கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் ஆயிரக்கணக்கான சுவையான நிகழ்வுகள் பல நடந்துள்ளன. அதில் பெரும்பாலும் சோகமான சம்பவங்களே அதிகம். அவர் அதை பல சந்தர்ப்பங்களில் பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார். அதில் சில நினைவுகளை இங்கு தொகுத்து வழங்குகிறேன்.
பீகாரை சேரந்த தொழிலதிபர் டால்மியா, திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் ஒரு சிமென்ட் தொழிற்சாலையை நிறுவினார். அந்த ஊரில் உள்ள இரயில் நிலையத்துக்கு டால்மியா என்ற தனது பெயரை சூட்ட விரும்பினார். நடுவன் அரசும் அதற்கு தலை அசைத்தது. கல்லக்குடி டால்மியாபுரம் ஆனது. டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்ற அதன் பழைய பெயருக்கு மாற்றும் இரயில் மறியல் போராட்டம் ஒன்றை திமுக அறிவித்தது. மூன்று அணிகளாக போராட்டம் நடந்தது. மூன்றாம் அணிக்கு கண்ணதாசன் தலைவர். முதல் இரண்டு அணியினர் ஈடுபட்ட போராட்டம் அமைதியாக நடந்து முடிந்து, கைது செய்யப்பட்டனர். மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கி கண்ணதாசன் சென்ற போது, அவரது கால் பெருவிரலை ஒரு கல் தடுக்கி இரத்தம் கொட்டியது. சகுனத்தில் நம்பிக்கை உள்ள கண்ணதாசனுக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று தோன்றிவிட்டது. போராட்டம் முடிந்து வீட்டுக்கு செல்லலாம் என வந்த கண்ணதாசனுக்கு தடியடியால் மண்டை உடைந்தது.
அதன்பின் துப்பாக்கிச்சூடு, கலவரம், வழக்கு, வாய்தா என முடிந்து பதினெட்டு மாதம் சிறையில் இருக்கும் அவலம் எல்லாம் ஏற்பட்டது. சகுனங்களை கடவுளின் எச்சரிக்கையாக கருதுபவர் கண்ணதாசன்.
இது போல ஒரு சம்பவத்தை சொல்கிறார். காரைக்குடி நகரசபை தலைவராக இருந்தவர் திரு மெய்யப்ப செட்டியார். அவர் ஒரு முறை சென்னைக்கு குடும்பத்தோடு வந்தார். அன்றைய இரவே ஊர்திரும்ப விரும்பினார் "ராத்திரி பயணம் வேண்டாம் காலையில் போகலாம்" என்று தடுத்தார் டிரைவர். "முடியாது இப்போதே புறப்பட வேண்டும்" என்று சொன்னார் செட்டியார். அவருடைய பியட் காரில் படுக்கை பெட்டியை டிரைவர் கட்டிக் கொண்டு இருந்த போது, கயிறு அறுந்து படுக்கை கீழே விழுந்தது. கடவுளின் இரண்டாவது எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தி புறப்பட்ட கார், திருச்சி செல்லும் வழியில் பெரம்பலூரில் தோல் ஏற்றப்பட்டு நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. அந்த இடத்திலேயே மெய்யப்ப செட்டியார் மரணமடைந்தார். காரிலிருந்து விழுந்த படுக்கை அவரது கடைசி படுக்கையானது.
இன்னொரு நிகழ்ச்சி, கண்ணதாசன் ஒரு படம் எடுத்து முடிந்ததும், படத்தின் கோவை நீலகிரி ஏரியாவை விற்பதற்கு, விநியோகஸ்தர் மணியிடம் இரவு எட்டு மணிக்கு பேசிக் கொண்டு இருந்தாராம். விநியோகஸ்தர் விலைபேசி முடித்து பத்தாயிரம் ரூபாயை கையில் வைத்துக் கொண்டு "அக்ரிமென்டை அடியுங்கள்" என்றாராம். அந்த நேரத்தில் மின்சார விளக்கு அணைந்துள்ளது. மின்சாரம் நின்றதை சகுனத்தடையாக கருதிய மணி உடனே எழுந்து "இப்போது வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லி வெளியேறி விட்டாராம். அவர் பயந்தது போலவே அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியை அடைந்ததாம்.
1948 ஆம் ஆண்டு கண்ணதாசன் சேலம் அரிசிப் பாளையத்தில் தங்கி வேலை பார்த்தாராம். அவரோடு பூந்தோட்டம் திருநாவுக்கரசு என்பவரும் சாந்தி மா.கணபதி என்பவரும் தங்கி இருந்தார்களாம். ஒரு நாள் காலை கண்ணதாசன், காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவது போல ஒரு கனவு கண்டாராம். அதை அந்த நண்பர்களிடம் தெரிவித்து இருக்கிறார். "சனியனே ! உன் கருநாக்கை வைத்துக் கொண்டு சும்மா இரு" என்று நன்பர்கள் கோபித்திருக்கிறார்கள். மாலை வானொலி செய்தி சொல்கிறது "காந்தியடிகள் சுட்டு கொல்லப்பட்டார்" என்று. நண்பர்கள் திகைத்தார்கள். "கனவு கண்டதை யாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்காதே. பின்னர் உன்னையே அதில் சம்பந்தப்படுத்தி விடுவார்கள்" என்று அப்போது எச்சரித்தார்களாம். அந்த பயம் தெளிய கண்ணதாசனுக்கு பல நாட்கள் ஆயிற்றாம்.
சுவாமி அய்யப்பன் என்ற படத்துக்கு வசனம் எழுத திருவனந்தபுரம் சென்றார் கண்ணதாசன். படத்தின் தயாரிப்பாளர் சுப்பிரமணியன் திருவனந்தபுரம் மேயராக இருந்தவர். கண்ணதாசன் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். அக்காலத்தில் பெத்தடின் எனும் போதை தரும் ஊசிக்கு அடிமையாக இருந்தார் கண்ணதாசன். அதனால் தயாரிப்பாளர் சுப்பிரமணியனிடம் பெத்தடின் போட்டுக் கொள்ள ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டார். "அய்யோ ஐயப்பா" என்று கன்னத்தில் அடித்து கொண்ட சுப்பிரமணியன் "அந்த ஐயப்பன்தான் உங்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்" என்றார். "200மில்லி கிராமில் ஆரம்பித்த பழக்கம் 1200 மில்லிகிராமில் நிற்கிறது. இதில் ஐயப்பனால் என்ன செய்ய முடியும்" என்று கவிஞர் கேட்டார். "சுத்தமில்லாதவர்களை அருகே வரக்கூட அனுமதிக்காத ஐயப்பன் கண்டிப்பாக உங்கள் பழக்கத்தை நிறுத்துவார் " என்று சுப்பிரமணியன் உறுதியாக கூறினார். படத்துக்கு வசனம் எழுதிய போது வயிற்று வலியால் துடிக்கும் நாத்திகனுக்கு அய்யப்பன் பிரசாதத்தை கொடுக்கும்போது நோய் தீர்வதாக அமைந்த காட்சிக்கு வசனம் எழுதிய போது கவிஞரின் உடல் சிலிர்த்ததாம். "அடுத்த முறை உங்களை பார்க்கும்போது கண்டிப்பாக இந்த பெதடின் பழக்கம் உங்களிடம் இருக்காது" எனக்கூறி திருவனந்தபுரத்தில், வழி அனுப்பி உள்ளார் சுப்பிரமணியன். சிரிப்பை மட்டும் அதற்கு பதிலாக தந்துவிட்டு சென்னை வந்தாராம் கண்ணதாசன்.
சென்னைக்கு வந்ததிலிருந்து கண்ணதாசனுக்கு வித்தியாசமான கனவுகள் வந்தனவாம். சுகம் தரும் பெதடினை போடும்போது எரிச்சலும் வலியும் உண்டானதாம். சாப்பிட முடியவில்லை, தூக்கமில்லை, அதைவிட பேரிடியாக தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. பயந்து போன கண்ணதாசன் ஏப்ரல் 6 அன்று விஜயா நர்சிங் ஹோமில் தானாகவே அட்மிட் ஆனாராம். பின்னர் டாக்டர்களின் அறிவுரையால் தாள முடியாத வலியைத் தாங்கி கொண்டு பெத்தடின் பழக்கத்தை நிறுத்தினாராம். 1200 மில்லிகிராம் பெத்தடின் எடுத்துக்கொண்ட ஒருவர் திடீரென நிறுத்தியது மருத்துவ உலகம் காணாத அதிசயம் என டாக்டர்கள் கூறினார்களாம். இந்த மாற்றம் " ஐயப்பன் அருளால் மட்டுமே நடந்திருக்க வேண்டும்" என்று பின்னால் உணர்ந்ததாக கண்ணதாசன் கூறினார்.
கண்ணதாசன் திருச்சி சிறையில் இருந்த போது, மறுநாள் தூக்கிலிடப் போகும் ஒரு கைதியை சந்தித்தாராம். அவனோடு தூக்கில் சாகப் போவது ஆறு கைதிகள். மாயவரத்தில் நாற்பது வயது விதவைப் பெண்ணை கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் அதை உறுதி செய்தது. ஜனாதிபதிக்கு போன கருணை மனுவும் தள்ளுபடி ஆனது. மறுநாள் தூக்கு போடும் நேரம் முடிவானது. ஏழு பேரில் ஆறு பேர் சாவை நினைத்து "முருகா முருகா" என அலறி கொண்டு இருக்க, இவன் மட்டும் சலனமின்றி இருந்தானாம். சிறை விதிப்படி ஆடை கூட அணியாத அந்தக் கைதியை கவிஞர், அன்பில் தர்மலிங்கத்தோடு சந்தித்தாராம்.
"நாளை மரணம் அடைய போகும் உன்னால் அமைதியாக எப்படி இருக்க முடிகிறது?" என்று கேட்டாராம். அதற்கு அவன் "இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஏற்கனவே மூன்று கொலைகளை சாட்சிகள் இல்லாமல் குறிப்பிட்ட நாளில், வெளியூரில் இருந்தது போல் ஆவணங்களை தயார் செய்து கொண்டு, செய்தேன். அதனால் தப்பிவிட்டேன். ஆனால் இந்தக் கொலை நான் செய்யாவிட்டாலும் கொலை செய்தவர்களில் மூன்று பேர் என் உறவினர்கள் என்பதால் போலீசார் சந்தேகத்தில் என்னை சிக்க வைத்து விட்டார்கள். சந்தர்ப்ப சாட்சியங்கள் அதை உறுதிபடுத்திவிட்டன. செய்யாத கொலைக்கு தண்டனை கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. ஏற்கனவே நான் செய்த மூன்று கொலைகளுக்குதான் இந்த தண்டனை. முன்பு கோர்ட்டை ஏமாற்றி தப்பித்தாலும், நம்மை படைத்த கடவுளின் தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது என தெரிந்து கொண்டேன். அதனால்தான் அமைதியாக இருக்கிறேன்" என்றானாம். தவறு செய்பவர் யாராயிருந்தாலும், அவர்களுக்கு இது ஒரு பாடமாகும்.
1960 ஆம் ஆண்டு கண்ணதாசன் "கவலை இல்லாத மனிதன்" என்ற படத்தை சொந்தமாக எடுத்தார். கம்பெனி நிர்வாகத்துக்காக கையெழுத்து போடும் அதிகாரத்துடன் ஒரு பங்காளியை (பார்ட்னர்) நியமித்தார். படம் எடுக்கத் தேவையான தொகை கடனாக பெறப்பட்டது. பங்காளி கையெழுத்து போட்டு வகை தொகை இல்லாமல் கடன் வாங்கி, படம் எடுக்கப்பட்டது. அரசியல் வேலையோடு கதையும் எழுதியதால் கதை தெளிவில்லாமல் போய்விட்டது. எதையோ நினைத்து எதையோ எழுத, கதை பொருத்தம் இல்லாமல் போய்விட்டது. கதைக்கு பொருத்தமில்லாத நடிகர்களும் குழப்பமான கதையும் படத்தை தோல்வி அடைய செய்துவிட்டது. போட்ட பணம் எல்லாம் போய்விட்டது. பங்காளி போட்ட வெற்று காகிதத்தில் தொகையை நிரப்பி கொண்டு கடன் கொடுத்தவர்கள், கண்ணதாசனிடம் கடனைக் கேட்டு தொல்லை கொடுத்தார்கள். 1960 ஆம் வருடத்திலேயே ஐந்து லட்சத்து எண்பதாயிரம் கடன் ஆகிவிட்டது. வட்டி சேர்த்து ஏழு லட்சம் ஆகிவிட்டது. இன்றைய மதிப்பில் ஏழு லட்சம் என்பது பல கோடி.
யாரிடம் கடன் வாங்கினார்கள் என்று தெரியாமலேயே கடனை கட்டும் நிலை கவிஞருக்கு ஏற்பட்டது. கம்பெனிக்கு சொந்தமான 21 கார்கள் கடன் கொடுத்தவர்கள் எடுத்து சென்று விட்டார்கள். தினமும் தபால்காரன், வக்கீல் நோட்டீஸ்களையும் ரெஜிஸ்டர் தபால்களையும் கொடுத்து கொண்டே இருந்தான். சுப்பையா செட்டியார் என்பவர் பஞ்சாயத்து பேசி பல கடன்களை அசல் மட்டும் கொடுக்க வைத்து தீர்த்து வைத்தார். அவர் பேச்சையும் கேட்காமல் வழக்கு தொடர்ந்தவர்கள் 34 பேர். பல ஆண்டுகள் பாட்டெழுதி வந்த பணம் எல்லாம் கடனுக்கு போனது. கவிஞரின் நிலை கண்டு இரங்கிய வழங்கறிஞர் வி பி இராமன் பணம் வாங்காமலேயே எல்லா வழக்குக்கும் ஆஜாரானாராம். படம் எடுக்க வருபவர்களுக்கு கண்ணதாசன் வாழ்க்கை ஒரு பாடம்.
1967 ஆம் ஆண்டு கண்ணதாசன் தனது மூத்த மகள் அலமேலுவுக்கு திருமணம் செய்தார். சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றிக்கு உதவியதாக கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்த அண்ணா, தனது உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற வருத்தத்தில் கவிஞர் இருந்தார். அதனால் திமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேரந்தது மட்டுமின்றி, அண்ணாவையும் கலைஞரையும் தாக்கி எழுதவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வரான அண்ணாவுக்கும், பொதுப்பணித் துறை அமைச்சரான கலைஞருக்கும் தான் போகாமல், நண்பர்களை விட்டு தனது மகளது திருமண பத்திரிக்கையை கொடுத்தார். "கண்ணதாசனை நேரில் வந்து பத்திரிக்கை கொடுக்கச் சொல் நான் திருமணத்துக்கு வருகிறேன்" என்றாராம் அண்ணா. கண்ணதாசன் நேரில் வந்து பத்திரிக்கை கொடுக்காவிட்டாலும், கலைஞரும் பாவலர் முத்துசாமியும் யாரும் எதிர்பாராத விதமாக திருமணத்தில் கலந்து கொண்டார்களாம். அதுமட்டுமல்ல "யார் கூப்பிட்டாலும் தாவி விடும் குழந்தை கண்ணதாசன்" என்றும் "அது கடைசியாக தாய் மடிக்குத்தான் வரும்" என்றும் கலைஞர் சொன்னாராம். கலைஞர் திருமணத்துக்கு வந்தது சம்பந்தி வீட்டாருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்ததாம். அவர் சொன்னது போலவே 1971 ஆம் ஆண்டு தேர்தலில் கருணாநிதிதான் முதல்வராக வேண்டும் என்று காமராஜரையே எதிர்த்து கலைஞருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் கண்ணதாசன்.
காமராஜரை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால், தனது பிறந்த நாளுக்கு வழக்கமாக வரும் காமராஜர் வர மாட்டார் என கருதிய கண்ணதாசன் பிறந்த நாள் கொண்டாட விரும்பாமல் இருந்தாராம். ஆனால் காமராஜரே போன் செய்து" நீ ஏன் இந்த வருடம் பிறந்த நாளை கொண்டாடவில்லை" என்றாராம். அதற்கு கவிஞர் "நீங்கள் இல்லாமல் எப்படி அய்யா பிறந்த நாள் கொண்டாடுவேன்" என்றாராம். அதற்கு "நீ ஏற்பாடு செய் நான் வருகிறேன்" என்றாராம் காமராஜர். இதன் பின்னர் காமராஜரோடும் நெருங்கி விட்டார் கண்ணதாசன். காமராஜரை எதிர்த்து அரசியல் செய்த கலைஞரே நெருக்கடி காலத்தில் காமராஜருக்கு துணை நின்றது மட்டுமின்றி, அவர் மறைந்த போது ஒரு பிள்ளையாய் நின்று எல்லாவிதமான காரியங்களையும் செய்தார்.
1980 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமணையில் சிறுநீரகப் பிரச்சனைக்காக கவிஞர் சேர்ந்தார். உலகப் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் சாஸ்திரி பரிசோதனைகள் மேற்கொண்டார். கவிஞர் பயந்தது போல சிறுநீரக பிரச்சனை இல்லை. ஆனால் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலில் புதிய நோய்கள் ஏற்பட்டுள்ளன என்று சாஸ்திரி கண்டறிந்தார். "உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் ஆபரேஷன் செய்தால் கை கால் செயல் இழக்கவோ, பேச்சு வராமல் போகவோ வாய்ப்புள்ளது" என்று உதவியாளர் கண்ணப்பனை அழைத்து கூறினார். இதைக் கேட்டதும் கண்ணப்பனுக்கு, "ஐம்பது வயதுக்கு மேல் நீ சாமியாராகி விடுவாய் அல்லது மௌனியாகி விடுவாய்" என்று சேலத்து டாக்டர் கெரிசன் சொன்னதாக கவிஞர் முன்பு எழுதியது நினைவுக்கு வந்தது. நயமாக கவிஞரிடம் கூறும்படி டாக்டர் சாஸ்திரி, இராம கண்ணப்பனிடன் கேட்டுக் கொண்டார். அறையில் நுழைந்த கண்ணப்பனின் முகவாட்டத்தை பார்த்தே அவரது மனநிலையை கண்டுபிடித்த கண்ணதாசன் "டாக்டர் என்ன சொன்னார்" என்று கேட்டார். டாக்டர் சொன்னதை இதமாக சொன்னார் கண்ணப்பன். அதற்கு கண்ணதாசன் "நான் ஆபரேஷன் செய்து கொள்ள போவதில்லை அதனால் நீ கவலைப்படாதே" என்றார். கல்கியில் மறுவாரம் முதல் வெளிவரப்போகும் மனவாசத்துக்கான முன்னுரையை வேலூரிலேயே டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். அவர் மனம் ஓடவில்லை. தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் மனம் மரணம் நெருங்கிவிட்டதை எண்ணியதோ என்னவோ அவரால் முன்னுரையை தொடர முடியவில்லை. டிக்டேட் செய்வதை நிறுத்தினார். "ஒரு முறை திருப்பதி போய் வருவோம்" என்று கண்ணப்பனிடம் கூறினார். அன்று இரவே திருப்பதி புறப்பட்டார்கள். திருப்பதி சென்று அந்த வேங்கட பெருமாளை மனமுருக வேண்டினார். வேலூரில் தொடங்கிய வனவாச முன்னுரையை திருப்பதி அடிவாரத்தில் முடித்தார். கல்கியில் தொடங்கப்பட்ட மனவாசம் முடியாமலேயே கவிஞரின் வாழ்வு மறுவருடம் முடிந்து விட்டது. வனவாசம் விரக்தி கோபம் என்று முதிர்ச்சியில்லாத முப்பத்திரண்டு வயதில் எழுதப்பட்டது. பக்குவமடைந்த வயதில் எழுதப்பட்ட மனவாசம் பாதியிலேயே நின்றுவிட்டது.
கண்ணதாசன் சூது வாது தெரியாதவர். குழந்தை போன்ற மனம் கொண்டவர். கழுத்தளவு கடன் இருந்த போதும் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டு ஓடாமல், காலம் நேரம் பார்க்காமல் உழைத்து வந்த ஊதியத்தில் கடனை தீர்த்தவர். "எப்போது தூக்கி விட வேண்டும், எப்போது காலைவாரி விடவேண்டும்" என்ற சூட்சுமம் தெரியாததால் அரசியலுக்கு தேர்ச்சி இல்லாமல் போனவர். மனைவிக்கு நல்ல கணவனாகவும் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் வாழ்ந்தவர். அவர் வணங்கிய கடவுள் அவரை கைவிடவில்லை. வாழ்ந்த காலம் குறைவு என்றாலும் நிறைவாக வாழ்ந்தவர். இப்போதும் வாழ்கிறார்
ஜெ மாரிமுத்து