அண்மை

மனிதநேயம் பற்றி பேசி முதல்வரையே சந்தித்த இந்த பையன் யார்?

 யார் இந்த பையன்


உங்களுக்கு இந்த வாழ்க்கையிலே பிடிக்காத நபர் யார்? என்ற கேள்வியை Asiaville Tamil என்ற யூடியூப் சேனல் குறிப்பிட்ட சென்னை வாழ் மக்களிடம் கேட்டது.


அதற்கு பதிலளித்த பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு பிடிக்காத ஒரு நபரை சுட்டி பேசினார்கள்.


இளைஞரில் இருந்து வயதான பாட்டி வரை ஏதோ ஒரு நபரை தங்களுக்கு பிடிக்காததாக குறிப்பிட்டார்கள்.


ஆனால் ஒரே ஒரு பள்ளி சிறுவன் மட்டும் வித்தியாசமாக வேறொன்றை சொன்னான். அந்த கேள்விக்கு இதுவரை யாரும் சொல்லாத அல்லது சொல்ல நினைக்காத பதிலாக அது அமைந்தது.


அவன் சொன்ன பதில்


"எல்லோரும் இந்த உலகத்திற்கு சமம் தான். நாம் யாரும் இன்னொரு ஒரு நபரை பிடிக்காதென்று முடிவு எடுத்திட கூடாது. எல்லோரும் நம்மை போலவர் தானே. சில நபர்களுக்கு கஷ்டம் இருக்கிறது. ஆனால் அந்த கஷ்டத்தை வெளியே காட்டுவதில்லை. உள்ளே வைத்திருப்பார்கள். அதனால் யாரையும் பிடிக்காது என்று சொல்லாதீர்கள். என்னையும் எல்லாரும் 'பல்லன்' என்று தான் கூப்பிடுவார்கள். அதற்காக நான் ஏன் அவர்களை பிடிக்காது என்று கூற வேண்டும்? எல்லோரும் நண்பர்கள் மாதிரி தான். ஒற்றுமை இல்லாமல் நாம் ஏன் இருக்க வேண்டும்? நம் நாடு ஒற்றுமை நாடு தானே… அதனால் யாரையும் பிடிக்காது என்று கூற வேண்டாம். இந்த கருத்து எல்லோருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் நாட்டில் மனிதநேயம் பெருகும். இல்லையெனில் 'ஸ்பைடர்' படத்தில் வரும் 'சுடலை' போன்ற ஆட்கள் தான் இங்கே அதிகம் இருப்பர்"


இந்த பையன் இப்படி ஒரு பதிலை சொல்வான் என்று கேள்வி கேட்டவர் நினைத்திருக்கமாட்டார். ஏனென்றால் அந்த பையனுக்கு வெறும் பதிமூன்றே வயது தான்.


சிலசமயங்களில் சிலர் இதுபோன்று பிறரை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏதும் சொல்வதுண்டு. அது யதார்த்தமாக வாய் வழியே வந்த வார்த்தையாவதில்லை. காலம் அவரை அவ்வாறு சொல்ல வைக்கிறது.


இந்த பையன் இந்த சிறு வயதிலே 'ஒற்றுமை' குறித்து பலர் வியக்கும் வண்ணம் பேசியதற்கு காரணம், அவனது குடும்பம் ஒற்றுமை இல்லாது இருந்ததே ஆகும்.


சிறுவன் அப்துல் கலாமின் தாயார் திவ்யா (எ) தில்ஷத் பேகம் பிறப்பால் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவர். மனம் விரும்பி ஒர் இஸ்லாமிய நபரை மணந்து கொண்டதோடு தானும் இஸ்லாத்தை கடைபிடிப்பவர். இவர்களின் காதலால் இவ்விருவரின் குடும்பத்திற்கும் விரிசலாகி சிறுவன் அப்துல் கலாம் குடும்பமற்றவனாகவே வளர்ந்துள்ளான். இப்போது தனது கல்வியை ஒரு கிறித்தவ பள்ளியில் பயில்கிறான்.


அவனது தாயார் தனது மகனின் இந்த பக்குவத்திற்கு காரணமாக சொல்வது, மத ஒருமைப்பாடு தான்.


சிறுவயதில் இருந்தே அப்துல் கலாமின் தயாரும் தந்தையாரும் அவனுக்கு மத ஒற்றுமை குறித்தும், மதங்கள் காட்டும் மார்க்கமாக அன்பு ஒன்றே உள்ளது என்றும் எடுத்து கூறி வளர்த்துள்ளார்கள். 


அவனுக்கு குடும்ப துணை இல்லாததாலும் இயல்பாகவே இந்து முஸ்லீம் கிறித்தவ ஒற்றுமை குறித்து தெரிந்திருப்பதாலுமே அவனது கருத்தில் உண்மையும் இன்றைய பெரும்பான்மை இளைஞர்களுக்கு இல்லாத பக்குவமும் அந்த சிறுவனின் சொல்லில் இருந்தது.


Asiaville Tamil யூடியூப் சேனல் வெளியிட்ட அந்த வீடியோவை 55 ஆயிரம் பேர் தான் பார்த்துள்ளார்கள்.


ஆனால் அந்த சிறுவன் பிரபலமான பிறகு அவனை சந்தித்த ஒரு பேட்டியாளர் அவனிடம், "இதுவரை அந்த வீடியோவை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்?" என்று கேட்டார்.


அதற்கு சட்டென அவன், "ஒரு கோடி பேர்" என்றான். பேட்டியாளர் இந்த பதிலுக்கு மாற்று கருத்தாய் ஒன்றும் கேட்கவில்லை காரணம், அது தான் உண்மை.


வெளியிட்ட சேனல் வழி இந்த காணொலியும் சிறுவன் பேசிய பேச்சும் பிரபலமாகவில்லை, தனித்தனியாக ஒவ்வொருவரும் சிறுவனின் அந்த குறிப்பிட்ட கருத்தை மட்டும் பதிவிட்டு பகிரத்தொடங்கினார்கள்.


இன்ஸ்டாகிராமில் மட்டுமே சுமார் 50 லட்சம் நபர்களிடையே சிறுவனின் பேச்சு பிரபலமடைந்ததுது.


இரண்டு மூன்று நாட்களிலே சிறுவனின் வீடுகளுக்கு பெரிய பெரிய யூடியூப் சேனல்கள் படையெடுக்க தொடங்கின.


குடும்பங்கள் ஏற்ற கொள்ளாத நிலையில் இருந்த ஏ.அப்துல் கலாமின் தாயும் தந்தையும் பேட்டிக்கு பின் வந்த வேதனையையும் ஒரு நேர்காணலில் கூறினார்கள்


சென்னையின் கண்ணகி நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கும் அந்த சிறுவனது குடும்பம் அவனது பேட்டிக்கு பிறகு நன்மை தீமை இரண்டையும் அனுபவித்துள்ளது.


நன்மை என்னவெனில் இதுவரை பிரிந்திருந்த அவர்களது குடும்பம் சிறுவன் அப்துல் கலாமை பற்றியும் அவனது பக்குவத்தை பற்றியும் கேள்விபட்ட பிறகு இணைந்திருக்கிறது.


தீமை என்னவெனில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டு உரிமையாளர் அந்த வீட்டை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார்.


இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஒற்றுமை குறித்தும் மனிதநேயம் குறித்தும் பேசிய அந்த சிறுவனை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது அவனது குடும்பத்தின் திடீர் இன்னல் சூழலையும் வறுமையையும் அறியவே உடனடியாக  அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்திரவிட்டுள்ளார்.


இப்போது அவர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்திலே வீடும் வழங்கப்பட்டுள்ளது.


மிகவும் சாதாரண சூழ்நிலையிலே வறுமையோடும் குடும்ப புறக்கணிப்போடும் வாழ்ந்த ஏ.அப்துல் கலாம் உலக ஒற்றுமை குறித்து பேசியது உண்மையில் எனக்குமே வியப்பாக இருந்தது ஆனால் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? அல்லது உன் அகத்தூண்டலுக்கான காரணம் யார்? என்று பேட்டியாளர் அந்த சிறுவனிடம் கேட்டபோது அவன் உடனே "காந்தி" என்று கூறவே "உலக ஒற்றுமை அவன் மனத்திலே விளைவதாய் புரிந்து கொண்டேன்.


ஆன்லைனர்

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 39

கருத்துரையிடுக

புதியது பழையவை