அண்மை

புதிய பாடல் தரும் பெரிய இழப்பு

 

புது பாடல் தரும் பெரும் இழப்பு

"வடநாட்டவர்கள் தங்களது மொழியை நம் மீது திணிக்க பார்க்கிறார்கள். இந்தி புகுத்தப்படுகிறது. இந்தி தெரியாவிட்டால் இந்தியாவில் வாழ முடியாத சூழ்நிலையை ஒன்றிய அரசு கொண்டுவர பார்க்கிறது" என்றெல்லாம் பலவறாக புலம்பும் தமிழர்களை காண்கிறேன்.


என்னை கேட்டால், இதெல்லாம் இரண்டாம் தர பிரச்சனை தான்.


பொழுதுபோக்கு என்று நினைத்துக் கொண்டு நம் தலையில் நாமே மண்ணைவாறி கொட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது இவர்களுக்கு புரியவில்லை போலும்


தமிழர்கள் தான் தமிழ் மொழி சிதைவிற்கு மூலகர்த்தாவே. அதைத்தான் ஒரு களிக்கூத்தாகவும் நினைக்கிறார்கள்


"தீதும் நன்றும் பிறர் தர வாரா"


சமீபத்தில் இரண்டு பாடல்கள் வெளிவந்தது. ஒருமுறையேனும் உங்கள் செவி அஃதை செவியுற்றிருக்க அதிக வாய்ப்புண்டு. காரணம், அதில் ஒருபாடலை இதுவரை கேட்டோர் மட்டும் 12 கோடி பேர்.


இரண்டாவது பாடலை கேட்டோர் 5 கோடியை நெருங்க உள்ளது.


'ஹலமத்தி ஹப்பீபூ' தான் அந்த முதல் பாடல், இரண்டாவது 'ஜலபுல ஜங்கு லைஃப்ல கிங்கு' 


எழுதும் போதே சிரிப்பாக உள்ளது. முன்பெல்லாம் பாடல் உள்ளே ரெட்டை கிளவி இருக்கும். இப்போதெல்லாம் பாட்டே ரெட்டை கிளவி தான்.


இந்த இரண்டு 'டமிழ்' பாடல் தான், தமிழர்கள் மத்தியில் இப்போது மிகு பிரபலம்


இரண்டு மூன்று மாத முன்பு, பிரதமர் நிகழ்த்திய 'மான் கி பாத்' உரையில் ஒன்றை பதிவிட்டார். 


"இக்கால பாடல்கள் எல்லாம், நம் போன்ற பழைய பாடல்களை கேட்டு ரசிப்போர்களுக்கு பிடிப்பதில்லை. ஆனால் அதற்கென்று புதிய பாடல்களை பழித்து பேசாதீர்கள். அவர்கள் ஏன் அதை ரசிக்கிறார்கள் என்பதை அவர்களுடன் ஒன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்" என்றார்


நானும் இந்த புதிய பாடல்களை பழித்து எழுத போவதில்லை. மக்கள் ரசிப்பது எதை என்பதை அறியத்தான் முயன்றேன்.


தமிழில் இயல் இசை நாடகம் என்ற முப்பெரும் பிரிவுண்டு. இது மூன்றுமே வெறும் வார்த்தைகளன்றி உணர்வுகளை பிரதிபலிப்பனவாகும்.


ஒரு கட்டுரை அந்த ஆசிரியரின் உணர்வுகளால் ஆன எழுத்துகளின் கூட்டு. ஒரு இசை அதை சமைத்தவரின் உணர்வலையில் இருந்து பிறந்த நாதம். நாடகமோ பல்வேறு உணர்வுகளின் சங்கமம்.


எனில் தமிழானது வெறும் மொழியன்றி அது ஓர் உணர்வு பெட்டகம். பெரும்பாலான தமிழர்களுக்கு இயற்கையாகவே கவிதை எழுத வரும் காரணம் இதுதான். கவிஞர் மனுஷ்யபுத்திரர் கூட இதையே தான் சொல்கிறார்.


எப்போது உணர்வில் வேறு மொழி கலக்கப்படுகிறதோ உண்மை உணர்வு மறக்கப்படுகிறது.


உதாரணமாக, பேருந்து பயணத்தில் யதார்த்தமாக உங்களது காலை மிதிக்கும் ஒரு நபர் என்ன சொல்லியிருப்பார்?


பெரும்பான்மை "Sorry" யாகத்தான் இருக்கும். "மன்னித்துவிடுங்கள்" என்பதும் தமிழ் கிடையாது தான். சொல்லளவிற்கேனும் கூட இதை அதிகம் பயன்படுத்துவோர் குறைவு


"நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற பதம் கூட இப்போது அழிந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ஆச்சரியபடுவீர்கள்.


கூகுளின் குறிச்சொல் காட்டி மூலம் இதை அளவீடு செய்தால் புரியவரும். தமிழில் கூட காதல் கவிதைகளை தேடுவோர் "லவ் கவிதை இன் தமிழ்' என்று தேடிப்பார்க்கிறார்களாம். என்ன கால கொடுமை பார்த்தீர்களா!


நாம் உணர்வு பதங்களை இழக்கிறோம்.


பாரதியார் மொழிப்பெயர்ப்பை பற்றியும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லாக்கத்தை பற்றியும் எழுதும் போது ஒன்றை குறிப்பிடுகிறார்.


"சில சொற்களை மொழிமாற்றம் செய்ய முடியாது போனால் அதை அவ்வாறே பிரயோகம் செய்யலாம். ஆனால் உணர்வு பதங்களை மட்டும் நிச்சயமாக நம் தமிழில் தான் உபயோகிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை பிறமொழியிலே பயன்படுத்துதல் கூடாது" என்பது தான் அது.


உணர்வு சொல் நம் உணர்வுகளில் கலக்கிறது. ஆங்கிலேயனுக்கும் பிரெஞ்சு காரனுக்கும் ஏற்படும் வினை சொல் வேறுபாட்டால் அவன் செயல் உறுதி தன்மையே மாறுகிறதாம்.


ஒருவனின் மொழி தன்வினையை உறுதிபட கூறுவது போன்ற சொற்றொடரை அமைக்கிறதாம். இன்னொருவனின் மொழி அதே வினையை சொற்றொடரை ஆக்குவதில் அத்தனை உறுதி தன்மை இல்லையாம். இந்த இரண்டு மனிதர்களின் செயல்களை ஆராய்ந்த அறிவியலாளர்கள் உறுதிபட உரைப்பவனின் செயல்களும் தீரமாகவே உள்ளது என்பதை தீர்மானித்துள்ளார்கள்.


மொழி தான் சிந்தனையின் அடித்தளம். நடத்தையின் வேர். நம் தமிழில் இயலும் இசையும் நாடகமும் தான் நமது வருங்காலத்தையே நிர்வகிப்பதாகிறது.


இந்த உணர்வுகளின் மூலமான இயல் இசை நாடகத்தில் பிறமொழி சேர்ப்பதில் எங்கே சிக்கலென்றால் அதை இசையாய் கேட்கும் போது தான்.


இசை தான் முழுக்க முழுக்க உணர்வு மொழியாகிறது. பிரெஞ்சே தெரியவில்லை என்றாலும் சில பிரெஞ்சு பாடலை கேட்கும் போது சுகமாய் உள்ளது. ஜப்பான் பாடலை கேட்க கேட்க தூக்கம் வருகிறது. அதிரடியான இந்தி பாடலையும் பஞ்சாபி பாடலையும் கேட்க உடலே இரும்பானதாய் ஒரு சக்தி பிறக்கிறது.


இதெல்லாம் எப்படி? இசைக்கு மொழி தேவையில்லை. அது உங்களது உணர்வோடு கூடி பேசத்தொடங்குகிறது.


இந்த 'ஹலமத்தி ஹப்பிபூ' பாடல் இருக்கிறதே இந்த பாடலின் பெயரே அரபிக் குத்து, 'ஜலபுல ஜங்கில்' இந்தி வரிகளெல்லாம் வருகிறது.


இருந்தாலும் இந்த பாடலை கேட்ட பலரும், "இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உற்சாகம் பிறக்கிறது" என்று கருத்து சொல்கிறார்கள். 


இணையத்தில் இந்த பாடல்களை போட்டு ஆடி பாடி மகிழ்கிறார்கள். வீட்டு விஷேசங்களில் எல்லாம் கூட இந்த பாட்டு தான்.


ஆம், சந்தேகத்துக்கு இடமின்றி இவ்விரு பாடலையும் கேட்க கேட்க உற்சாகமாகவும் துள்ளலாகவுந்தான் உள்ளது.


ஆனால் இதுபோன்ற பாடல்களால் நம் தமிழ் பெறும் இழப்பு அதிகம். 


இதுபோன்ற பாடல்கள் அதிகமாக அதிகமாக நாம் விரைவிலே நல்ல தமிழ் உணர்வு பதங்களை இழக்க வேண்டிவரலாம்.


தமிழ் உணர்வு பதங்களை இழப்பதால், நாம் நமது உணர்வுகளை வெளிக்காட்ட கூட வேறொரு மொழியை துணைக்கழைக்க வேண்டிவரலாம்.


இதனால் வருங்கால பிள்ளைகளுக்கு சில உணர்வுகள் இல்லாமலே கூட போகலாம்.


சீன மொழியில் இருக்கும் உணர்வு சொற்கள் அதிகம். ஆங்கில மொழியில் குறைவு. ஒரு சீன குழந்தைக்கும் ஒரு ஆங்கில குழந்தைக்கும் உணர்வியல் ரீதியான வேறுபாடு பயங்கர வித்தியாசப்படுகிறது. சொல்லப்போனால், சீன குழந்தைக்கு இருக்கும் சில உணர்வுகள் ஆங்கில குழந்தைக்கு இல்லவே இல்லை.


இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாகும்


தமிழிசையில் வேற்றுமொழிச்சொற்கள் புக புக மக்கள் உண்மையான தங்களது இசை உணர்வை இழக்கிறார்கள். அரைகுறையான ஏதோ ஒரு மொழியின் உணர்வலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


இதை நீங்கள் இப்போதே நேரடியாக காண்கிறீர்கள். முழுமையான தமிழ் சொற்கள் கொண்ட பாடல் இப்போதெல்லாம் வருவதே குறைவு தான் அல்லது அவ்வாறு வரும் பாடல்கள் பிரபலமாவது கிடையாது.


ஆங்கிலம் கலந்து அல்லது முழுமையான ஆங்கிலம் அல்லது பிறமொழி சொற்கள் கலந்த பாடலே அதிகமாகிவிட்டது.


இவ்வாறு அதிகமாக காரணம் என்ன? பாடல் எழுதுபவர்கள் இவ்வாறு எழுதுவதை தான் விரும்புகிறார்கள் என்று கருதுகிறீர்களா?


நிச்சயமாக இல்லை. மக்கள் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இப்படியான பாடலைத்தான் பிரபலப்படுத்துகிறார்கள். அதனால் பிரபலமாவதற்கு தோதுவானவற்றை எழுதவே சினி துறையும் ஆசைப்படுகிறது.


காரணம், உண்மையான உணர்வுச்சொற்கள் இவர்களுக்கு மறந்து போய்விட்டது. முழுமையான தமிழ் பாடல் இவர்களை பொறுத்தவரை வெற்ற வறண்ட சொற்களே ஆகும்.


பழையப்பாடல் சிலவற்றை என் நண்பர்களிடம் பகிர்ந்து இதை கேட்டுப்பார் என்று பரிந்துரை செய்தால், அவர்கள் ஏதும் 'தமிங்கல' பாடலை எனக்கு அனுப்புவார்கள். 


பெரும்பாலன மக்களின் மனதை எப்படிபட்ட பாடல்கள் கவர்கிறதென்பதை என்னால் இவ்வாறே அறியமுடிகிறது.


நம் தமிழில் இல்லாத சொல் இல்லை. இருந்தாலும் அதனை முழுமையாக பயன்படுத்தும் பாடல் இன்று ஒன்று இல்லை.


திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்


இன்று நாம் என்ன செய்கிறோம்?


தமிழ் நாட்டில் பிரபலமான பாடல் பெயர் "அரபிக் குத்து"


தீசன்

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 40

3 கருத்துகள்

  1. இந்த கட்டுரை ஆசிரியர் ஒரு மென்மையான போக்கை கடைபிடித்து இயற்றியிருக்கிறார்...

    இவ்விஷயத்தில் நான் வன்மையாகவே வசைபாட விரும்புகிறேன்.

    மக்கள் ரசிக்கிறார்கள்..
    மக்கள்தான் கேட்கிறார்கள்..

    என்று மக்கள் என்கிற பொதுப்பெயர் மீது பழியை போட்டு தப்பிக்கும் தனியாட்கள் இங்கு அதிகம்.

    தமிழ் பாடல்கள் சீரழிவதற்கு முதல் காரணம் இசையமைப்பாளர்கள் தான்.
    மட்டரகமான இசை.. காத்துகூச்சல்.

    அத்தி பூத்தாற்போல எப்போதாவது நல்ல மெல்லிசை வரும். அதுவும் ஏற்கனவே msv யோ இளையராஜாவோ போட்டதை தான் மாத்திபோட்டிருப்பார்கள். ஆனால் அதை மனதார ஏற்கலாம்.. ( அதை அவர்களே பொதுவெளியில் ஒப்புகொண்டால் )

    இரண்டாவது காரணம் பாடலாசிரியரைதான் சாரும்.
    புலவரோ கவிஞரோ தேவையில்லை ஓரளவு பிரபலமானவர் யார்வேணுமானாலும் எழுதலாம். அதை விளம்பரபடுத்தியே ஹிட் ஆக்கிகொள்வார்கள்.
    துளிகூட பொறுப்பே இல்லாத ஈனச்செயலை அவர்கள் செய்கிறார்கள். இந்த முறை சி.கா செய்திருக்கிறார்.

    மூன்றாவது காரணம் அந்த பாடலில் தோன்றிநடிக்கும் நடிகர்.

    நான் சவால் விடுகிறேன் இதே பாடல் முன்பின் தெரியாத புதுமுக நடிகரோ அல்லது மூன்றாம்தர நடிகரோ நடித்து வெளியாகியிருந்தால் இத்தனை தூரம் பேசப்பட்டிருக்குமா?

    சந்தை படுத்துதல் என்கிற வர்த்தக சொல்லுக்கு
    சினிமா வைத்திருக்கும் பெயர்தான் 'ஹிட்'

    இணைய உலாவிகள் இதற்கு 'டிரெண்டிங்' என பெயர் சூட்டியிருக்கிறார்கள்... வேறொன்றுமில்லை.

    நான்காவதாக ஒரு காரணம் உண்டு. அது News சேனல் கள்..
    தமிழ் நாட்டில் காலங்காலமாக எல்லாதரப்பு குடும்பஸ்தகர்களிடமும் செய்தி ஒளிபரப்பு களுக்கு என்று தனிமதிப்பு மரியாதை உண்டு. ஆனால் அதை பயன்படுத்தி டஜன்கணக்கான நியூஸ்சேனல்கள் ஆக்கிரமிக்கும்போது தாறுமாறாக அவற்றின் தரம் குன்றிபோகிறது.


    உப்பு போறாத ஒரு விஷயத்தை கூட எடுத்துகொண்டு வந்து மாநிலம் முழுவதும் பேசுபொருளாக்கி சாகடிக்கிறார்கள்...

    அதிலொன்றுதான் சினிமா செய்திகள்..
    அதை பார்க்கிற கேட்கிற பாமரர் கூட தங்களை மேதைமை யாக காட்டிகொள்ள விரும்பி "ஓ.. இந்த பாட்ல இது ரொம்ப பிரமாதமா இருக்கு..!"
    "அட பிச்சு உதறிட்டாம்பா நம்மாளு..!" அப்படி இப்படி னு சும்மனாச்சுக்கும் உளறிவிட அதையே அஸ்திவாரமாக கொண்டு அடுத்த பாடலை ஏற்றுமதி இறக்குமதி செய்து விடுகிறார்கள்.


    வெறும் மூன்றுநாள் ஓடிய படத்தை வெற்றி நடைபோடுகிறது என்று வெட்கமே இல்லாமல் விளம்பரம் செய்கிற வீணாபோன துறைதானே 'சினி' துறை.


    ஐந்தாவதாக ஒரு காரணம் உண்டு... அது இந்த கட்டுரையாசிரியரையும் என்னையும் போன்ற எதிர் விமர்சகர்கள்தான்.
    வருகின்ற பாடல்களை கண்டும் காணாமல் விட்டாலே வந்த தடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.. அதற்கு பல உதாரணங்கள் காட்டமுடியும்.

    பாராட்டினாலும் பிரபலம்தான்.
    திட்டினாலும் பிரபலம்தான்.

    காந்தியும் பிரபலம் கோட்சேவும் பிரபலம்.

    விவேகானந்தரும் பிரபலம் நித்யானந்தாவும் பிரபலம்.

    வணிக உலகம் பிரபலமா என்றுதான் பார்த்து பணம்தருகிறது..
    அவன் புகழால் வந்தானா இகழால் வந்தானா என்று அதற்கு கவலைஇல்லை.

    பிடித்தால் லைக் போட்டாலும்சரி..
    பிடிக்கலை என டிஸ்லைக் போட்டாலும் சரி..

    வலைதள வணிக உலகில் இரண்டுமே ஒன்றுதான்

    அவ்வகையில் பாடலை பேசுபொருளாக்கிய நானும் அந்த கோடியில் ஒருவன்தான்.

    என்றாலும் என்ன செய்வது இந்த சமூகம் குறைந்தபட்சம் தாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதையாவது உணருவார்கள் இல்லையா?


    பதிலளிநீக்கு
  2. Summa solladha... intha song naala than worlde nambala thirumbi pakkudhu

    பதிலளிநீக்கு
புதியது பழையவை