கணவனும் மனைவியும்
"அக்கா! அக்கா!" வாசலில் இருந்து வந்த குரல் கேட்டு எட்டி பார்த்தாள் காயத்ரி. "அட நம்ம பக்கத்துவீட்டு அமுதா".அருகில் சென்று "என்ன அமுதா?" என்றாள். "எங்க வீட்டுக்காரர் வேலைக்கு கெளம்பிட்டாரு. ஒரு காபி போட்டு கொடுக்காலாம்னா, எல்லாம் இருக்கு ஜீனி இல்லை. அதான்" என்று இழுத்தாள் அமுதா. ஒரு சிறிய டம்ளரை நீட்டினாள். "அதனாலென்ன எதுவா இருந்தாலும் என்னிடம் கேட்க வேண்டியதுதானே" என்று கூறியவாறே அவள் கொண்டு வந்த டம்ளர் நிறைய ஜீனியை கொண்டு வந்து கொடுத்தாள் காயத்ரி. பார்வையாலேயே நன்றி தெரிவித்து வீட்டை நோக்கி ஓடினாள் அமுதா.
அமுதாவின் கணவன் செல்வராஜா ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை பார்க்கிறான். சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் சம்பளம் குறைவுதான். காயத்ரி கணவன் கணேசன் ஆர்டிஓ ஆபிஸில் பியூனாகத்தான் வேலை பார்க்கிறான். ஆனால் வருமானத்துக்கு குறைவே கிடையாது. ஒன்றாம் தேதி கிரிடிட் ஆகும் சம்பளத்தை எடுக்காமலேயே எந்த குறையும் இல்லாமல் குடும்பத்தை நடத்திவிடுவான். செல்வராஜாவும் கணேசனும் நண்பர்கள்தான்.
"காபிக்கு ஜீனி கூட வாங்கி கொடுக்க மாட்டானா? என்ன அப்படி குடும்பம் நடத்துறான்" சலித்துக் கொண்டான் மனைவி காயத்திரியிடம் கணேசன்.
"அப்படி இல்லீங்க! நம்ம வீட்டிலேயே நேற்று தக்காளி தீர்ந்து போச்சு. அமுதாட்டதான் இரண்டு கேட்டு வாங்கினேன். அதெல்லாம் தப்பா சொல்ல முடியுமா? அவ கிட்ட உள்ள ஒரு நல்ல பழக்கமே பத்து நாளானாலும் வாங்கினதை மறக்காம கரெக்டா திருப்பி கொடுத்திடுவா" என்றாள். "எப்படியோ போங்க" என்று ஆபிஸுக்கு புறப்பட்டான் கணேசன்.
அமுதாவுக்கு ஒரு வாரமாக ஒரு கவலை. அமுதாவோடு பிறந்தவர்கள் மூன்று பேர். மூன்று பேருமே சகோதரிகள்தான். அதில் சின்ன தங்கச்சி புது வீடு கட்டி குடி போகிறாள். அவள் கணவன் கல்யாணம் ஆனவுடன் வெளிநாடு போனவன்தான். நான்கு வருடமாகியும் ஊருக்கு வரவில்லை. பணம் மட்டும் அனுப்புவான். அந்த பணத்தில் கட்டிய வீட்டுக்குதான் கிரகப்பிரவேசம்.
தன் கணவன் சம்பாதிக்கிறான் என்ற அகம்பாவம் உண்டு சின்னவளுக்கு. அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அக்கா என்றும் பாராமல் மற்றவர்களை மட்டம் தட்டுவாள். அவள் நடத்தும் விசேஷத்துக்கு ஓரளவாவது திருப்தியாக செய்ய வேண்டும். அமுதாவின் இரண்டு அக்காக்களும் ஏதோ செய்து விடுவார்கள். குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் கணவனிடம் என்னதான் எதிர்பார்கக முடியும்? அந்தக் கவலைதான் அமுதாவுக்கு.
"என்னங்க! நம்ம கவி வீடு கட்டி குடி போகிறாளே! நாம என்ன செய்யலாம்? அவ வேற பத்திரிக்கையோட ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு வச்சு கொடுத்துட்டு போயிருக்கா. எவ்வளவு எதிர்பார்த்து இப்படி செஞ்சிருக்காளோ தெரியலியே. அந்த ஆயிரத்தையும் அடுத்த நாளே கேசுகாரன் வாங்கிட்டு போயிட்டான். நம்ம நிலைமை இப்படி இருக்கு. என்ன செய்யப் போறமோ தெரியல" என்றாள் அமுதா.
"அமுதா! உன் அக்கா தங்கச்சிய பத்தியெல்லாம் நீ கவலைப் படாதே. நம்மால் என்ன முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். போன வருடம் முதலாளியிடம் வாங்கிய கடனையே நம்மால் கொடுக்க முடியல. இதில் ஒரே பொன்னு நல்லா படிக்கனும்னு நகையை வச்சு லட்ச ரூபாய் கட்டி அகிலாவை நாமக்கல்லுல படிக்க வைச்சுருக்கோம். நமக்கும் பணம் காசு வரட்டும், உன் ஆசை தீர அவங்களுக்கு செஞ்சு அழகு பார்ப்போம். இப்போதைக்கு அவ வச்ச ஆயிரத்தோட இன்னொரு ஆயிரம் போட்டு பணமாக வைச்சுடுவோம். போற வர செலவு வேற இருக்கு" என்று பேசி முடித்தான் செல்வராஜா.
"அவமானப் படாமல் போய் வந்து விட வேண்டும்"அது தான் அமுதாவின் இப்போதைய கவலை. போன முறை ஒரு கல்யானத்துக்கு போன போதே "இந்த ஒரு பட்டு புடவையை விட்டா வேறு ஒன்றும் உன்னிடம் இல்லையா" என்று நாலு பேருக்கு முன் கேட்டாள் சின்னவள் கவி. அதுமட்டுமல்ல "மாமாவால் முடியாவிட்டால் சொல்லு நான் வாங்கித் தாரேன்" என கேவலப்படுத்தினாள். இப்போதும் இதே புடவையைத்தான் கட்டிக்கிட்டு போக வேண்டும் "என்ன சொல்லுவாளோ" என்று கலங்கினாள்.
"வெள்ளிக்கிழமை கிரகபிரவேசத்துக்கு காயத்திரியிடம் ஒரு செயின் இரவலா வாங்கி போட்டுகிட்டு போகலாம்னு நினைக்கிறேன். அவளிடம் நிறைய செயின் இருக்கு நான் கேட்டா இல்லைன்னு சொல்லமாட்டா. நாம்தான் ஃபங்ஷன் முடிஞ்சோன திருப்பிக் கொடுக்கத்தானே போகிறோம்" என்றாள் அமுதா கணவனிடம்.
"இதையெல்லாம் இரவல் கேட்காதே. நான் வேண்டுமானா ஒரு அஞ்சு பவுன் மதிப்புக்கு ஒரு கவரிங் செயின் வாங்கித் தாரேன். நம்ம நகையை மீக்கிற வரைக்கும் அதை போட்டுக்க" என்று சொன்னான் செல்வராஜா. ஆனால் அதை அவள் கேட்பதாக இல்லை.
"காயத்ரி அக்கா நீங்கள்தான் எனக்கு உதவி செய்யனும். என் தங்கச்சி வரும் வெள்ளிக்கிழமை குடி போறா. உங்ககிட்ட உள்ளதுல ஒரு தங்க செயினை எனக்கு கொடுங்க. பகட்டா போகனுங்ற ஆசையிலே கேக்கல. என் வீட்டுக்காரருக்கு சபையிலே எந்த குறையும் வரக்கூடாது. மாலை வீட்டுக்கு வந்தவுடன் கொடுத்துடுறேன்" என்றாள் அமுதா காயத்திரியிடம். அமுதா கேட்டு காயத்ரி இல்லை என்று இதுவரை சொன்னது இல்லை"
அமுதா செயின் கேட்டதை தன் கணவனிடம் சொன்னாள் காயத்ரி. "புளி, மிளகாய் இரவல் கேட்பாள், இப்போது நகை இரவல் கேட்கும் அளவுக்கு வளர்ந்து விட்டாளா?" என்று சொன்ன கனேசன் "நான் இது பற்றி செல்வராஜாவோட பேசிக்கொள்கிறேன்" என்றான். "பாவங்க நம்ம வீட்டு பீரோவில் உள்ள நகை ஒருநாள் அவள் கழுத்தில் கிடக்கப்போவுது. அதில பிரச்சினை செய்யாதீங்க" என்றாள் காயத்ரி.
அடுத்த நாள் எதார்த்தமாக செல்வ ராஜாவை சந்தித்தான் கணேசன். "என்ன சார் உங்க சம்சாரம் அஞ்சு பவுன் நெக்லஸ் ஒன்று இரவல் கேட்கிறாங்களே கொடுக்கலாமா" என்று கேட்டான். "கேட்காதேன்னு பலமுறை சொல்லிட்டேன், திரும்பவும் கேட்டாளா? சார் நான் சொல்ற மாதிரி செய்யுங்க. நான் ஒரு கவரிங் நெக்லஸ் வாங்கி தர்ரேன். அதை அஞ்சு பவுன் ஒரிஜினல் நெக்லஸுனு அவள் இரவல் கேட்கும்போது உங்க ஒய்ஃப் மூலம் கொடுத்திடுங்க. நான் ஒரு நாடகத்தை நடத்த போறேன். அதற்கு பிறகு ஜென்மத்துக்கும் இரவல் கேட்கமாட்டா" என்றான் செல்வராஜா.
வெள்ளிக்கிழமை நகையை இரவல் கேட்கக்கூடாது அல்லவா அதனால் வியாழக்கிழமையே காயத்திரியிடம் ஐந்து பவுன் செயினை வாங்கி அமுதா வைத்துக் கொண்டாள். காயத்ரியும் அமுதா கணவன் கொடுத்த கவரிங் நகையை ஒரு நகைப் பெட்டியில் வைத்து கொடுத்துவிட்டாள்.
அமுதாவும் செல்வராஜாவும் பஸ் பிடித்து வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமை இரவே மயிலாடுதுறை சென்றார்கள். கிரகப்பிரவேசத்தில் கலந்து கொண்டார்கள். அமுதா பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. மூன்று அக்காக்களையும் மதிப்பு மரியாதையுடன் நடத்தி அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள் கவிதா. அவளுக்கு உள்ள பெருங்குறை என்ன என்றால், வீட்டை கட்டுவதற்கு பணம் அனுப்பிய அவள் கணவன் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு வர கம்பெனி அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அவன் வராமலேயே கிரகப்பிரவேசம் முடிந்து விட்டது.
மதிய சாப்பாடு முடிந்து அமுதாவும் செல்வராஜாவும் பஸ் ஏறி புறப்பட்டார்கள். அதற்கு முன்னதாகவே அந்த செயினை கழட்டி நகைப் பெட்டியில் வைத்து, அந்த பெட்டியை தான் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டாள் அமுதா. இரவு முழுவதும் கண்விழித்து ஹோமங்களில் கலந்து கொண்டதால் பஸ்ஸில், அருகில் கணவன் இருக்கும் தைரியத்தில் தன்னை அறியாமல் கண்மூடிவிட்டாள் அமுதா. அந்த நேரம் நகைப் பெட்டியில் இருந்த கவரிங் நகையை அமுதாவுக்கு தெரியாமல் எடுத்து அதை பததிரப்படுத்தி கொண்டான் செல்வராஜா.
வீட்டுக்கு வந்து குளித்து விட்டு சாகவாசமாக பையை எடுத்து நகைப் பெட்டியை பார்த்த அமுதாவுக்கு அதிர்ச்சி! நகை பெட்டியில் நகையை காணவில்லை. "பையில்தானே வைத்தோம். அது எப்படி மாயமானது? வெறும் பெட்டியை வைத்து விட்டோமா? இல்லை பஸ்ஸில் காணாமல் போய்விட்டதா? "நினைக்கும் போதே உடல் எல்லாம் படபடப்பானது. இரவல் வாங்கக் கூடாது என்று அந்த மனுஷன் சொன்னாரே! மீறி வாங்கினோமே. இன்றைய விலை அஞ்சு பவுன் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இருக்குமே! காயத்ரிக்கு என்ன சொல்வேன்? நினைக்க நினைக்க உடல் நடுங்கியது. கவிக்கு போன் போட்டு நெக்லஸ் ஒன்று இருந்ததா என்று விசாரித்தாள். அவள் நெக்லேஸ் போட்டு வந்ததையே தான் கவனிக்கவில்லை என கவிதா கூறிவிட்டாள். எங்கும் இருப்பது போல தெரியவில்லை. கணவனுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது. அமுதாவின் தவிப்பை ஒன்றும் தெரியாதது போல ரசித்துக் கொண்டு இருந்தான் செல்வராஜா.
"பத்தாயிரம் ரூபாய் கடனே பெரிய தொகையாக நினைக்கும் கணவனிடம் இதை எப்படி சொல்வது? ஊர் போன கதையை கேட்க வந்த காயத்ரியை பார்த்ததும் நகையை கேட்க வந்துவிட்டாளோ என பகீரென்றது அமுதாவுக்கு. கவரிங் நகையை அவள் கணவன் மறைத்து வைத்த விஷயம் அவளுக்கு தெரியாது. பேயறைந்தது போல் இருக்கும் அமுதாவின் முகத்தை பார்த்து காயத்ரிக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
நகை விஷயத்தை மாலை சொல்லிக் கொள்வோம் என ஓட்டல் வேலைக்கு சென்று விட்டான். கடன் மேல் கடன் வாங்கி வைத்திருக்கும் கணவனை காப்பாற்ற வேண்டுமானால் உயிரைப் போக்கி கொள்வதுதான் சிறந்த வழி என முடிவு செய்தாள் அமுதா. சாகப் போகிறோம் என நினைக்கும்போதே அழுகை அழுகையாக வந்தது. தனது மகள் அகிலாவை விட்டு விட்டு போவதை நினைத்த போது அழுகை அதிகமானது. "நாம செத்துட்டா நிசசயம் நகையை கேட்டு காயத்ரி வற்புறுத்த மாட்டாள். உயிரோடு இருந்தால் சாகும் வரை அவர் வருமானத்தில் கடனை தீர்க்க முடியாது. சின்ன விஷயத்தில் தப்பு செஞ்சு யாருக்கும் பயன்படாமல் போகிறேனே" நினைக்க நினைக்க வேதனை அதிகமாகி கொண்டே போனது.
கடிதம் எழுதி வைத்து விட்டு சாகலாம் என்று முதலில் நினைத்தாள். கடிதம் கிடைக்காவிட்டால் போலீசார் தேவையில்லாமல் தனது கணவனை துன்புறுத்துவார்கள் என நினைத்தாள். அதனால் ஒரு சாட்சியாக இருக்கட்டும் என செல்லை எடுத்து செல்வராஜாவுக்கே ஒரு மெசேஜ் அடித்தாள்."என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பேச்சை கேட்காமல் இரவல் வாங்கிய தங்கச் செயின் காணாமல் போனதால் தற்கொலை செய்து கொள்கிறேன். அகிலாவை நல்ல இடத்தில் கட்டிக் கொடுங்க.
நீங்களும் உடம்பை பார்த்துக்குங்க. அடுத்த ஜென்மத்தில் உங்கள் மனைவியா பிறக்கனும் கடன் இல்லாம வாழனும்" என்ற செய்தியை அவனுக்கு அனுப்பிவிட்டு ஒரு புடவையை எடுத்து ஸ்டூலை போட்டு ஃபேனில் மாட்டினாள். உடம்பு முழுவதும் நடுங்கியது. தூக்கிடப்போகும் புடவையை பார்த்துக் கொண்டே நின்றாள்.
அப்போது "அம்மா அம்மா" என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. "அகிலாவா" குழப்பத்துடன் கதவைத் திறந்தாள். அகிலாதான். வந்த வேகத்துக்கு ஹேன்ட் பேக்கை தூக்கி போட்டவள் அம்மா அழுத முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியானாள். ஸ்டூலையும் ஃபேனில் புடவையையும் பார்த்தவுடன் "என்னம்மா இது" என்றாள். பதில் பேச முடியாது வெடித்து அழுதாள் அமுதா. திக்கித் தினறி தற்கொலை செய்ய முடிவு செய்ததை சொன்னதும் ஆவேசமாக அம்மாவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் அகிலா. "என்னை விட்டு விட்டு செல்ல எப்படிதான் உனக்கு மனசு வந்ததோ? நான் மட்டும் வராமல் இருந்தால்? என் நிலையை எண்ணி பார்த்தியா? எனக்கு மட்டும் ஏழு நாள் லீவு விட்டதால் இங்கு வந்தேன். உன் சாவை தடுக்கத்தான் கடவுள் என்னை அனுப்பி இருக்கிறார்" என்று கூறி அழுதாள்.
மெசேஜ் பார்த்த செல்வராஜா ஓட்டலில் சொல்லிவிட்டு புயல் போல கதறியபடியே வீட்டுக்கு வந்தார். நாடகம் நடத்துகிறேன் என்று எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். கடவுளே எதுவும் நடக்கக் கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் அழுத கோலத்தில் உள்ள மனைவியை பார்த்தபின்புதான் நிம்மதி வந்தது. ஐந்து பவுன் அல்ல, அது கவரிங் நகை என்று தெரிந்த பிறகு எல்லோருக்கும் நிம்மதி வந்தது.
இவ்வளவு பரபரப்பை பார்த்தவுடன் பக்கத்துத் தெரு ரிட்டையர்டு தலைமை ஆசிரியர் வீட்டுக்கு வந்தார். எல்லா கதையும் கேட்டு தெரிந்து கொண்டார். "அம்மா! கணவனையும் மனைவியும் ஏன் ஈருடல் ஓருயிர் என்கிறோம். சிவன் ஏன் தன் உடலில் சரிபாதியை பார்வதிக்கு கொடுத்தார். கணவனுக்கும் மனைவிக்கும் வாழ்க்கையில் ஒளிவு மறைவு இருக்கலாமா? கணவனுக்கு தெரியாமல் மனைவி சீட்டு போடுவதும் மனைவிக்கு தெரியாமல் கணவன் காசு கட்டி வைப்பதும் நல்லதா?. கல்யாணம் பண்ணும்போது வடமொழியிலே ஸ்லோகம் சொல்வதால் உங்களுக்கு புரியவில்லை. சுகத்திலும் துன்பத்திலும் சேர்ந்து இருப்பதுதான் வாழ்க்கை. கணவன் ஒரு நாட்டில் மனைவி ஒரு நாட்டில் வாழ்ந்து நூறு லட்ச ரூபாய்க்கு வீடு கட்டி என்ன பயன்?. இரவு வரும்போது பகல் வரும். மேடு வரும்போது பள்ளம் வரும். நிழல் வரும் போது வெயில் வரத்தான் செய்யும். கஷ்டம் வந்தால்தான் அதை தாண்டும் சக்தியை கடவுள் கொடுப்பார். இனியாவது விட்டுக் கொடுத்து கஷ்டமானாலும் நஷ்டமானாலும் மகிழ்வோடு சேர்ந்து வாழுங்கள்" என்று சொல்லி விடைபெற்றார்.
பணக்கஷ்டத்தால் மேனேஜர் மனைவி தற்கொலைக்கு முயன்றார் என்று கேள்விபட்ட ஓட்டல் முதலாளி "எனக்கு தர வேண்டிய கடன் எதையும் தர வேண்டாம்" என பெரிய மனதுடன் கூறிவிட்டார்.
மூவரும் மகிழ்வுடன் புதிய வாழ்வைத் தொடங்கினார்கள்.
ஜெ மாரிமுத்து
அருமையான கதை, விளையாட்டு வினையாகி போயிருக்கும். எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்வை சிறுகதையாக சித்தரிக்கிறார், தலைவர்.
பதிலளிநீக்கு