அண்மை

தூக்கமே இல்லை - குறுந்தொகை 28 சிறுகதை

 தூக்கமே இல்லை

kurunthogai 28

ஒருவழியாக நீண்ட நெடிய அந்த இரவு முடிவுக்கு வந்தது. இரவெல்லாம் அவள் சரியாக தூங்கவில்லை. நேற்று மட்டும் இல்லை - சுமார் ஏழுமாத காலம் இப்படியே தான் அவள் தூக்கம் கெட்டு உள்ளாள்.  


பயணகலைப்பில் ஒரு கால் வாசி நேரம் நேற்று கண்ணசந்திருப்பாள். ஆயினும் என்றும் போல் இன்றும் காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள். வழக்கத்திற்கு மாறாக விடுவிடுவென எழுந்து கொல்லைபுரம் சென்று அண்டாவில் இருந்த தண்ணீரை மோந்து முகத்தினை கழுவினாள், பின்பு உடனடியாக வெளியே செல்வதற்கு வீட்டின் வாசல் கதவை மெல்லத் திறந்தாள்.  கதவு, துருப்பிடித்த இரும்பின் உரசலின்  காரணமாக சத்தம் எழுப்பியது. அந்த விசேச சத்தத்தில் காலையிலேயே, முன்னங்காலை நீட்டிக்கொண்டு வெற்றிலைப்பாக்கை பொக்கைப்பற்களில் வைத்து  குழைத்தபடி அமர்ந்திருந்த அவளது ஆயாவின் பார்வை கதவின் பக்கம் திரும்பியது.


"ஆரு…?" எச்சில் உதடு வழியே வழியும்படி பாட்டி கேட்க, பதில் ஏதும் கூறாமல் சுபாங்கி வெளியே சென்றாள். உடனே சிவப்பு நிறத்தில் இருந்த எச்சிலை எச்சிப்பணிக்கத்தில் துப்பிவிட்டு "கானங்காதால வேகுவேகுனு எந்தநேர் போறவ?, ஊரே… பனியா கிடக்குது!" ஆயாவின் காதில் விழாதபடியே 'ஆயா சும்மா இரு' என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, அதே தெருவில் உள்ள நான்காவதாக அமைந்திருந்த அந்த ஓட்டுவீட்டின் வாசலில் போய் நின்றாள். 


"எனுங்க அம்மணி எப்ப வந்தீங்க? நல்லா இருக்கீறீங்களா?" வயது முதிர்ந்த ஆடவர் ஒருவர் கேட்க "நைட்டு வந்தேங்… நல்லா இருக்கேனுங்க" என்றாள்.


"என்ன ஸோலி அம்மணி, கானங்காத்தால?"


"இல்லிங்… மதிய பாக்கலாம்னு  வந்தேங்…?" 


"அவ தூங்கிக்கிட்டுகிடக்கா, பொறவு எழுந்ததும் வரசொல்றன் அம்மணி"


"சரிங்.. நான் பொய்ட்டு வாரேன்"


வீட்டுவந்து நேராக உள்ளே சென்றவளிடம் "நடவ சாத்திட்டுபோடி, அடியே…" ஆயா காட்டுக்கத்து கத்தியும் காதில் வாங்காது கொல்லைப்புறம் சென்று அமர்ந்தது கொண்டாள்.  அவளை பார்த்த அவளின் அம்மா "எங்க போன? மாப்ள போன் பண்ணாரு, உன்ன காணுமேனு நான் எடுத்து பேசுனேன். அடுத்த மாச கடைசீல அவர் வரத்துக்கு  வாய்ப்பு இருக்குனு சொன்னாரு…"


"வேற ஏதும்…?"


"டைம் இருந்தா நாளைக்கு ஃபோன் பண்றேன்னு சொன்னாரு…சரி நீ சீக்கிரம் குளிச்சிடு. கோயிலுக்கு போனும்"


"சுபா எங்க?" உள்ளிருந்து அவளது அத்தையின் குரல் வந்தது


"அத்த கூப்புடுறாங்க என்னனு போய் பாரு"


உள்ளே வந்து பார்த்த அவளை, அவளது அத்தை சமையல் அறையில் நின்றுகொண்டு "பொறகால உட்காந்து இருந்தீயா?, சரி இந்த வெள்ளவெங்காயத்த செத்த தொலுச்சி கொடு" என்றதும் சுபா பூண்டினை உறித்துக்கொடுக்க ஆரம்பித்தாள். 


அங்கிருந்து வந்த அவளது மாமா "என்ன கண்ணு? சீக்கிரம் கிளம்பிடுங்க, கோயில்ல நோம்பி ஆரம்பிச்சிடுவாங்க, மதியானோம் ஒரு மணிக்கு புறப்புட்டாதான் சாமிய கும்டுபோட்டு பொழுதோட வர முடியும்"


"எனுங்க, நாளைக்கு அழைச்சிக்கிட்டு போனா என்ன?'


"ஏன்டி மக்காநாளு ஊருக்கு போறாங்கள்லோ…"


"ஏன்…?"


"அப்பா தனியா இருப்பாங்க, அதனால அம்மா கிளம்பிடுவாங்க. எங்க மாமியாருக்கு வேற உடம்பு சரியில்ல. ஊர் திருவிழாவுக்காகவும், பூஜை பண்றதுதுக்கு தான் வந்தேன்" மெல்லிய குரலில் சுபாங்கிச் சென்னாள்‌.


"மச்சான் வந்துருக்கலாம், பொழுதேனைக்கும் கடையயே கட்டி அழுராரு. சொந்தூருக்கு கூட வரமாட்டுறாரு. பெறவு என்ன?, ஒரு மணிக்குள்ள பொறப்படுங்க" என்றார் அவளது மாமா. 


சரியாக ஒருமணிக்கெல்லாம் அனைவரும் கோயிலுக்கு புறப்பட வெளியே வந்தனர். 


ஒவ்வொருவராக காரில் ஏறிக் கொண்டிருக்க, அந்நேரம் பார்த்து  சுபாங்கியின் தோழி மதியழகியும் வந்தாள்.


"ஹே… மதி நல்லா இருக்கியா?"


"நல்லா இருக்கேன் சுபா, கோயிலுக்கா?"


"ஆமா கண்ணு, நீயும் உன்ற ஊட்ல சொல்லிப்போட்டுவா, எல்லோரும் ஒட்டுகா போவோம்." சுபாவின் மாமா சொல்ல "ம்ம், செத்த இருங்கோ" என்று சொல்லி ஓடிச்சென்றவள். சில நிமிடங்களில் தயாராகி வந்தாள். 


கோயிலுக்கு சென்று வீட்டில் வந்து இறங்கும் வரை ஆயாவே வீட்டுக்கு காவலாளி ஆனாள். சுபாவுக்கும் மதிக்கும் பழைய நினைவுகளை  பேசியே நேரம் சென்றது. கோயிலில் அவர்கள் சில நிமிடங்களே இறைவனை உள்ளார‌ வணங்கியிருப்பார்கள் மற்றபடி 'அடுத்தடுத்து என்ன பேசலாம் என்றவாறே இருவரின் மனநிலையும் இருந்தது'.


பொழுது சாய்ந்து அந்திநேரம் ஆரம்பமானபோது தான் அனைவரும் வீட்டினை நெருங்கினர். காரில் இருந்து இறங்கிய மதியழகி ''ஓகே பாய்… நாளைக்கு மீட் பண்ணுவோம்" என்றாள்.


"இல்ல நான் நாளைக்கு கிளம்பிடுவேன். நீ போய் டிரெஸ் மாத்திட்டு, சாப்டுவா பொறுமையா வா, நாம பேசிக்கிட்டு இருப்போம். மறக்காம வந்துடனும்


"ம்ம்…" இன்னும் ஏதோ நம்மிடம் பேச நினைக்கிறாள் போல என்றவாறு நினைத்துக்கொண்டே மதியழகி வீட்டுப்பக்கம் சென்றாள்.


சுபாவமும் உடைகளை மாற்றிக்கொண்டு, 'பசியில்லை' என்று கூறி சாப்பாட்டை புறகணித்துவிட்டு வாசல் பக்கம் அமர, "ஏதும் விஷேசமுண்டா?" இவ்வாறான குடைச்சல் கேள்விகளை அவளது ஆயா கேட்டுக்கொண்டிருந்தார். சில கேள்விகளுக்கு எல்லாம் சுபா பதிலே கூறவில்லை.  தூங்கும் நேரமும் நெருங்கியதால் அவளது வயது முதிர்ந்த ஆயாவும் கண்ணசந்து குறட்டை ஒலி எழுப்பியபடியே தூங்கத்தொடங்கினாள். நீண்ட நேரம் செல்ல, ஒருவழியாக மதியழகியும் வந்தாள்.


"நைனா பெருமையா சொன்னாங்க, நீ நம்மூரு பாசய நல்லாவே பேசுறனு"


"ஆமா, கடைசியா நான் ஸ்கூல்ல படிச்சப்ப பேசுனது. இங்க ஸ்கூல் படிச்சிட்டு, அங்க காலேஜ் சேந்து நம்ம ஊர் பாசைல பேசுனா எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க‌. இப்ப நம்மூரு பாஷையில பேசுனா இங்க பெருமையா பேசுறாங்க! . இங்க வந்தா மட்டும் அப்ப அப்ப கொஞ்சம் தானவே பேசவந்துடுது"


"நீ சொல்றதும் சரி தான்"


"சரி அத விடு, எப்ப மேரேஜ் உனக்கு?"


"அலைன்ஸ் பாத்துக்கிட்டு இருக்காங்க, பாப்போம்!. உன்ற மேரேஜ் லைப் எப்புடி போகுது? ஹஸ்பண்ட் எங்கன இருக்காங்க?, மீலிட்ரில தான இருக்காங்க? ஒன்ற மேரேஜ் முடிஞ்சி ஆறுமாசம் இருக்கும்ல?" 


இத்தனை கேள்விக்கும் ஒரு பதில் கூட கூறாமல் அமைதியாக நின்றாள் சுபாங்கி


சில்லென்ற காற்று வீசியது. இரு கைகளையும் தன் உடலின் கட்டிக்கொண்டு "காத்து வெடுக்குனு இருக்குல சுபா?" என்று மதியழகி சொல்ல "எனக்கு அப்புடி இல்லயே"


"சுபா, பேசிட்டு சீக்கிரம் வந்து படு. வரும் போது கதவ சாத்திட்டுவா, எல்லாரும் தூங்கிட்டாங்க


நானும் தூங்க போறேன்" வீட்டின் கதவு அருகில் நின்றுகொண்டு சுபாவின் அம்மா கூறிவிட்டு பின்னர் உள்ளே சென்றுவிட்டாள்.


"சுபா, அப்பறமா மீட் பண்ணுவோம்"


"ஏன்?"


"தூங்க கூப்புடுறாங்கள்ல அதான்"


"ச்சே… இவங்களுக்கு எல்லாம் எப்புடி தான் இந்த எழவெடுத்த தூக்கம் வருதோ!"


"என்ன சுபா ஒலப்புற?''


"நான் போய் செவுத்துல முடிக்கவா, இல்ல தூங்குறவுங்க எல்லாரையும் அடிச்சி எழுப்பா, இல்ல ஒரு பையித்தியம் மாதிரி கத்தவா…? அப்பவாது எனக்கு என்ன பிரச்சினைனு கேக்க யாராவது வருவாங்களா?" வெறிகோண்டது போல சுபாவின் முகம் மாற மதி பயந்தேவிட்டாள்


"என்னடி லூசு தனமா பசப்புற?" காதில் வாங்காது மேலும், "யாருக்கிட்ட சொல்லுவேன். யாருமே புரிஞ்சுக்க மாட்றாங்ளே, என்னோட  பிரச்சனை புரியாம எல்லாருமே நிம்மதியா தூங்குறாங்க, ஔவையார் மாதிரி இருக்க இந்த ஆயா கூட நல்லா கொறட்டை விட்டு தூங்குது. என்னோட பிரச்சனைக்கோ ஒரு தீர்வில்லையே… நான் என்ன தான் செய்றது?"


மதிக்கு விஷயம் புரிந்தது. இவள் கணவனை பிரிந்து பல நாட்கள் ஆகிறது.  இவன் கணவன் இவளுடன் நெருங்கி இருக்க ஆசைப்படுகிறாள். அவன் கூடா நோயினால் இவள் வாடி, தூக்கம் வராமல் கஸ்டப்படுகிறாள் என்பதை புரிந்துக்கொண்ட மதிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனதுக்குள் 'இந்த ஆண்கள் இப்படி பெண்களை தவிக்கவிட்டு எளிதாக சென்றுவிடுகின்றனர். ஆனால் பெண்கள் படும் துன்பத்தினை அவர்கள் அறியமாட்டார்கள். நாமாவது நம் கூடவே இருக்கும் படியானவனை மணந்துகொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவளை அறியாது 'ஹாவ்'வென்று கொட்டாவி விட, சட்டென திரும்பிய சுபா. மதியழகியை பார்த்து முறைத்தாள்.


குகன்


குறுந்தொகை 28 பாடல்


மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்

அலமரல் அசைவளி அலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.


ஔவையார்


நான் முட்டிக்கொல்வேனா? இல்லை தாக்குவேனா? அல்லது ஏதாவது ஒரு போலியான காரணத்தை முன்வைத்து ஆஅ என கூச்சலிட்டு எல்லோரையும் கூப்பிடுவேனா? என்ன செய்வது என்பதை அறியேன், சுழன்று அசைந்து வரும் காற்று என்னை வருத்த அதற்கு ஒரு மருந்து அறியாது தூங்கும் இந்த ஊராரை நினைத்து. 

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 40

1 கருத்துகள்

  1. கரிசல் காட்டு கடுதாசியை போல வட்டார மொழியின் வளம் மனதை மயக்குகிறது. அந்த கிராமத்தில் வாழும் உணர்வு ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை