆறுகால பூஜை நடத்த தேவையான பொருட்கள், அர்ச்சகர்கள், விளக்குகள் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்.
மனத்திலே கோவில் கட்டுவதென்பது என்ன எவராலும் ஆகாத காரியமா? நினைத்த மறுநொடியே மனதில் ஒரு கோவிலை எவரால் தான் ஏற்பாடு செய்ய முடியாது என்று நமக்கு தோன்றும்.
ஆனால் பூசலார் போல் எவராலும் முடியாது. அவர் என்ன செய்தார் தெரியுமா?
காலையில் எழுந்து நித்திய கருமங்களை முடிப்பார். பின் தியானத்தில் அமர்வார். தியானத்திலே கடைத்தெருவுக்கு சென்று ஒவ்வொரு கடையாக வேலை கேட்பார். வேலை கிடைத்த பின் அன்றைய நாள் முழுதும் கடினமாக உழைத்து முதலாளியிடமிருந்து சம்பளத்தை பெறுவார். அந்த பணத்தைக் கொண்டு கோவில் கட்டுவதற்காக செங்கலை வாங்குவார்.
இவ்வாறாக தியானத்திலே உழைத்து உழைத்து பணத்தை சேமித்து, மதிலுக்கு செங்கல் முதல் கோபுர குடம் வரை ஒவ்வொன்றாக வாங்கி வாங்கி அந்த உள்ளக் கோவிலை கட்டி முடித்தார்.
இவ்வாறாக உள்ளத்திலே கட்டப்பட்ட அந்த கோவிலுக்கு உள்ளத்திலே குடமுழுக்கு செய்ய பூசலார் நாட்குறிக்க ஆயத்தமானார்.
குடமுழுக்கு நாளும் குறித்ததானது.
அதே சமயத்தில் தொண்டை மண்டலத்தை காஞ்சியிலிருந்து ஆளும் 'காடவர் கோன்' ஈசனுக்கென வானுயர்ந்ததோர் ஆலயத்தை கட்டி முடித்திருந்தான்.
அவனும் பூசலார் குறித்த அதே தேதியையே தன் கோவில் குடமுழுக்கு நாளாக அறிவித்து இருந்தான்.
ஈசன், பூசலாரின் உள்ளத்திலே எழுகின்ற ஆலயமான மன ஒருமைபாட்டையும், எவராலும் நிகழ்த்த முடியாத இந்த பேரதிசியத்தையும் உலகறிய செய்ய ஆவல் கொண்டவரானார்.
அதனால் குடமுழுக்கு நாளின் முதல் நாள் இரவில் காடவர் கோன் மன்னன் கனவில் ஈசனார் வந்து, 'காடவர் கோனே, திருநின்றவூரில் பூசலார் என்ற ஒருவன் எனக்காக கோவில் அமைத்துள்ளான். அவனது கோவிலுக்கு நாளை நான் செல்லவிருப்பதால் உனது குடமுழுக்கு நாளை மாற்றிக்கொள்' என்று அருள் வாக்கு தந்தார்.
காடவர் கோன் விழித்தார். ஈசனாரே தன் கனவில் வந்ததை எண்ணி மகிழ்ந்தார்.
மறுநாள் 'யார் அந்த பூசலார்?' என்ற கேள்வியை காண்போரிடமெல்லாம் கேட்டுக்கொண்டே திருநின்றவூருக்கு வந்தார் காடவர் கோன்.
'இங்கே, ஈசனுக்கு கோவில் கட்டியுள்ள பூசலார் யார்?' என்ற மன்னனின் கேள்விக்கு மனத்திலே கோவில் கட்ட வேண்டி கண பொழுதும் வீட்டிலே தியானம் செய்து கொண்டிருக்கும் பூசலாரை அறியாத மக்களின் பதில் என்னவாக இருக்குமென நீங்களே ஒருவாறாக அறிய முடியும்.
'மன்னா, இங்கே யாரும் கோவில் கட்டவில்லை. உங்களுக்கு யாரோ தவறான செய்தியினை வழங்கியுள்ளார்கள்'
மன்னர் சில அறவோர்களையும் விசாரிக்கலானார். அதில் ஒருவர் பூசலாரின் வீட்டை மன்னருக்கு காட்டி உதவினார்.
பூசலாரை கண்ட காடவர் கோன் தனக்கு நிகழ்ந்த அதிசியத்தை கூறி, 'நீங்கள் கட்டும் கோவில் எங்கே? நானும் அதை காண வேண்டும்.' என்று ஆவலுடன் கூறினார்.
பூசலாரின் விழிகள் கண்ணீரை கசிந்தன. 'ஐயா! கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை தான். பணம் இல்லை. அதனால் என் மனத்திலே தினம் தோறும் வேலை செய்து பொருள் ஈட்டி, அந்த பொருள் மூலம் ஒரு கோவிலை கட்டினேன். இந்த அற்பனின் செயலையும் பெரிதாக எண்ணிய ஈசன், எனக்காகவா உங்களின் குடமுழுக்கை தடுத்தான்' என்று உள்ளம் உருக மன்னரிடம் கூறி சிவபதத்தை அடைந்தார்.
இதுவே பூசலாரின் கதை.
மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்
என்பது வாயிலாரின் கதை.
ஏறத்தாழ இரண்டும் ஒன்றென்பதை நீங்கள் இதிலிருந்து உணரலாம்.
சில வருடங்களுக்கு முன் கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு திரு வாசகத்தை கண்டேன்
ஆலயத்தை சுத்தம் செய்
உன் ஆன்மாவை நான்
சுத்தம் செய்கிறேன் - இறைவன்
என்பது தான் அது.
கோவில் நிர்வாகத்தின் கெட்டிக்காரத்தனமான யோசனை என்று கூட கூறி சிரித்து கொண்டிருந்தேன்.
உண்மையில் அவர்கள் எந்த நோக்கத்தில் இதை இறைவன் சொன்னதாக எழுதினார்களோ எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த வாக்கியங்களை இன்று ஆழ்ந்து சிந்திக்கும் போது ஒரு உண்மை தெளிவாகின்றது.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
தேகமே ஆலயம் எனும் பொருளாக தான் "ஆலயத்தை சுத்தம் செய் உன் ஆன்மாவை நான் சுத்தம் செய்கிறேன் - இறைவன்" என்ற வாசகத்தை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்
வள்ளல் பெருமானார் நம் ஆலயத்தை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்கு தான் ஆன்ம நேய ஒருமைபாட்டை வலியுறுத்தினார்.
நம் உடம்பு தான் நம் ஆலயம். நம் ஆலயத்தின் இறைவனுக்கு நாம் பூஜை செய்ய வேண்டுமானாலும், நம் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற இறைவன் நமக்கு நற்பேறு வழங்க வேண்டுமானாலும் நாம் வேறொரு ஆலயத்தை சுத்தம் செய்தல் வேண்டும்.
அதாவது, வேறொருவருடைய தேகமான ஆலயத்தை இன்னல்களில் உதவியும் பசியுண்டாகின் தீர்த்து வைத்தும், கஷ்டமானால் ஆறுதல் கூறியும் என பொது உணர்வோடு பிற உயிர்களின் தேகங்களை ஆலயமாக கருதி எவன் வாழ்கிறானோ அவனது ஆன்மாவை இறைவனே சுத்தம் செய்வார் என்பது இதன் பொருள்.
நம் ஆன்மாவை இறைவன் சுத்தம் செய்வார் என்பது எத்தகையதெனில், 'எல்லா தேகத்தையும் இறைவன் வீற்றிருக்கும் ஆலயமாக கருதும் ஆன்ம நேயமுற்றோன் பொது உணர்வு கூடி வருகையில் ஞானமும் பெறுபவன் ஆகிறான். அப்போது இறைவனே தனது கருணா கடலில் அவனை நீஞ்ச அனுமதிப்பதால் அவனும் இறைவனுக்கு ஒப்பான அருளினை ஆன்ம சுத்தத்தினால் பெறுபவன் ஆகிறான்.
தன் உடம்பு, தன் உடம்பிலே இறைவன் இருக்கிறான் அதனால் தன் உடம்பை பேணுவது தான் தனக்கு முக்கியம், தன் உடம்பை பேண வேண்டி பிற உயிர்களை கொன்றாலும் அதில் பாவம் இல்லை என்று வாழ்வோர்கள் அணுவளவேனும் ஞானம் இல்லாதவர்கள் என்பதை தெளிய வேண்டும்.
தன் உடம்பில் இறைவன் இருக்கிறான் என்பது மூல கருத்தானாலும், தன்னை போன்றே அனைவோரது உடம்பிலும் இறைவனே இருக்கிறான். 'இறைவனே இல்லை' என்று கூறுவோரது உடலிலும் இறைவனே இருக்கிறார்.
அதனால் எல்லோருக்கும் கருணை காட்டுவது, துயரை நீக்குவது, உதவுவது போன்றவை அந்த இறைவனை அமுதாபிஷேகம் செய்து வழிப்பட்டதற்கு ஒப்பாகும்.
அதற்கு பதில் வீணில் பல பொருளை விரயம் செய்து ஆடம்பர விழா நடத்தி, உணவு பொருளை வீணாக்கி, உயிர் கொலை செய்வதெல்லாம் இறைவன் விரும்பாத காரியமாக எனக்கு படுகிறது.
வள்ளல் பெருமானின் கருத்துபடி என்பார்வையில் நான்கு நேயங்களின் மூலமாக இறைவனை அடையலாம். அவை,
தன் நேயம்
மனித நேயம்
உயிர் நேயம்
ஆன்ம நேயம்
இதை இறைவனை அடையும் படிநிலையாகவும் கொள்ளலாம்.
"உயிர்நேயத்தை" இயல்பாக கொண்டிருந்த நம் தமிழ் சமுதாயத்தினர் படிப்படியாக இப்போது அறிவு மழுங்கி "தன் நேயத்தையே" தாண்ட முடியாத சூழலில் தவிக்கிறார்கள்.
இதன் விளைவாய் பிறந்ததே நாத்திகம் எனும் கானல் கொள்கை.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ
எந்த உயிர் பிற உயிரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சி அடைகின்றதோ! எந்த உயிர் பிற உயிரின் துன்பத்தை கண்டு துடித்து வெதும்பி அழுகிறதோ! எந்த உயிர் அனைத்து மனிதரும் சமம் என்ற நிலையை கடந்து அனைத்து உயிர்களும் சமம் என்ற நிலைக்கு வருகின்றதோ!
அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்
இதன் முதற்படி தன்நேயத்திலிருந்து தொடங்குகிறது.
அதனால், தேகமான உன் ஆலயத்தை சுத்தம் செய்! எல்லா உயிரையும் ஒன்றாய் காணும்படி ஆன்மாவை ஆண்டவன் சுத்தம் செய்வான்
ஈசதாசன்
கையிலே பொருள் இல்லையென்றாலும் கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலே அது தர்மத்தில் சேருகிறது. தூய உள்ளத்துடன் இவன் நல்லா இருக்க வேண்டும் ஒருவன் நினைத்தாலே அது நிறைவேறும்.எங்கேயோ உள்ள மகளுக்கு தன் தாய் தன்னை நினைப்பதை உனரமுடிகிறது. உள்ளமே பெருங்கோயிலாய் கருதிய மூலன் வழியில் உள்ளத்திலயே ஒரு கோயிலையே கட்டிய பக்தனுக்கு அங்கீகாரம் கொடுத்த அந்த ஈசனின் செயல் ஆச்சரியம் அளிப்பதாகும்.
பதிலளிநீக்கு